பூமியில் எந்த நாட்டுக்கும் சொந்தமில்லாத 3 நிலப்பகுதிகள் - யாரும் உரிமை கோராதது ஏன்?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், லிஸ்ஸி மெக்நீல் மற்றும் ஜோஷ் மெக்மின்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்
சில நேரங்களில், நடைமுறை வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் சில நிகழ்வுகளை பயனற்றவை என நினைத்தாலும் அவற்றில் சில சுவாரஸ்யமான சிந்தனைகளை ஏற்படுத்தக்கூடியவை.
பிபிசியின் நேயர்களில் ஒருவரான நைஜலுக்கும் அப்படித்தான் நடந்தது. இரானில் நிலவும் மோதல் மற்றும் ஹோர்மூஸ் நீரிணை தொடர்பான கடல்சார் சர்ச்சை குறித்து அவர் சிந்தித்துக்கொண்டிருந்தபோது, அவரது மனம் அதைவிடப் பரந்த, உண்மையைச் சொல்லப்போனால், அவசரமற்ற ஒரு கேள்வியை நோக்கித் திரும்பியது.
பூமியில் எந்தவொரு நாட்டுக்கோ தனிநபருக்கோ முற்றிலும் சொந்தமில்லாத பகுதி எத்தனை சதவீதம் உள்ளது? என்ற கேள்விதான் அது.
உலகில் யாருக்குமே சொந்தமில்லாத ஒரு மூலையில் வாழ்வது எவ்வளவு அழகான கற்பனையாக இருக்கும் என்று அவருக்குத் தோன்றியது. மனதை வருத்தும் செய்தித் தலைப்புகளிலிருந்தும், அன்றாட வாழ்க்கையின் மன அழுத்தங்களிலிருந்தும் விலகி, அமைதியாகத் தஞ்சமடைய ஓர் இடம் இருந்தால் எப்படி இருக்கும்? என்ற கேள்வி அவருக்கு எழுந்தது.
உலகில் அத்தகைய இடங்கள் இன்னும் எஞ்சியுள்ளனவா என்பதைக் கண்டறிய, புவியியலாளரும் பிரபல பிரிட்டிஷ் யூடியூப் இரட்டையர்களான Map Men குழுவில் இடம்பெற்றுள்ளவருமான மார்க் கூப்பர் ஜோன்ஸிடம் பிபிசி பேசியது.
"உலகில் யாருக்கும் சொந்தமில்லாத நிலப்பரப்பு எவ்வளவு? என்பது சுவாரஸ்யமான கேள்வி. ஆனால், அதை நீங்கள் எந்தக் கோணத்தில் அணுகுகிறீர்கள் என்பதைப் பொறுத்தே பதில் அமையும்" என்று அவர் பதிலளித்தார்.
பூமியின் பெரும்பகுதி நிலப்பரப்பாக இல்லாமல் கடலாக இருப்பதால், கடலைப் பற்றித் தெரிந்துகொள்வதில் இருந்து நாம் தொடங்கலாம்.
"எந்தவொரு நாட்டின் கடற்கரையிலிருந்தும் 200 கடல் மைல்கள் தொலைவைக் கடந்துவிட்டால், 'சர்வதேசக் கடற்பரப்பு' என்று அழைக்கப்படும் பகுதிக்குள் நுழைந்துவிடுவீர்கள். சர்வதேசக் கடல்சார் சட்டத்தின்படி, அந்தப் பகுதி அடிப்படையில் ஒட்டுமொத்த மனிதகுலத்தின் நலனுக்காகப் பொதுவானதாகக் கருதப்படுகிறது. அங்கு யார் வேண்டுமானாலும் மீன்பிடிக்கலாம் அல்லது அறிவியல் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளலாம்."
கடல்களை எந்தவொரு நாடும் தனக்குச் சொந்தமாக்கிக்கொள்ள முடியாது என்ற கருத்து 17-ஆம் நூற்றாண்டில் முன்வைக்கப்பட்டது. அப்போது, டச்சு அறிஞர் ஹியூகோ குரோஷியஸ், ' மாரே லிபெரம் ' என்ற நூலை எழுதினார். இதற்கு 'சுதந்திரமான கடல்கள்' என்று பொருள்.
ஒரு பொருளைப் பயன்படுத்தினால் அது தீர்ந்துபோகும் என்றால் மட்டுமே, அதை ஒருவர் தனக்குச் சொந்தமாக்கிக்கொள்ள முடியும் என்பது அவரது வாதம். ஆனால், கடல் அளவிட முடியாத அளவுக்குப் பரந்தது என்பதால், அதை யாராலும் தனிப்பட்ட சொத்தாக உரிமை கோர முடியாது என்று அவர் கருதினார்.
இவ்வாறுதான் சர்வதேசக் கடற்பரப்பு என்ற கருத்து உருவானது. இது பூமியின் மிகப்பெரிய பரப்பளவை உள்ளடக்கியது. உலகப் பொருளாதார மன்றத்தின் தகவலின்படி, பூமியின் மொத்தப் பரப்பளவில் சுமார் 43 சதவீதம் இந்த வகைப்பாட்டிற்குள் வருகிறது.
ஆனால், நிலப்பரப்பைப் பொறுத்தவரை என்ன நிலை? எந்த நாட்டுக்கும் சொந்தமில்லாத நிலப்பகுதிகள் உலகில் இருக்கின்றனவா?
யாருக்கும் சொந்தமில்லாத நிலம்

பட மூலாதாரம், Getty Images
'டெர்ரா நுல்லியஸ்' என்ற லத்தீன் சொற்றொடருக்கு 'யாருக்கும் சொந்தமில்லாத நிலம்' என்று பொருள். ஆனால், இது வெறும் ஒரு சொல்லல்ல என்று விளக்குகிறார் கூப்பர் ஜோன்ஸ். வேறு யாரும் உரிமை கோராத அல்லது யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லாத நிலப்பகுதியைத் தனக்குச் சொந்தமாக்கிக்கொள்ளலாம் என்ற கருத்தைக் குறிக்கும் சட்டக் கோட்பாடாகவும் இது உள்ளது.
"குறிப்பாக, காலனித்துவ விரிவாக்கக் காலத்தில் இந்தக் கோட்பாடு மிகவும் சர்ச்சைக்குரிய வகையில் பயன்படுத்தப்பட்டது. பல இடங்களில் மக்கள் ஏற்கெனவே வாழ்ந்து வந்தபோதிலும், அவர்கள் அங்கீகரிக்கப்பட்ட தேச-அரசுகள் போன்ற அரசியல் அமைப்புகளைக் கொண்டிருக்கவில்லை என்ற காரணத்தைக் காட்டி, அந்த நிலங்கள் 'யாருக்கும் சொந்தமில்லாதவை' (டெர்ரா நுல்லியஸ்) என்று கூறப்பட்டன. இதன் மூலம், அந்த நிலங்களைக் கைப்பற்றுவதற்கு காலனித்துவ நாடுகள் நியாயம் கற்பித்தன" என்கிறார் கூப்பர் ஜோன்ஸ்.
"இன்றும்கூட, ஆப்பிரிக்கா முழுவதையும் 'டெர்ரா நுல்லியஸ்' என்று சித்தரிக்கும் பழைய வரைபடங்களைக் காண முடிகிறது. ஆனால், உண்மையில் அங்கு ஏராளமான மக்கள் வாழ்ந்து வந்தனர். 'இந்தப் பகுதி பிரிட்டன், ஸ்பெயின் அல்லது ஆஸ்திரியா போன்ற அரசியல் அமைப்பைக் கொண்டிருக்கவில்லை; எனவே, இதை நாம் கைப்பற்றிக்கொள்ளலாம்' என்று கூறுவதற்கான ஒரு வழியாகவே இந்தக் கருத்து பயன்படுத்தப்பட்டது" என அவர் விளக்குகிறார்.
இன்று, 'டெர்ரா நுல்லியஸ்' என்பது பொதுவாக, எந்தவொரு நாடும் உரிமை கோராத அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்தவொரு அரசின் இறையாண்மைக்கும் உட்படாத நிலப்பகுதியைக் குறிக்கிறது.
ஆனால், உலகின் பெரும்பாலான நிலப்பகுதிகள் ஏற்கெனவே ஏதேனும் ஒரு நாட்டின் கட்டுப்பாட்டில் உள்ளன. எனவே, யாருக்கும் சொந்தமில்லாத நிலப்பகுதிகள் மிகச் சிலவே எஞ்சியுள்ளன. அதேநேரத்தில், மிகப் பரந்த ஒரு பகுதி இன்னும் எந்தவொரு நாட்டின் தனிப்பட்ட கட்டுப்பாட்டிலும் இல்லை.
மேரி பைர்ட் நிலம்: எந்த நாடும் உரிமை கோராத நிலப்பகுதி
அண்டார்டிகாவில், எந்த நாடும் உரிமை கோராத ஒரு மிகப்பெரிய நிலப்பகுதி உள்ளது. சுமார் 16 லட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இந்தப் பகுதி, எந்த நாட்டின் கட்டுப்பாட்டிலும் இல்லை. இதற்கு 'மேரி பைர்ட் நிலம்' என்று பெயர். இந்தப் பெயருக்குப் பின்னால் இருக்கும் கதை மிகவும் சுவாரஸ்யமானது.
சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்பு, அமெரிக்கக் கடற்படை அதிகாரியும் அண்டார்டிகா ஆய்வாளருமான ரிச்சர்ட் பைர்ட் இந்தப் பகுதிக்கு தனது மனைவி மேரியின் பெயரைச் சூட்டியதாக கூப்பர் ஜோன்ஸ் கூறுகிறார்.
ரிச்சர்ட் பைர்ட், அண்டார்டிகாவின் பரந்த பனிப் பகுதிகளில் ஆய்வுப் பயணங்களை மேற்கொண்டிருந்தபோது, அவரது மனைவி மேரி அவருக்குக் கடிதங்கள் எழுதி வந்தார். அந்தப் பயணங்களில் மிகவும் தொலைதூரத்தில் இருந்த மற்றும் ஆய்வு செய்வதற்குக் கடினமாகவும் இருந்த பகுதிக்கு அவர் தனது மனைவியின் பெயரைச் சூட்டினார்.
"எனவே, இந்தப் பரந்த நிலப்பகுதிக்கு யாருக்கேனும் உரிமை உண்டு என்று சொல்ல வேண்டுமானால், அது மேரி பைர்டுக்குத்தான். ஆனால், அவர் சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பே காலமாகிவிட்டார்" என்கிறார் கூப்பர் ஜோன்ஸ்.
1959-ஆம் ஆண்டு, அண்டார்டிகா ஒப்பந்தம் கையெழுத்தானது. அண்டார்டிகாவின் நிலப்பகுதிகள் மீது நாடுகள் முன்வைத்திருந்த உரிமைக் கோரல்களை இந்த ஒப்பந்தம் முடிவுக்குக் கொண்டுவரவில்லை; மாறாக, அவற்றைத் தற்காலிகமாக ஒதுக்கிவைத்து, அண்டார்டிகாவை அமைதியான நோக்கங்களுக்கும் அறிவியல் ஆராய்ச்சிகளுக்கும் பயன்படுத்துவதற்கும் ஏதுவாக ஒரு சர்வதேசக் கட்டமைப்பின் கீழ் கொண்டு வந்தது.
அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, சிலி, பிரான்ஸ், நியூசிலாந்து, நார்வே மற்றும் பிரிட்டன் ஆகிய ஏழு நாடுகள் அண்டார்டிகாவின் சில பகுதிகளுக்கு உரிமை கோரியுள்ளன. அமெரிக்காவும் ரஷ்யாவும் எதிர்காலத்தில் உரிமை கோருவதற்கான தங்கள் வாய்ப்பைத் தக்கவைத்துள்ளன. இருப்பினும், இந்த நாடுகளில் எதுவும் மேரி பைர்ட் நிலத்துக்குத் தனிப்பட்ட உரிமை கோரவில்லை.
இந்த நிலப்பகுதி ஏன் எந்த நாட்டுக்கும் சொந்தமில்லாமல் உள்ளது?
இதற்குக் காரணம், இது மிகவும் தொலைதூரமான பகுதியில் அமைந்திருப்பதுதான் என்று கூப்பர் ஜோன்ஸ் விளக்குகிறார்.
"அண்டார்டிகாவின் மற்ற பகுதிகளுடன் ஒப்பிடும்போதுகூட, மேரி பைர்ட் நிலம் மிகவும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதி. இதன் கடற்கரை, தென் அமெரிக்காவின் தென்முனை, ஆஸ்திரேலியா அல்லது வேறு எந்த நிலப்பகுதியுடனும் அருகில் இல்லை. அங்கு செல்வது மிகவும் கடினம். அந்தப் பகுதியை வரைபடமாக்குவதற்காகப் பறக்கும் விமானங்களைத் தவிர, வேறு விமானங்கள் அப்பகுதியின் மீது பறப்பதே அரிது" என்று அவர் விளக்குகிறார்.
தற்போதைக்கு இந்த நிலை தொடர்கிறது. ஆனால், அங்கு மதிப்புமிக்க இயற்கை வளங்கள் ஏதேனும் கண்டறியப்பட்டாலோ அல்லது அண்டார்டிகாவின் பனிப்படலங்கள் உருகத் தொடங்கினாலோ, இந்தப் பகுதி சர்வதேச அளவில் சர்ச்சைக்குரியதாக மாறக்கூடும் என்று கூப்பர் ஜோன்ஸ் எச்சரிக்கிறார்.
அண்டார்டிகாவைத் தவிர, உலகின் ஏறக்குறைய அனைத்துப் பகுதிகளும் ஏதேனும் ஒரு நாட்டின் இறையாண்மையின் கீழ் உள்ளன. இருப்பினும், இதற்கு இரண்டு குறிப்பிடத்தக்க விதிவிலக்குகள் உள்ளன. புவிசார் அரசியல் ரீதியாகச் சுவாரஸ்யமான இந்த இரண்டு நிலப்பகுதிகளும், அவற்றின் மீது உரிமை கோருவதால் கிடைக்கும் நன்மைகளைவிட, உரிமை கோராமல் இருப்பதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் அதிகம் என்று சம்பந்தப்பட்ட நாடுகள் கருதியதால், இன்றுவரை எந்த நாட்டுக்கும் சொந்தமில்லாத பகுதிகளாகத் தொடர்கின்றன.
பிர் தவீல்
பிர் தவீல், எகிப்துக்கும் சூடானுக்கும் இடையிலான எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது. சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்பு, இந்த இரு நாடுகளுக்கும் இடையே பிரிட்டன் இரு வெவ்வேறு எல்லைக் கோடுகளை வரைந்ததால், இந்த நிலப்பகுதி ஒரு விசித்திரமான சூழலில் சிக்கிக்கொண்டது.
முதலாவது எல்லைக்கோடு 1899-ஆம் ஆண்டு வரையப்பட்டது. அது முற்றிலும் நேர்க்கோடாக இருந்தது. "நாங்கள் நேர்க்கோடுகளை வரைவதில் மிகவும் கெட்டிக்காரர்கள்" என்று கூப்பர் ஜோன்ஸ் நகைச்சுவையாகக் குறிப்பிடுகிறார்.
1902-ல் பிரிட்டிஷார் நிர்வாகம் சாராத ஒரு எல்லையை நிறுவ விரும்பினர். "அந்தச் சமயத்தில், அவர்கள் இன்னும் படைப்பாற்றலுடன் சிந்தித்து, கீழ்நோக்கிச் சென்று முதல் வளைவின் மீது மேல்நோக்கிச் செல்லும் ஒரு 'S' வடிவ வளைவை வரைந்தார்கள்" என்று கூப்பர் ஜோன்ஸ் தெரிவித்தார்.
இதன் விளைவாக, எகிப்தும் சூடானும் தங்களுக்கு ஆதரவாக வெவ்வேறு எல்லைக்கோடுகளைச் சுட்டிக்காட்டி உரிமை கோருகின்றன. இந்த இரண்டு எல்லைகளுக்கும் இடையில் 'ஹலாயிப் முக்கோணம்' என்ற நிலப்பகுதி உள்ளது. 1899-ஆம் ஆண்டு வரையப்பட்ட எல்லைக்கோட்டின்படி, அது எகிப்துக்குச் சொந்தமானது. ஆனால், 1902-ஆம் ஆண்டு வரையப்பட்ட நிர்வாக எல்லையின்படி, அது சூடானுக்குச் சொந்தமானது.
இரண்டாவது எல்லைக்கோடு, இதற்கு மாறாக, ஒப்பீட்டளவில் சிறியதும் குறைந்த மதிப்புடையதுமான மற்றொரு நிலப்பகுதியையும் உருவாக்கியது. அதுதான் பிர் தவீல்.
இதில் உள்ள சிக்கல் என்னவென்றால், அந்த இரண்டாவது எல்லையானது, சிறியதும் மிகக் குறைவான மதிப்புடையதுமான பிர் தவீல் என்ற ஒரு பகுதியையும் விட்டுச் சென்றது. இதில் உள்ள சிக்கலே இதுதான்: அந்த 'S' வடிவத்தின் காரணமாக, இரு நாடுகளில் ஏதேனும் ஒன்று பிர் தவீலை உரிமை கோரினால், அந்த நாடு ஹலாயிப் முக்கோணத்தின் மீதான தனது உரிமையை தானாகவே கைவிட வேண்டியிருக்கும்.
எனவே, ஹலாயிப் முக்கோணத்துக்கே உரிமை கோரும் எகிப்தும் சூடானும், பிர் தவீல் தங்களுக்குச் சொந்தமானது என்று ஏற்க மறுக்கின்றன. இதன் காரணமாக, நடைமுறையில் பிர் தவீல் 'யாருக்கும் சொந்தமில்லாத நிலம்' என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
இந்த நிலையில், யாராவது அதை உரிமை கோர முடிவு செய்தால் என்ன செய்வது? 2014-ல், ஜெரெமியா ஹீட்டன் என்ற ஒருவர் தன் அதிர்ஷ்டத்தை சோதித்துப் பார்க்கச் சென்றார். அந்த அமெரிக்கர் இந்த நிலப்பகுதியைத் தனக்குச் சொந்தமாக்கிக்கொள்ள முயன்றார்.
"அவர் அந்தப் பாலைவனத்துக்குச் சென்று, அங்கு ஒரு கொடியை நாட்டினார். பின்னர், ஒரு செய்தி நிகழ்ச்சியில் தோன்றி, தான் ஒரு புதிய நாட்டை உருவாக்கியுள்ளதாக அறிவித்தார். தனது மகள் உண்மையான இளவரசியாக இருக்க வேண்டும் என்பதற்காகவே அந்த நிலத்தைக் கைப்பற்றியதாகவும் கூறினார். இதனால் அவரது மகள் மிகுந்த சங்கடத்திற்கு ஆளாகியிருப்பார் என்றுதான் நான் நினைக்கிறேன்" என்கிறார் கூப்பர் ஜோன்ஸ்.
ஜெரெமியா ஹீட்டன் அறிவித்த புதிய நாட்டுக்கு சர்வதேச அளவில் குறிப்பிடத்தக்க அங்கீகாரம் கிடைத்ததாகத் தெரியவில்லை. இருப்பினும், பிர் தவீலைத் தங்களுக்குச் சொந்தமாக்கிக்கொள்ள முயன்றவர்களில் அவரைவிடத் தீவிரமாகச் செயல்பட்டவர்களும் உள்ளனர்.
கோர்ன்ஜா சிகா
குரோஷியாவுக்கும் செர்பியாவுக்கும் இடையிலும் டெர்ரா நுல்லியஸ் எனப்படும், எந்த நாடும் உரிமை கோராத ஒரு நிலப்பகுதி உள்ளது.
இரண்டாம் உலகப் போரின் முடிவில், 1945-ஆம் ஆண்டில், புதிதாக உருவான சோசலிச கூட்டாட்சி யூகோஸ்லாவியக் குடியரசின் கட்டமைப்பின் கீழ் நிறுவப்பட்டது.
டானூப் நதி இயற்கையான எல்லையாக இருந்தது, ஆனால் அது, புதுப்பிக்கப்படாத 19-ஆம் நூற்றாண்டின் பழைய ஆஸ்திரிய-ஹங்கேரியப் பேரரசின் நில அளவைப் படங்களில் தோன்றிய வளைவான பாதையின்படி நிர்ணயிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஆனால், கிரேக்கத் தத்துவஞானி ஹெராக்ளிட்டஸ் கூறியதுபோல், ஆறுகள் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கின்றன. இந்தப் பகுதியில், 19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் மேற்கொள்ளப்பட்ட பெரிய பொறியியல் திட்டங்களால் டான்யூப் நதியின் பாதை பெருமளவில் மாற்றியமைக்கப்பட்டது. ஆற்றை நேராக்கி கப்பல் போக்குவரத்தை எளிதாக்குவதற்காக மாபெரும் பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இதனால், பழைய வரைபடங்களில் காட்டப்பட்டிருந்த நதிப்பாதைக்கும் தற்போது ஆறு ஓடும் பாதைக்கும் இடையே வேறுபாடு ஏற்பட்டது.
"இதன் விளைவாக, குரோஷியா கணிசமான நிலப்பரப்பை இழக்கும்; அந்தப் பகுதிகள் செர்பியாவுக்குச் சென்றுவிடும். எனவே, எல்லை என்பது தற்போது வறண்டுபோயுள்ள பழைய நதிப்பாதையைப் பின்பற்ற வேண்டும் என்று குரோஷியா கூறுகிறது. ஆனால், தற்போது நதி எங்கு ஓடுகிறதோ, அதுவே எல்லையாக இருக்க வேண்டும் என்று செர்பியா விரும்புகிறது" என்கிறார் கூப்பர் ஜோன்ஸ்.
நதியின் பாதையை நேராக்கியதால், பழைய எல்லைக் கோட்டுக்கும் தற்போதைய நதிப்பாதைக்கும் இடையில் சில நிலப்பகுதிகள் உருவாகின. அவற்றில் கோர்ன்ஜா சிகாவும் ஒன்று.
ஆனால், பிர் தவீல் விவகாரத்தைப் போலவே, இந்த நிலப்பகுதியைத் தனக்குச் சொந்தமானது என்று ஏற்றுக்கொள்வதில் இரு நாடுகளுக்கும் ஒரு சிக்கல் உள்ளது. குரோஷியா தற்போதைய நதிப்பாதையை எல்லையாக ஏற்றுக்கொண்டால், செர்பியாவின் பக்கத்தில் அமைந்துள்ள சில நிலப்பகுதிகள் மீதான தனது உரிமைக் கோரிக்கையை விட்டுக்கொடுக்க வேண்டியிருக்கும்.
இதன் விளைவாக, குரோஷியாவும் செர்பியாவும் கோர்ன்ஜா சிகா தங்களுக்குச் சொந்தமானது அல்ல என்று கூறுகின்றன. இதனால், இந்தச் சிறிய நிலப்பகுதி எந்த நாட்டுக்கும் சொந்தமில்லாத நிலமாக கருதப்படுகிறது.
இந்த நிலப்பகுதியை யாராவது அதை உரிமை கோர முயற்சித்திருக்கிறார்களா? என்ற கேள்விக்கு ஆம் என்பதே பதில்.
செக் அரசியல்வாதியான விட் ஜெட்லிக்கா, கோர்ன்ஜா சிகாவில் 'லிபர்லேண்ட்' என்ற பெயரில் ஒரு நாட்டை நிறுவியதாக அறிவித்தார். சுதந்திரவாதக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட இந்த முயற்சிக்கு, சர்வதேச அளவில் பரவலான அங்கீகாரம் கிடைக்கவில்லை.

பட மூலாதாரம், Getty Images
"அவர் அந்த 700 ஹெக்டேர் நிலப்பகுதிக்குத் தன்னைத்தானே தலைவராக அறிவித்துக்கொண்டார். குடியுரிமை வழங்குவதற்காக ஒருவரிடம் சுமார் 10,000 அமெரிக்க டாலர்களைக் கட்டணமாக வசூலிக்கிறார். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குடிமக்களாக இருப்பதால், இந்த முயற்சியின் மூலம் அவர் கணிசமான வருமானம் ஈட்டுகிறார்" என்கிறார் கூப்பர் ஜோன்ஸ்.
"ஆனால், ஒரு விஷயத்தைக் கவனிக்க வேண்டும். அவர் தனது 'நாட்டுக்குள்' நுழைய முயற்சிக்கும் ஒவ்வொரு முறையும் குரோஷியக் காவல்துறை அவரைத் தடுத்து நிறுத்துகிறது. சில இரவுகளை அவர் சிறைக் காவலிலும் கழித்திருக்கிறார். இருப்பினும், இந்த முயற்சியின் மூலம் அவர் கணிசமான செல்வத்தை ஈட்டியுள்ளார் என்பதை மறுக்க முடியாது," என்றும் அவர் கூறுகிறார்.
லிபர்லேண்ட், சர்வதேசச் சட்டத்தின் கீழ் ஒரு நாடாக அங்கீகரிக்கப்படுவதற்கான நிபந்தனைகளைப் பூர்த்தி செய்வதாக நிரூபிக்கத் தொடர்ந்து முயன்று வருகிறது. குறிப்பாக, ஒரு நாட்டுக்கு நிரந்தரமான மக்கள் தொகை இருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட நிபந்தனைகளை வரையறுக்கும் மான்டிவீடியோ உடன்படிக்கையை அது சுட்டிக்காட்டுகிறது.
ஆகஸ்ட் 2023 முதல் அந்தப் பிரதேசத்தில் மக்கள் குடியேறத் தொடங்கிவிட்டதாகவும், அங்கு ஒரு குடியேற்றம் உருவாகி வருவதாகவும் லிபர்லேண்ட் அரசு தனது அதிகாரப்பூர்வத் தகவல்களில் பெருமையுடன் கூறிவருகிறது. ஆனால், சர்வதேச ஊடகங்கள் பதிவு செய்துள்ள காட்சிகள் முற்றிலும் மாறுபட்ட நிலவரத்தைக் காட்டுகின்றன.
கோர்ன்ஜா சிகா, ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிப்புற எல்லையை ஒட்டியிருப்பதால், அங்கு தரைவழியாகவும் நீர்வழியாகவும் செல்வதைக் குரோஷிய எல்லைப் பாதுகாப்புப் படையினர் கடுமையாகக் கட்டுப்படுத்துகின்றனர். லிபர்லேண்டில் குடியேற விரும்புவோர் நிரந்தரக் கட்டமைப்புகளை அமைக்க முயற்சிக்கும் போதெல்லாம், குரோஷியக் காவல்துறை அவர்களின் தற்காலிக முகாம்களை அகற்றிவிடுகிறது.
இறுதியில், லிபர்லேண்ட் என்பது அதன் குடிமக்களின் மனதில் செழித்து வளரும் மெய்நிகர் நாடாக இருக்கலாம். ஆனால், உண்மையில் கோர்ன்யா சிகா இன்னமும் 'டெர்ரா நல்யஸ்' எனப்படும், எந்த நாடும் உரிமை கோராத நிலப்பகுதியாகவே உள்ளது.
உண்மையில், பூமியின் மேற்பரப்பில் சுமார் 43 சதவீதம் எந்த நாட்டுக்கும் சொந்தமானதல்ல. ஆனால், அதில் பெரும்பகுதி நீர்ப்பரப்பாகும். அண்டார்டிகாவின் மிகப் பெரிய நிலப்பரப்பையும் சேர்த்தாலும், எந்த நாடும் உரிமை கோராத நிலப்பகுதிகள், பூமியின் மொத்த நிலப்பரப்பில் 1 சதவீதத்தில் மூன்றில் ஒரு பங்குக்கும் குறைவாகவே உள்ளன.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு






























