You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
உள்ளங்கை அளவுக்கு பெரிய கரப்பான் பூச்சிகள் - ரூ.1.36 கோடி மதிப்புள்ள இவை பிடிபட்டது எப்படி?
- எழுதியவர், லானா லாம்
- பதவி, சிட்னி
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்
ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸில் உள்ள ஒரு வணிக ரீதியான பூச்சி இனங்கள் வளர்ப்பாளரிடமிருந்து, ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட சட்டவிரோத வெளிநாட்டு கரப்பான் பூச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவற்றில் சில உள்ளங்கை அளவு பெரியவை
மொத்தம் 200,000 ஆஸ்திரேலிய டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.1.36 கோடி) மதிப்புள்ள இந்தப் பறிமுதல் நடவடிக்கைகளில், சிட்னிக்கு மேற்கே 200 கி.மீ தொலைவில் உள்ள பாத்தர்ஸ்ட்டைச் சேர்ந்த ஒரு வளர்ப்பாளரிடமிருந்து பெறப்பட்ட மடகாஸ்கர் சீறும் கரப்பான் பூச்சிகள் மற்றும் டூபியா கரப்பான் பூச்சிகளும் அடங்கும்.
இந்த இரண்டு இனங்களையும் ஆஸ்திரேலியாவிற்குள் சட்டப்பூர்வமாக இறக்குமதி செய்யவோ, வளர்க்கவோ, இனப்பெருக்கம் செய்யவோ அல்லது விற்கவோ முடியாது.
சட்டவிரோத வெளிநாட்டு முதுகெலும்பற்ற உயிரினங்களின் மிகப்பெரிய பறிமுதல் இதுவாகும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சட்டவிரோத பூச்சிகள் நோய்களைப் பரப்பக்கூடும் என்றும், உள்ளூர் வனவிலங்குகள் மற்றும் விவசாயத்திற்கு தீங்கு விளைவிக்கக்கூடும் என்றும் அவர்கள் மேலும் கூறினர்.
பெரும்பாலும் செல்லப்பிராணியாக வளர்க்கப்படும் ஊர்வனவற்றிற்கு உணவாக அளிக்கப்படும் இந்த சட்டவிரோத கரப்பான் பூச்சிகள், அதிகாரிகளால் கொல்லப்பட்டு அப்புறப்படுத்தப்படும்.
"அயல்நாட்டு கரப்பான் பூச்சிகளின் சட்டவிரோத இனப்பெருக்கம் மற்றும் வர்த்தகத்தை நாங்கள் கவனிக்கிறோம், மேலும் செல்லப்பிராணி வணிகங்கள் மற்றும் செல்லப்பிராணி உரிமையாளர்களுக்கு நாங்கள் எச்சரிக்கை விடுக்கிறோம்," என்று ஆஸ்திரேலியாவின் காலநிலை மாற்றம், ஆற்றல், சுற்றுச்சூழல் மற்றும் நீர் துறையின் (DCCEEW) செய்தித் தொடர்பாளர் கூறினார்.
"டூபியா கரப்பான் பூச்சிகள் மற்றும் மடகாஸ்கர் சீறும் கரப்பான் பூச்சிகள் போன்ற அயல்நாட்டு கரப்பான் பூச்சிகளை நீங்கள் வைத்திருப்பது, இனப்பெருக்கம் செய்வது அல்லது வர்த்தகம் செய்வது கண்டறியப்பட்டால், அவை பறிமுதல் செய்யப்படும், மேலும் கூட்டாட்சி சட்டத்தின் கீழ் நீங்கள் தண்டனைகளை எதிர்கொள்ள நேரிடும்." என்று அவர் எச்சரித்தார்.
டூபியா கரப்பான் பூச்சிகளை உணவாகப் பயன்படுத்தி வரும் ஊர்வன உரிமையாளர்கள், வெட்டுக்கிளிகள் மற்றும் மரக் கரப்பான் பூச்சிகள் போன்ற சட்டப்பூர்வ மாற்றுகளைத் தேடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
உலகின் மிகப்பெரிய இனங்களில் ஒன்றான மடகாஸ்கர் சீறும் கரப்பான் பூச்சிகள், மனிதர்கள் கேட்கும் அளவுக்கு உரத்த சீறும் ஒலியை எழுப்பக்கூடியவை என்பதால் அவ்வாறு அழைக்கப்படுகின்றன.
ஆஸ்திரேலிய ஒலிபரப்புக் கழகத்தின் (ABC) படி, பாத்தர்ஸ்ட் பாம்பு பிடிப்பவரான ஸ்டெஃபனி லெஸ்ஸர், சட்டவிரோத முதுகெலும்பற்ற உயிரினங்கள் ஊர்வன உணவாக இணையத்தில் விற்கப்படுவதைக் கண்டதாகக் கூறினார்.
"அவை பெரியதாக இருப்பதால் மக்கள் அவற்றை வைத்திருக்கிறார்கள்; அவை ஏறக்குறைய உங்கள் உள்ளங்கை அளவு இருக்கும்," என்று அவர் ஏபிசி-யிடம் கூறினார்.
"ஒவ்வொரு பல்லிக்கும் மூன்று அல்லது நான்கு சிறிய மரப்பல்லிகளை உணவாகக் கொடுப்பதற்குப் பதிலாக, ஒன்றை மட்டும் கொடுத்தால் அது செலவு குறைந்ததாக இருக்கும்." என்று மக்கள் கருதுவதாக அவர் கூறினார்.
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு