"சிங்கப்பூரில் உள்ள தனது சிறிய வீட்டில் அமர்ந்திருந்த ஷஷாங்கின் கைபேசி, குடும்ப வாட்ஸ்அப் குழுவில் வந்துகொண்டிருக்கும் 'இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்' செய்திகளால் இடைவிடாமல் ஒலித்துக்கொண்டிருந்தது."
சிறிது நேரத்தில், அவரது அம்மா அவரை வீடியோவில் அழைக்கிறார். அழைப்பை ஷஷாங்க் எடுத்தவுடன் உண்மையில் மும்பையில் உள்ள தனது வீட்டிற்கே சென்றுவிட்டதைப் போல அவருக்குத் தோன்றுகிறது. பண்டிகை நாளன்று புத்தாடை அணிந்த உறவினர்கள் நிறைந்த கலகலப்பான வரவேற்பறை; பட்டாசுச் சத்தங்களுக்கு இடையே அவர்களின் உற்சாக உரையாடல்களையும் அவர் கேட்கிறார். ஒரு கணம், சிங்கப்பூரில் உள்ள ஷஷாங்கின் அறையிலும் ஆட்கள் நிறைந்திருப்பதைப் போன்ற உணர்வு ஏற்படுகிறது. ஆனால் அழைப்பு முடிந்தவுடன் மீண்டும் அமைதி சூழ்கிறது.
"பொதுவாக நம்மிடையே இருக்கும் நேரடி மனிதத் தொடர்புகள்... இப்போது பெரும்பாலும் இல்லாமலேயே போய்விட்டன."
கடந்த ஏழு ஆண்டுகளாக அவர் படிப்பிற்கும் வேலைக்கும் சிங்கப்பூரில் தனியாக வாழ்ந்து வரும் ஷஷாங்கிற்கு இந்த உணர்வு புதிதானது அல்ல. பல பண்டிகை நாட்களில் அவரால் வீட்டில் இருக்க முடிந்ததில்லை. மும்பையில் இருந்தபோது, தீபாவளி, ஹோலி விநாயகர் சதுர்த்தி போன்ற பண்டிகை நாட்களில் வீட்டிற்க்கு உறவினர்கள் வருவது, சுவையான உணவுகளை ருசிப்பது, நண்பர்கள் மற்றும் அண்டை வீட்டாருடன் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்வது என்பதைக் குறிக்கும். ஆனால் சிங்கப்பூரில், பண்டிகைக் கொண்டாட்டங்களின் புகைப்படங்களை பார்த்தும் தொலைபேசியில் பேசியுமே அவர் திருப்தி அடைய வேண்டியுள்ளது.
சில நேரங்களில் அந்த உணர்வு மிகுந்த மனவலியைத் தரும். ஆனால் காலப்போக்கில் அதற்குப் பழகிவிடுகிறோம். சிங்கப்பூருக்கு சென்ற தொடக்கத்தில் தனிமையை எதிர்கொள்ள ஷஷாங்க் பல்வேறு வழிகளை முயன்றார். சக ஊழியர்களுடன் இணைந்து மதிய உணவு சாப்பிடுவதை ஏற்பாடு செய்வது, அனைவருக்குமான உணவுக் கட்டணத்தையும் தானே செலுத்துவது என முயற்சித்தார். பழக்கம் நெருக்கமான உறவாக மாறும் என்ற நம்பிக்கை அவருக்கு இருந்தது. ஆனால் ஒரு பெருநகரத்தில் வளர்ந்தவர்கள் புதிய நண்பர்களை உருவாக்கிக் கொள்வது எளிதான விஷயம் அல்ல என்பதை அவர் விரைவிலேயே உணர்ந்துவிட்டார். "மக்களுக்கு என்று தனிப்பட்ட வாழ்க்கையும் இருக்கிறதல்லவா?" என்று அவர் கூறுகிறார்.
மேலும், "நிச்சயமாக, தொழில்நுட்பம் நமக்கு உதவுகிறது. பெற்றோருடன் காணொளியில் பேசலாம். ஆனால், நேரில் சந்திக்கும்போது ஏற்படும் நேரடித் தொடர்பு இதில் இருப்பதில்லை” என்று அவர் கருதுகிறார்.
ஷஷாங்க் உணர்வதை ஆய்வாளர்கள் 'சமூக ஸ்நாக்ஸ்' என்று குறிப்பிடுகிறார்கள். இவை, நம்பிக்கை, நெருக்கம், சொந்தம் என உணர்வு போன்ற ஆழமான தேவைகளைப் பூர்த்தி செய்யாமல், கவனத்தைத் தூண்டும் சுருக்கமான டிஜிட்டல் பரிமாற்றங்கள் ஆகும். அவை இணைப்பு போலத் தோன்றினாலும், அரிதாகவே அப்படி உணரவைக்கின்றன.
இதன் விளைவுகள் உலகம் முழுவதும் காணப்படுகின்றன. தனிமையை முக்கியமான உலகளாவிய பொதுச் சுகாதாரக் கவலையாக உலக சுகாதார நிறுவனம் வகைப்படுத்தியுள்ளது. வரலாற்றிலேயே டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் மூலம் அதிகமாக இணைக்கப்பட்ட தலைமுறையாகக் கருதப்படும் பதின்ம வயதினரும் இளைஞர்களுமே இதனால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அந்நிறுவனம் குறிப்பிடுகிறது.
2014 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில், உலகளவில் 6 பேரில் ஒருவர் தனிமையை அனுபவித்தார்

(சமூகத் தொடர்பு குறித்த உலக சுகாதார அமைப்பின் ஆணையம், 2025)
2014 மற்றும் 2019-க்கு இடைப்பட்ட காலத்தில், தனிமை மற்றும் சமூகத் தனிமைப்படுத்தல் ஆகியவை ஆண்டுக்கு சுமார் 8,71,000 இறப்புகளுடன் தொடர்புடையதாக இருந்தன.

13 முதல் 17 வயதுக்குட்பட்டவர்களில் ஏறக்குறைய ஐந்தில் ஒருவர் தாங்கள் தனிமையாக உணர்வதாகத் தெரிவிக்கின்றனர்.


வரலாற்றிலேயே டிஜிட்டல் தொழில்நுட்பம் மூலம் மிக அதிகமாக பிறருடன் இணைக்கப்பட்ட தலைமுறையாக இருந்தபோதிலும், பல பிராந்தியங்களில் 18–29 வயதுடைய இளைஞர்கள் முதிய வயதுப் பிரிவினரை விட அதிக அளவிலான தனிமையை உணர்வதாகத் தெரிவித்துள்ளனர்.


"பெரும்பாலான மக்களை நம்பலாம்" என்று ஒப்புக்கொண்ட இந்தியர்களின் எண்ணிக்கை 1993 முதல் 2014 வரை குறைந்துள்ளது.
(உலக மதிப்பீடுகள் கணக்கெடுப்பு, WHO)
"தனிமை என்பது இனி வெறும் சமூகப் பிரச்னை மட்டுமல்ல. அது மனநலத்திலும் உடல்நலத்திலும் குறிப்பிடத்தக்க தாக்கங்களை ஏற்படுத்துகிறது. எப்போதும் பிறருடன் இணைந்திருப்பதால் மட்டுமே, உணர்வுப்பூர்வமான தனிமை உணர்விலிருந்து ஒருவரை பாதுகாத்துவிடாது." — டாக்டர் கிரிதி ஆனந்த், மூத்த மனநல மருத்துவ ஆலோசகர், பாரஸ் ஹெல்த், பஞ்ச்குலா.

சுதந்திரத்தின் முரண்பாடு
ஷஷாங்க் தனது வீட்டை நினைத்து ஏங்கிக்கொண்டிருந்தால், யசோதாவோ தான் வசித்து வந்த நகரமே இனி பாதுகாப்பான இடமாக இல்லை என்ற சூழலை எதிர்கொள்கிறார்.
2022-ஆம் ஆண்டு முதுகலைப் படிப்பிற்காக யசோதா பெர்லினுக்கு குடிபெயர்ந்தபோது, தன் ஊரை விட்டுப் பிரிந்ததால் தான் ஏங்கலாம் என்று அவர் எதிர்பார்த்திருந்தார். பெர்லின் வாழ்க்கையில் மொழிச் சிக்கல், அறிமுகமில்லாத கலாசாரம் மற்றும் குடும்பத்தினர், நண்பர்களிடமிருந்து விலகி இருப்பது போன்ற சவால்களை அவர் எதிர்கொள்ள வேண்டியிருந்தது.
இரவு நேரங்களில் தனியாக வீட்டிற்கு நடந்து செல்லவும், திடீரென விருப்பம் தோன்றினால் நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும், பொதுஇடங்களில் எப்போதும் எச்சரிக்கையுடன் பின்னால் திரும்பிப் பார்க்க வேண்டிய அவசியமின்றி சுதந்திரமாக இருக்கவும் அவரால் முடிந்தது.
"முதல் முறையாக, ஆண்களும் சாதாரண மனிதர்கள்தான் என்பதை நான் உணர்ந்தேன்" என்று அவர் கூறுகிறார்.
ஆனால் டெல்லிக்குத் திரும்பியதும், அவர் தனிமையை உணரத் தொடங்கினார். பல இடங்களுக்குச் செல்ல வேண்டியிருந்தாலும், இரவு நேர ஊரடங்கு உத்தரவு இருப்பதால், உரிய நேரத்திற்குள் வீட்டிற்குத் திரும்ப வேண்டும். சந்திப்பதற்கு நண்பர்கள் இருந்தாலும் பயணம் பெர்லினைப் போல சுமுகமாக இல்லை, சாலைகளும் பாதுகாப்பானதாக இல்லை.
"இங்கே என்னிடம் எல்லாம் இருக்கிறது. ஆனால் என்னால் அதை அணுக முடியவில்லை."

வயதுவந்த பருவத்தில் ஏற்படும் தனிமை
ரிஷப்பைப் பொறுத்தவரை, பாதுகாப்பான சூழலைக் கண்டுபிடிப்பது பிரச்னையல்ல. பல இந்தியப் பெருநகரங்களைக் காட்டிலும் குறைந்த குற்ற விகிதத்தைக் கொண்ட மும்பையில் வாழும் ஒரு ஆணாக இருப்பதால், டெல்லியில் யசோதா அனுபவித்ததைப் போல வெளியே செல்லும் முன் அவர் பாதுகாப்பைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை.
இருப்பினும், அவர் தனிமையை உணர்கிறார். அவரைப் பொறுத்தவரை, தனிமை என்பது மீண்டும் மீண்டும் ஏற்படும் ஒரு வாரந்திர நிகழ்வு.
"திங்கள் முதல் வெள்ளி வரை அலுவலக வேலை இருக்கும், ஆனால் வார இறுதிகளில் என்ன செய்வது என்று தெரியாது" என்று அவர் கூறுகிறார்.
வேலைக்காக மும்பைக்கு குடிபெயர்ந்தபோது, அவரது நண்பர்கள் 2 கோடி மக்கள்தொகை கொண்ட அந்தப் பெரிய நகரின் பல்வேறு பகுதிகளில் சிதறிக் கிடந்தனர். அவர்களைச் சந்திக்கத் திட்டமிடுவது செலவானதாகவும், அனைவரின் நேரத்தையும் ஒருங்கிணைப்பது கடினமானதாகவும் இருந்தது.
தனக்கென ஒரு சமூக வட்டத்தை உருவாக்கும் முயற்சியாக, அவர் வினாடி-வினா நிகழ்ச்சிகள், புத்தக வாசகர் குழுக்கள் மற்றும் சமூகக் குழுக்களில் பங்கேற்கத் தொடங்கினார். வாரக்கணக்கில் நீடித்த இதுபோன்ற செயல்பாடுகளின் விளைவாக, முன்பின் தெரியாத சிலர் பரிச்சயமான முகங்களாக மாறி, இறுதியில் நண்பர்களாகவும் ஆனார்கள்.
"அந்த மூன்று மணி நேரத்திற்கு எனது கவலைகளும் தனிமை உணர்வும் மறைந்துவிடுகின்றன" என்று அவர் கூறுகிறார்.

தனிமையின் கட்டமைப்பு
ஷஷாங்க், யசோதா, ரிஷப் ஆகியோருக்கு தனிமை பல்வேறு வடிவங்களில் வருகிறது. ஆனால், அவர்கள் அனைவரின் வாழ்விலும் பொதுவான போக்கு ஒன்று காணப்படுகிறது. நகர்ப்புற, நவீன தனிமை என்பது நமது வாழ்க்கை முறையின் விளைவாகப் பெருகி வருகிறது. சமூகத்தை மையமாகக் கொள்ளாமல், வேலையை மையமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்ட நகரங்கள். பல மணிநேரங்களை விழுங்கும் பயணங்கள். நெருக்கத்திற்காக அல்லாமல், ஈடுபாட்டிற்காக உருவாக்கப்பட்ட டிஜிட்டல் தளங்கள். மெதுவாகச் சுருங்கும் சமூக வட்டங்கள். ஓய்வு நேரமே மிச்சமிருக்க விடாத பணிச் சூழல்கள் என இவை அனைத்தும் சேர்ந்து, இன்றைய நகர வாழ்க்கையில் தனிமையை உருவாக்கும் மறைமுகக் கட்டமைப்பாக மாறியுள்ளன.
உலக சுகாதார நிறுவனம் 142 நாடுகளில் நடத்திய ஆய்வின்படி, ஆசியாவில் சுமார் 18% மக்கள் தனிமையை அனுபவிக்கின்றனர். இது ஐரோப்பாவில் உள்ள சுமார் 10% என்ற விகிதத்தை விட கிட்டத்தட்ட இரு மடங்கு அதிகமாகும். இந்தியாவில், இந்த இடைவெளியும் தனிமை உணர்வும் மிகவும் தீவிரமாக உணரப்படுகின்றன. இதற்கு கூட்டுக்குடும்ப அமைப்பின் சிதைவு, வேலை மற்றும் கல்விக்காக மக்கள் பெருமளவில் நகரங்களுக்கு இடம்பெயர்வது, மற்றும் நெருக்கமான உறவுமுறைக்கு மாற்றாக வெறும் 'இணைப்பு' மட்டுமே நிலவும் நகர்ப்புற வாழ்க்கையின் சிக்கல்கள் ஆகியவை இதற்கு முக்கியக் காரணங்களாக அமைந்துள்ளன.
எப்போதும் இணையத்தில் இணைந்திருக்கும் இந்தத் தலைமுறைக்கு, அவர்கள் மற்றவர்களுடன் தொடர்பில் இருக்கிறார்களா என்பதே இனி கேள்வி அல்ல. உண்மையில், அவர்கள் சொல்வதைக் கவனமாகக் கேட்கவும் புரிந்துகொள்ளவும் யாராவது இருக்கிறார்களா என்பதுதான் முக்கியமான கேள்வி. இந்தப் பிரச்னைக்கான தீர்வு என்னவென்றால், தங்கள் வாழ்க்கையில் ஏதோ ஒன்று விடுபட்டுப் போயிருக்கிறது என்பதை எவ்விதத் தயக்கமும் இன்றி ஒப்புக்கொள்ளும் துணிச்சலே என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
"டிஜிட்டல் தொடர்புகள் பொதுவாக மனிதர்களுக்கிடையேயான தொடர்புகளின் எண்ணிக்கையை அதிகரிக்கின்றன. ஆனால் நேருக்கு நேர் உருவாகும் உறவுகளில் காணப்படும் ஆழமும் தரமும் அவற்றில் பெரும்பாலும் இல்லை. பலருக்கு நூற்றுக்கணக்கான பின்தொடர்பவர்களோ அல்லது நண்பர்களோ இருக்கலாம்; ஆனால் அந்த உறவுகள் உண்மையில் ஆழமானவை அல்ல என்ற உணர்வு அவர்களுக்கு ஏற்படுகிறது." — மனநல மருத்துவரும், இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான மனநல மதிப்பீட்டுக் கருவியான 'எமோஷனல் வெல்னஸ் இன்டெக்ஸ்'-ஐ உருவாக்கியவர்.




















தனிமை - தனித்திருத்தல் என்ன வேறுபாடு? தனிமையை வெல்வது எப்படி?
தனிமை என்பது மன வியாதியா? என்ன காரணம்? தீர்வு என்ன?
தனிமையில் இருக்கும் போது யாரோ உடனிருப்பது போன்ற உணர்வு மாயத் தோற்றமா? மன நோயின் அறிகுறியா?