சிறுவன் ஓட்டிய கார் மோதி ஒருவர் உயிரிழந்த வழக்கில் நீதிபதி மீது வழக்குப்பதிவு - கேரளத்தில் என்ன நடக்கிறது?

கேரளத்தில் கார் விபத்தில் ஒருவர் உயிரிழந்த வழக்கில், காரை ஓட்டிய சிறுவனின் தந்தை மாவட்ட கூடுதல் நீதிபதி என்பதால், சிறுவனுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளதாகக் கூறி, எதிர்க்கட்சியினரும், பல்வேறு அமைப்பினரும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து அனுமதி பெற்ற கேரள காவல்துறை, மோட்டார் வாகனச்சட்டப்படி சிறுவனின் தந்தையான நீதிபதி மீது வழக்குப்பதிவு செய்துள்ளது.
குற்றம் செய்தவர்கள், செல்வமும் செல்வாக்கும் படைத்தவர்களாக இருப்பதால் தங்களுக்கு நீதி கிடைக்குமா என்பது சந்தேகமாக இருப்பதாக, இறந்தவரின் மகள் தெரிவித்துள்ளார்.
இந்த விபத்து விவகாரத்தில் நீதி கிடைக்கும்வரை போராடுவோம் என்று கேரள ஜனநாயக வாலிபர் சங்க மாநிலத்தலைவர் சிந்தா ஜெரோம் பிபிசியிடம் கூறினார். தவறிழைத்த காவல்துறையினர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
இந்த விவகாரத்தில் முதலில் காவல்துறையினர் தவறு செய்ததை சட்டப்பேரவையில் ஒப்புக்கொண்டுள்ள கேரள உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலா, ''இதுபோன்ற கொலைக்கு இணையான சம்பவங்களில் எவ்வித சமரசத்துக்கும் இடமில்லை.'' என்று கூறியுள்ளார். இதுதொடர்பாக கொச்சி சேராநல்லூர் காவல் நிலையத்தைச் சேர்ந்த 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
2 முறை கைதான சிறுவன் 2 முறையும் விடுவிப்பு

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் கொச்சி நகரிலுள்ள மாஞ்சாலி பகுதியைச் சேர்ந்தவர் ஜெயபாலகிருஷ்ணன் (வயது 55). இவர் நகரின் மற்றொரு பகுதியிலுள்ள தெற்கு சித்தூர் கோயில் அருகில் தட்டுக்கடை எனப்படும் தள்ளுவண்டியில் உணவகம் நடத்தி வந்துள்ளார். கடந்த அக்டோபர் 25 அன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் சேராநல்லூர் மராப்பரம்பு பேருந்து நிறுத்தம் அருகே ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தபோது, வேகமாக வந்த கார், ஸ்கூட்டரின் பின்புறம் மோதியதில் ஜெயபாலகிருஷ்ணன் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. காவல்துறை விசாரணையில், விபத்துக்கு காரணமான காரை 17 வயது சிறுவன் ஓட்டி வந்ததாக தெரியவந்தது.
கேரள ஊடகங்கள் பகிர்ந்துள்ள தகவலின்படி, ஜெயபாலகிருஷ்ணன் மரணத்திற்குக் காரணமான விபத்து காலை 2:20 மணிக்கு நடந்துள்ளது. ஆனால் காலை 7:34 மணிக்குதான், காவல்துறையால் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிலும் விபத்தை ஏற்படுத்திய சிறுவனின் பெயர் இடம் பெறவில்லை. சிறுவனின் தந்தை மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு தீர்ப்பாயத்தில் (MACT-Motor Accident Crimes Tribunal) பொறுப்பு வகிக்கும் ஒரு நீதிபதி என்பதே இதற்குக் காரணம் என்று சிறிது நேரத்தில் தகவல் பரவியது.
காலையில் சிறுவனின் பெயர் இல்லாமல் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு, காவல் நிலைய பிணையில் விடுவிக்கப்பட்ட நேரத்தில், காவல் நிலையத்தில் அந்த நீதிபதியும் இருந்ததாக இறந்தவரின் குடும்பத்தினர் ஊடகங்களிடம் தெரிவித்தனர். விபத்தை ஏற்படுத்திய சிறுவனை தங்கள் உறவினர் ஒருவர் புகைப்படம் எடுத்தபோது, அதைப்பறித்த காவல்துறையினர், படத்தை அழித்ததாகவும், காரை ஓட்டிய சிறுவன் மது போதையில் இல்லை என்று உடனடியாக முடிவுக்கு வந்ததாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர்.
விபத்தை ஏற்படுத்திய காரில் வைக்கப்பட்டிருந்த நீதிபதியின் அதிகாரப்பூர்வ பதவியைக் குறிப்பிடும் பெயர்ப்பலகையையும் காவல்துறையினர் வேகமாக அகற்றினர் என்றும் குறிப்பிட்ட ஜெயபாலகிருஷ்ணனின் குடும்பத்தினர், சிறுவனுக்கு காவல் நிலைய பிணை வழங்கியதை எதிர்த்தும், விபத்தை ஏற்படுத்திய காரின் உரிமையாளரான நீதிபதியின் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும் காவல் நிலையம் முன்பாக போராட்டம் நடத்தினர். அவர்களுக்கு ஆதரவாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (DYFI) உள்ளிட்ட அமைப்புகள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராடின.
இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநிலத்தலைவர் சிந்தா ஜெரோம், ''நாங்கள் போராடும் வரை அந்த சிறுவன் மீது முறையாக வழக்குப்பதிவு செய்யப்படவில்லை. காவல் நிலைய பிணையில் அவர்கள் விடுவித்தனர். மோட்டார் வாகனச்சட்டம் 199 ஏ பிரிவின்படி, சிறுவன் வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்தினால் அதற்கு அவருடைய பெற்றோர் அல்லது காரின் உரிமையாளரே குற்றவாளி. இந்த கார் நீதிபதியின் பெயரில் உள்ளது. ஆனால் அவர் மீது எந்த வழக்கும் பதியாமல் இருந்தனர். எங்கள் போராட்டத்துக்குப் பின்பே அவர் மீது அந்த பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.'' என்றார்.
போராட்டத்திற்கு முன்பாக, சிறுவன் மீது கவனக்குறைவாக வாகனம் ஓட்டுதல், கவனக்குறைவால் மரணம் ஏற்படுத்துதல் (பிஎன்எஸ் 208 மற்றும் 106(1)) ஆகிய பலவீனமான சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்ததாக குறிப்பிட்ட அவர், போராட்டத்திற்குப் பின்பே, சிறுவன் மீது கூடுதல் சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது என்றார்.
முதலில் காவல் நிலைய பிணையில் சிறுவனை விடுவித்த காவல்துறையினர், கூடுதல் பிரிவில் வழக்குப்பதிவு செய்து மீண்டும் கைது செய்து, இளஞ்சிறார் நீதி வாரியம் முன்பாக ஆஜர்படுத்தினர். அங்கு அவர் மீண்டும் பிணையில் விடுவிக்கப்பட்டார். போராட்டத்திற்குப் பின்பு, சிறுவனின் மீது கூடுதல் பிரிவில் வழக்குப்பதிவு செய்த கேரள காவல்துறையினர், கேரள உயர்நீதிமன்றத்தில் அனுமதி பெற்று, சிறுவனின் தந்தையான நீதிபதி மீதும் மோட்டார் வாகனச்சட்டப்படி வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
"திருத்தப்பட்ட மோட்டார் வாகனச் சட்டத்தின் 199 ஏ (2) பிரிவின்படி, சிறுவர் காரை இயக்கி விபத்தை ஏற்படுத்தி உயிரிழப்பை உண்டாக்கினால் பெற்றோர்/பாதுகாவலர் அல்லது காரின் உரிமையாளருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை, ரூ.25 ஆயிரம் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்பட வாய்ப்புள்ளது. அத்துடன் வாகனப் பதிவு ஓராண்டுக்கு ரத்து செய்யப்படும். மோட்டார் வாகனச் சட்ட விதிகளின்படி, விபத்தை ஏற்படுத்தும் சிறுவர்கள் 25 வயது வரை ஓட்டுநர் உரிமம் பெறுவதும் தடை செய்யப்படுகிறது. இந்த வழக்கிலும் இந்த சட்ட நடைமுறைகள் பொருந்தும்" என்று கேரளத்தைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

ஒரே மாதத்திற்குள் நடந்த ஒரே மாதிரியான 2வது விபத்து
இந்த விபத்து விவகாரத்தில் கேரள காவல்துறை மீது, கேரள ஊடகங்கள் கடுமையான விமர்சனங்களை முன் வைத்துள்ளன. எதிர்க்கட்சியினரும், பொது மக்களும் சமூக ஊடகங்களில் காவல்துறைக்கு எதிராக கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர். கேரள ஊடகங்களில் ஜெயபாலகிருஷ்ணனின் குடும்பத்தினர் தெரிவித்த கருத்துகள், அவர்களுக்கான ஆதரவையும் அதிகப்படுத்தி, அரசு மற்றும் காவல்துறைக்கு அழுத்தத்தை ஏற்படுத்தின.
சிஎன்எஸ்–நியூஸ் 18 தொலைக்காட்சியில் கருத்துத் தெரிவித்த ஜெயபாலகிருஷ்ணனின் மகள் பத்ரகீர்த்தி, '''காரை இயக்கியது ஒரு மைனர் என்பதும், இதற்கு சட்டத்தில் அனுமதியில்லை என்பதும் அவர்களுக்குத் தெரியும். இறுதியில் எப்படியும் அவர்களைக் காப்பாற்றிவிடலாம் என்று நம்புகின்றனர். அதனால்தான் கேரளத்தில் இத்தகைய குற்றங்கள் மீண்டும் மீண்டும் நடந்து வருகின்றன. இதைத் தடுப்பதற்கான வலுவான சட்டங்கள் வந்தால்தான் பலருடைய உயிரைக் காப்பாற்ற முடியும்.'' என்றும் அவர் மேலும் கூறினார்.
விபத்தை ஏற்படுத்திய சிறுவனை இரு முறை கைது செய்து இரு முறையும் அவரை பிணையில் விடுவித்தது பற்றி பேசிய பத்ரகீர்த்தி, ''என்னுடைய தந்தையின் உடல் கிடைக்க 12 மணி நேரமானது. ஆனால் குற்றவாளியை கைது செய்த சில மணி நேரத்தில் பிணை வழங்கப்பட்டுள்ளது. ஏனெனில் அவருடைய தந்தை நீதிபதி. அவர்கள் பணம் படைத்தவர்கள். நாங்கள் ஏழைகள். காவல் நிலையத்தில் நடந்த நிகழ்வுகளைப் பார்க்கும்போது எங்களுக்கு நீதி கிடைக்குமா என்பது சந்தேகமாகவுள்ளது.'' என்றார்.
காவல்துறை நடவடிக்கை குறித்து கொச்சி மாநகர காவல் ஆணையர் காளிராஜ் மகேஷிடம் பிபிசி பேசியபோது, தற்போது முக்கியமான மீட்டிங்கில் இருப்பதாகவும், ஏற்கெனவே இதுபற்றி ஊடகங்களில் விளக்கமாகக் கூறியிருப்பதாகவும் தெரிவித்தார்.
ஊடகங்களில் பேசிய மாநகர காவல் ஆணையர் காளிராஜ் மகேஷ், ''சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் விபத்து நடந்தபோது சிறுவன் மணிக்கு 104 கி.மீ. வேகத்தில் காரை இயக்கியுள்ளார். சிறுவனின் மொபைல் போனிலிருந்து கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், அதிவேகமாக வாகனம் ஓட்டியது மற்றும் குற்ற நோக்கத்துடன் அல்லாத கொலை உள்ளிட்ட பிரிவுகள் வழக்கில் கூடுதலாகச் சேர்க்கப்பட்டுள்ளன. முதலில் பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. விசாரணையில் காவல்துறை தரப்பில் எந்தத் தவறும் நிகழவில்லை.'' என்றும் விளக்கமளித்தார்.
விபத்தின் தீவிரத்தையும் அடுத்தகட்ட நடவடிக்கைகளையும் கருத்தில் கொண்டு வழக்கில் விரிவான விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் காவல் ஆணையர் காளிராஜ் தெரிவித்துள்ளார்.
கடந்த அக்டோபர் 11 அன்று அதிகாலையில், கொச்சி சர்வதேச விமான நிலையம் செல்லும் சாலையில் நடந்த ஒரு விபத்தில், ஸ்கூட்டர் மீது மினி கூப்பர் கார் மோதியதில் 2 இளம்பெண்கள் மற்றும் ஒரு இளைஞர் என 3 பேர் உயிரிழந்தனர். 19 வயது இளைஞர் இயக்கிய கார் மோதி 3 பேர் உயிரிழந்த அந்த விபத்து, கேரளத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. சட்டப்பேரவையிலும் அது விவாதத்திற்குள்ளானது.
காரை இயக்கிய ஓட்டுநர் மற்றும் உடனிருந்த 3 பேரும் 20 வயதுக்குட்பட்டவர்கள் என்பதால் கண்காணிப்பு இல்லத்துக்கு அனுப்பப்பட்டனர். அந்த விபத்து நடந்து 15 நாட்களுக்குள், அதேபோன்று சிறுவன் இயக்கிய கார் மோதி மற்றொருவர் உயிரிழந்ததும், அவர் உடனடியாக பிணையில் விடுவிக்கப்பட்டதும் கேரளத்தில் ஊடகங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறியதுடன் சட்டப்பேரவையிலும் எதிரொலித்தது.

காவல்துறையினர் 4 பேர் சஸ்பெண்ட்
உணவக உரிமையாளர் ஜெயபாலகிருஷ்ணன் உயிரிழந்த விபத்து நடந்த மறுநாள் திங்கட்கிழமை (அக்டோபர் 26) கேரள சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான பினராயி விஜயன் இதுபற்றி எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த கேரள உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலா, இந்த விபத்தில் காவல்துறையின் செயல்பாட்டில் குறைபாடுகள் இருந்ததாக ஒப்புக்கொண்டார்.
''இந்த சம்பவம் மிகவும் துரதிருஷ்டமானது. ஆரம்பகட்ட காவல்துறை நடவடிக்கை போதுமானதாக இல்லை. அவர்கள் தொடக்கத்திலேயே, 'கொலைக்கு நிகராகாத மரணத்தை விளைவித்தல்' போன்ற சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்திருக்க வேண்டும். இதுபற்றி தகவல் கிடைத்ததும் மாநகர காவல் ஆணையர் மற்றும் டிஜிபி ஆகியோரிடம் நான் பேசினேன். அதற்குப் பின்பே கடுமையான பிரிவுகள் சேர்க்கப்பட்டன.'' என்று அமைச்சர் ரமேஷ் சென்னிதலா விளக்கியிருந்தார்.
விபத்தை ஏற்படுத்திய சிறுவனுக்கு சிறார் நீதி வாரியம் உடனடியாக பிணை வழங்கியது ஆச்சரியமளித்ததாகக் கூறிய அவர், அந்த பிணையை ரத்து செய்வதற்கான சட்டப்பூர்வ நடவடிக்கைகளை உடனே தொடங்குமாறு டிஜிபிக்கு உத்தரவிட்டுள்ளதாகக் கூறினார். இந்த வழக்கில் ஆரம்பத்தில் தவறிழைத்த போலீஸ் அதிகாரிகள் மீது துறை ரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதி கூறினார்.
"நீதி அனைவருக்கும் சமமானது. பணக்காரர், ஏழை என்ற பாகுபாடு கிடையாது," என்று கூறிய ரமேஷ் சென்னிதலா, இந்தச் சம்பவத்தை அரசு மிகவும் தீவிரமாகக் கருதுவதாகவும், நேர்மையான விசாரணை நடைபெறுவதை உறுதி செய்யும் என்றும், தேவைப்பட்டால் சிறுவனின் தந்தை உட்பட சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சட்டப்பேரவையில் பதிலளித்துள்ளார்.
உள்துறை அமைச்சர் உறுதியளித்தபடி, சிறுவனுக்கு வழங்கப்பட்ட பிணையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. அத்துடன் சேராநல்லூர் காவல் ஆய்வாளர் ஷியாம் குமார், காவல் நிலையப் பொறுப்பு அதிகாரி விஸ்வஜித், கிரேடு சப் இன்ஸ்பெக்டர் மனோஜ், சிவில் போலீஸ் அதிகாரி அருண்ஜித் ஆகியோர் அக்டோபர் 27 அன்று பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

விபத்தில் உயிரிழந்த ஜெயபாலகிருஷ்ணன் எம்.ஏ.பட்டதாரி
இந்த விபத்தில் உயிரிழந்த ஜெயபாலகிருஷ்ணன் குறித்து, பலரும் சமூக ஊடகங்களில் கருத்துகளைப் பதிவிட்டுள்ளனர். அவற்றில் அவரைப் பற்றி தாங்கள் அறிந்த பல தகவல்களையும் பகிர்ந்துள்ளனர்.
''சிறுவயது முதலே படிப்பில் சிறந்து விளங்கியவர் ஜெயபாலகிருஷ்ணன். எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் ப்ரீடிகிரி தேர்வுகளில் அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றார். எம்.ஏ. பட்டமும் பெற்றார். போபாலில் வேலை கிடைத்தபோதிலும், குடும்பத்தைப் பிரிந்து செல்ல அவர் விரும்பாமல் பல்வேறு வேலைகளைச் செய்தார். இறுதியில், வாழ்வாதாரத்திற்காகத் தள்ளுவண்டிக் கடையைத் தொடங்கினார். இந்தக் கடையை நடத்தித்தான் பிள்ளைகளைப் படிக்க வைத்தார்; வீடும் வாங்கினார்," என அவரது சகோதரர் செல்வராஜன் ஊடகங்களில் தெரிவித்துள்ளார். ஜெயபாலகிருஷ்ணனுக்கு 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
''சித்தூர் கோயிலுக்கு அருகிலிருந்த அவரது தள்ளுவண்டிக்கடையில் அதிகாலை ஒரு மணி வரை ஜெயபாலகிருஷ்ணன் இருப்பார். தோசை, கருப்புத்தேநீர், ஆம்லெட் ஆகியவை மட்டுமே அவுர் கடையில் கிடைக்கும் உணவுகள். தினமும் ஏராளமானோர் அங்கு வருவார்கள். உணவுடன் அன்பையும் அக்கறையையும் பரிமாறிய அந்தக்கடை, ஜெயபாலகிருஷ்ணனின் வாழ்க்கையின் ஓர் அங்கமாகவே இருந்தது.'' என்று ஒரு சமூக ஊடகப் பதிவில் கூறப்பட்டுள்ளது.
''கடையை மூடிவிட்டு அதிகாலை இரண்டு மணிக்குப் பிறகுதான் மனைவி பிந்துவுடன் ஸ்கூட்டரில் வீட்டிற்குத் திரும்புவார் ஜெயபாலகிருஷ்ணன். உடல்நலக் குறைவால் வீட்டில் ஓய்வெடுத்து வந்த பிந்து, கடந்த ஒரு வாரமாகக் கடைக்கு வரவில்லை. ஆனாலும், ஜெயபாலகிருஷ்ணன் தனது வழக்கத்தை மாற்றிக் கொள்ளவில்லை. அந்தப் பயணம் அவரது கடைசிப் பயணமாக இருக்கும் என்று யாரும் நினைக்கவில்லை. குடும்பத்தினருக்கு மட்டுமல்லாமல், அவரது அன்பையும் அக்கறையையும் அனுபவித்த ஒட்டுமொத்த ஊருக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பு'' என்கிறது மற்றொரு பதிவு.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































