தமிழ்நாட்டில் 2016, 2021 தேர்தல் கணிப்புகள் கூறியவையும் உண்மையில் நடந்தவையும் என்ன?

வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

நேற்று (ஏப்ரல் 29) மாலை முதல் சமூக வலைதளங்களில் எக்ஸிட் போல் எனப்படும் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் குறித்த விவாதங்களே மேலோங்கியுள்ளன.

ஏப்ரல் 29 அன்று மேற்கு வங்கத்தில் இரண்டாம் கட்டத் தேர்தல் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, தமிழ்நாடு, கேரளம், அசாம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் மற்றும் புதுச்சேரிக்கான தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.

குறிப்பாக தமிழ்நாடு தொடர்பாக வெளியான தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் ஓர் ஆச்சரியத்தை அளித்திருக்கின்றன.

அதைப் பற்றி பார்ப்பதற்கு முன், நாம் கவனத்தில் கொள்ளவேண்டியது, தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் துல்லியமானவை கிடையாது, கடந்த காலங்களில் அதிகாரபூர்வ முடிவுகள் கருத்துக்கணிப்புகளிலிருந்து வேறுபட்டுள்ளன.

இந்த நான்கு மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்திற்கான தேர்தல் முடிவுகள் மே 4 அன்று இந்திய தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்படும்.

இந்த கருத்துக்கணிப்புகள் எவ்வாறு நடத்தப்படுகின்றன?

வாக்குப்பதிவுக்கு/தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை எக்ஸிட் போல் என்று குறிப்பிடுவது வழக்கம்.

எக்ஸிட் என்றால் `வெளியேறுதல்' என்று பொருள். அந்த வார்த்தையே அந்த கருத்துக்கணிப்பு எவ்வாறு நடத்தப்படுகிறது என்பதை கூறிவிடுகிறது.

ஒரு வாக்காளர் தேர்தலில் வாக்களித்துவிட்டு வாக்குப்பதிவு மையத்தில் இருந்து வெளியே வரும்போது, அவர்களிடம் எந்தக் கட்சி அல்லது எந்த வேட்பாளருக்கு வாக்களித்துள்ளார் என்பதைக் கேட்பார்கள்.

அவர்கள் சொல்ல விரும்பும்பட்சத்தில் அவரின் கருத்து பதிவு செய்யப்படும். இதனை தான் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு என்று அழைக்கிறோம்.

கருத்துக்கணிப்பு நடத்தும் முகமைகள் தங்கள் ஊழியர்களை வாக்குச் சாவடிக்கு வெளியே நிற்க வைக்கின்றன. வாக்களித்துவிட்டு வெளியே வரும் வாக்காளர்களிடம், 'யாருக்கு வாக்களித்தீர்கள்?' என்று கேட்கப்படுகிறது.

2026 தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் கூறுவது என்ன?

தமிழ்நாட்டின் 234 தொகுதிகளில் பெரும்பான்மை பெற 118 இடங்கள் தேவை. பெரும்பாலான கணிப்புகள் திமுக கூட்டணி மீண்டும் ஆட்சியமைக்கும் எனக் கூறினாலும், சில முகமைகள் அதிமுக மற்றும் தவெக (TVK) ஆகிய கட்சிகள் பெரும்பான்மை பெறும் எனக்கூறியுள்ளன.

பீப்பிள்ஸ் பல்ஸ் நடத்திய கருத்துக்கணிப்பு, திமுக கூட்டணி 125 - 145 இடங்களில் வெற்றி பெறும் எனக் கூறுகிறது.

  • அதிமுக கூட்டணி - 65 - 80
  • தவெக - 18 - 24
  • மற்ற கட்சிகள்- 2 - 6, இடங்களில் வெற்றி பெறும் என்றும் அந்த கருத்துக்கணிப்பு கூறுகிறது.

அதேபோல, மேட்ரிஸ் கருத்துக்கணிப்பிலும் திமுக கூட்டணி முன்னிலை பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி,

  • திமுக கூட்டணி - 122 - 132
  • அதிமுக கூட்டணி - 87 - 100
  • தவெக - 10 - 12
  • மற்ற கட்சிகள்- 0 - 6, இடங்கள் பெறும்.

பி மார்க் கருத்துக்கணிப்பின்படி,

  • திமுக கூட்டணி - 125 - 145
  • அதிமுக கூட்டணி - 65 - 85
  • தவெக - 16 - 26
  • மற்ற கட்சிகள் - 1 - 6, இடங்கள் பெறும்.

சாணக்கியா ஸ்ட்ராடஜிஸ் கருத்துக்கணிப்பில்,

  • திமுக தலைமையிலான கூட்டணி 145 முதல் 160 இடங்கள்,
  • அதிமுக தலைமையிலான கூட்டணி 50 முதல் 65 இடங்கள்,
  • தவெக 13 முதல் 18 இடங்கள்,
  • மற்ற கட்சிகள் 5 - 8 இடங்களில் வெல்வார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம், சிஎன்என்நியூஸ் 18 மற்றும் ஜேவிசி கருத்துக்கணிப்புகள் அதிமுக கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைக்கும் என்று தெரிவித்துள்ளளன.

சிஎன்என்நியூஸ் 18 கருத்துக்கணிப்பின்படி,

  • அதிமுக கூட்டணி- 114-124
  • திமுக கூட்டணி- 103- 113
  • தவெக - 4- 10
  • மற்ற கட்சிகள் 0, இடங்கள் பெறும்.

ஜேவிசி கருத்துக்கணிப்பில்,

  • அதிமுக கூட்டணி - 128- 147
  • திமுக கூட்டணி- 75-90
  • தவெக- 8- 15,
  • மற்ற கட்சிகள் 0, இடங்கள் பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

'தவெக-வுக்கு பெரும்பான்மை'

அனைத்து கணிப்புகளையும் விட ஆக்சிஸ் மை இந்தியா வெளியிட்ட தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அக்கணிப்பின்படி, சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்முறையாக களம் கண்டுள்ள விஜயின் தமிழக வெற்றி கழகம், 98 முதல் 120 இடங்களில் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுக கூட்டணி 92 முதல் 110 இடங்களையும், அதிமுக கூட்டணி மிகக்குறைவாக 22 முதல் 32 இடங்களையும் பெறும் என அந்தக் கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாட்டின் 44,460 வாக்காளர்களிடம் நேரடியாகப் பேசி இந்த கருத்துக்கணிப்பை மேற்கொண்டதாக, ஆக்சிஸ் மை இந்தியா முகமை குறிப்பிடுகிறது.

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளின் துல்லியம்

ஆனால், நாம் முன்பே குறிப்பிட்டது போல தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் துல்லியமானவை அல்ல. அதற்கு சிறந்த உதாரணம், 2016 கருத்துக்கணிப்பு முடிவுகள்.

கடந்த 2016-ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலின் போது, பெரும்பாலான கணிப்புகள் திமுக கூட்டணி வெற்றி பெறும் என்றே கூறின.

இந்தியா டுடே- ஆக்சிஸ் கருத்துக்கணிப்பு திமுக கூட்டணி 124–140 இடங்களிலும், அதிமுக 89–101 இடங்களிலும், பிற கட்சிகள் 4- 11 இடங்களிலும் வெற்றி பெறும் என தெரிவித்தது.

அதேபோல, நியூஸ் எக்ஸ்-சாணக்யா கருத்துக்கணிப்பு, திமுக கூட்டணி 140 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும், அதிமுக 90 இடங்களில் வெல்லும் என்றும், பிற கட்சிகள் 4 இடங்களிலும் வெல்லும் என கூறியது.

நீல்சன், என்டிடிவி போல் ஆஃப் போல்ஸ் கருத்துக்கணிப்புகளும் திமுக கூட்டணி பெரும்பான்மை பெறும் எனத் தெரிவித்தன.

ஓரிரு கருத்துக்கணிப்புகள் மட்டுமே அதிமுக பெரும்பான்மை பெறும் எனக் கூறின.

இறுதியில், பெரும்பாலான தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளை பொய்யாக்கி அதிமுக 136 தொகுதிகளில் வெற்றி பெற்று, தொடர்ந்து இரண்டாவது முறையாக 2016இல் ஆட்சியைப் பிடித்தது.

அதேசமயம், 2021 தேர்தல் பெரும்பாலான தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் திமுக கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும் என்று கூறின. அதேபோல், திமுக கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது.

பிற மாநிலங்களில் என்ன நிலை?

புதுச்சேரி சட்டமன்றத்தின் 30 தொகுதிகளில் பெரும்பான்மை பெற 16 இடங்கள் தேவை. தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் பாஜக கூட்டணி 16 முதல் 20 இடங்களைப் பெறும் என்று கூறுகின்றன.

கேரளத்தைப் பொறுத்தவரை பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது ஜனநாயக முன்னணியை (LDF) விட சற்று அதிக இடங்களைப் பெறும் எனத் தெரிவிக்கின்றன. இங்கு பெரும்பான்மைக்குத் தேவையான எண்ணிக்கை 71 ஆகும்.

மேற்கு வங்கத்தைப் பொறுத்தவரை தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் வேறுபட்ட முடிவுகளைக் கொடுத்துள்ளன. ஒருசில முடிவுகள் திரிணாமுல் காங்கிரஸ் பெரும்பான்மையைப் பெறும் என்றும், சில முடிவுகள் பாஜக பெரும்பான்மையைப் பெறும் என்றும் கூறியுள்ளன. இங்கு பெரும்பான்மைக்குத் தேவையான எண்ணிக்கை 148.

அசாம் மாநிலத்தைப் பொறுத்தவரை பெரும்பாலான தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் பாஜக தலைமையிலான கூட்டணி அதிக இடங்களைப் பெறும் எனத் தெரிவிக்கின்றன.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு