தனுஷின் 'கர' படம் எப்படி இருக்கிறது? 'இட்லி கடை' படத்தை நினைவூட்டுகிறதா?

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

தனுஷ், மமிதா பைஜு, கருணாஸ், கேஎஸ் ரவிக்குமார், சுராஜ் வெஞ்சரமூடு உள்ளிட்ட பலர் நடித்து, விக்னேஷ் ராஜா இயக்கியுள்ள 'கர' திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. இப்படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இத்திரைப்படம் குறித்து பல்வேறு நாளிதழ்கள், இணையதளங்களில் வெளியான விமர்சனங்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.

முன்னதாக, அத்திரைப்படத்தின் கதைச் சுருக்கம்.

திருட்டைவிட்டு தலைமறைவு வாழ்க்கை வாழ நினைக்கும் கரசாமி (தனுஷ்) சொந்த தொழில் செய்யலாம் என நினைத்து ராமநாதபுரத்திலிருக்கும் தன் தந்தை கே.எஸ். ரவிக்குமாரைத் தேடி செல்கிறார். நிலத்தை வங்கியில் அடமானம் வைத்து அதில் கிடைக்கும் கடனில் தொழில் செய்யலாம் என முயற்சிக்கிறார்.

ஆனால், அப்பா ஏற்கெனவே அந்த நிலத்தை அடமானம் வைத்து டிராக்டர் வாங்கியதும் அதனால் ஏற்பட்ட சில குழப்பங்களுக்கு வட்டி கட்டிக்கொண்டிருக்கிறார் என்பதும் தெரியவருகிறது.

இதனால் மகனுடன் மனவருத்தம் ஏற்பட அடுத்த நாள் அப்பாவான கே.எஸ் ரவிக்குமார் இறந்தும் விடுகிறார். உடலை அந்த நிலத்தில் புதைக்க சடங்குகள் செய்யும்போது வாங்கிய கடனுக்காக வங்கியே நிலத்தை ஜப்தி செய்ய வருகிறது.

தந்தையின் உடலை புதைக்க முடியாததை அதிருப்தியுடன் பார்க்கும் கரசாமி வங்கிக்கடனை அடைக்க அந்த வங்கியிலேயே கொள்ளையடிக்க திட்டமிடுகிறார்.

இத்திட்டம் என்ன ஆனது என்பதே 'கர' படத்தின் கதை.

"வெறும் கிரைம் திரில்லராக மட்டும் இதனை எழுதாமல் உணர்வுகளை முன்னிறுத்தி, இப்படியொரு சூழல் அமைந்தால் யாரும் இதைத்தானே செய்வார்கள் என்கிற கேள்வியை எழுப்பி அதற்கான தருணங்களையும் அடுத்தது என்ன என்கிற பரபரப்பையும் கோர்வையாக இயக்குநர் இணைத்திருக்கிறார்." என பாராட்டியுள்ளது தினமணி நாளிதழின் விமர்சனம்.

திருடனாக, அப்பாவின் உடலைப் புதைக்க அலையும் மகனாக, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் மனிதனாக என உடல்மொழியிலேயே தன் பரிணாமங்களை தனுஷ் காட்டியுள்ளார் என்றும், சில காட்சிகள்தான் என்றாலும் தன் கணவன் மீண்டும் திருட்டை மேற்கொள்வது தெரிந்து உடைந்து அழும் காட்சியில் இயல்பான நடிப்பை மமிதா வெளிப்படுத்தியுள்ளார் என்றும் கூறியுள்ளது தினமணி.

நடிகர் கேஎஸ் ரவிக்குமார், சுராஜ் வெஞ்சரமூடு ஆகியோர் தங்களுக்கான கதாபாத்திரங்களைச் சிறப்பாக கையாண்டுள்ளனர் என்றும் பாராட்டியுள்ளது.

"ஜி.வி. பிரகாஷின் பின்னணி இசைகள் பதற்றமான சூழல்களுக்குச் சரியாகக் கைகொடுத்து காட்சியின் அதிர்வுக்கு பலமாக அமைந்திருக்கின்றன." என குறிப்பிட்டுள்ளது தினமணி.

நடிப்பு எப்படி?

அதேபோன்று, "படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் தனுஷ், அசுரத்தனமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் மமிதா பைஜு யதார்த்தமான நடிப்பை கொடுத்து இருக்கிறார். தந்தையாக நடித்து இருக்கும் கே.எஸ்.ரவிக்குமார் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி மனதில் பதிந்து இருக்கிறார். போலீஸ் அதிகாரியாக வரும் சுராஜ் மிரட்டலான நடிப்பால் கைத்தட்டல் வாங்கி இருக்கிறார். வங்கி அதிகாரி ஜெயராம், மாமாவாக வரும் கருணாஸ், பிரித்வி பாண்டியராஜ் ஆகியோர் நடிப்பு திரைக்கதை ஓட்டத்துக்கு பெரிதும் உதவி இருக்கிறது." என பாராட்டியுள்ளது மாலை மலர் நாளிதழ் விமர்சனம்.

இயக்குநர் படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை விறுவிறுப்பான திரைக்கதையயை அமைத்திருப்பதாகவும் வங்கி ஊழியர்களின் செயல், பொதுமக்களின் அவலநிலை ஆகியவற்றை பேசியிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது அந்நாளிதழ்.

டைம்ஸ் ஆஃப் இந்தியா விமர்சனத்தில், இயக்குநர் விக்னேஷ் ஒவ்வொரு நடிகருக்கும் தங்களுக்கான வாய்ப்பை வழங்குவதை சிறப்பாக செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது. நடிகர்கள் ஜெயராம், கே.எஸ். ரவிகுமார் உள்ளிட்டோரின் நடிப்பை குறிப்பிட்டு பாராட்டியுள்ளது டைம்ஸ் ஆஃப் இந்தியா.

தனிப்பட்ட காரணங்களுக்காக கரசாமி மீண்டும் திருட செல்லும்போது, படம் அங்கிருந்து சாமானிய மக்கள் கடன் சுமையால் தள்ளப்பட்டதற்கு திரும்புவதாக, டைம்ஸ் ஆஃப் இந்தியா விமர்சனம் குறிப்பிடுகிறது.

தனுஷின் நடிப்பை குறிப்பிட்டு பாராட்டியுள்ள டைம்ஸ் ஆஃப் இந்தியா, மமிதா பைஜுவுக்கு மிகச் சிறிய கதாபாத்திரமே வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

சுராஜ் மற்றும் ஜெயராமின் கதாபாத்திரங்கள் நகைச்சுவையாகவும் அதேசமயம் மிக ஆழமாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

ஜி.வி. பிரகாஷின் பின்னணி இசை, படம் முழுவதும் ஒரு தனித்துவமான சூழலை உருவாக்குகிறது என குறிப்பிட்டுள்ளது அந்நாளிதழ்.

படத்தின் ஆரம்ப காட்சியை குறிப்பிட்டு பாராட்டியுள்ள தி இந்து ஆங்கில நாளிதழ், "ஒரு கொள்ளை சம்பவ திரைப்படத்துக்கு இதைவிடச் சிறந்த தொடக்கம் இருக்க முடியாது. வழக்கமான வணிகத் திரைப்படங்களில் காணப்படும் அலங்கார அம்சங்களில் நேரத்தை வீணாக்காமல் இயக்குநர் நேராகக் கதைக்குள் செல்கிறார்." என குறிப்பிட்டுள்ளது.

"தனுஷ் மற்றும் ஏற்கெனவே 'போர் தொழில்' எனும் செறிவான படைப்பை வழங்கிய நம்பிக்கைக்குரிய இயக்குநர் விக்னேஷ் ராஜா ஆகிய இருவரும் இணைந்ததால், இப்படம் தமிழ் திரையுலக வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியது. ஆனால், கதைக்கருவை விட உணர்ச்சிகளுக்கே முன்னுரிமை அளிக்கும் ஒரு வழக்கமான பாணியைக் கையாண்டதன் காரணமாக, அந்த வாய்ப்பு நழுவிவிட்டது" என கூறுகிறது தி இந்து.

''தனுஷின் மற்ற பல திரைப்படங்களில் அப்பா-அம்மா சென்டிமென்ட் அதிகமாக இருந்தது போலவே, அத்தகைய தாக்கம் கர படத்திலும் உள்ளது. சொல்லப்போனால், படத்தின் முதல் பாதி முழுவதுமே, தன் தந்தை அவருக்கு எவ்வளவு முக்கியமானவர் என்பதைச் சித்தரிப்பதிலேயே படத்தில் நேரம் செலவிடப்பட்டுள்ளது." என்கிறது தி இந்து.

இக்கதையின் மையக்கருவைப் பின்பற்றும் சில நல்ல தருணங்கள் இருந்தும் திரைக்கதையாளர்கள் அவற்றைக் கைவிட்டு, இறுதியில் பெரிய பலன் தராத ஒரு பாதையைத் தேர்ந்தெடுத்தது மிகவும் துரதிர்ஷ்டவசமானது என விமர்சித்துள்ளது தி இந்து.

"மமிதாவுக்குத் தன் நடிப்புத் திறமையை வெளிப்படுத்த ஒரு வலுவான காட்சி மட்டுமே கிடைத்துள்ளது. தனுஷின் நடிப்புத் திறமை ஆங்காங்கே சிறப்பாகவே பிரகாசிக்கிறது." என கூறியுள்ளது தி இந்து.

குறை என்ன?

அதேபோன்று, தினமணி நாளிதழும் தன் விமர்சனங்களை முன்வைத்துள்ளது.

"இடைவேளைக் காட்சி வரை கதாபாத்திரங்களின் உணர்வுகளை மையமிட்டே செல்வதால் பெரிதாக எங்கும் ஒன்ற முடியவில்லை. இடைவேளைக் காட்சி பதற்றத்தைக் கொடுக்கும் வகையில் எடுக்கப்பட்டதால், இரண்டாம் பாதிக்கான உந்துதல்கள் இருந்தன. இருந்தும், கதையின் வலுவற்ற தன்மையால் நல்ல காட்சிகளும் தடுமாற்றம் அடைகின்றன. யாருக்காக இதனைச் செய்கிறாரோ அந்த சமூக கோபம் சரியாகப் பதிவாகவில்லை." என குறிப்பிட்டுள்ளது தினமணி.

"இப்படத்துக்காக 40 ஏக்கரில் அன்றைய ராமநாதபுரத்தை செட் அமைத்திருந்தாலும் சில நெருக்கமான ஷாட்களில் அவை செட்கள் எனத் தெரிந்தது பலவீனம். அதேநேரம், கலை இயக்குநர் மாயபாண்டியின் உழைப்பும் தெரிகிறது." என குறிப்பிட்டுள்ளது தினமணி.

டைம்ஸ் ஆஃப் இந்தியாவும் சில விமர்சனங்களை முன்வைத்துள்ளது.

அதிகமான உண்னர்ச்சிபூர்வ காட்சிகளால் படம் பின்தங்குவதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா விமர்சித்துள்ளது.

தனுஷின் 'இட்லி கடை' படம் போன்றே, நிலம், பெற்றோர், கணவன் என்ற பொறுப்பு, பரம்பரைப் பெருமை போன்ற குறைகள் இதிலும் தென்படுவதாக குறிப்பிட்டுள்ளது.

''படத்தின் காட்சிகளை யூகிக்கக்கூடிய தன்மையும் எரிச்சலூட்டுகிறது." என டைம்ஸ் ஆஃப் இந்தியா விமர்சித்துள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு