You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
எஸ்கோபாரின் 80 நீர்யானைகளை கொல்ல கொலம்பியா முடிவு - அம்பானி மகன் எதிர்வினை ஏன்?
- எழுதியவர், பாலின் கோலா
- வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்
பல ஆண்டுகளாக கொலம்பியா போராடி வரும் ஒரு சிக்கலில் இருந்து விடுபட உதவ, ஓர் இந்திய கோடீஸ்வரரின் மகன் முன்வந்துள்ளார். அந்தச் சிக்கல், பிரபல போதைப்பொருள் கடத்தல் மன்னன் பப்லோ எஸ்கோபாருடன் தொடர்புடைய நீர்யானைக் கூட்டம்.
கடந்த 1993-இல் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட எஸ்கோபார், ஓர் ஆண் மற்றும் ஒரு பெண் நீர்யானை உட்பட பல வெளிநாட்டு விலங்குகளை சட்டவிரோதமாக இறக்குமதி செய்திருந்தார். இவை "கோகோயின் நீர்யானைகள்" என்று அழைக்கப்படுகின்றன.
அவற்றின் எண்ணிக்கை பெருகியது, கொலம்பியா அரசு அவற்றைக்கட்டுப்படுத்த ஆண்மை நீக்கம் உள்ளிட்ட பல்வேறு முறைகளை முயன்று பார்த்தும் பலன் கிடைக்கவில்லை. இதனால் சுமார் 80 விலங்குகளைக் கொல்ல அரசு முடிவு செய்துள்ளது.
ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி, குஜராத் மாநிலத்தில் உள்ள தனது சொந்த வந்தாரா உயிரியல் பூங்காவில் அந்த விலங்குகளை "பெற்றுக்கொண்டு பராமரிக்கத் தயாராக" இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த முன்மொழிவு குறித்து கொலம்பியா இதுவரை எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.
கொலம்பியாவின் சுற்றுச்சூழல் அமைச்சருக்கு எழுதிய கடிதத்தில், அம்பானியின் உயிரியல் பூங்கா தலைமைச் செயல் அதிகாரி, அந்தக் கூட்டத்திற்கு இந்தியாவில் "வாழ்நாள் முழுமைக்கும் பராமரிப்பு" அளிக்கத் தயாராக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
உயிரியல் பூங்காவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்ட அந்த கடிதத்தில், "ஒவ்வொரு உயிரும் முக்கியமானது மற்றும் சாத்தியமான இடமெல்லாம் உயிரைப் பாதுகாப்பது நமது கூட்டுப் பொறுப்பு என்ற வந்தாராவின் நம்பிக்கையே இந்த முன்மொழிவின் மையக்கருத்து" என்று கூறப்பட்டுள்ளது.
பெருகிய நீர்யானைகள்
எஸ்கோபார் இந்த நீர்யானைகளைத் தலைநகர் பொகோட்டாவிற்கு வடமேற்கே சுமார் 250 கி.மீ தொலைவில் அமைந்துள்ள தனது ஹசிண்டா நாப்போல்ஸ் என்ற ஆடம்பர பண்ணையில் வைத்திருந்தார்.
அவரது இறப்பிற்குப் பிறகு, அந்த ஜோடி நீர்யானைகள் சுதந்திரமாக நடமாட அனுமதிக்கப்பட்டன. அவை கொலம்பியாவின் முக்கிய நதியான மாக்டலேனாவின் வடிநிலப் பகுதிகளில் பல மடங்காகப் பெருகின.
வேட்டையாடும் விலங்குகள் இல்லாமை மற்றும் செழிப்பான, சதுப்பு நிலங்கள் நிறைந்த அந்தியோகுயியா பகுதி, ஆப்பிரிக்காவைத் தாயகமாகக் கொண்ட இந்த விலங்குகள் செழித்து வளரச் சாதகமான சூழலை வழங்கியதால், அந்த நீர்யானைக் கூட்டத்தின் வளர்ச்சியைத் தடுக்கும் முயற்சிகள் தோல்வியடைந்தன.
ஆப்பிரிக்காவிற்கு வெளியே உள்ள மிகப்பெரிய நீர்யானைக் கூட்டம் இதுவே எனக் கருதப்படும் நிலையில், இவை ஆக்கிரமிப்பு இனம் என்றும், உள்ளூர் விலங்கினங்களை இவை விரட்டியடித்துவிட்டன என்றும் கொலம்பிய சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
மாக்டலேனா நதிக்கரையோரம் உள்ள மீனவச் சமூகத்தினர் இந்த நீர்யானைகளால் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர். இவை நிலத்தில் வாழும் மிகப்பெரிய விலங்குகளில் ஒன்றாகும், வளர்ந்த ஆண் நீர்யானைகள் மூன்று டன் எடை வரை இருக்கும்.
விமர்சனம் என்ன?
வந்தாரா உயிரியல் பூங்காவில் யானைகள், புலிகள் மற்றும் பிற விலங்குகள் உட்பட 2,000 இனங்கள் உள்ளன. 3,500 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இது, ஜாம்நகரில் முகேஷ் அம்பானியின் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைக்கு அருகில் அமைந்துள்ளது. இது உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை ஆகும்.
கடந்த 2024-இல் உலகளாவிய செய்திகளில் இடம்பிடித்த ஆனந்த் அம்பானியின் ஆடம்பரமான திருமணத்திற்கு முந்தைய நிகழ்வுகள் நடந்த இடங்களுள் இதுவும் ஒன்றாகும்.
சில விலங்குகளுக்கு அந்தப் பிராந்தியத்தின் வெப்பமான மற்றும் வறண்ட காலநிலை ஒத்து வராது என்பது உட்பட பல காரணங்களுக்காக இந்த தனியார் உயிரியல் பூங்கா, வனவிலங்கு ஆர்வலர்கள் மற்றும் பாதுகாப்பு நிபுணர்களின் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
பப்லோ எஸ்கோபார் மெடலின் போதைப்பொருள் கும்பலின் தலைவராக இருந்தார். மியாமி மற்றும் தெற்கு அமெரிக்காவிற்கு போதைப்பொருட்களைக் கடத்தியதன் மூலம் சுமார் 30 பில்லியன் டாலர் சொத்து சேர்த்த அவர், "கோகோயின் அரசன்" என்று அழைக்கப்பட்டார்.
ஒரு தசாப்தத்திற்கும் மேலாக நீடித்த அவரது போதைப்பொருள் கடத்தலில் நூற்றுக்கணக்கான கொலைகள், லஞ்ச ஊழல், குண்டுவெடிப்புகள் மற்றும் போட்டி போதைப்பொருள் கும்பல்களுடனான மோதல்கள் ஆகியவை அடங்கும்.
அத்துடன் அவர் சிறிது காலம் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல்வாதியாகவும் இருந்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு