You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'மீண்டும் நீட் தேர்வு எழுத தைரியம் இல்லை': நாக்பூரில் மாணவி மரணம் - போலீஸ் கூறுவது என்ன?
- எழுதியவர், பாக்யஶ்ரீ ராவத்
- பதவி, பிபிசி மராத்தி செய்தியாளர்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்
"அரசாங்கம் கவனம் செலுத்தியிருந்தால் நீட் வினாத்தாள் கசிந்திருக்காது, என்னுடைய மகளும் உயிருடன் இருந்திருப்பார்,"
18 வயதான சினேகா சதுர்வேதியின் தந்தை கிருஷ்ணகுமார் சதுர்வேதி பிபிசி மராத்தியிடம் கூறிய வரிகள் இவை.
கடந்த மே 20-ஆம் தேதி நாக்பூரைச் சேர்ந்த சினேகா தனது வீட்டில் இருந்தபோது தற்கொலை மூலம் உயிரிழந்தார்.
மே 3-ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வை அவர் எழுதியிருந்தார். அதன் பின்னர் வினாத்தாள் வெளியானதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் அந்த தேர்வு பின்னர் ரத்து செய்யப்பட்டது.
இறப்பதற்கு முன்பாக தங்களுடைய மகள் குறிப்பு ஒன்றை விட்டுவிட்டுச் சென்றதாக ஸ்னேகாவின் பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர். அதில் நீட் தேர்வு ரத்தானதால் ஏற்பட்ட அழுத்தம் பற்றி அவர் குறிப்பிட்டுள்ளதாகவும் கூறுகின்றனர்.
காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி சினேகா சதுர்வேதியின் மரணம் தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்தப் பதிவில் சினேகா சதுர்வேதியை 'அகான்ஷா' எனக் குறிப்பிட்டிருந்தார். "அகான்ஷாவின் மரணம் தற்கொலை அல்ல. மோதியின் ஊழல் மற்றும் சரியாக இயங்காத அமைப்பினால் ஏற்பட்ட விளைவு" எனத் தெரிவித்திருந்தார்.
நாக்பூர் பிரிவு-2 காவல் இணை ஆணையர் நித்யானந்த் ஜா, "சினேகாவின் தற்கொலைக் குறிப்பு எதுவும் கண்டறியப்படவில்லை." என்றார்.
சினேகாவின் பெற்றோர்கள் கூறுவது என்ன?
மத்தியப் பிரதேசத்தின் மௌகஞ் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சினேகா. அவரது தந்தை 20 ஆண்டுகளுக்கு முன்பு நிதி நெருக்கடியால் நாக்பூருக்கு இடம்பெயர்ந்தார்.
முன்னதாக சமையல் கலைஞராக வேலை பார்த்த கிருஷ்ணகுமார் இரண்டு மாரடைப்புகளுக்குப் பிறகு அந்த வேலையையும் விட்டுவிட்டார்.
தனது மகள் மருத்துவராக வேண்டும் என அவர் கனவு கண்டார். உடல்நிலை மோசமாக இருந்தபோதிலும் மகளின் கல்வியை உறுதி செய்ய கடுமையாக உழைத்தார்.
நீட் தேர்வுக்கு தயாராக தனது மகளை முன்னணி பயிற்சி மையங்களுக்கு அனுப்பினார்.
சினேகாவின் மரணம் தொடர்பாக அவரின் தந்தை கிருஷ்ணகுமார் சதுர்வேதி பிபிசி மராத்தியிடம் பேசும்போது அவரால் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
"முதல்முறையாக நீட் தேர்வு நடத்தப்பட்டபோது அவர் சிறப்பாக எழுதியிருந்தார். ஒரு நல்ல கல்லூரியில் இடம் கிடைத்துவிடும் என்று எனது மகள் கூறிவந்தாள். ஆனால் நீட் தேர்வு மோசடி வெளிச்சத்திற்கு வந்து மீண்டும் தேர்வு எழுத வேண்டியிருக்கும் என்பதை அறிந்தபோது அவள் முகத்தில் இருந்த சிரிப்பு மறைந்துவிட்டது. நன்றாக சாப்பிடக்கூட மாட்டாள். யாரிடமும் வெளிப்படையாக பேசமாட்டாள்," என்கிறார் கிருஷ்ணகுமார்.
தொடர்ந்து பேசிய அவர், "அவளை மருத்துவர் ஆக்க வேண்டும் என்பதற்காக மிகவும் கடுமையாக உழைத்தேன். எவ்வளவு உழைப்பை செலுத்தினாலும், மருத்துவராக வேண்டும் என்கிற என் மகளின் கனவை நிறைவேற்றுவேன் என என் மனதில் உறுதி எடுத்துக் கொண்டேன். தற்போது என் மகள் இல்லை, அவளின் கல்வி முடிந்துவிட்டது. நான் தற்போது அவளது கல்விக்கான கடனில் மூழ்கி இருக்கிறேன். நான் அனைத்தையும் இழந்துவிட்டேன். எதன் அடிப்படையில் நான் வாழ வேண்டும்? அரசாங்கம் தேர்வை முறையாக நடத்தி இருந்தால் என் மகள் இன்று உயிருடன் இருந்திருப்பாள்." என்றும் தெரிவித்தார்.
பிபிசி மராத்தியிடம் பேசிய ஸ்னேகாவின் தாய் நீலம் சதுர்வேதி அவரது மகள் இறந்த நாளில் நடந்தவற்றை விவரித்தார்.
மே 20-ஆம் தேதி ஸ்னேகா வீட்டில் தனியாக இருந்துள்ளார். மதியம் 3 மணி வாக்கில் அவரது தாயும் இளைய சகோதரரும் வெளியில் அமர்ந்திருந்தனர். நீலம் பலமுறை அழைத்தபோதும் ஸ்னேகா பதில் அளிக்காததால் அவர் பதற்றமடைந்தார்.
ஸ்னேகாவின் இளைய சகோதரரை மேலே ஏறி ஜன்னல் வழியாகப் பார்க்குமாறு கூறியபோதும் அவர் தற்கொலை மூலம் உயிரிழந்தது தெரியவந்தது.
ஸ்னேகாவின் தந்தை கூற்றுப்படி, நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டதில் இருந்தே ஸ்னேகா அழுத்தத்தில் இருந்து வந்துள்ளார்.
ஸ்னேகா எழுதிய குறிப்பில் என்ன உள்ளது?
ஸ்னேகா உயிரிழப்பதற்கு முன்பாக அவர் கைப்பட எழுதிய குறிப்பு ஒன்று இருந்ததாக அவரின் பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் அத்தகைய குறிப்பு எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
ஸ்னேகா குடும்பத்தின் கூற்றுப்படி அந்தக் குறிப்பில், "அம்மா, அப்பா, நீங்கள் என் மீது நம்பிக்கை வைத்திருந்தீர்கள். நான் நன்றாகப் படித்து மருத்துவர் ஆக வேண்டும் என விரும்பினீர்கள். ஆனால் தற்போது மீண்டும் நீட் தேர்வு எழுதுவதற்கான தைரியம் எனக்கு இல்லை." என எழுதியுள்ளார்.
மேலும் அந்தக் குறிப்பில், " என்னுடைய கடின உழைப்பிற்குப் பலன் கிடைக்கும் என்கிற நம்பிக்கையில் இருந்தேன். ஆனால் நான் தற்போது மீண்டும் தேர்வு எழுத வேண்டும். இந்த முறை என்னால் சிறப்பாக எழுத முடியுமா என உறுதியாக இருக்க முடியவில்லை. அம்மா, அப்பா, என்னை தயவு செய்து மன்னித்துவிடுங்கள். உங்களுடைய எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறு என்னால் வாழ முடியவில்லை. நான் அனைத்து நாசமாக்கிவிட்டேன்." என்று குறிப்பிட்டு இருந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.
முக்கிய குறிப்பு:
மனநலம் சார்ந்த பிரச்னைகளை மருந்துகள் மற்றும் சிகிச்சை மூலம் எளிதில் குணப்படுத்தலாம். இதற்கான உதவி எண்களில் தொடர்பு கொண்டு நிவாரணம் பெறலாம்.
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050 (24 மணி நேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)
சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் ஹெல்ப்லைன் – 1800-599-0019
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு