You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'மும்பை அருகே நடுக்கடலில் பண்டைய துறைமுகம்' - எலிஃபெண்டா அகழ்வாராய்ச்சியில் தெரியவருவது என்ன?
- எழுதியவர், மயுரேஷ் கொண்ணூர்
- பதவி, பிபிசி செய்தியாளர்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 9 நிமிடங்கள்
'கேட்வே ஆஃப் இந்தியா'விலிருந்து புறப்பட்டு கராபுரி படகுத்துறைக்கு வந்து சேர்ந்ததும், அங்கிருக்கும் ஒரு குறுகிய பாதை பழமையான கற்களால் ஆன படிக்கட்டுகளை நோக்கி நம்மை அழைத்துச் செல்கிறது. இந்தப் படிகள் பார்வையாளர்களை அந்தத் தீவின் உலகப் புகழ்பெற்ற குகைகளை நோக்கி இட்டுச் செல்கின்றன. ஆனால், நாங்கள் அந்த வழக்கமான பாதையைப் பின்பற்றவில்லை.
ஆறு மாதங்களுக்கும் மேலாக இங்கு முகாமிட்டு ஆய்வு செய்து வரும் தொல்லியல் ஆராய்ச்சியாளர் சைதன்யா துபே, எங்களை வரவேற்பதற்காக வந்திருந்தார். அவர், இடதுபுறம் உள்ள பாதையில் தன்னை பின்தொடருமாறு வழிநடத்தி அழைத்துச் சென்றார்.
2025 நவம்பர் மாதம் முதல் இங்கு தங்கியிருக்கும் சைதன்யா மற்றும் அவருடைய குழுவினரின் எஞ்சிய அனைவரும் 2026 ஜூன் மாதம் வரைதான் அங்கு தங்கியிருக்கமுடியும். அங்கு அவர்களின் கடைசி நாளான்று தான் நாங்கள் அங்கு சென்றிருந்தோம்.
மும்பைக்கு அருகிலுள்ள இந்தத் தீவில் இவ்வளவு காலமும் அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? அதைத் தெரிந்துகொள்ள, நாம் சைதன்யாவைப் பின்தொடர்வோம்.
ஒருபுறம் மரங்கள் நிறைந்த குன்றுகளும் மறுபுறம் கடலும் சூழ, நாங்கள் ஒரு நடைபாதையில் செல்கிறோம். இந்தத் தீவு மொராபந்தர், சேத்பந்தர் மற்றும் ராஜபந்தர் ஆகிய மூன்று பகுதிகளைக் கொண்டதாகக் கருதப்படுகிறது. நாங்கள் மொராபந்தரை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறோம்.
சுமார் பத்து நிமிடங்கள் நடந்த பிறகு, ஒற்றையடிப் பாதையை விட்டு விலகி மலையோரக் காட்டுக்குள் நுழைகிறோம். நிலத்திலிருந்து மிகத் துல்லியமாக ஒரு பகுதியை வெட்டி எடுத்தது போன்ற தோற்றமளிக்கும் ஒரு பள்ளத்தைக் காண்கிறோம். இதை பார்ப்பதற்காகத்தான் இங்கு வந்திருக்கிறோம்.
மும்பையிலிருந்து பத்து கிலோமீட்டர் தொலைவில் அரபிக்கடலில் அமைந்துள்ளது கராபுரி தீவு. ஆங்கிலேயர்களின் ஆட்சிக்காலத்தில் இங்கு மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிகளின்போது, இங்கிருக்கும் குகைகள் உலக கவனத்தைப் பெற்றது. அதன் பிறகு, இது பெரும்பாலும் 'எலிஃபெண்டா' என்ற பெயரில் பரவலாக அறியப்படுகிறது.
'யுனெஸ்கோ' அமைப்பால் உலக பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்தத் தீவு, நீண்ட காலமாகவே தனது அற்புதமான குகைகளுக்காகப் புகழ்பெற்றிருந்தது.
கராபுரியில் புதிய அகழ்வாராய்ச்சி
இருப்பினும் கடந்த எட்டு மாதங்களாக இந்தத் தீவில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியின் மூலம் ஒரு புதிய உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கராபுரி என்பது வெறும் கலை மற்றும் கலாசார பாரம்பரியம் மட்டுமல்ல, மாறாக ஆயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்பு செழித்தோங்கிய ஒரு சர்வதேச வர்த்தகத் துறைமுகமாகவும் இருந்துள்ளது.
2025ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் இந்திய தொல்லியல் ஆய்வுத் துறை மற்றும் தொல்லியல் ஆய்வுக்குப் புகழ்பெற்ற புனேயின் டெக்கான் கல்லூரி ஆகிய அமைப்புகள் இணைந்து கராபுரி தீவில் அகழ்வாராய்ச்சிப் பணிகளை மேற்கொண்டன.
இத்திட்டம் இந்த ஆண்டு ஜூன் மாதம் வரை தொடர்ந்தது. இந்த அகழ்வாராய்ச்சிக் குழுவில் இந்திய தொல்லியல் ஆய்வுத் துறைத் தரப்பிலிருந்து மும்பை பிரிவைச் சேர்ந்த அபிஜித் ஆம்பேகர் அவர்களின் குழுவும், டெக்கான் கல்லூரி தரப்பிலிருந்து அதன் இணைப் பேராசிரியர் அபிஜித் தாண்டேகர் அவர்களின் குழுவும், இவர்களுடன் பல தொல்லியல் ஆய்வாளர்களும் மாணவர்களும் பங்கேற்றனர்.
கராபுரி தீவின் மொராபந்தர் பகுதியில் இந்தத் திட்டத்தின் கீழ் அகழ்வாராய்ச்சி நடைபெற்றது. இந்த அகழ்வாராய்ச்சி பல புதிய கண்டுபிடிப்புகளுக்கு வழிவகுத்தன. கண்டெடுக்கப்பட்ட சான்றுகள் மிகவும் முக்கியமானவை. அவை கராபுரி தீவின் வரலாற்றை நேரடியாக கி.பி மூன்றாம் நூற்றாண்டு வரை பின்னோக்கிச் சென்று அறிய உதவுகின்றன.
கராபுரி குகைகள் ஏறக்குறைய கி.பி. ஆறு முதல் எட்டாம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் செதுக்கப்பட்டிருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் மதிப்பிடுகின்றனர். குகைகள் குறித்த ஆய்வின் அடிப்படையில், இத்தீவில் மேலும் பல வரலாற்றுச் சின்னங்கள் மறைந்திருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் நீண்ட காலமாகவே சந்தேகித்து வந்தனர். இருப்பினும், அதற்கு முந்தைய துல்லியமான வரலாறு என்ன என்பது மர்மமாகவே இருந்தது.
"சில ஆண்டுகளுக்கு முன்பு, இந்தக் குகைகள் பாதாமி சாளுக்கிய மன்னர்கள் அல்லது மத்தியப் பிரதேசத்தின் கலாச்சூரி மன்னர்களுடன் தொடர்புடையவை என்ற ஒரு கருத்து இருந்தது. கிருஷ்ணராஜ காலச்சூரி என்ற மன்னனின் நாணயங்கள் இந்தத் தீவில் கண்டெடுக்கப்பட்டதால், இது காலச்சூரி காலத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்ற அனுமானம் இருந்தது. ஆனால், இந்த குகைகள் சரியாக எந்தக் காலத்தில் குடையப்பட்டன, அந்தத் தீவில் திடீரென குகைகள் எப்படி உருவாயின என்ற அடிப்படைக் கேள்விகளுக்கு விடை தெரியாமலேயே இருந்தது. எனவே, இதற்கு முன்பே இங்கு மனித நடமாட்டமும் குடியிருப்புகளும் இருந்திருக்க வேண்டும் என்பது அவசியமாகிறது" என்று டெக்கான் கல்லூரியின் இணைப் பேராசிரியர் அபிஜித் தாண்டேகர் கூறுகிறார்.
இவ்வளவு நேர்த்தியான கலைநயமிக்க, பிரமாண்டமான குகைகளும் குடைவரைப் பணிகளும் உள்ள ஒரு இடத்தில், அந்த வேலைகளுக்குத் தேவையான பெருமளவிலான உணவு மற்றும் இதர விநியோகப் பொருட்கள் தடையின்றி கிடைப்பது அவசியமாகும் என்பதும் ஆராய்ச்சியாளர்களின் ஒரு கணிப்பாக இருந்தது. இத்தகைய திட்டங்கள் பல ஆண்டுகள், சில நேரங்களில் பல நூற்றாண்டுகளாகத் தொடர்வதுண்டு. எனவே, அங்கேயே அல்லது அதற்கு அருகிலேயே ஒரு செழிப்பான நகரம், வர்த்தக மையம் அல்லது குடியிருப்பு கண்டிப்பாக இருந்திருக்க வேண்டும்.
இதன் காரணமாகவே, கராபுரிக்கு அருகில் அகழ்வாராய்ச்சி மேற்கொண்டால் புதிய தகவல்கள் ஏதேனும் கிடைக்கக்கூடும் என்று தொல்லியல் ஆய்வாளர்கள் கருதினர். அவர்கள் நினைத்தது போலவே நிகழ்ந்தது.
தாண்டேகர் மேலும் கூறுகையில், "பொதுவாக நான்காம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து பன்னிரண்டாம் நூற்றாண்டு வரையிலான பொருட்கள் இங்கே கண்டெடுக்கப்பட்டுள்ளன. அதாவது, இந்தத் துறைமுகம் சுமார் 700 முதல் 800 ஆண்டுகள் வரை பயன்பாட்டில் இருந்தது என்று நாம் உறுதியாகக் கூற முடியும். நமக்குக் கிடைத்துள்ள உயரமான, பெரிய மண் பாத்திரங்கள் டார்பிடோ ஜாடிகள் மற்றும் இதர பொருட்களின் அளவை வைத்துப் பார்க்கும்போது, இது இந்தியாவில் மிக அதிக அளவில் அகழ்வாராய்ச்சி செய்யப்பட்ட இடங்களில் ஒன்றாக இருக்கலாம் என நாங்கள் மதிப்பிடுகிறோம்" என்றார்.
இங்கு மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியின் அளவு நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. அதில் மிகக் கவர்ச்சிகரமான ஒரு இடம், அங்கிருந்த நீர்நிலை ஆகும்.
உவர்ப்புமிக்க கடலுக்கு நடுவே அமைந்த நன்னீர் ஆதாரம்
சைதன்யா மற்றும் அவருடைய சில சகாக்களுடன் நாங்கள் மொராபந்தர் பகுதியை சுற்றிப்பார்த்தோம். இங்கு மொத்தம் 19 இடங்களில் அகழ்வாராய்ச்சிக் குழிகள் தோண்டப்பட்டு அகழ்வாராய்ச்சி செய்யப்பட்டுள்ளது. எங்கு தோண்டுவது என்பது குறித்த முடிவு, மேற்பரப்பில் உள்ள சான்றுகளை ஆய்வு செய்த பின்னரே எடுக்கப்படுகிறது.
இது மிகவும் சிரமமான மற்றும் கவனத்துடன் நுணுக்கமான பணியாகும்; ஏனெனில், பூமிக்கு அடியில் புதைந்துள்ள பொருட்கள் மிக முக்கியமான தொல்லியல் சான்றுகளாக இருக்கக்கூடும். அதைக் கருத்தில் கொண்டே இந்த அகழ்வாராய்ச்சிக் குழிகள் அமைக்கப்பட்டன.
ஆனால், முதல் சிறிய குன்றின் மீது ஏறிச் சற்று மேலே சென்ற உடனே, இந்தத் திட்டத்தில் கிடைத்த மிக முக்கியமான சான்று நம் கண்முன்னே தோன்றுகிறது. அது, மிக நேர்த்தியாக, திட்டமிட்டு செதுக்கப்பட்ட, பல படிக்கட்டுகளைக் கொண்ட ஒரு ஆழமான நீர்நிலை ஆகும்.
சற்று மிகைப்படுத்துவது போலத் தோன்றினாலும், இந்த நீர்நிலையை முதன்முறையாகப் பார்க்கும்போது, புகைப்படங்கள் வாயிலாக மட்டுமே அறியப்பட்ட மொகஞ்சதாரோவின் 'பெரிய குளியல் குளம்'அல்லது நம் பகுதியில் காணப்படும் வரலாற்றுச் சிறப்புமிக்க, ஆழமான மற்றும் நுணுக்கமான வேலைப்பாடுகள் கொண்ட படிக்கிணறுகளின் நினைவுதான் நமக்கு வருகிறது.
குன்றின் சரிவில் அமைக்கப்பட்டுள்ள இந்த நீர்நிலையில் செவ்வக வடிவில் செதுக்கப்பட்ட கற்களால் ஆன படிக்கட்டுகளும், செங்கல் சுவர்களும் செதுக்கப்பட்டுள்ளன. மலையில் இருந்து சரிந்து ஓடிவரும் தண்ணீர் தடுத்து இங்கு சேமித்து வைக்கப்பட்டிருக்கலாம். கடலின் உவர்ப்பு நீரால் சூழப்பட்ட இந்தத் தீவில், இது ஒரு முக்கியமான குடிநீர் ஆதாரமாக இருந்திருக்கிறது.
இது பற்றிக் கூறும் ஆராய்ச்சியாளர் சைதன்ய துபே, "இதை உற்றுநோக்கும்போது, இந்தப் படிக்கிணறு அல்லது நீர்நிலையைக் கட்டுவதற்குப் பயன்படுத்தப்பட்ட கற்களும் செங்கற்களும் இந்தத் தீவைச் சேர்ந்தவை அல்ல என்பது தெரியவருகிறது. இந்த வகை கற்கள் இங்கே கிடைப்பதில்லை, மேலும், செங்கற்களைச் சுட்டுத் தயாரிப்பதற்கான ஏற்ற மண் வளம் இங்கு இல்லாததால், அவை இங்கேயே தயாரிக்கப்பட்டிருக்க வாய்ப்பில்லை. எனவே, இக்கட்டுமானப் பொருட்கள் அனைத்தும் வெளியிலிருந்து கொண்டுவரப்பட்டிருக்க வேண்டும் என்று நாங்கள் கருதுகிறோம். இந்தத் தீவுக்கு வரும் வர்த்தகர்களுக்காகவும் பயணிகளுக்காகவும் இவ்வளவு பெரிய தொகையைச் செலவழித்து இந்த நீர்நிலை உருவாக்கப்பட்டுள்ளது என்றால், அந்த அளவுக்கு இங்கு வர்த்தகம் பிரம்மாண்டமாக நடந்திருக்க வேண்டும். நாணயங்கள் மற்றும் தொல்பொருட்களின் அடிப்படையில் இதன் காலம் சுமார் 1,500 ஆண்டுகள் பழமையானது என்று தற்போது மதிப்பிட்டுள்ளோம்" என்றார்.
தற்போது அகழ்வாராய்ச்சி மூலம் கண்டறியப்பட்ட நீர்நிலையின் பகுதி, அதன் மொத்தப் பரப்பளவில் ஒரு சிறிய அளவே இருக்கக்கூடும் என்றும், கட்டமைப்பின் பெரும்பகுதி இன்னும் நிலத்தடியில் புதைந்துள்ளதாகவும் சைதன்யா குறிப்பிடுகிறார்.
எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் அகழ்வாராய்ச்சிகளில் அது கண்டறியப்படலாம். ஆனால், இவ்வளவு பெரிய நீர்நிலை இங்கு கட்டப்பட்டுள்ளது என்ற உண்மையை வைத்தே, இங்கு மக்களின் நடமாட்டமும் குடியிருப்புகளும் பெருமளவில் இருந்திருக்கின்றன என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.
சர்வதேசத் தொடர்புகளின் சான்றாகும் மண்பாண்டங்கள்
ஏறத்தாழ எட்டு மாதங்களாக நடைபெற்று வந்த இந்த அகழ்வாராய்ச்சி தற்போது நிறைவடைந்துள்ளது. அதாவது, இந்தத் திட்டத்தின் ஒரு குறிப்பிட்ட கட்டம் இப்போது முடிவடைந்துள்ளது. இனி இதில் கண்டறியப்பட்ட சான்றுகள் குறித்து விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்; அதன் முடிவுகளின் அடிப்படையில், தேவைப்பட்டால் அடுத்தகட்ட அகழ்வாராய்ச்சித் திட்டங்கள் வகுக்கப்படும்.
கண்டறியப்பட்ட சான்றுகள், முன்னரே குறிப்பிடப்பட்ட நீர் தொடர்பான கட்டுமானத்துடன் மட்டும் நின்றுவிடவில்லை; அவை பல்வேறு வகையான பிற கண்டுபிடிப்புகளையும் உள்ளடக்கியுள்ளன.
அவற்றில் ஒரு முக்கியமான சான்று, இந்த அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட பல வகையான மற்றும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மண்பாண்டங்கள் ஆகும். வெவ்வேறு தேசங்களிலிருந்து வந்த மண் பாத்திரங்கள் இவை. அகழ்வாராய்ச்சியில் தினசரி பயன்பாட்டிற்கான சிவப்பு மற்றும் சாம்பல் நிற மண்பாண்டங்கள் மட்டுமின்றி, இரான் போன்ற பகுதிகளிலிருந்து வந்த மட்பாண்டங்களும் கிடைத்துள்ளன.
"இங்கே அன்றாடப் புழக்கத்தில் இருந்த பாத்திரங்கள் கிடைத்துள்ளது இயல்புதான். ஆனால்,'எலிஃபெண்டா ஒரு சர்வதேச வர்த்தக மையமாக இருந்தது' என்று நாம் கூறும்போது, அதற்கான ஆதாரம் என்ன? அதை இந்த மண்பாண்டங்களின் மூலமாகவே நம்மால் நிரூபிக்க முடியும். உதாரணமாக, மேற்கு ஆசியா, வளைகுடா நாடுகள் அல்லது இரானில் இருந்து இங்கு வந்த பாத்திரங்களை நாம் பார்க்கும்போது, இரானுடனும் வளைகுடா நாடுகளுடன் நாம் வலுவான வர்த்தக உறவுகளைக் கொண்டிருந்தோம் என்பதை நிரூபிக்கிறது" என்கிறார் தாண்டேகர்.
ஒரு பாத்திரம் எந்தப் பகுதியைச் சேர்ந்தது என்பதை எவ்வாறு கண்டறியலாம் என்பதை விளக்குவதற்காக, அவர் உடைந்த களிமண் பானை ஒன்றின் எஞ்சிய துண்டை கையில் எடுக்கிறார். அப்பாண்டம் கூர்மையாகச் சரிந்து செல்லும் வடிவத்துடனும், விலங்கின் குளம்பைப் போன்ற அடிப்பகுதியுடனும் காணப்படுகிறது
"இங்கே காணப்படும் இந்த மண்பாண்டத் துண்டு ஒரு பாத்திரத்தின் அடிப்பகுதியாகும். இதன் அடிப்பாக வடிவத்தை வைத்து, இது வளைகுடாப் பகுதியைச் சேர்ந்த பாத்திரம் என்று நம்மால் கூற முடியும். ஏனெனில், இத்தகைய பாத்திரங்கள் அந்தப் பகுதியில் கண்டறியப்பட்டுள்ளன. இந்த மற்றொரு பாத்திரத்தைப் பார்த்தால், இதன் அடிப்பாகம் சற்று உயரமாகத் தெரிகிறது. எனவே, இவை வளைகுடாப் பகுதியிலிருந்து வந்தவை என்றாலும், அங்குள்ள வெவ்வேறு பகுதிகளிலிருந்து வந்துள்ளன என்பதைச் சொல்ல முடியும்; ஒருவேளை இவை ஓமானில் இருந்தோ அல்லது வட ஆப்பிரிக்காவில் இருந்தோ கூட வந்திருக்கலாம்" என்று அபிஜித் மேலும் விளக்குகிறார்.
இங்கு சிறிய கலன்கள் மட்டுமல்லாமல், 'மிகப்பெரியவை' என்று வர்ணிக்கத்தக்க அளவிலான பிரம்மாண்டமான, பழங்காலப் பாத்திரங்களும் கிடைத்துள்ளன. அத்தகைய இரண்டு பெரிய பாத்திரங்களை கராபுரி அகழ்வாராய்ச்சி தளத்தில் நாங்கள் பார்த்தோம். ஒரு மனிதனே உள்ளே அமரக்கூடிய அளவுக்கு மிகப் பெரிய சேமிப்புக் கலன்கள் இங்கே கண்டெடுக்கப்பட்டுள்ளன.
அதில் ஒன்று, ஒரு பெரிய ஆலமரத்தின் அடியில் கண்டெடுக்கப்பட்டது. அந்த மரத்தின் வேர்கள் அந்த குடம் போன்ற பாத்திரத்திற்குள் ஊடுருவிச் சென்றிருந்தன. அந்த வேர்களிலிருந்து பாத்திரம் மிகவும் கவனமாக விடுவிக்கப்பட்டு, அதன் உடைந்த துண்டுகள் ஒவ்வொன்றாகச் சேகரிக்கப்பட்டன.
இந்த மிகவும் நுணுக்கமான மற்றும் கடினமான பணியை இந்தியத் தொல்லியல் துறையின் மூத்த மாதிரியமைப்பாளர் சுதிர் வாக் மேற்கொண்டு வருகிறார். அவர் ஏற்கனவே இரண்டாவது கலனின் பாதிக்கும் மேற்பட்ட பகுதிகளை மீண்டும் இணைத்து அதன் அசல் வடிவத்திற்கு மீட்டெடுத்துள்ளார்; இப்பணி இன்னும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
"இது எந்த நிலையில் கிடைத்ததோ, அதே நிலையில் அதாவது இதன் அசல் வட்ட வடிவத்தைக் கொண்டு வருவதற்கான முயற்சியை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம்" என்று சுதிர் வாக் கூறுகிறார். "இதன் மூலம், இதனைப் பாதுகாப்பாக எடுத்துச் சென்று அருங்காட்சியகத்தில் வைக்க முடியும்."
"இத்தகைய இரண்டு பெரிய பாத்திரங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவை மீண்டும் உடைந்து விடாமல் இருப்பதற்காக, அதன் உட்புறத்தில் ஃபைபர் கிளாஸ் பூச்சு பூசுகிறோம்" என்று வாக் மேலும் தெரிவித்தார்.
நாணயங்கள் மற்றும் மணிகள் மூலம் வெளிச்சத்திற்கு வரும் வரலாறு
கராபுரி ஒரு வணிக மையமாகத் திகழ்ந்ததற்கு, அங்கு கண்டெடுக்கப்பட்ட நாணயங்கள் மிக முக்கியமான சான்றுகளாக அமைகின்றன. இந்தியாவிற்கு உள்ளேயும் வெளியேயும் இருந்த பேரரசுகள் வெளியிட்ட நாணயங்கள் இங்குப் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளன, அவை இங்கு பரிமாற்றம் செய்யப்பட்டன. இத்தகைய சுமார் 70 நாணயங்கள் கராபுரி அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
அபிஜித் தாண்டேகர் இந்த நாணயங்களை நமக்குக் காட்டுகிறார். அவை தற்போது அவற்றின் பிராந்தியங்கள் மற்றும் காலக்கட்டங்களின் அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
பல ஆண்டுகள் மண்ணில் புதைந்து கிடந்ததாலும், காற்றில் உள்ள உப்புக்காற்றின் தாக்கத்திற்கு ஆளானாலும், இந்த நாணயங்கள் துருப்பிடித்து, அவற்றின் மீது பல அடுக்குகள் படிந்துள்ளன. எனவே, அவற்றில் உள்ள விவரங்களை அறிந்துகொள்வதற்கு முன்னதாக, அறிவியல் பூர்வமான முறைகளைப் பயன்படுத்தி அவை சுத்தம் செய்யப்பட வேண்டும். சில நாணயங்களில் குறியீடுகள் உள்ளன, மற்றவற்றில் எழுத்து வடிவத்திலான வாசகங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
அவற்றில் ஒரு வெள்ளி நாணயத்தை எடுத்து அபிஜித் தாண்டேகர் நமக்குக் காட்டுகிறார். இது, கர்தமகா-க்ஷத்ரப வம்சத்தைச் சேர்ந்த நாணயம் என்றும், இந்த நாணயங்களில் மன்னரின் முகம், அவருடைய பெயர், அவருடைய தந்தையின் பெயர் மற்றும் அவர்களின் பட்டங்கள் பொறிக்கப்பட்டிருக்கும் என்றும் அவர் கூறுகிறார்.
"இந்த நாணயம் பொதுவாக மூன்றாம் அல்லது நான்காம் நூற்றாண்டில் ஆட்சி செய்த இரண்டாம் ருத்ரசேனன் என்ற மன்னனின் நாணயமாக இருக்கலாம். இதன் மூலம் அவர்களின் முழுமையான அரசியல் வம்சாவளியைக் கண்டறிய முடியும்" என்று தாண்டேகர் மேலும் கூறுகிறார்.
இங்கு மண்பாண்டங்கள் கிடைத்தது போலவே, இந்தியாவிற்கு வெளியேயிருந்த பிற பேரரசுகளின் பல நாணயங்களும் இங்கே கண்டெடுக்கப்பட்டுள்ளன. இரானைச் சேர்ந்த சாசானிய மன்னர்களின் நாணயம் ஒன்றை அவர் நமக்குக் காட்டுகிறார். அது நிறம் மாறி, சுத்தம் செய்யப்பட வேண்டிய நிலையில் இருந்தாலும், அதில் உள்ள குறியீடுகள் இன்னும் தெளிவாகத் தெரிகின்றன.
"கி.பி மூன்று முதல் ஏழாம் நூற்றாண்டு வரை இரானை ஆண்ட இந்த மன்னர்களின் நாணயத்தில், மன்னரின் படமும் ஜொராஸ்ட்ரிய மதத்தின் புனித நெருப்பும் செதுக்கப்பட்டுள்ளன. மூன்றாம் யஜ்தெகெர்ட் தான் கடைசி சாசானிய மன்னர் ஆவார். அதற்குப் பிறகுதான் பார்சி மக்கள் இந்தியாவுக்கு வந்தனர். இந்த மன்னர்களின் நாணயம் கராபுரியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது என்பது இரானுடன் நேரடி வர்த்தகத் தொடர்பு இருந்ததற்கான சான்றாகும்" என்று தாண்டேகர் தனது கணிப்பைப் பதிவு செய்கிறார்.
"இங்கே கண்டெடுக்கப்பட்ட நாணயங்களின் மூலம், குறைந்தது இரண்டு அரச வம்சங்களுக்கு இந்தத் தீவுடன் ஆழமான தொடர்பு இருந்திருக்க வேண்டும் என்று கூற முடிகிறது. அவற்றில் ஒன்று திரிகுடக வம்சம், இந்த வம்சத்தினரின் நாணயங்கள் நமக்கு இங்கே கிடைத்துள்ளன. மற்றொன்று காலச்சூரி வம்சத்தினர். காலச்சூரி மன்னர்கள் அடிப்படையில் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள். மத்திய பிரதேசத்தில் உள்ள மஹிஷ்மதியின் ஆட்சியாளர்கள் அவர்கள். அந்த வம்சத்தில் கிருஷ்ணராஜா என்ற ஒரு சிறந்த மன்னர் வாழ்ந்துள்ளார். அந்த கிருஷ்ணராஜாவின் ஏராளமான தாமிர நாணயங்கள் நமக்கு இங்கே கிடைத்துள்ளன" என்று தாண்டேகர் கூறுகிறார்.
நாணயங்களுடன், மணிகளும் மற்றொரு முக்கியமான சான்றாக அமைகின்றன. இவை சுடப்பட்ட களிமண் (டெரகோட்டா) அல்லது வண்ணக் கற்களால் செய்யப்பட்டவை. அகழ்வாராய்ச்சியில் இத்தகைய மணிகளும் பெருமளவில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவற்றை மீட்டெடுப்பதற்கு மிகுந்த சிரத்தை தேவைப்படுகிறது; அகழ்ந்தெடுக்கப்பட்ட மண்ணைச் சலித்து ஆராய்வதன் மூலமே இவை கிடைக்கின்றன. அதன்பின், இவற்றைச் சுத்தம் செய்து ஆய்வுக்கு உட்படுத்துகிறார்கள்.
டெக்கான் கல்லூரியின் ஆராய்ச்சியாளர் கேத்கி மகாஜன் கூறுகையில், கண்டெடுக்கப்பட்ட சில மணிகள் சிரியாவைச் சேர்ந்தவையாகத் தோன்றுவதாக அவர் கருதுகிறார். "இந்தக் கண்ணாடி மணிகள் பிற்கால ரோமானிய காலத்தைச் சேர்ந்தவை; பொதுவாக இவை கி.பி ஏழாம் நூற்றாண்டிற்குப் பிந்தைய காலகட்டத்தில் காணப்படுபவை" என அவர் கூறுகிறார்.
நெஃப்ரைட் எனப்படும் ஒரு வகை பச்சைக்கல்லால் ஆன மணியைக் காட்டி, இது இந்தியாவில் கிடைப்பதில்லை என ரூபாலி சிங் கூறுகிறார். "இந்தக் கல் உள்ளூரில் கிடைப்பதில்லை. நமக்கு அருகில் என்றால் பர்மா (மியான்மர்) அல்லது ஓமான் போன்ற இடங்களில் இது கிடைக்கிறது. இவை வெளிநாட்டு வணிகர்களால் கொண்டு வரப்பட்டு, பின்னர் வர்த்தகத்தின் மூலம் பிற இடங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டிருக்கலாம்" என்று அவர் கூறுகிறார்.
கராபுரி முதல் மும்பை வரை: வர்த்தகத் துறைமுகத்தின் வரலாற்றுப் பாரம்பரியம்
மும்பை ஒரு துறைமுகமாக அடையாளம் பெறத் தொடங்கியது பிரிட்டிஷ் காலத்தில்தான். 16-ஆம் நூற்றாண்டு முதல் இந்நகரம் உருப்பெறத் தொடங்கியது. இன்றும் இது இந்தியாவின் சர்வதேச வர்த்தகத்தின் முதன்மை இடமாகத் திகழ்கிறது.
இருப்பினும், மும்பை முக்கியத்துவம் பெறுவதற்கு குறைந்தது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, மும்பை கடற்கரையிலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள கராபுரி ஒரு வர்த்தக மையமாகச் செயல்பட்டதற்கான சான்றுகள் உள்ளன.
வரலாற்றாசிரியர்கள் இதனை ஒரு தொடர்ச்சியின் வடிவமாக, அதாவது வரலாறு முழுவதும் அடிக்கடி காணப்படும் ஒரு மரபாக பார்க்கின்றனர். கராபுரியின் ஒரு பக்கத்தில் மும்பையின் கடற்கரை உள்ளது, மறுபக்கத்திலோ இன்றைய சர்வதேசத் துறைமுகமான ஜே.என்.பி.டியும் அமைந்துள்ளன.
"இங்கு வந்த வர்த்தகக் கப்பல்கள் தங்களது சரக்குகளை இறக்கி வைத்திருக்கும் என்றும், இங்கிருந்து சிறிய படகுகள் மூலம் அவை அடுத்தகட்ட இடங்களுக்குக் கொண்டு சென்றிருக்க வாய்ப்புள்ளது; அதாவது, இது அடிப்படையில் ஒரு இடைமாற்றுத் துறைமுகமாக செயல்பட்டிருக்கும். இதற்கு மிகச் சிறந்த சான்று என்னவென்றால், இதன் எதிர்க் கரையிலேயே இன்றைய நவீன சர்வதேசத் துறைமுகம் அமைந்திருப்பதுதான். எனவே, 1,500 ஆண்டுகளுக்கு முன்பிருந்த ஒரு சர்வதேசத் துறைமுகத்தையும், அதற்கு நேர் எதிரே இன்றைய நவீன சர்வதேசத் துறைமுகத்தையும் நம்மால் மிகத் தெளிவாகப் பார்க்க முடிகிறது. இதுதான் அந்தப் பாரம்பரியம். இந்தத் தொடர்ச்சி காலவரிசையில் தானாகவே தொடர்ந்து கொண்டிருக்கிறது" என்று அபிஜித் தாண்டேகர் கூறுகிறார்.
"சாதவாகனர்களின் காலத்தில் சோபாரா (தற்போதைய நாலாசோபாரா) முக்கியமான ஒரு சர்வதேசத் துறைமுகமாக இருந்தது என்பதை நாம் அறிவோம். அதன் முக்கியத்துவம் குறைந்த பிறகு, தற்போது கிடைத்துள்ள சான்றுகளின் அடிப்படையில், கி.பி. மூன்றாம் நூற்றாண்டிற்குப் பிறகு கராபுரியின் முக்கியத்துவம் அதிகரிக்கத் தொடங்கியது.
கராபுரியிலிருந்து வந்த சரக்குகள் வரலாற்றுச் சிறப்புமிக்க வணிக மையங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டிருக்கலாம்.
கூகுள் வரைபடத்தில் ஒரு இடத்தைச் சுட்டிக்காட்டும் தாண்டேகர், "மொராபந்தர் பகுதி மிகவும் பாதுகாப்பானது, இங்கு பெரிய கப்பல்களை நங்கூரமிட்டு நிறுத்த முடியும். அங்கிருந்து சிறிய படகுகள் மூலம் சரக்குகளை தாணே உள் கடல் பகுதி வழியாக கல்யாண் வரையிலும், உரன் மற்றும் அலிபாக் திசையிலும் அனுப்ப முடியும். ரேவ்தண்டாவிற்கு அருகில் உள்ள சௌல் என்ற இடத்தை டெக்கான் கல்லூரி ஏற்கனவே அகழ்வாராய்ச்சி செய்துள்ளது. அங்கு கி.பி முதல் அல்லது இரண்டாம் நூற்றாண்டு முதல் 16-ஆம் நூற்றாண்டு வரையிலான சான்றுகள் கிடைத்துள்ளன. இந்த ஒட்டுமொத்த கடற்கரைப் பகுதியிலும் ஒரு துடிப்பான வர்த்தகக் கட்டமைப்பு செயல்பட்டு வந்தது."
நிச்சயமாக, இந்த அகழ்வாராய்ச்சியும் ஆய்வும் இன்னும் முழுமையடையவில்லை. அது இப்போதுதான் தொடங்கப்பட்டுள்ளது. எனவே, இன்னும் பல புதிய தகவல்களும் ரகசியங்களும் வெளிவர வேண்டியுள்ளன. ஆனால், இந்த அகழ்வாராய்ச்சியின் காரணமாக மும்பையைச் சுற்றியுள்ள பகுதியின் வரலாறு பல நூற்றாண்டுகளுக்கு முந்தையது என்பது கண்டறியப்பட்டுள்ளது.
கராபுரி அல்லது எலிஃபெண்டா என்பது வெறும் குடைவரைக் குகைகளைக் கொண்ட தீவு மட்டுமல்ல, அது ஒரு காலத்தில் இந்தியாவின் மேற்கு கடற்கரையின் மிக முக்கியமான சர்வதேச வர்த்தக மையமாகத் திகழ்ந்தது என்பது இந்த அகழ்வாராய்ச்சிகள் வெளிப்படுத்தியுள்ளன.
-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு