அர்னாப் புயல் எதிரொலி: மணிக்கு 140 கிமீ வேகத்தில் காற்று வீசினால் எத்தகைய சேதம் ஏற்படக் கூடும்?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், லக்கோஜு ஸ்ரீனிவாஸ்
- பதவி, பிபிசிக்காக
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 7 நிமிடங்கள்
வங்கக்கடலில் உருவான புயல் மேலும் வலுப்பெற்றுள்ளதாக விசாகப்பட்டினம் புயல் எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.
அர்னாப் புயல் கடந்த ஆறு மணி நேரத்தில் மணிக்கு 15 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்துள்ளதாக விசாகப்பட்டினம் புயல் எச்சரிக்கை மையத்தின் இயக்குநர் பி.எல்.என். மூர்த்தி பிபிசியிடம் தெரிவித்தார்.
திங்கள்கிழமை நள்ளிரவுக்குள் இது தீவிரப் புயலாகவும், செவ்வாய்க்கிழமை மிக தீவிரப் புயலாகவும் வலுப்பெறக்கூடும் என்று பி.எல்.என். மூர்த்தி தெரிவித்தார்.
புதன்கிழமை காலை பாபட்லாவுக்கும் விசாகப்பட்டினத்துக்கும் இடையே புயல் கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறினார்.
திங்கள், செவ்வாய் மற்றும் புதன் ஆகிய மூன்று நாட்களிலும் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் ஆந்திரப் பிரதேச மாநிலப் பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
புயலின்போது பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விசாகப்பட்டினம் புயல் எச்சரிக்கை மையம் மற்றும் ஆந்திரப் பல்கலைக்கழகத்தின் வானிலையியல் துறை அதிகாரிகளிடம் பிபிசி தெலுங்கு பேசியது.
எந்தெந்த மாவட்டங்கள் பாதிக்கப்படக் கூடும்?

அவர்கள் அளித்த தகவல்களின்படி, அர்னாப் புயல் மேலும் வலுப்பெற்று வருவதால், ஆந்திரப் பிரதேசத்தில் கனமழை முதல் மிகக் கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளது.
குறிப்பாக, அக்டோபர் 27 மற்றும் 28ஆம் தேதிகளில் ஆந்திரப் பிரதேசத்தின் கடலோரப் பகுதிகளில் மிகக் கனமழை பெய்யக்கூடும் என்றும், மணிக்கு 140 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் விசாகப்பட்டினம் புயல் எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.
அக்டோபர் 28ஆம் தேதி 12 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அர்னாப் புயலின் தாக்கத்தால், கோனசீமா மாவட்டத்தின் அல்லவரம் மண்டலத்தில் உள்ள டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் துறைமுகப் பகுதியில் கடல் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
இன்று முதல் அடுத்த மூன்று நாட்களுக்குப் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று மாநிலப் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் நிர்வாக இயக்குநர் பிரகர் ஜெயின் வலியுறுத்தியுள்ளார்.
இந்தப் புயலின் தாக்கம் ஒடிஷா மாநிலத்திலும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அங்குள்ள பல மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு ஏற்கெனவே விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 28 மற்றும் 29ஆம் தேதிகளில் ஒடிஷாவின் கஞ்சம், கஜபதி, ராயகடா, கோராபுட் மற்றும் மல்கான்கிரி ஆகிய மாவட்டங்கள் புயலால் பாதிக்கப்படக்கூடும் என்று வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது.
சிவப்பு எச்சரிக்கை

புயலின் தாக்கம் காரணமாக, அக்டோபர் 28ஆம் தேதி விசாகப்பட்டினம், அல்லூரி சீதாராமராஜு, அனகாப்பள்ளி, காக்கிநாடா, டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் கோனசீமா, கிழக்கு கோதாவரி, மேற்கு கோதாவரி, ஏலூரு, என்டிஆர், கிருஷ்ணா, குண்டூர் மற்றும் பாபட்லா ஆகிய 12 மாவட்டங்களுக்குச் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த மாவட்டங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 27ஆம் தேதி காக்கிநாடா, டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் கோனசீமா, கிழக்கு கோதாவரி, மேற்கு கோதாவரி மற்றும் ஏலூரு ஆகிய ஐந்து மாவட்டங்களுக்குச் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மிகவும் மோசமான வானிலை நிலவும் சூழலில், அதிகாரிகளும் பொதுமக்களும் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதைக் குறிக்கும் எச்சரிக்கையே சிவப்பு எச்சரிக்கையாகும்.
சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் சில இடங்களில் அக்டோபர் 27 மற்றும் 28ஆம் தேதிகளில் 20 முதல் 30 சென்டிமீட்டர் வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாகப் புயல் எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.
காற்றின் வேகம் எவ்வளவு இருக்கும்?

அக்டோபர் 27ஆம் தேதி காலை முதல் ஆந்திரப் பிரதேசத்தின் கடலோரப் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது.
பிற்பகலில் காற்றின் வேகம் மணிக்கு 60 முதல் 70 கிலோமீட்டராகவும், மாலையில் 90 முதல் 100 கிலோமீட்டராகவும் அதிகரிக்கக்கூடும்.
அக்டோபர் 28ஆம் தேதி காலை மணிக்கு 115 முதல் 125 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும், அதிகபட்சமாக மணிக்கு 140 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
புயல் மேலும் வலுப்பெற்று கரையைக் கடக்கும்போது, காக்கிநாடா மற்றும் ஏனாம் அருகிலுள்ள தாழ்வான பகுதிகளில் கடல்நீர் மட்டம் இயல்பைவிட அதிகமாக உயரக்கூடும் என்று வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது.
கடல்நீர் மட்டம் 1 முதல் 1.5 மீட்டர் வரை உயரக்கூடும் என்பதால், காக்கிநாடா மற்றும் ஏனாம் அருகிலுள்ள தாழ்வான பகுதிகள் கடல்நீரால் சூழப்படும் அபாயம் உள்ளது.
பலத்த காற்றால் மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் சாய்ந்து விழக்கூடும். வீடுகள் மற்றும் பயிர்கள் சேதமடையக்கூடும். சாலை மற்றும் ரயில் போக்குவரத்தும் பாதிக்கப்படலாம்.
திங்கள்கிழமை காலை 10.30 மணிக்கு வானிலை ஆய்வுத் துறை வெளியிட்ட அறிவிப்பில், மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும், கடலோரப் பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வேண்டும் என்றும், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புயலால் பாதிக்கப்படக்கூடிய கடலோரப் பகுதிகளில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றத் தயாராக இருக்கவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
140 கிமீ வேகத்தில் காற்று வீசினால் எத்தகைய சேதம் ஏற்படும்?

மணிக்கு 140 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசுவது மிக தீவிரமான புயலின் தாக்கத்தைக் குறிக்கும் என்று ஆந்திரப் பல்கலைக்கழகத்தின் வானிலையியல் துறை பேராசிரியர் ராமகிருஷ்ணா பிபிசியிடம் தெரிவித்தார்.
இதை வழக்கமாக வீசும் பலத்த காற்றுடன் ஒப்பிட முடியாது என்றும், மரங்கள் சாய்ந்து விழுதல், மின்கம்பங்கள் சேதமடைதல், வீடுகளின் கூரைகள் பறந்து செல்லுதல் போன்ற பாதிப்புகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறினார்.
அர்னாப் புயலின்போது மணிக்கு 115 முதல் 125 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும், சில நேரங்களில் அதன் வேகம் மணிக்கு 140 கிலோமீட்டரை எட்டக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
இது ஒரு கணிப்பு மட்டுமே என்றும், புயலின் திசை மற்றும் தீவிரத்தைப் பொறுத்துக் காற்றின் வேகம் மாறுபடலாம் என்றும் பேராசிரியர் ராமகிருஷ்ணா தெரிவித்தார்.
"மணிக்கு 140 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசுவது ஆபத்தானது. இந்த அளவுக்குக் காற்று வீசும்போது மரங்கள், மின்கம்பங்கள் மற்றும் பெரிய மரக்கிளைகள் முறிந்து விழக்கூடும். வலுவற்ற மரங்கள் வேரோடு சாயக்கூடும். மின்கம்பிகள் அறுந்து விழுவதால் மின்விநியோகம் தடைபடலாம். ஓலைக் கொட்டகைகள், தற்காலிகக் கட்டுமானங்கள் மற்றும் வலுவற்ற வீடுகளின் கூரைகள் சேதமடையக்கூடும்.
விளம்பரப் பலகைகள் மற்றும் பெரிய விளம்பரத் தட்டிகள் சரிந்து விழக்கூடும். கடலில் பெரிய அலைகள் எழுவதோடு, கடல்நீர் மட்டமும் உயரக்கூடும். கடற்கரைக்கு அருகிலுள்ள தாழ்வான பகுதிகளுக்குள் கடல்நீர் புகும் அபாயமும் உள்ளது."
"இவை மணிக்கு 140 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் காற்றின் தீவிரத்தால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் மட்டுமே. உண்மையில் எந்த அளவுக்குச் சேதம் ஏற்படும் என்பது காற்றின் வேகம், அது எவ்வளவு நேரம் வீசுகிறது, வீடுகளின் கட்டமைப்பு, மரங்களின் நிலை மற்றும் மழைப்பொழிவு உள்ளிட்ட காரணிகளைப் பொறுத்து அமையும்," என்று பேராசிரியர் ராமகிருஷ்ணா தெரிவித்தார்.
ஆந்திராவில் இதற்கு முன்பு இதுபோன்ற பலத்த காற்று வீசியுள்ளதா?

ஆந்திரப் பிரதேசத்தில், குறிப்பாக வடக்கு ஆந்திரப் பகுதிகளில், இதற்கு முன்பும் இதே அளவுக்குப் பலத்த காற்று வீசியுள்ளதாகப் பேராசிரியர் ராமகிருஷ்ணா தெரிவித்தார்.
2014ஆம் ஆண்டு ஹுட்ஹுட் புயல் மற்றும் 2018ஆம் ஆண்டு டிட்லி புயல் தாக்கியபோது மிகப் பலத்த காற்று வீசியதாக அவர் கூறினார்.
"அந்தப் புயல்கள் கரையைக் கடந்தபோது, அதிகபட்சமாக மணிக்கு 150 முதல் 185 கிலோமீட்டர் வேகத்தில் தொடர்ந்து காற்று வீசியது. இதனால் மரங்கள், கட்டடங்கள் மற்றும் மின்சாரக் கட்டமைப்புகள் கடுமையாகச் சேதமடைந்தன," என்று அவர் குறிப்பிட்டார்.
காற்றின் வேகத்தை அடிப்படையாகக் கொண்டு புயல்கள் வெவ்வேறு வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன.
மணிக்கு 62 முதல் 87 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசினால் அது புயல் என்றும், 88 முதல் 117 கிலோமீட்டர் வேகத்தில் வீசினால் தீவிரப் புயல் என்றும் வகைப்படுத்தப்படுகிறது.
மணிக்கு 118 முதல் 165 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசினால் மிக தீவிரப் புயல் என்றும், 166 முதல் 220 கிலோமீட்டர் வேகத்தில் வீசினால் மிக அதி தீவிரப் புயல் என்றும் வகைப்படுத்தப்படுகிறது.
அர்னாப் புயல் குறித்த தற்போதைய மதிப்பீட்டின்படி, புயல் கரையைக் கடக்கும்போது மணிக்கு 115 முதல் 125 கிலோமீட்டர் வேகத்தில் தொடர்ந்து காற்று வீசக்கூடும். சில நேரங்களில் காற்றின் வேகம் அதிகபட்சமாக மணிக்கு 140 கிலோமீட்டரை எட்டக்கூடும் என்று பேராசிரியர் ராமகிருஷ்ணா தெரிவித்தார்.
ஆந்திரப் பிரதேச அதிகாரிகள் எச்சரிக்கை

அர்னாப் புயலை முன்னிட்டு, பாதிக்கப்படக்கூடிய மாவட்டங்களில் உள்ள அதிகாரிகளை ஆந்திரப் பிரதேச அரசும் மாநிலப் பேரிடர் மேலாண்மைத் துறையும் உஷார்படுத்தியுள்ளன.
பலத்த காற்றால் உயிரிழப்புகளும் சொத்துச் சேதங்களும் ஏற்படுவதைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆந்திரப் பிரதேசப் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் வாங்கலபுடி அனிதா தெரிவித்தார்.
விஜயவாடா மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளதாகவும், அதை 91549 70454 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாலைகள் மற்றும் பிற பகுதிகளில் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தால், அவற்றை உடனடியாக அகற்ற அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மின்சாரம், தீயணைப்பு மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து, மண்டலத் தலைமையிடங்களில் அவசரகால மீட்புக் குழுக்களைத் தயார் நிலையில் வைத்திருக்கவும் அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
மின்விநியோகம் தடைபடுவதால் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படுவதைத் தவிர்க்க, குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் ஜெனரேட்டர்களைத் தயார் நிலையில் வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அவசர மருத்துவச் சேவைகளை வழங்குவதற்காக, ஆம்புலன்ஸ்களை ஒரே இடத்தில் நிறுத்தாமல், கோட்ட மற்றும் மண்டலத் தலைமையிடங்களில் பரவலாக நிறுத்திவைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தேவையான இடங்களில் தற்காலிக நிவாரண முகாம்களை அமைக்கவும் அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
பாதிக்கப்படக்கூடிய மாவட்டங்களின் ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் களப்பணியாளர்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்றும், ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய விளம்பரப் பலகைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்றும் அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
தேவைப்பட்டால் கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றுவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக தேசியப் பேரிடர் மீட்புப் படை (NDRF) மற்றும் மாநிலப் பேரிடர் மீட்புப் படை (SDRF) குழுக்களைத் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
மீனவர்கள் மீன்பிடிக்கக் கடலுக்குச் செல்லக்கூடாது என்றும், கடற்கரைகளுக்குச் சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்கக்கூடாது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சமூக ஊடகங்களில் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம்
வங்கக்கடலில் புயல் உருவாகியுள்ள நிலையில், மாநில அரசு நிர்வாகம் முழுவதும் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்று ஆந்திரப் பிரதேசத்தின் உள்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் வாங்கலபுடி அனிதா உத்தரவிட்டுள்ளார்.
அடுத்த ஐந்து நாட்களுக்குப் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இன்று படிப்படியாக மழை பெய்யத் தொடங்கும் என்றும், செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் ஆந்திரப் பிரதேசத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை முதல் மிகக் கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, புயலால் பாதிக்கப்படக்கூடிய மாவட்டங்களின் ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் களப்பணியாளர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடலில் பெரிய அலைகள் எழக்கூடிய பகுதிகளில் செல்ஃபி எடுப்பது போன்ற ஆபத்தான செயல்களில் பொதுமக்கள் ஈடுபட வேண்டாம் என்று அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.
விவசாயிகளும் பொதுமக்களும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், சமூக ஊடகங்களில் வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாநிலப் பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும் நிகழ்நேர நிர்வாக அமைப்பு (RTGS) வெளியிடும் அதிகாரப்பூர்வ எச்சரிக்கைகளை மட்டுமே பின்பற்ற வேண்டும் என்று அமைச்சர் அனிதா வலியுறுத்தியுள்ளார்.
பிரசவ தேதி நெருங்கிய கர்ப்பிணிகளை முன்கூட்டியே மருத்துவமனைகளுக்கு மாற்ற உத்தரவு
நீர்த்தேக்கங்களில் நீர்மட்டத்தைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும், மலைப்பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு முன்னெச்சரிக்கை விடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தேவைப்பட்டால் அவர்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்வதற்காக நிவாரண முகாம்களைத் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புயலை எதிர்கொள்வதற்குத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வாங்கலபுடி அனிதா கூறியுள்ளார்.
104 மற்றும் 108 அவசரச் சேவை வாகனங்களைத் தயார் நிலையில் வைத்திருப்பதுடன், மருத்துவக் குழுக்களும் தேவையான மருந்துகளும் உடனடியாகக் கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு அவசர சேவைகளை உடனுக்குடன் வழங்க அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும், உயிரிழப்புகள் ஏற்படுவதைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
பிரசவ தேதி நெருங்கிய கர்ப்பிணிகளை முன்கூட்டியே மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அர்னாப் புயலால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைத் திறம்பட எதிர்கொள்ள, அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அரசு நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.
ஆபத்தான பகுதிகளில் வசிக்கும் மக்களை முன்கூட்டியே பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றுவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், நிவாரண முகாம்களில் உணவு, குடிநீர் மற்றும் மருத்துவ வசதிகளை உறுதிசெய்ய வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
புயலால் மின்விநியோகம் பாதிக்கப்பட்டால் அதைச் சீரமைப்பதற்குத் தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ளவும் உத்தரவிட்டுள்ளார்.
மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக தேசியப் பேரிடர் மீட்புப் படையின் (NDRF) 10 குழுக்களும், மாநிலப் பேரிடர் மீட்புப் படையின் (SDRF) 11 குழுக்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புயல் தொடர்பாக விடுக்கப்பட்டுள்ள சமீபத்திய எச்சரிக்கைகள் என்ன?

புயலை முன்னிட்டு, விசாகப்பட்டினம் வானிலை ஆய்வு மையம் பொதுமக்களுக்குச் சில முன்னெச்சரிக்கை அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
- "அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாக, புயல் தீவிரமாக இருக்கும் நேரங்களில் வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும்."
- வீட்டுக்கு வெளியே உள்ள எளிதில் காற்றில் அடித்துச் செல்லப்படக்கூடிய பொருட்கள், பூந்தொட்டிகள் உள்ளிட்டவற்றைப் பாதுகாப்பான இடங்களில் வைக்க வேண்டும்.
- செல்போன்கள் மற்றும் பவர் பேங்குகளை முன்கூட்டியே சார்ஜ் செய்து வைத்திருக்க வேண்டும். டார்ச் லைட், குடிநீர் மற்றும் தேவையான மருந்துகளைத் தயாராக வைத்திருக்க வேண்டும்.
- கடற்கரைகள், மரங்கள் மற்றும் மின்கம்பங்களுக்கு அருகில் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.
- பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தினால், உடனடியாக அங்குச் செல்ல வேண்டும்.
- "மீன்பிடிப்பதற்காகக் கடலுக்குச் சென்றுள்ள படகுகள் உடனடியாகக் கரைக்குத் திரும்ப வேண்டும்" என்றும் விசாகப்பட்டினம் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு































