நீலகிரியில் 'பல ஆயிரம்' ஏக்கர் வனத்தை நாசமாக்கிய காட்டுத்தீ - சதிச்செயல் காரணமா?

  • வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

நீலகிரியில் சில கிராமங்களை ஒட்டியுள்ள காட்டுப் பகுதிகளில் இரண்டு வாரங்களாக அணைக்க முடியாத அளவுக்குத் தீ பரவி பெருமளவில் காடுகளை பாதிப்புக்கு உள்ளாக்கியுள்ளது. மொத்தத்தில் 5 ஆயிரம் ஏக்கர் வரையிலும் காடுகள் அழிந்திருக்க வாய்ப்புள்ளதாக சூழலியல் ஆர்வலர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் தகவல் தெரிவிக்கின்றனர்.

இது மனிதர்களால் ஏற்படுத்தப்பட்ட தீ என்ற குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடந்து வருவதாக வனத்துறையினர் கூறுகின்றனர். காட்டுத்தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுவிட்டதாக பிபிசியிடம் தெரிவித்த முதுமலை புலிகள் காப்பகக் கள இயக்குநர் கிருபா சங்கர், மொத்தத்தில் 1000 ஏக்கர் பரப்பளவிலான காடுகளில் சீகை மரங்களே பெருமளவில் அழிந்திருப்பதாகத் தெரிவித்தார்.

அந்நிய களைச்செடிகளே காட்டுத்தீ பரவக் காரணமென்று பிபிசியிடம் விளக்கமளித்த வனத்துறை செயலாளர் சுப்ரியா சாஹூ, காட்டுத்தீ மனித குடியிருப்பு எதற்கும் பரவவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

ஒரே நேரத்தில் நீலகிரியில் 10 இடங்களில் பரவியுள்ள காட்டுத்தீ

மேற்குத் தொடர்ச்சி மலையின் முக்கியப் பகுதியாக அமைந்துள்ள நீலகிரி மாவட்டத்தில் முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் முக்குருத்தி தேசிய பூங்கா, நீலகிரி மற்றும் கூடலூர் வனக்கோட்டங்கள் அமைந்துள்ளன.

நீலகிரி வனப்பகுதியில் சோலை, புல்வெளி, சதுப்பு நிலக்காடு, சமூகக்காடு எனப் பலவிதமான காடுகள் கலந்திருக்கின்றன. கோடைக் காலங்களில் இந்தக் காடுகள் கடும் வெப்பத்தின் காரணமாக வறண்டுவிடும் என்பதால் காட்டுத்தீ ஏற்படுவது வழக்கமாகவுள்ளது. இதைத் தடுப்பதற்காக தீத்தடுப்புக் கோடுகள் அமைப்பது உள்படப் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை தமிழக வனத்துறை எடுத்து வருகிறது. இந்த ஆண்டிலும், நீலகிரியில் 1000 கி.மீ. தூரத்துக்கு தீத்தடுப்புக் கோடுகள் அமைக்கப்பட்டதாக வனத்துறை அதிகாரிகள் கூறினர்.

தீத்தடுப்புக் கோடு என்பது புல்வெளி மற்றும் தாவரங்கள் அடர்ந்துள்ள பகுதிகளுக்கு நடுவே, அவற்றை முற்றிலும் அகற்றி வெறும் மண்ணுடன் இருப்பதாக நீளமான கோடு போன்று அமைப்பை உருவாக்குவதாகும். இதனால் ஒரு பகுதியில் ஏற்படும் காட்டுத்தீ, இந்த கோட்டைத் தாண்டி மற்றொரு பகுதிக்குப் பரவாது. ஆனால் காற்றின் வேகம் அதிகமாகவும், காட்டுத்தீயின் பரவல் தீவிரமாகவும் இருக்கும்போது இந்தக் கோடுகளைத் தாண்டி தீ பரவிவிடுவதாகக் கூறிய வனத்துறையினர், இப்போதும் அத்தகைய காட்டுத்தீயே பரவியுள்ளதாகத் தெரிவித்தனர்.

கடந்த ஏப்ரல் 14ஆம் தேதியிலிருந்து இப்போது வரை முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் நீலகிரி வனக்கோட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு காட்டுப் பகுதிகளிலும் கடுமையான காட்டுத்தீ பரவி ஏராளமான மரங்களையும், தாவரங்களையும், சிற்றுயிர்களையும் அழித்துள்ளதாக சூழலியல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த இரு வாரங்களில் ஒரே நேரத்தில் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் காட்டுத்தீ பரவியதாக பிபிசியிடம் கூறினார் முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநர் கிருபா சங்கர்.

பிபிசியிடம் பேசிய காட்டுயிர் மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை நிறுவனர் சாதிக் அலி, ''நீலகிரியில் காட்டுத்தீ ஏற்படுவது வழக்கமான விஷயம்தான். ஆனால் ஒரே நேரத்தில் இப்படி வெவ்வேறு இடங்களில் அடுத்தடுத்து தீ பரவியது இல்லை. இதில் பல ஆயிரம் ஏக்கர் காடுகள் அழிந்துள்ளன. மரங்கள், தாவரங்களைத் தாண்டி காட்டுயிர்கள், பறவைகள், சிற்றுயிர்கள், பூச்சிகள் அழிந்ததைக் கணக்கிடவே முடியாது'' என்றார்.

பைக்காரா, கிளன்மார்கன் ஆகிய பகுதிகளில்தான் முதல் முறையாக காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. அங்குள்ள தீயை அணைப்பதற்கு முயற்சி நடந்து கொண்டிருந்தபோதே, உதகை அருகேயுள்ள பார்சன்ஸ்வேலி அணைக்கு அருகிலுள்ள பகுதியில் பெரியளவில் காட்டுத்தீ பரவி விட்டதாக வனத்துறையினர் விளக்கினர்.

அதேபோன்று வென்லாக் டவுன், மசினகுடி, சிங்காரா, சீகூர், மரவக்கண்டி அணைப்பகுதி, கொடநாடு, சின்னகுன்னூர் பிக்கபத்திமந்து எனப் பல பகுதிகளில் காட்டுத்தீ ஒரே நேரத்தில் தீவிரமாகப் பரவியுள்ளது.

இவற்றைக் கட்டுப்படுத்த வனத்துறை மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளையும் கள இயக்குநர் கிருபா சங்கர் பிபிசியிடம் விளக்கினார். முதலில் நீலகிரியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட வனத்துறையினரை வைத்து காட்டுத்தீயை அணைக்க முயற்சி நடந்துள்ளது. காட்டுத்தீ பரவும் வேகமும், தாக்கமும் மிக அதிகமானதால் வெளிமாவட்டங்களில் இருந்து நூற்றுக்கணக்கான வனத்துறை ஊழியர்கள் வரவழைக்கப்பட்டனர்.

நீலகிரி மற்றும் அருகிலுள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து தீயணைப்பு வாகனங்களும் ஏராளமாகக் கொண்டு வரப்பட்டு தீயை அணைக்கும் முயற்சி நடந்தது. இதனால் விமானப் படையிடம் ஆட்சியர் மூலமாக உதவி கோரப்பட்டு, சூலூர் விமானப் படை தளத்தில் இருந்து கடந்த ஏப்ரல் 25 அன்று ஹெலிகாப்டர் வரவழைக்கப்பட்டது. பார்சன்ஸ்வேலி அணையிலிருந்து 16 ஆயிரம் லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டு நீர் பாய்ச்சி அணைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் காற்றின் வேகம் மிக அதிகமாக இருந்ததால் இந்த முயற்சி கைவிடப்பட்டதாக வனத்துறை செயலாளர் சுப்ரியா சாஹூ பிபிசியிடம் தெரிவித்தார்.

பிபிசியிடம் பேசிய முதுமலை புலிகள் காப்பகக் கள இயக்குநர் கிருபா சங்கர், ''நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 500க்கும் மேற்பட்ட வனத்துறை ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணி நடந்தது. அதேபோன்று வெளி மாவட்டங்களில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் கொண்டு வரப்பட்டு மிகத் தீவிரமாக முயற்சி செய்து காட்டுத்தீயை அணைக்கப் பெரிதும் பாடுபட்டனர். இந்த முயற்சியின் ஒரு பகுதியாகவே ஹெலிகாப்டர் கொண்டு வரப்பட்டது'' என்றார்.

காட்டுத்தீயால் அழிந்த காட்டின் பரப்பு எவ்வளவு?

கடந்த இரு வாரங்களில் மட்டும் நீலகிரியில் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவுள்ள காடு அழிந்திருப்பதாக நீலகிரியை சேர்ந்த சூழலியல் ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

அதிகபட்சமாக 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் காடு அழிந்திருப்பதாகவும், ஏராளமான காட்டுயிர்கள் உயிரிழந்திருப்பதாகவும் தீப்பிடித்த சுமார் 28 இடங்களை குறிப்பிட்டு ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.

குறிப்பாக ஆயிரக்கணக்கான சீகை மரங்கள் முற்றிலும் எரிந்து நாசமாகியிருப்பதாகக் கூறுகின்றனர். ஆனால் இதுவரையிலான தங்களின் மதிப்பீட்டின்படி, சுமார் 1000 ஏக்கர் காடு மட்டுமே அழிந்திருக்க வாய்ப்புள்ளதாக பிபிசியிடம் கூறினார் முதுமலை புலிகள் காப்பகக் கள இயக்குநர் கிருபா சங்கர்.

இதுபற்றி மேலும் விளக்கிய அவர், ''நேற்று முன் தினம் (ஏப்ரல் 27) இரவுடன் எல்லா இடங்களிலும் காட்டுத் தீ ஓரளவுக்குக் கட்டுப்படுத்தப்பட்டுவிட்டது. இருப்பினும் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளோம். குடியிருப்புக்கு அருகில் காட்டுத்தீ பரவ வாய்ப்பில்லை. இதுவரை எவ்வளவு மரங்கள் அழிந்துள்ளன என்பது பற்றி இனிதான் கணக்கிட முடியும். காட்டுயிர்கள் இறந்ததாக எங்களுக்கு எதுவும் தகவல் இல்லை'' என்றார்.

ஆனால் இந்தக் காட்டுத்தீயால் காட்டுயிர்களின் வாழ்விடம் பெரியளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார் காட்டுயிர் மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை நிறுவனர் சாதிக் அலி. மனித–காட்டுயிர் மோதலால் தங்களுக்கு பாதிப்பு அதிகரித்து வருவதாகக் கருதும் சிலர்தான், இந்த காட்டுத்தீயை திட்டமிட்டே செய்துள்ளனர் என்று தாங்கள் சந்தேகிப்பதாக அவர் கூறினார்.

''காட்டை அழித்துவிட்டால் காட்டுயிர்கள் தங்கள் பகுதியில் இருக்காது என்று கருதும் சிலர்தான், இத்தகைய வேலைகளைச் செய்கின்றனர். இது முழுக்க முழுக்க வனத்துறைக்கு எதிராக சிலர் செய்துள்ள சதி என்றுதான் கருதுகிறோம். எனவே காட்டுத்தீயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையுடன் இதற்குக் காரணமானவர்கள் யார் என்பதையும் கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார் சாதிக் அலி.

''சில ஆண்டுகளுக்கு முன்பு வரை உள்ளூர் மக்கள், தன்னார்வ அமைப்பினர், பத்திரிக்கையாளர்களுடன் வனத்துறை இணக்கமாக இருந்தபோது, காட்டை ஒட்டிய பகுதிகளில் நடக்கும் அனைத்துத் தகவல்களும் வனத்துறைக்குக் கிடைத்து, அதன்படி நடவடிக்கை எடுக்கப்பட்டது. இப்போது வனத்துறையினர் தனித்து இயங்குவதுடன் வேறு விஷயங்களில் அவர்களின் கவனம் திரும்பிவிட்டது. வனத்துறைக்கென சிறப்பு புலனாய்வு அமைப்பை ஏற்படுத்த வேண்டும் அல்லது காவல்துறையைப் பயன்படுத்த வேண்டும்'' என்றார் சாதிக் அலி.

காட்டுத்தீ என்பது தவிர்க்க முடியாத விஷயம் என்கிறார் சூழலியல் சொற்பொழிவாளரும், ஓசை சூழல் அமைப்பின் தலைவருமான காளிதாசன். தென்மேற்குப் பருவமழை, வடகிழக்குப் பருவமழை முடிந்த பின்பு, நவம்பர் இறுதியில் பனிக்காலம் துவங்கி, இலையுதிர்காலமாகத் தொடரும் என்று விளக்கும் அவர், அதன்பின் ஏற்படும் வறட்சியின்போது காய்ந்த இலைகளை வனத்துறையே எரித்துவிடுவது வழக்கம்தான் என்றார்.

பிபிசியிடம் பேசிய காளிதாசன், ''காட்டுத்தீ என்பது உலகளாவிய பிரச்னை. பொதுவாக மின்னல் தாக்கி, மூங்கில் உரசி ஏற்படும் இயற்கையான காட்டுத்தீ என்பது மேலை நாடுகளில்தான் நடக்கிறது. இந்தியாவில் காட்டுத்தீ பெரும்பாலும் மனிதர்களால் ஏற்படுவதுதான்'' என்றார்.

இதை இரு வகையாகப் பிரிக்கலாம் என்று கூறும் காளிதாசன், பொறுப்பின்மையால் சிலர் காட்டுத்தீயை ஏற்படுத்துவதாகவும், மற்றொரு தரப்பு திட்டமிட்டே செய்வதாகவும் விளக்குகிறார்.

அதுபற்றி மேலும் விளக்கிய அவர், '' முன்பு கால்நடை மேய்ச்சலுக்காக காட்டை எரித்துவிடுவார்கள். காடு எரிந்தால் புதிதாகப் புற்கள் முளைக்கும். கால்நடைகளுக்கு மேய்ச்சல் கிடைக்கும் என்று நினைத்து அப்படிச் செய்தனர். இப்போது கால்நடையும் குறைவு, மேய்ச்சலும் அதிகமாக அனுமதிக்கப்படுவது இல்லை. அதேபோல, காய்ந்த இலைகளில் கிடக்கும் மான் கொம்புகளை எடுக்கவும் காட்டை எரிப்பார்கள். ஆனால் இப்போது காட்டுத்தீ அதிகமாகப் பரவுவதில் காலநிலையின் பங்களிப்பு அதிகம்'' என்றார்.

காடுகளின் மறுசுழற்சிக்கு காட்டுத்தீ அவசியம் என்று கூறும் சூழலியல் ஆராய்ச்சியாளர்கள், அதைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதே வனத்துறையின் தலையாய பொறுப்பு என்கின்றனர். பொதுவாக காட்டில் தரையில் விழும் இலைகள் நிறைய சேர்ந்துவிட்டால் அதன்பின் ஏற்படும் காட்டுத்தீயை அணைப்பது சிரமம் என்பதால் சிறுசிறு அளவில் தீயை வைத்து அவற்றை எரிப்பது நல்லது என்கின்றனர் சிலர்.

ஆனால் மேலை நாடுகளில் பெரும் பரப்பிலான காடுகளில் இத்தகைய நடவடிக்கைகள் சரியாக இருக்குமென்றும், இந்தியாவில் துண்டு துண்டுகளாகச் சிறுசிறு பரப்பளவில் காடுகள் இருப்பதால் இப்படி அடிக்கடி தீயை ஏற்படுத்தினால் ஏராளமான சிற்றுயிர்கள் அழிந்துவிடுமென்றும் சிலர் எதிர்வாதம் வைக்கின்றனர். இந்த இரு கருத்துக்கும் மத்தியில்தான் இந்த பிரச்னையை அணுக வேண்டுமென்கிறார் காளிதாசன்.

காலநிலை மாற்றம்தான் காட்டுத்தீ பரவலுக்கு முக்கியக் காரணமா?

மனிதர்களால்தான் காட்டுத்தீ ஏற்படுகிறது என்றாலும் அதன் தீவிரமும் பரவலும் மிக அதிகமாவதற்கு காலநிலை மாற்றமே காரணம் என்கிறார் டெல்லி உலக காட்டுயிர் நிதியத்தின் இயக்குநர் அரீந்திரன். காட்டுத்தீ தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சமீபத்தில் நீலகிரியில் தமிழக வனத்துறைக்கு அரீந்திரன் சிறப்புப் பயிற்சி அளித்தார்.

பிபிசியிடம் பேசிய அரீந்திரன், '' இந்தியாவில் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கை சிறப்பாக உள்ளது. ஆனால் சில நேரங்களில் அது கட்டுப்படுத்த முடியாத அளவுக்குப் பெரிதாகிவிடுகிறது. நீலகிரியிலும் அப்படித்தான் காட்டுத்தீயின் தாக்கம் உள்ளது'' என்றார்.

மேற்கொண்டு பேசிய அரீந்திரன், ''காட்டுத்தீ வேகமாகப் பரவவும் அதிக பாதிப்படையவும் கூடிய பகுதிகளை அறிவியல்பூர்வமாக அடையாளம் காண்பதற்கான ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறோம். இவை தவிர்த்து சுற்றுலாப் பயணிகளின் அறியாமை அல்லது பொறுப்பின்மையும் முக்கியக் காரணமாகவுள்ளது. எனவே சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். முக்கியமாக வனத்துறைக்கு கூடுதல் பணியாளர்கள் மிகவும் அவசியம்'' எனத் தெரிவித்தார்.

நீலகிரியில் வனத்துறைக்கு கூடுதல் பணியாளர்களை நியமிப்பது மிக அவசியம் என்பதைப் பல தரப்பினரும் ஒருமித்த கோரிக்கையாக முன் வைக்கின்றனர். இதே கருத்தை வலியுறுத்தும் காளிதாசன், ''கூடுதல் பணியாளர்களை நியமிப்பதுடன் தீத்தடுப்பு நடவடிக்கைகளை வேகப்படுத்தவும், விரிவுபடுத்தவும் வேண்டும். அதில் உள்ளூர் மக்களின் பங்களிப்பையும் அதிகமாக்க வேண்டும். அவர்களின் ஒத்துழைப்பின்றி காட்டுத்தீயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கை எப்போதுமே சாத்தியமாகாது'' என்றார்.

காட்டுத்தீ பரவலுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தமிழக வனத்துறை செயலாளர் சுப்ரியா சாஹூவிடம் பிபிசி தமிழ் விளக்கம் கோரியது. அதற்கு விளக்கமளித்துள்ள அவர், ''அதிக வெப்பம், குறைந்த ஈரப்பதம், பலத்த காற்று ஆகியவைதான் காட்டுத்தீ வேகமாகப் பரவக் காரணமாகிவிட்டது. உலர்ந்த தாவரங்கள் எரிபொருளாக மாறி தீவிரத்தை அதிகரித்தன. நீலகிரியின் மலைப்பாங்கான நில அமைப்பும், தீயணைப்புப் பணிகளை சவாலாக்கியது. சரிவுகளும், கணிக்க முடியாத காற்றின் திசையும் தீயைக் கட்டுப்படுத்துவதைக் கடினமாக்கிவிட்டன. ஆனால் வனத்துறை விரைவாகச் செயல்பட்டு கட்டுப்படுத்திவிட்டது'' என்று கூறினார்.

மொத்தம் 6 மாவட்ட வன அலுவலர்கள் இணைந்து இந்தப் பணியை மேற்கொண்டதாகக் கூறியுள்ள அவர், வனத்துறையின் 7 தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டதாகவும், தமிழ்நாடு மாநில பேரிடர் மீட்புப் படையில் இருந்து 60 பேரும், வனத்துறை ஊழியர்கள் 500 பேரும், தீயணைப்புத் துறையினரும் இணைந்து தீயைக் கட்டுப்படுத்தியதாகத் தெரிவித்துள்ளார்.

''இந்த காட்டுத்தீ பெரும்பாலும் தரைமட்டத்தில் பரவியதால் செஸ்ட்ரம், யூலெக்ஸ், ஸ்கார்ச் ப்ரூம், சீகை மரங்கள் போன்ற அந்நிய களைச்செடிகளே அதிகமாக தீ பரவக் காரணமாயிருந்தன. சோலைக்காடுகளில் தீ ஏற்படவில்லை. அதேபோல மனித குடியிருப்புகள் எதுவும் பாதிக்கப்படவில்லை'' என்றும் அவர் கூறியுள்ளார்.

இதே கருத்தைத் தெரிவித்த கள இயக்குநர் கிருபா சங்கர், காற்றில் ஈரப்பதம் 30 சதவிகிதத்திற்கும் குறைவானதால் காற்றின் வேகமும் அதிகமாக இருந்ததாகக் கூறினார். ஏற்கெனவே வறட்சியால் தாவரங்கள் எல்லாமே காய்ந்து கருகிய நிலையில், காற்று சுற்றிச் சுழன்று அடித்தபோது, சிறு தீப்பொறியும் அடுத்த பகுதியில் காட்டுத்தீ பரவக் காரணமாகிவிட்டது என்றார் அவர்.

''ஏப்ரல் 29இல் இருந்து மழைக்கு வாய்ப்புள்ளதாக கணிப்புகள் வந்துள்ளன. வெப்பநிலையும் மிதமாக மாறியிருக்கிறது. அதனால் விரைவில் மழை வருமென்று எதிர்பார்க்கிறோம். அப்படி வந்தால் மட்டுமே காட்டுத்தீயை முழுவதுமாகக் கட்டுப்படுத்த முடியும். இப்போதைக்கு ஆபத்து எதுவுமில்லை'' என்றார் முதுமலை புலிகள் காப்பகக் கள இயக்குநர் கிருபா சங்கர்.

அவர் கூறியபடியே ஏப்ரல் 29 மதியத்திற்கு மேல், நீலகிரி மாவட்டத்தில் காட்டுத்தீ ஏற்பட்ட பார்சன்ஸ்வேலி, மசினகுடி, சிங்காரா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. அதனால் காட்டுத்தீயின் தாக்கம் இனி குறையுமென்று வனத்துறையினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

திட்டமிட்டே சிலர் இந்த காட்டுத்தீயை ஏற்படுத்தியிருப்பதாக சூழலியலாளர்கள் பலரும் கூறும் குற்றச்சாட்டு குறித்து அவரிடம் கேட்டபோது, ''அதுபோன்ற தகவல்கள் எங்களுக்கும் வந்துள்ளன. அதுபற்றி தீவிரமாக விசாரிக்க வேண்டியுள்ளது. மனிதர்களால் திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்ட காட்டுத்தீ என்று கண்டறியப்பட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு