You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காக்ரோச் ஜனதா பார்ட்டி டெல்லியில் போராட்டத்துக்கு அழைப்பு - இந்தியா வரும் முன்பு அதன் நிறுவனர் கூறியது என்ன?
காக்ரோச் ஜனதா பார்ட்டி ( சிஜேபி) குறுகிய காலத்திலேயே நாடு முழுவதும் பேசுபொருளாகியுள்ளது.
கேலி சமூக வலைதள பிரசாரமான 'காக்ரோச் ஜனதா பார்ட்டி'யை நிறுவிய அபிஜீத் தீப்கே, ஜூன் 6-ம் தேதி காலை இந்தியா வந்தடைய உள்ளார்.
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி, டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தப்போவதாக அவர் அறிவித்துள்ளார். இருப்பினும், டெல்லி காவல்துறையின் அனுமதி இன்றி இந்தப் போராட்டம் எவ்வாறு நடைபெறும் என்பது குறித்துத் தெளிவான தகவல்கள் இல்லை.
வெள்ளிக்கிழமை காலை இந்தியா புறப்பட்ட தகவலை 'எக்ஸ்'தளத்தில் பகிர்ந்த தீப்கே, "எனது எதிர்காலத்தை அரசியலமைப்புச் சட்டத்தின் கைகளில் விட்டுவிடுகிறேன். ஜெய் பீம்" என்று பதிவிட்டுள்ளார்.
இந்தியா புறப்படுவதற்கு முன்பு அவர் வெளியிட்ட காணொளிச் செய்தியில், டெல்லி விமான நிலையத்திற்குத் திரளாக மக்கள் வரவேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். ஏனெனில், இது பொதுமக்களுக்கும் பாதுகாப்பு அமைப்புகளுக்கும் இடையூறாக அமையக்கூடும் என்று அவர் கூறியுள்ளார்.
நேரடியாக நாடாளுமன்ற சாலை காவல் நிலையத்திற்குச் சென்று, ஜந்தர் மந்தரில் அமைதியான முறையில் போராட்டம் நடத்த அனுமதி கோரப்போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
"நாங்கள் சட்டத்திற்கு உட்பட்டு நடப்பவர்கள். எனவே, எவரும் எவ்வித அசம்பாவிதங்களையும் ஏற்படுத்த முற்படக்கூடாது என்பதில் கவனமாக இருங்கள்" என்று தீப்கே கேட்டுக்கொண்டுள்ளார்.
இதற்கு முன்னதாக, வியாழக்கிழமையே சிஜேபி செய்தித் தொடர்பாளர்கள், தங்கள் போராட்டம் முற்றிலும் அமைதியான முறையில் இருக்கும் என்றும், வன்முறையோ அல்லது ஒழுங்கீனமோ ஒருபோதும் அனுமதிக்கப்படாது என்றும் உறுதியளித்தனர்.
முன்னதாக நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய சிஜேபி செய்தித் தொடர்பாளர் சௌரவ் தாஸ், "அபிஜீத் தீப்கே ஜூன் 6-ம் தேதி காலை 8 மணிக்கு டெல்லி விமான நிலையத்தில் தரையிறங்குவார். அவர் தனது ஆதரவாளர்களிடம், நாடாளுமன்ற சாலைக்கு வந்து ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த அனுமதி கோருமாறு கேட்டுக்கொண்டுள்ளார்" என்று கூறியிருந்தார்.
சிஜேபி செய்தித் தொடர்பாளர் என்ன கூறினார்?
ஜனநாயக ரீதியில் தங்களது கோரிக்கைகளை முன்வைப்பதே இந்த போராட்டத்தின் நோக்கம் என்று சிஜேபி தரப்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
வியாழக்கிழமை ஊடகங்களிடம் பேசிய சிஜேபி செய்தித் தொடர்பாளர் ஆசுதோஷ் ரங்கா, எந்தவொரு வன்முறைச் செயல்களையும் கட்சி ஆதரிக்கவில்லை என்று தெரிவித்தார்.
இது குறித்து அவர் கூறுகையில், "எந்தவொரு போராட்டமும் அமைதியான முறையில் மட்டுமே முன்னெடுக்கப்படும் என்பதை நானும் அபிஜீத் தீப்கேவும் தொடக்கத்திலிருந்தே பலமுறை வலியுறுத்தி வருகிறோம்." என்றார்.
சமூக வலைதளங்களில் இந்தப் போராட்டம் குறித்துப் பல்வேறு வதந்திகள் பரப்பப்பட்டு வருவதாக ரங்கா குறிப்பிட்டார். "டெல்லியில் இது நடக்கும், அது நடக்கும் என்று நேற்றிலிருந்து பல சமூக வலைதளக் கணக்குகள் மூலம் வதந்திகள் பரப்பப்படுவதை நாங்கள் கவனிக்கிறோம். 'காக்ரோச் ஜனதா பார்ட்டி' அமைதியான முறையில் போராட்டம் நடத்தும் என்பதை நாங்கள் தெளிவாகத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறோம்" என்று அவர் கூறினார்.
மேலும், தவறான தகவல்களைப் பரப்பும் அல்லது வன்முறையைத் தூண்டும் வகையிலான காணொளிகள் மற்றும் பதிவுகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு டெல்லி காவல்துறையிடம் அவர் கேட்டுக்கொண்டார்.
போராட்டம் குறித்து டெல்லி உயர் நீதிமன்றம் என்ன கூறியது?
'லைவ் லா' செய்தி நிறுவனத்தின் தகவல்படி, முன்மொழியப்பட்டுள்ள போராட்டம் தொடர்பாக அதிகாரிகள் உடனடியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை அவசரமாக விசாரிக்க டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
'சேவ் இந்தியா ஃபவுண்டேஷன்' சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவில், நீதிபதி சௌரப் பானர்ஜி மற்றும் நீதிபதி அமித் சர்மா ஆகியோர் அடங்கிய அமர்வு அவசர வழக்காக பட்டியலிட மறுத்துவிட்டது.
'காக்ரோச் ஜனதா பார்ட்டி' ஒருங்கிணைந்த ஆன்லைன் பிரசாரத்தை நடத்தி வருவதாகவும், ஜூன் 6-ம் தேதி ஜந்தர் மந்தர் மற்றும் தேசிய தலைநகரின் பிற பகுதிகளில் பெருந்திரளாகக் கூடுமாறு அழைப்பு விடுத்துள்ளதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பிரசாரம் சமூக வலைதளங்கள் வாயிலாக வேகமாகப் பரவி வருவதாகவும், பெருமளவிலான இளைஞர்களைத் திரட்ட இது பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
விதிகள் என்ன சொல்கின்றன?
டெல்லி காவல்துறையின் வழிகாட்டுதல்களின்படி, ஏதேனும் போராட்டம் அல்லது தர்ணா நடத்துவதற்கு, புது டெல்லி துணை ஆணையரிடம் ஏழு நாட்களுக்கு முன்பாகவே விண்ணப்பிக்க வேண்டும்.
'ஆதிஷி மார்லேனா மற்றும் காவல் ஆணையர் உள்ளிட்டோர்' இடையிலான வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தின்படி, சென்ட்ரல் விஸ்டா பகுதியைச் சுற்றியுள்ள ஜந்தர் மந்தர் மற்றும் போட் கிளப் ஆகிய இடங்களில் போராட்டம் நடத்துவதற்கு 'ஸ்டாண்டிங் ஆர்டர் எண். 10/2018' பொருந்தும்.
இதன்படி, ஜந்தர் மந்தரில் 1,000 பேர் வரை கூடுவதற்கும், ராம்லீலா மைதானத்தில் 50,000 பேர் கூடுவதற்கும் அனுமதி வழங்கப்படலாம்.
ஏழு நாட்களுக்கு முன்பாக விண்ணப்பிக்க வேண்டும் என்ற காலக்கெடுவில், போராட்ட நாள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது.
இடத்தின் வசதி மற்றும் தேவையான சட்டம்-ஒழுங்கு சூழலைப் பொறுத்தே காவல்துறையினர் அனுமதி வழங்குவது குறித்து முடிவெடுப்பார்கள்.
இந்த அனுமதி 'முதலில் வருபவருக்கே முன்னுரிமை' என்ற அடிப்படையில், சிறப்புப் பிரிவு, போக்குவரத்து காவல்துறை மற்றும் புது டெல்லி மாவட்ட காவல்துறையினரின் மதிப்பீட்டின் பேரிலேயே வழங்கப்படுகிறது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு