மகனைக் கொன்று தாயை அடைத்து வைத்த கோழிப் பண்ணை உரிமையாளர் - 4 மாதங்களுக்குப் பின் கைதானது எப்படி?

சிறுவன் கொலை செய்து புதைக்கப்பட்ட கோழிப்பணையின் முகப்பு.

பட மூலாதாரம், Handout

படக்குறிப்பு, சிறுவன் கொலை செய்து புதைக்கப்பட்ட கோழிப்பணையின் முகப்பு.
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

எச்சரிக்கை: கட்டுரையில் இடம்பெற்றுள்ள உள்ளடக்கம் சங்கடம் தரலாம்.

திருவள்ளூரில் ஆடு மேய்க்கும் பழங்குடி சிறுவனை அடித்துக் கொன்று தோட்டத்தில் புதைத்ததாகக் கொடுக்கப்பட்ட புகாரில் பண்ணை உரிமையாளர் உள்பட மூன்று பேரை திருத்தணி காவல்துறை கைது செய்துள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் நடந்த இந்த சம்பவம், கடந்த ஜூன் 10 ஆம் தேதியன்று சிறுவனின் தாய் வெண்ணிலா காவல்துறையில் அளித்த புகார் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

"புதன்கிழமையன்று என் வீட்டுக்கு வந்த வெண்ணிலா, 'குழந்தைகளை எப்படியாவது மீட்டுக் கொடு' எனக் கூறி கதறியழுதார். அப்போது கூட கொலை நடந்த தகவலைக் கூறவில்லை. அந்தளவுக்குத் துன்புறுத்தியுள்ளனர்" என, அவரது உறவினர் ஒருவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

திருத்தணி காவல்நிலையத்தில் கடந்த புதன்கிழமையன்று (ஜூன் 10) பழங்குடியினத்தைச் சேர்ந்த வெண்ணிலா மற்றும் அவரது உறவினர்கள் அளித்த புகார் மனு, அங்கிருந்த காவலர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கீழ்முருகம்பட்டு கிராமத்தில் கால்நடைப் பண்ணை உரிமையாளர் முருகன் என்பவர், தனது 15 வயது மகனை அடித்துக் கொன்று தோட்டத்தில் புதைத்துவிட்டதாக புகார் மனுவில் வெண்ணிலா கூறியிருந்தார்.

"நாங்கள் கொடுத்த புகார் மனுவை உடனே விசாரணைக்கு எடுத்துக் கொண்ட போலீஸார், அவர்களின் வாகனத்திலேயே எங்களை பண்ணை வீட்டுக்குக் கூட்டிச் சென்றனர்" எனக் கூறுகிறார், வெண்ணிலாவின் உறவினர் பத்மாவதி.

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

அங்கு சிறுவனை புதைத்த இடத்தை வெண்ணிலா காண்பித்ததாகவும் அதில் சிமெண்ட் பூசி மெழுகியிருந்ததாகவும் அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார். தொடர்ந்து சம்பவத்தின் பின்னணி குறித்த மேலதிக தகவல்களை அவர் பகிர்ந்தார்.

திருத்தணியில் உள்ள இந்திரா நகரில் சுமார் ஒன்பது நாடோடி பழங்குடியின குடும்பங்கள் வசித்து வருகின்றன. கறிவேப்பிலை, கொத்துமல்லி ஆகியவற்றைப் பறித்து விற்பது இவர்களின் தொழிலாக உள்ளது.

இங்கு வசித்து வந்த வெண்ணிலா என்பவருக்கு 15 வயது, 7 வயது மற்றும் 4 வயதில் மூன்று ஆண் குழந்தைகள் உள்ளனர். கட்டட பணியைச் செய்து வந்த இவரது கணவர், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மாரடைப்பு ஏற்பட்டு இறந்துவிட்டதாக உறவினர்கள் கூறுகின்றனர்.

"கணவர் இறந்த பிறகு சாப்பாட்டுக்கு வெண்ணிலா ரொம்பவே கஷ்டப்பட்டார். வீட்டு வேலை செய்து குழந்தைகளைக் காப்பாற்றி வந்தார்" என்கிறார், அவரது உறவினர் பத்மாவதி.

கடந்த 8 மாதங்களுக்கு முன்பு வெண்ணிலாவின் அக்கா மகன் வினோத் கூறியதன் அடிப்படையில் கீழ்முருகம்பட்டு கிராமத்தில் ஆடு, கோழிகளை வளர்த்து வந்த முருகன் என்பவரின் பண்ணையில் தங்கி வேலை பார்ப்பதற்காக தனது மூன்று மகன்களுடன் வெண்ணிலா சென்றுள்ளார்.

"இதன்பிறகு வெண்ணிலாவைப் பற்றி எந்த தகவலும் எங்களுக்குத் தெரியவில்லை" என்கிறார், பத்மாவதி.

பண்ணையில் நடந்த கொடுமை

வெண்ணிலாவின் உறவினர் பத்மாவதி.

பட மூலாதாரம், Handout

படக்குறிப்பு, வெண்ணிலாவின் உறவினர் பத்மாவதி.

"கடந்த புதன்கிழமையன்று அழுதபடியே எங்கள் வீட்டுக்கு வெண்ணிலா வந்திருந்தார். அன்று மதியம் கோழி ஒன்றின் இறகை அவரது இளைய மகன் வெட்டிவிட்டதாகக் கூறி பண்ணை உரிமையாளர் கடுமையாக அடித்ததாகக் கூறி அழுதார்" என்கிறார் அவர்.

'என் குழந்தைகளை எப்படியாவது காப்பாற்றிக் கொடு' எனக் கூறி வெண்ணிலா அழுததாகக் கூறிய பத்மாவதி, "ஆனால், அவரது பெரிய மகனை கடந்த பிப்ரவரி மாதமே பண்ணை உரிமையாளர் கொன்று புதைத்த தகவலை அப்போது அவர் எங்களிடம் கூறவில்லை" என்கிறார்.

அதேநாளில், பண்ணை உரிமையாளர் முருகனை பத்மாவதியும் அவரது உறவினர்களும் நேரில் சந்தித்துப் பேசியுள்ளனர். அங்கிருந்த வெண்ணிலாவின் 7 வயது மற்றும் 4 வயது சிறுவர்களை தங்களுடன் அவர்கள் கூட்டிச் செல்ல முற்பட்டதாகக் கூறுகின்றனர்.

"அங்கே வெண்ணிலாவின் மூத்த மகன் சுரேஷை காணவில்லை. அவன் காணாமல் போய்விட்டதாக முருகன் கூறினார். 'பத்து நாளில் கண்டுபிடித்துத் தருமாறு கூறினோம். ஆனால், மூன்று மாதம் அவகாசம் தருமாறு முருகன் கோரினார்" என்கிறார் பத்மாவதி.

இதன்பிறகு வெண்ணிலாவிடம் அவரது உறவினர்கள் தீவிரமாக விசாரித்தபோது, தன் மகனை பண்ணை உரிமையாளர் அடித்துக் கொன்றுவிட்ட தகவலைத் தெரிவித்துள்ளார். இதன் பின்னரே காவல்துறையில் புகார் அளிக்கும் முடிவுக்கு வந்துள்ளதாகக் கூறினர்.

பத்மாவதியின் கூற்றுப்படி, கடந்த பிப்ரவரி பண்ணை உரிமையாளர் முருகன், அவரது மனைவி புவனா உள்ளிட்ட சிலர் மதுரை, ராமேஸ்வரம் ஆகிய பகுதிகளுக்குச் சுற்றுலா சென்றுள்ளனர். தோட்டத்தில் உள்ள ஆடு மற்றும் கோழிகளை வெண்ணிலாவின் மூத்த மகன் சுரேஷ் கவனித்து வந்துள்ளார்.

'ஐம்பது கோழிகளைக் காணவில்லை'

கோழிப்பண்ணையின் உரிமையாளர் முருகன்.

பட மூலாதாரம், Handout

படக்குறிப்பு, கோழிப்பண்ணையின் உரிமையாளர் முருகன்.

"சுற்றுலா முடிந்து வந்தபோது, ஐம்பது கோழிகளைக் காணவில்லை என முருகன் கூறியுள்ளார். கூடவே, சில ஆடுகள் தங்கள் தோட்டத்தில் மேய்ந்ததாகக் கூறி அருகில் இருந்த தோட்டத்து உரிமையாளர் முருகனிடம் சண்டை போட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்து சிறுவனைக் கடுமையாக தாக்கியுள்ளார்" என்கிறார் பத்மாவதி.

அப்போது முருகனின் மனைவி மற்றும் பாதிக்கப்பட்ட வெண்ணிலாவின் அக்கா மகன் வினோத் ஆகியோரும் இதற்கு உடந்தையாக இருந்ததாக அவர் தெரிவித்தார்.

"மதியம் 2 மணியளவில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. ஐந்து மணியளவில் சுரேஷ் இறந்துவிட்டதாக எங்களிடம் வெண்ணிலா கூறினார். அங்கேயே அவனைப் புதைத்துவிட்டனர்" என்கிறார் பத்மாவதி.

சிறுவன் கொல்லப்பட்ட தகவலை வெளியில் கூறாமல் இருக்கும் வகையில் வெண்ணிலா மற்றும் அவரது குழந்தைகளை முருகன் தரப்பினர் அடைத்து வைத்துள்ளனர்.

"வெண்ணிலாவிடம் செல்போன் எதுவும் இல்லை. கடந்த சில மாதங்களாக அவரையும் குழந்தைகளையும் அடித்து துன்புறுத்தியுள்ளனர். அவரால் நடக்க முடியவில்லை. கடந்த புதன்கிழமை அவரது இளைய மகனை அடித்துள்ளனர். இதற்கு மேலும் அடிதாங்க முடியாது எனக் கூறி தப்பித்து எங்களிடம் வந்தார்" என்கிறார் பத்மாவதி.

பண்ணை உரிமையாளர் முருகன் மற்றும் அவரது மனைவி ஆகியோர் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்கள் மீது எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் (SC/ST Act)கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் வெண்ணிலாவின் உறவினர் வினோத் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

'மூன்று பேருக்கு தொடர்பு' - திருவள்ளூர் எஸ்.பி

சிறுவன் கொலை செய்து புதைக்கப்பட்ட இடத்தில் போலிசார் சோதனை மேற்கொண்டனர்.

பட மூலாதாரம், Handout

படக்குறிப்பு, சிறுவன் கொலை செய்து புதைக்கப்பட்ட இடத்தில் போலிசார் சோதனை மேற்கொண்டனர்.

கடந்த செவ்வாய்க் கிழமையன்று முருகனின் பண்ணை வீட்டில் சிறுவன் புதைக்கப்பட்ட இடத்தை தாசில்தார் உள்பட வருவாய்த்துறை அதிகாரிகள் தோண்டியுள்ளனர். அங்கே சிறுவனின் சடலம் கைப்பற்றப்பட்டதாக காவல்துறையினர் கூறுகின்றனர்.

திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் கனிமொழியிடம் பிபிசி தமிழ் இதுகுறித்துக் கேட்டபோது, வழக்கைக் காவல்துறை விசாரித்து வருவதால் அவர்களிடம் பேசுமாறு கூறினார்.

சிறுவன் கொலை தொடர்பாக, வியாழக் கிழமையன்று செய்தியாளர்களிடம் பேசிய திருவள்ளூர் எஸ்.பி விவேகானந்த சுக்லா, "உடல் தோண்டி எடுக்கப்பட்டுள்ளதன் மூலம் சம்பவம் நடந்தது உண்மை எனத் தெரிய வருகிறது" எனக் கூறினார்.

"இந்தச் சம்பவத்தில் மூன்று பேருக்கு தொடர்பிருப்பது தெரியவந்துள்ளது. மற்றொரு நபரின் தொடர்பு குறித்து விசாரணை நடந்து வருகிறது" எனவும் அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய எஸ்.பி, "இந்தப் பண்ணையில் வேறு ஒரு பெண் ஒருவரும் வேலை பார்த்து வந்துள்ளார். அவர் மீதும் சந்தேகம் உள்ளது" எனக் கூறினார்.

நான்கு மாதங்களுக்குப் பிறகு சடலம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறித்துப் பேசிய போலீஸ் எஸ்.பி, "சம்பவ இடத்தில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. சிறுவனின் உடலில் காயங்கள் உள்ளதா என்பது குறித்து பிரேதப் பரிசோதனை அறிக்கை வெளிவரும்போது தெரிய வரும்" எனக் குறிப்பிட்டார்.

வெண்ணிலாவுக்கு வீடு என எதுவும் இல்லாததால் தற்போது திருத்தணியில் உள்ள அரசு காப்பகத்தில் தனது குழந்தைகளுடன் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

"மூன்று குழந்தைகளை வைத்துக் கொண்டு உணவுக்கே சிரமமான சூழலில் தான் அவர் வாழ்ந்து வந்தார். ஐநூறு ரூபாய் வாடகையில் அவருக்கு வீடு தேடிக் கொடுத்தேன். அதைக் கொடுக்க முடியாமல் வீட்டைக் காலி செய்துவிட்டார். என் வீட்டு வாசலில் தான் உறங்குவார். அவருக்கு இப்படியொரு நிலை வரும் என கனவிலும் நினைக்கவில்லை" எனக் கூறி கலங்குகிறார், அவரது உறவினர் பத்மாவதி.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு