அயோத்தி ராமர் கோவில் காணிக்கை திருட்டு புகார்: கைது செய்யப்பட்ட 8 பேர் யார்?

    • எழுதியவர், அர்ஷத் அஃப்சல் கான்
    • பதவி, பிபிசிக்காக
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

அயோத்தி ராமர் கோவில் காணிக்கையில் முறைகேடு நடந்ததாகக் கூறப்படும் வழக்கில், சிறப்பு விசாரணைக் குழுவின் (SIT) ஆரம்பகட்ட அறிக்கை முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்திடம் சமர்ப்பிக்கப்பட்டதை அடுத்து, வியாழக்கிழமையன்று (2026 ஜூன் 25) எட்டு பேர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.

ராமர் கோவிலின் உண்டியல்களில் இருந்து பணம் மற்றும் மதிப்புமிக்க பொருட்கள் திருடப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில் எட்டு பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக, அயோத்தி மூத்த காவல் கண்காணிப்பாளர் கௌரவ் குரோவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

குற்றம் சாட்டப்பட்ட எட்டு பேரும் காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் ஓரிரு நாட்களுக்குள் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள்.

இவ்விவகாரம் தொடர்பான முழு உண்மையும் வெளிச்சத்துக்குக் கொண்டுவரப்படுவதை உறுதி செய்வேன் என்று உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக இன்று பேசிய முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், "அயோத்தி குறித்து வந்த செய்திகளை அடுத்து, சிறப்பு விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக நாங்கள் கூறியிருந்தோம். அக்குழுவின் அறிக்கை கிடைத்தவுடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியிருந்தோம். அதேபோல, அந்த அறிக்கை கிடைத்தவுடன் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. நான் முன்பே கூறியதைப்போல, இந்த விவகாரத்தில் உண்மையை முழுமையாக வெளிக்கொண்டு வருவோம் என்பதில் உறுதியாக இருக்கிறேன்" என்றார்.

மேலும் அவர், "மக்களின் நம்பிக்கையோடு விளையாடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. சனாதன நம்பிக்கையோடு விளையாடுபவர்கள் யாராக இருந்தாலும், அதற்கான விளைவுகளை அவர்கள் அனுபவித்தே தீர வேண்டும். இதில் யாருக்கும் விதிவிலக்கு அளிக்க முடியாது" என்றும் கூறினார்.

இதுதவிர, ராமர் கோவில் காணிக்கை திருடப்பட்டதாகக் குற்றம் சாட்டியவர்கள் குறித்தும் யோகி ஆதித்யநாத் கருத்து தெரிவித்தார்.

"ராம பக்தர்களுக்கு அக்னி பரீட்சை வைத்து சோதிக்காதீர்கள். அவர்களின் நம்பிக்கையோடு விளையாடுவதை நிறுத்திக் கொள்ளுங்கள். உங்களிடம் உண்மைகளோ, தெளிவான ஆதாரங்களோ இல்லை என்றால், பரஸ்பர குற்றச்சாட்டுகளைக் கூறுவதை நிறுத்துங்கள். உண்மையில் உங்களிடம் ஆதாரம் இருந்தால், அவற்றை சிறப்பு விசாரணைக் குழுவிடம் சமர்ப்பியுங்கள்" என யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், "சிறப்பு விசாரணைக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் அரசு தனது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மூத்த அதிகாரிகளின் குழு இந்த விவகாரத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் போது, இது குறித்த அரசியல் ரீதியான கருத்துகளை வெளியிடுவதை நிறுத்த வேண்டும்" என்று கூறினார்.

முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றம் சாட்டப்பட்ட அனைவரும், யாத்ரீகர் வசதி மையத்துக்குக் கொண்டு செல்லப்பட்ட 40 நன்கொடைப் பெட்டிகளில் இருந்த காணிக்கைகளை எண்ணும் பணியில் ஈடுபட்ட குழுவில் இடம்பெற்றிருந்தனர்.

கோவில் நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் விவகாரத்தில் இவர்களின் பங்கு குறித்து விசாரணை அமைப்புகள் விசாரித்து வருகின்றன. ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் உறுப்பினர் கிருஷ்ண மோகன் அளித்த புகாரின் பேரில், ராமர் ஜென்மபூமி காவல் நிலையத்தில் இந்த முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

பணியாளரால் செய்யப்படும் திருட்டு, குற்றவியல் ரீதியான நம்பிக்கைத் துரோகம், மோசடி மற்றும் குற்றவியல் சதித்திட்டம் தொடர்பான 'பாரதிய நியாய சன்ஹிதா' சட்டப்பிரிவுகளின் கீழ் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள நபர்கள்: டின்னு யாதவ், அனுகல்ப் மிஸ்ரா, லவ்குஷ் மிஸ்ரா, அவினாஷ் சுக்லா, மனிஷ் யாதவ், சுபாஷ் ஸ்ரீவஸ்தவா, கருணேஷ் பாண்டே மற்றும் ராம்சங்கர் மிஸ்ரா ஆவர்.

இவர்களில் டின்னு யாதவ் கண்காணிப்புப் பொறுப்பில் இருந்தார், மற்ற அனைவரும் பணத்தை எண்ணும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

புகாரின்படி, குற்றம் சாட்டப்பட்டவர்கள் கூட்டுச் சதி செய்து, பக்தர்கள் செலுத்திய காணிக்கை பணத்தைக் கையாடல் செய்ததுடன், அறக்கட்டளையின் நிதியைத் தவறாகப் பயன்படுத்தியுள்ளனர். இந்த வழக்கு, கோவில் வளாகத்தில் உள்ள காணிக்கைப் பெட்டிகளில் இருந்து சேகரிக்கப்பட்ட தொகையில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுடன் தொடர்புடையதாகும்.

ஜூன் 13 அன்று நிதி முறைகேடுகள் குறித்த புகார்கள் எழுந்ததை அடுத்து, அறக்கட்டளையின் கோரிக்கையின் பேரில் சிறப்பு விசாரணைக்குழு அமைக்கப்பட்டது.

இந்தக் குழுவுக்கு விஜய் விஸ்வாஸ் பந்த் தலைமை தாங்குகிறார். இந்த குழுவில் கிரண் எஸ் மற்றும் நிதித்துறையின் சிறப்புச் செயலாளர் நீல்ரத்ன குமார் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

நடைமுறை குறைபாடுகளைக் கண்டறிவதும், இச்சம்பவத்தின் பின்னணியில் ஏதேனும் பெரிய சதித்திட்டம் உள்ளதா என்பதை விசாரிப்பதும் இக்குழுவின் பணியாகும்.

கைது செய்யப்பட்டவர்கள் யார்?

1. ராமாசங்கர் யாதவ் (டின்னு)

பொறுப்பு: காணிக்கைப் பெட்டிகளைக் கண்காணிப்பது மற்றும் அவற்றை அடித்தளத்துக்கு கொண்டு சேர்ப்பது.

குற்றச்சாட்டு: காணிக்கைப் பெட்டிகளில் இருந்து பல கோடி ரூபாய் கையாடல் செய்தது மற்றும் அயோத்தியைச் சுற்றியுள்ள பகுதிகளில் சொத்துக்களை வாங்கியது.

2. லவ்குஷ் மிஸ்ரா

பொறுப்பு: காணிக்கை மற்றும் ரொக்கப் பணத்தை எண்ணுவது.

குற்றச்சாட்டு: காணிக்கையைத் திருடி பல கோடி ரூபாய் மதிப்பில் சொத்து சேர்த்தது. இவரது வீட்டிலிருந்து ரூ. 12 லட்சம் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

3. அனுகல்ப் மிஸ்ரா

பொறுப்பு: பணத்தை எண்ணும் அறையில் ரொக்கப் பணத்தை எண்ணுவது.

குற்றச்சாட்டு: பணத்தை எண்ணும் அறையிலிருந்து பணத்தைத் திருடி கழிவறையில் மறைத்து வைத்தது மற்றும் லட்சக்கணக்கான மதிப்புள்ள சொத்துக்களைச் சேர்த்தது.

4. சுபாஷ் சந்திர ஸ்ரீவஸ்தவா

பொறுப்பு: பணத்தை எண்ணும் பணியாளர்களின் பொறுப்பாளர்.

குற்றச்சாட்டு: கண்காணிப்பில் அலட்சியமாக இருந்தது மற்றும் திருட்டுச் சம்பவத்தில் கூட்டுச் சதி செய்தது.

5. கருணேஷ் பாண்டே

பொறுப்பு: காணிக்கைத் தொகையை எண்ணும் அறைக்குக் கொண்டு வருவது மற்றும் அதை எண்ணுவது.

குற்றச்சாட்டு: காணிக்கைப் பணத்தைத் திருடி அயோத்தியைச் சுற்றியுள்ள பகுதிகளில் சொத்துக்களை வாங்கியது.

6. மனிஷ் யாதவ்

பொறுப்பு: காணிக்கைப் பெட்டிகளில் இருந்து பெறப்பட்ட ரொக்கப் பணத்தை எண்ணுவது.

குற்றச்சாட்டு: காணிக்கையைத் திருடியது. இவரது வீட்டிலிருந்து ரூ. 36 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

7. அவினாஷ் சுக்லா

பொறுப்பு: காணிக்கைத் தொகையை எண்ணும் அறைக்குக் கொண்டு வருவது மற்றும் அதை எண்ணுவது.

குற்றச்சாட்டு: காணிக்கைப் பணத்தைத் திருடி சொத்துக்களை வாங்கியது.

8. ராமாசங்கர் மிஸ்ரா

பொறுப்பு: காணிக்கைப் பெட்டிகளை எண்ணும் அறைக்குக் கொண்டு சேர்ப்பது மற்றும் அவற்றைக் கண்காணிப்பது.

குற்றச்சாட்டு: குற்றம் சாட்டப்பட்ட மற்ற நபர்களுடன் கூட்டு சேர்ந்து காணிக்கைப் பணத்தைக் கையாடல் செய்தல்.

நன்கொடைகள் குறித்த கேள்விக்கு காட்டமாக பதிலளித்த துணை முதலமைச்சர் பிரஜேஷ் பாதக்

ராமர் கோவில் கட்டுமானத்துக்காகத் திரட்டப்பட்ட நன்கொடைகள் குறித்துக் கேள்வி எழுப்பியபோது, உத்தரப் பிரதேச துணை முதலமைச்சர் பிரஜேஷ் பாதக் ஆத்திரமாக பதிலளித்தார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நான் கேட்கிறேன், பாபர் மசூதிக்காகவும் நன்கொடைகள் சேகரிக்கப்பட்டன. சேகரிக்கப்பட்டதா இல்லையா? அதைப்பற்றிக் கேளுங்கள், யாராவது கேட்கிறீர்களா?" என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், சமாஜ்வாதி கட்சியும் காங்கிரஸ் கட்சியும் 'திருப்திப்படுத்தும் அரசியலில்' ஈடுபடுவதாக அவர் குற்றம் சாட்டினார்.

ஊழலுக்கு எதிராக 'எவ்வித சகிப்புத்தன்மையும் காட்டப்படாது' என்ற கொள்கையைக் கடைப்பிடிப்பதில் பாரதிய ஜனதா கட்சி அரசு உறுதியுடன் இருப்பதாகவும் துணை முதலமைச்சர் பிரஜேஷ் பாதக் தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு