தோனியை தவறவிட்ட பிகாருக்கு 15 வயது வைபவ் சூர்யவன்ஷி தந்துள்ள மிகப்பெரிய மாற்றம்

    • எழுதியவர், நீரஜ் ஜா
    • பதவி, பிசினஸ் ஹெட், யூரோஸ்போர்ட், பிபிசி ஹிந்திக்காக
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 7 நிமிடங்கள்

(குறிப்பு: இவை எழுத்தாளரின் சொந்தக் கருத்துகள்)

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை டெல்லியில் உள்ள எனது நண்பர்களிடம் பாட்னா மாவட்டத்திற்காக நான் போட்டி கிரிக்கெட் விளையாடி இருக்கிறேன் என்று சொல்லும் போதெல்லாம், அவர்களின் முகத்தில் ஒரு புன்னகை வந்துவிடும்.

இது பாராட்டுக்கான புன்னகை அல்ல, மாறாக கேலி செய்யும் புன்னகை. அவர்களின் எண்ணம் தெளிவாக இருந்தது. பிகாரையும் கிரிக்கெட்டையும் ஒரே வரியில் குறிப்பிடுவது விசித்திரமாகத் தோன்றியது. பல தசாப்தங்களாக பிகார் விளையாட்டின் உண்மை நிலை இதுவாகத்தான் இருந்து வருகிறது.

பிகார் 13 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட ஒரு மாநிலம். அறிஞர்கள், அதிகாரிகள், தொழிலதிபர்கள் மற்றும் தலைவர்களை உருவாக்கிய ஒரு மாநிலம். இதன் மக்கள் இந்தியா முழுவதிலும் மற்றும் உலகம் முழுவதிலும் பொருளாதாரத்தை வலுப்படுத்த உதவியுள்ளனர். ஆனால் விளையாட்டைப் பற்றி பேசுகையில், பிகாரின் பெயர் எங்குமே காணப்படாது.

ஆனால் இப்போது இவை அனைத்தும் மாறி வருகின்றன. ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், இந்த மாற்றத்தின் முகம் சமஸ்திபூரைச் சேர்ந்த ஒரு பதின்மவயது சிறுவன் என்பதுதான். இந்த பெயரை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், வைபவ் சூர்யவன்ஷி.

இது ஒரு திறமையான கிரிக்கெட் வீரரின் கதை மட்டுமல்ல. இது ஒரு இளம் சிறுவன் ஒட்டுமொத்த மாநிலத்தைப் பற்றிய மக்களின் சிந்தனையை எவ்வாறு மாற்றத் தொடங்கியுள்ளார் என்பதன் கதை.

பிகார் கிரிக்கெட்டின் பெரிய சோகம்

பிகார் கிரிக்கெட்டின் சோகம் என்பது ஒருபோதும் திறமை குறைபாடாக இருந்ததில்லை. சோகம் என்பது வாய்ப்புகளின் பற்றாக்குறையும் ஊழலும்தான். பல ஆண்டுகளாக பிகாரின் வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரர்கள், மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தாக்குப்பிடிக்க முடியாத ஒரு சூழலையே எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

கட்டமைப்பு வசதிகள் மோசமாக இருந்தன. நிர்வாகத்தில் நிச்சயமற்ற தன்மை நீடித்தது. தொழில்முறை வழிகள் குறைவாகவே இருந்தன.

இதற்கு மிகச்சிறந்த உதாரணம் மகேந்திர சிங் தோனி. தோனியின் குடும்பம் உண்மையில் பிகாரைச் சேர்ந்தது. ஆனால் விதி வேறு எதையோ தீர்மானித்திருந்தது.

நவம்பர் 2000 இல் பிகாரில் இருந்து பிரிந்து ஜார்கண்ட் உருவான பிறகு, ராஞ்சி புதிய மாநிலத்தின் ஒரு பகுதியாக மாறியது. இதன் காரணமாக பிகார் நீண்ட காலமாக முதன்மை உள்நாட்டு கிரிக்கெட் கட்டமைப்பிலிருந்து வெளியே இருந்தது. இந்த காரணத்தால் நிலைமை மேலும் மோசமடைந்தது.

இதன் முடிவு ஏற்கனவே தெரிந்ததுதான். தோனி ஜார்கண்ட் மாநிலத்தின் வழியாக இந்தியாவிற்கான ஜெர்சியை அணிந்தார். திறமையான கிரிக்கெட் வீரர்கள் பெரும்பாலும் பிற இடங்களில் வாய்ப்புகளைத் தேடத் தொடங்கினர். இஷான் கிஷனும் இதே வழியையே பின்பற்றினார். எண்ணற்ற பிற வீரர்களும் இதையே செய்தனர்.

பல ஆண்டுகளாக பிகார் திறமைகளின் மையமாக மாறுவதற்குப் பதிலாக, திறமைகளை ஏற்றுமதி செய்யும் மாநிலமாக மாறியது. விசித்திரமான விஷயம் என்னவென்றால், பிகாரின் ஒவ்வொரு நபரும் இந்த நட்சத்திரங்களைத் தங்களின் சொந்தக்காரர்களாகவே கருதினர். ஏனென்றால், பிரச்னை ஒருபோதும் திறமையில் இல்லை, அமைப்பில்தான் இருந்தது என்பது அவர்களுக்குள் நன்றாகவே தெரிந்திருந்தது.

அனைத்தையும் ஏற்றுமதி செய்த மாநிலம்

பல தசாப்தங்களாக பிகார் மக்களைத் தொழிலாளர்கள், பொறியியலாளர்கள், மருத்துவர்கள், ஆசிரியர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளாக மாநிலத்திற்கு வெளியே அனுப்பியது.

தேசிய அளவில் பிகார் தொடர்ந்து ஒரு நேர்மறையான அடையாளத்தை உருவாக்கிய ஒரு துறை இருந்தது என்றால், அது யூபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்று ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளாக மாறும் இளம் ஆண்கள் மற்றும் பெண்களின் எண்ணிக்கைதான்.

பிகார் லட்சியம் மற்றும் துணிச்சலின் அடையாளமாக மாறியது. ஆனால் விளையாட்டில் சிறந்த செயல்பாட்டை வெளிப்படுத்துவதில் அப்படி இருக்கவில்லை.

பிகாருக்கு வெளியே அந்த மாநிலத்தின் பிம்பம் பெரும்பாலும் இடப்பெயர்வு புள்ளிவிவரங்கள், அரசியல் தலைப்புச் செய்திகள் மற்றும் ஒரே மாதிரியான பிற்போக்குத்தனமான கருத்துகளால் உருவாக்கப்பட்டது. மாநிலத்திற்கு வெளியே வசிக்கும் பிகார் மக்கள் நான் எதைச் சொல்கிறேன் என்பதை நன்றாகப் புரிந்துகொள்வார்கள்.

நாங்கள் எங்கள் அடையாளத்தைக் கவனமாகக் கையாளக் கற்றுக்கொண்டோம். நாங்கள் பிகாரைச் சேர்ந்தவர்கள் என்பதில் பெருமை இருந்தது. ஆனால் அந்த அடையாளத்துடன் தொடர்புடைய பிற்போக்குத்தனமான கருத்துகளையும் நாங்கள் அறிந்திருந்தோம்.

மும்பை, டெல்லி, பெங்களூரு, சென்னை மற்றும் ராஞ்சியில் இருந்து பல சிறந்த வீரர்கள் உருவான இந்த கிரிக்கெட் பைத்தியம் பிடித்த நாட்டில், யாரும் எதிர்பார்க்காத நாட்டின் ஒரு மூலையிலிருந்து ஒரு புதிய பெயர் உருவாகி வருகிறது.

பிகாரின் சமஸ்திபூர் மாவட்டத்தின் தாஜ்பூரைச் சேர்ந்த பதின்ம வயது வைபவ் சூர்யவன்ஷி, வேகமாக உலகின் மிகவும் பேசப்படும் இளம் கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக மாறியுள்ளார்.

பெரும்பாலான குழந்தைகள் பள்ளித் தேர்வுகளில் கவனம் செலுத்தும் அந்த வயதில், சூர்யவன்ஷி சாதனைப் புத்தகங்களை புதியதாக மாற்றி எழுதி வருகிறார். அவர் அனுபவம் வாய்ந்த சர்வதேச பந்துவீச்சாளர்களைத் தங்களின் உத்திகளை மீண்டும் யோசிக்க வைக்கிறார்.

'விளையாட்டால் பதில் அளித்தார்'

வைபவ் வளர்ந்து வந்த கதை வெறும் புள்ளிவிவரங்களால் மட்டும் முழுமையாக விவரிக்கப்படக் கூடியதல்ல. 13 வயதில் அவர் ஐபிஎல் ஒப்பந்தத்தைப் பெற்ற மிக இளம் வீரர் ஆனார். அவரை ராஜஸ்தான் ராயல்ஸ் நிறுவனம் 1.1 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்தது.

ஒரு வருடம் கழித்து, அவர் ஆண்கள் டி20 வரலாற்றில் மிகக் குறைந்த வயதில் சதம் அடித்த வீரர் ஆனார். அவர் 35 பந்துகளில் சதம் அடித்தார், இது ஐபிஎல் வரலாற்றில் இந்தியர் ஒருவரின் அதிவேக சதமாகும்.

ஐபிஎல் 2025 இன் போது அவர் ஏழு போட்டிகளில் 207 ஸ்டிரைக் ரேட்டில் 252 ரன்கள் எடுத்தார். இதன் பிறகு அவர் 2026-ல் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் 80 பந்துகளில் 175 ரன்கள் எடுத்து தனது ஆதிக்கத்தை நிலைநாட்டினார். அதோடு லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அதிவேகமாக 150 ரன்கள் எடுத்த ஏபி டிவில்லியர்ஸின் சாதனையை முறியடித்தார்.

ஆனால் ஐபிஎல் 2026 அனைத்தையும் மாற்றியது. 16 போட்டிகளில் அவர் எடுத்த 776 ரன்கள் ஐபிஎல் வரலாற்றில் சர்வதேச போட்டிகளில் விளையாடாத ஒரு வீரரால் எடுக்கப்பட்ட அதிகபட்ச ரன்கள் ஆகும். இதுவே அசாதாரணமானது.

72 சிக்ஸர்கள் இன்னும் வியக்கத்தக்கதாக இருந்தன. ஆரம்பத்திலேயே அவர் மீது தாக்குதல் நடத்தத் திட்டமிட்ட எதிரணி கேப்டன்கள், போட்டிக்கு முந்தைய தங்களது அணியின் ஆலோசனை கூட்டங்களில் சேதத்தை எப்படிக் குறைப்பது என்று சிந்திக்கத் தொடங்கினர்.

எலிமினேட்டர் ஆட்டத்தில் 29 பந்துகளில் அவர் எடுத்த 97 ரன்கள், இதில் 12 சிக்ஸர்கள் அடங்கும், இது அனுபவம் வாய்ந்த வர்ணனையாளர்களை அவர்கள் பொதுவாகப் பயன்படுத்தாத வார்த்தைகளைப் பயன்படுத்தக் கட்டாயப்படுத்திய ஒரு இன்னிங்ஸ் ஆகும்.

புள்ளிவிவரங்களால் காட்ட முடியாத விஷயம், அவரது பயமற்ற அணுகுமுறைதான். உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளர்களுக்கு எதிராக முதல் பந்திலேயே சிக்ஸர் அடிப்பது அவரது அடையாளமாக மாறியுள்ளது. இது வெறும் சவடால் அல்ல, அவரது இயல்பான பாணி. 15 வயதில் இத்தகைய சிந்தனை கொண்டிருப்பது எந்தவொரு புள்ளிவிவரத்தையும் விட மிகவும் அரிதான ஒரு விஷயமாகும்.

இருப்பினும் வெற்றியுடன் சேர்ந்து மக்களின் கவனமும் அவர் மீது நிலைபெற்றன.

சமீபத்தில் நடந்த இந்தியா ஏ மற்றும் இலங்கை ஏ தொடரின் போது, இலங்கை வீரர்களுடன் மைதானத்தில் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாகச் சூர்யவன்ஷி சர்ச்சைகளில் சிக்கினார். இந்தச் சம்பவம் ஆக்ரோஷம், நடத்தை மற்றும் இவ்வளவு சிறிய வயதில் புகழைக் கையாள்வதில் உள்ள அழுத்தம் குறித்து பெரும் விவாதத்தைக் கிளப்பியது.

இந்த இளம் வீரர் வார்த்தைகளால் அல்லாமல் தனது விளையாட்டின் மூலம் பதிலளித்தார்.

தொடரின் இறுதிப் போட்டியில் எதிர்பார்ப்புகளும் விமர்சனங்களும் உச்சத்தில் இருந்த போது, சூர்யவன்ஷி போட்டியை வென்று தந்த 94 ரன்கள் இன்னிங்ஸை விளையாடினார். அவர் 'ஆட்டநாயகன்' விருதை வென்றார்.

இது மக்களின் கவனத்தை மீண்டும் அவர் தலைப்புச் செய்திகளில் இடம் பெறக் காரணமான அவரது விளையாட்டின் பக்கம் திருப்பிய ஒரு சிறந்த இன்னிங்ஸ் ஆகும்.

வைபவ் கதையின் முக்கியத்துவம்

இருப்பினும் வைபவ் கதையின் முக்கியத்துவம் கிரிக்கெட்டையும் தாண்டியது.

பல தசாப்தங்களாக பிகார் தங்களின் வெற்றிகரமான பயணத்தின் போது மாநிலத்துடன் ஆழமாகத் தொடர்பில் இருக்கும் விளையாட்டு நட்சத்திரங்களை உருவாக்கப் போராடி வருகிறது. சூர்யவன்ஷியின் எழுச்சியால் பிகாரின் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு ஒரு மிகப்பெரிய விஷயம் கிடைத்துள்ளது, அதுதான் பிரதிநிதித்துவம்.

அவரது தற்போதைய சாதனைகள் ஒருவேளை எப்போதாவது முறியடிக்கப்படலாம். புதிய சாதனைகள் படைக்கப்படும் மற்றும் புதிய திறமைகள் வெளிப்படும். ஆனால் இந்தியா மற்றும் குறிப்பாக பிகாரின் இளம் கிரிக்கெட் வீரர்களின் தலைமுறையினரிடையே அவர் ஏற்படுத்திய நம்பிக்கைதான், ஒருவேளை அவரது மறக்க முடியாத பங்களிப்பாக நிரூபிக்கப்படும்.

வெறும் 15 வயதே ஆன வைபவ் சூர்யவன்ஷி ஓர் அசாதாரண மற்றும் பயமற்ற பேட்ஸ்மேன் என்பதையும் தாண்டி பலவாக மாறியுள்ளார். அவர் நம்பிக்கையின் ஒரு முன்மாதிரியாக மாறியுள்ளார்.

நான் வேண்டுமென்றே அவரை சச்சின் டெண்டுல்கர் அல்லது விராட் கோலியுடன் ஒப்பிடவில்லை. அவர்கள் விளையாட்டின் சிறந்த வீரர்கள் மற்றும் ஒவ்வொருவருக்கும் தங்களின் தனித்துவமான கதை உள்ளது.

சச்சின் மற்றும் கோலி போன்ற ஜாம்பவான்களுடன் ஒப்பிடப்படுவது இயல்பானதுதான். ஆனால் இப்போது அப்படி ஒப்பிடுவது மிக முன்கூட்டிய ஒன்றாக இருக்கும். இரு ஜாம்பவான்களின் பயணமும் தனித்துவமானது, அது இந்திய கிரிக்கெட்டிற்குப் புதிய திசையைக் காட்டியது.

சூர்யவன்ஷிக்கு முன்னால் உள்ள சவால் அடுத்த சச்சினாகவோ அல்லது அடுத்த விராட்டாகவோ மாறுவது அல்ல, மாறாக முதல் வைபவ் சூர்யவன்ஷியாக மாறுவதுதான். வைபவ் தனது கதையின் முதல் அத்தியாயத்தைத் தானே எழுதுவதற்கான உரிமை அவருக்கு உள்ளது. இந்த புள்ளிவிவரங்கள் ஒவ்வொரு போட்டி மற்றும் தொடருடன் மாறிக் கொண்டே இருக்கும். ஆனால் இவற்றில் இருந்து எதிர்காலத்தில் சிறந்த வீரராக மாறக்கூடிய ஒரு வீரரின் நிழலாட்டம் தெரிகிறது.

வைபவ் பேட்டிங் ஒரு டீனேஜரால் இதுவரை பார்க்கப்பட்ட மிகச்சிறந்த பேட்டிங்குகளில் ஒன்றாகும். சாதனைகள் உடைந்தன, புதிய மைல்கற்கள் எட்டப்பட்டன, பந்துவீச்சாளர்கள் பயந்தனர் மற்றும் நிபுணர்கள் ஆச்சரியப்பட்டனர்.

ஆனால் வெறும் புள்ளிவிவரங்களால் மட்டும் என்ன நடந்தது என்பதைப் புரிந்துகொள்ள முடியாது. ஏனென்றால் வைபவின் மிகப்பெரிய வெற்றி புள்ளிவிவரங்களில் இல்லை, உணர்வுகளில் உள்ளது.

பல தசாப்தங்களில் முதல் முறையாகப் பிகாருக்கு ஒரு விளையாட்டுக்கான ஒரு அடையாளம் கிடைத்துள்ளது, அவர் பெருமையுடனும் எந்தவொரு தயக்கமுமின்றி பிகாருடன் தனது அடையாளத்தை இணைக்கிறார். ஜார்கண்டுடன் அல்ல, மும்பையுடன் அல்ல, டெல்லியுடன் அல்ல, கர்நாடகத்துடன் அல்ல. இந்த வேறுபாடு மிகவும் முக்கியமானது, பெரும்பாலான மக்கள் புரிந்து கொள்வதை விட மிகவும் அதிகமானது.

ஒரு 15 வயது சிறுவன் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் செலவழித்தும் செய்ய முடியாத ஒன்றைச் செய்து காட்டியுள்ளார்.

மக்களின் சிந்தனையை மாற்றுவதற்காக அரசுகள் பெருமளவிலான பணத்தைச் செலவிடுகின்றன. பிராண்டிங் முயற்சிகள், சுற்றுலா பிரசாரங்கள், விளம்பரங்கள், ஆலோசகர்கள், ரோட்ஷோக்கள், முதலீட்டாளர்கள் மாநாடு. சில நேரங்களில் இவை வேலை செய்கின்றன, சில நேரங்களில் வேலை செய்வதில்லை.

இருப்பினும் ஒரு 15 வயது கிரிக்கெட் வீரர் இத்தகைய பிரசாரங்களால் அரிதாகவே சாதிக்கக்கூடிய ஒன்றைச் சாதித்துள்ளார். அவர் பிகாரை மக்கள் நம்பிக்கையையும் பெருமையையும் உணரும் ஓரிடத்திற்குக் கொண்டு சேர்த்துள்ளார்.

சமூக ஊடகங்களில் சில சுவாரஸ்யமான விஷயங்கள் நடந்து வருகின்றன. தங்களின் வேர்களைப் பற்றி ஒரு காலத்தில் அமைதியாகப் பேசிய பிகார் மக்கள், இப்போது பெருமையுடன் அதைக் காட்டுகிறார்கள். வாட்ஸ்அப் குழுக்களில் பரபரப்பு நிலவுகிறது. லிங்க்ட்இன் பதிவுகளில் பிகார் கொண்டாடப்படுகிறது. சமூக ஊடக தளங்களில் அனைத்தும் வைரலாகி வருகின்றன.

பெங்களூரு, மும்பை, குருகிராம், துபை, லண்டன் மற்றும் நியூயார்க்கில் உள்ள இளம் தொழில் வல்லுநர்களில் பலர் ஒரு காலத்தில் மறைத்து வைத்திருந்த அந்த அடையாளத்தை இப்போது வெளிப்படையாக ஏற்றுக்கொள்கிறார்கள்.

பெருமை எப்போதும் இருந்தது, வைபவ் அதற்கு ஒரு அடையாளத்தைக் கொடுத்துள்ளார்.

யுவராஜ் சிங் நகைச்சுவையாகத் தன்னை 'ஓய் பிஹாரி' என்று அழைப்பார் என்று எம்எஸ் தோனி ஒருமுறை கூறியிருந்தார்.

இது அந்த காலகட்டத்தின் உண்மை நிலையைக் காட்டியது. 'பிஹாரி' என்று அழைக்கப்படுவது பெரும்பாலும் ஒரு முத்திரை போலப் பார்க்கப்பட்டது.

சில நேரங்களில் அன்பாக, சில நேரங்களில் குறைவாக மதிப்பிடும் பாணியில் இருந்தது.

சூழ்நிலைகள் எவ்வளவு வேகமாக மாறியுள்ளன. இன்று 'ஏக் பிஹாரி சப் பர் பாரி' (ஒரு பிகாரி அனைவருக்கும் சமம்) என்பது வெறும் தேர்தல்களிலோ அல்லது கலாசார நிகழ்ச்சிகளிலோ எழுப்பப்படும் முழக்கமாக மட்டும் நின்றுவிடவில்லை. இது விளையாட்டு உலகிலும் ஒரு அடையாளமாக மாறியுள்ளது. வைபவ் கிரீஸில் இருக்கும் போதெல்லாம் டிஜேக்கள் பெரும்பாலும் இந்த வரியைப் பயன்படுத்துகிறார்கள்.

வைபவ் சூர்யவன்ஷி இந்த வரியின் மிகப்பெரிய தூதுவர் ஆவார். வைபவின் ஒரு சிறப்பு என்னவென்றால், அவர் விளையாட்டையும் தாண்டி மக்களின் சிந்தனையை மாற்றி வருகிறார். சமூக ஊடகங்களில் அகம்பாவமும் சர்ச்சைகளும் ஊக்குவிக்கப்படும் இந்த நேரத்தில், வைபவின் பணிவான குணமே அவரது மிகப்பெரிய பலமாக மாறியுள்ளது.

மிகவும் வேகமாக வைரலாவது அவர் சிக்ஸர் அடிக்கும் படங்கள் அல்ல. பெரும்பாலும் அவர் பெரியவர்களின் கால்களைத் தொட்டு வணங்கும் படங்களே வைரலாகின்றன.

லட்சக்கணக்கான இந்தியர்களுக்கு அவர் பிகாரின் சமூக கலாசாரத்துடன் தொடர்புடைய மதிப்புகளான பெரியவர்களை மதித்தல், குடும்பத்துடன் வலுவான பிணைப்பு மற்றும் தனது கலாசாரத்தின் மீதான ஈடுபாடு ஆகியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். பயிற்சியாளர்கள் மற்றும் வீரர்களை மதிப்பது, குடும்பத்திற்கு முக்கியத்துவம் அளிப்பது மற்றும் நிலையான குணம்.

அவர் அறியாமலேயே ஒரு கலாசார தூதுவராக மாறியுள்ளார். பேச்சுகளால் அல்ல, விளம்பரங்களால் அல்ல, தனது நடத்தையால்.

பிகார் இந்த வாய்ப்பைத் தவறவிடக் கூடாது

வைபவின் தாக்கம் கிரிக்கெட்டையும் தாண்டியது, அவர் ஒரு ஒட்டுமொத்த தலைமுறையையும் ஊக்கப்படுத்த முடியும். அவரால் மைதானங்களை உருவாக்க முடியாமல் போகலாம், ஆனால் முசாபர்பூர் மற்றும் பாகல்பூர் குழந்தைகளின் மனதில் வெள்ளை ஜெர்சி அணியும் கனவை நிச்சயமாக எழுப்ப முடியும்.

ஆனால் அந்த கனவுகளை ஒரு தொழில்முறை வாழ்க்கையாக மாற்றக்கூடிய உள்கட்டமைப்பை அவரால் உருவாக்க முடியாது. இந்த பொறுப்பு வேறு யாருடையதோ ஆகும். பிகார் சில நல்ல படிகளை எடுத்துள்ளது. ராஜ்கிரில் உருவாக்கப்பட்ட வசதிகள் ஒரு உண்மையான தொடக்கமாகும்.

ஆனால் வெறும் தொடக்கம் மட்டுமே போதுமானது அல்ல. விளையாட்டைப் பொறுத்தவரை முன்னணியில் இருக்கும் மாநிலங்களுடன் ஒப்பிடும்போது பிகார் இன்னும் பின்தங்கியே உள்ளது, வெறும் நல்ல எண்ணத்தால் மட்டும் இந்த இடைவெளியைக் குறைத்துவிட முடியாது.

அகாடமிகளை உருவாக்க வேண்டும். மாவட்டங்களில் விளையாட்டு வசதிகளுக்காக முதலீடு செய்ய வேண்டிய தேவை உள்ளது. பள்ளிப் போட்டிகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். பயிற்சியாளர்களுக்குச் சரியான ஊதியமும் முழு மரியாதையும் கிடைக்க வேண்டும்.

பிகாரின் திறமைசாலிகள் பெரும்பாலும் செய்வது போல அவர்கள் வேறு எங்காவது செல்ல முடிவெடுப்பதற்கு முன்பு, அவர்களுக்கான தொழில்முறை வழிகள் அங்கேயே இருக்க வேண்டும்.

பல தசாப்தங்களாக பிகார், நாட்டின் பிற பகுதிகளில் உள்ள தன் மீதான சிந்தனையை மாற்றக்கூடிய ஒரு விளையாட்டு சின்னத்திற்காகக் காத்திருந்தது. வரலாற்றின் ஒரு தனித்துவமான திருப்பத்தில், இந்த மாற்றம் எந்தவொரு அரசு முன்முயற்சியாலோ, கார்பரேட் பிரசாரத்தாலோ அல்லது அரசியல் இயக்கத்தாலோ வராமல், கையில் கிரிக்கெட் பேட் வைத்துள்ள சமஸ்திபூரின் ஒரு பயமற்ற டீனேஜரிடம் இருந்து வந்துள்ளது.

மிக முக்கியமான இலக்கு எளிதானது: அடுத்த வைபவ் சூர்யவன்ஷி தனது இலக்கை அடைய பிகாரை விட்டு வெளியேற வேண்டிய அவசியம் இருக்கக் கூடாது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு