You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
"மாலையில் யாரோ மனதோடு பேச..." - ஸ்வர்ணலதாவின் சிறந்த பாடல்களை பட்டியலிடும் இசையமைப்பாளர்கள்
- எழுதியவர், மீனாட்சிசுந்தரம்
- பதவி, பிபிசி தமிழுக்காக
- வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
தென்னிந்தியாவின் முன்னணி இசைக்கலைஞர்களில் ஒருவராக அறியப்பட்ட பின்னணிப் பாடகி ஸ்வர்ணலதாவிற்கு இன்று (ஏப்ரல் 29) பிறந்தநாள்.
கேரளாவில் பிறந்து, கர்நாடகாவில் வளர்ந்து, தமிழ்நாட்டில் புகழ் பெற்றவர் பாடகி ஸ்வர்ணலதா. இசைக் குடும்பத்தில் பிறந்ததால் 3 வயது முதலே இசை கற்றவர் நீதிக்கு தண்டனை படத்தில் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் தனது 14 வயதிலேயே சின்னஞ்சிறு கிளியே என்ற முதல் பாடலை பாடினார்.
அதைத் தொடர்ந்து இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், மணிசர்மா, கீரவாணி, மரகதமணி, சவுந்தர்யன், பரணி, கார்த்திக் ராஜா, சிற்பி, எஸ்.ஏ. ராஜ்குமார், தேவா, வித்யாசாகர், ஹாரிஸ் ஜெயராஜ், யுவன்ஷங்கர் ராஜா எனப் பல இசையமைப்பாளர்கள் இசையில் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, உருது, மலையாளம், வங்காளம், ஒடியா, படுகா உள்ளிட்ட பல மொழிகளில் பாடல்களைப் பாடியுள்ளார்.
'ராக்கம்மா கையத் தட்டு', 'மாலையில் யாரோ மனதோடு பேச…''ஆட்டமா தேரோட்டமா', 'போவோமா ஊர்கோலம், நீ எங்கே', 'குயில் பாட்டு ஓ வந்ததென்ன இளமானே' உள்ளிட்ட பாடல்கள் அவரின் தனித்தன்மையைக் காண்பித்தன.
'ஹம்மிங் குயின், ஹம்மிங் பேர்ட் ஆப் இந்தியா' என்று ரசிகர்களால் அழைக்கப்பட்டார். பீமா படத்தில் இடம்பெற்ற ரங்கு ரங்கம்மா ஸ்வர்ணலதாவின் கடைசி பாடல்.
"அழுதுகொண்டே பாடிய பாடலுக்கு தேசிய விருது"
பாடகி ஸ்வர்ணலதா யூகிசேதுவுக்கு அளித்த பேட்டி ஒன்றில் தனது இசைப் பயணம் பற்றி கூறும்போது, ''இசை, பாட்டு தவிர எனக்கு கிரிக்கெட் ரொம்ப பிடிக்கும். பெற்றோர்களுக்கு பூர்வீகம் பாலக்காடு, நான் கர்நாடக மாநிலம் ஷிமோகாவில் பிறந்தேன். பெரிய குடும்பம், அண்ணன், அக்கா எனப் பலரும் இசைக்கலைஞர்கள் தான். அனைவரும் ஆதரவாக இருந்தார்கள். எனக்கு முதல் பாடலை பாட எம்.எஸ்.வி வாய்ப்பு கொடுத்தார். அவர் முன்னால் உயர்ந்த மனிதன் படத்தில் வரும் பால்போல பாடலை பாடிக்காண்பித்தது நினைவிருக்கிறது."
"முதல் பாடலாக பாரதியாரின் சின்னஞ்சிறு கிளியே என்ற பாடலை பாடியது நல்ல அனுபவம். போலோமா ஊர்வோலம் பெரிய ஹிட். இந்தப் பாடலுக்கு தமிழக அரசின் விருது கிடைத்தது. பிற்காலத்தில் எனக்கு கலைமாமணி விருதும் கொடுத்தார்கள். கருத்தம்மா படத்தில் வரும் போறாளே பொன்னுதாயி பாடலுக்கு தேசிய விருதும், தமிழக அரசின் விருதும் கிடைத்தது."
"அந்தப் பாடலை பாடும்போது நானும் அழுதேன். அந்த பாடல் சூழல், வரிகள் அப்படி. தெலுங்கில் நான் பாடிய ராமசிலக்கம்மா பாடல் ரொம்ப பிடிக்கும். மலையாளத்தில் நந்தலா நந்தலா இஷ்டம். எனக்கு தமிழில் டிஎம்எஸ், சீர்காழி, சுசீலா, ஜானகி, வடக்கே ரபி, லதா மங்கேஸ்கர் பிடிக்கும்." என்று கூறியுள்ளார்.
"புதுமுகமாக வந்து ஹிட் கொடுத்தவர் ஸ்வர்ணலதா"
பாடகி ஸ்வர்ணலதா குறித்து இசையமைப்பாளர் செளந்தர்யனிடம் பிபிசி தமிழ் சார்பில் பேசினோம் ''1990களில் தமிழ்சினிமாவில் பல புது இயக்குனர்கள், நடிகர்கள், இசைக் கலைஞர்கள் அறிமுகமானார்கள். அப்படி பிரபலமானவர்களில் ஸ்வர்ணலதாவும் ஒருவர். கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் சரத்குமார் நடித்த சேரன் பாண்டியன் படத்தில் நான் இசையமைப்பாளர் ஆனபோது, முதலில் காதல் கடிதம் வரைந்தேன் பாடலைப் பாட அவரை அழைத்தேன். அந்த கால ரிக்கார்டிங் வேறு மாதிரி. 6 மணி நேரத்தில் ஒரு பாடலை முடித்துவிட வேண்டும். பாடகர்களுக்கு சொல்லிக்கொடுக்க நேரம் குறைவு." .
"அனுபவசாலிகள் பக்காவாக பாடிவிடுவார்கள். புதுமுகமான இவர் எப்படி பாடப்போகிறாரோ என பயந்தேன். ஆனால், ஸ்வர்ணலதாவோ தனது திறமை மற்றும் இசை மீதான ஆர்வத்தில் அருமையாகப் பாடிக்கொடுத்தார். கண் பார்த்து மயங்கிவிடும் (மயங்கிவிடும்) கருங்கல்லும் கரைஞ்சிவிடும் (கரைஞ்சிவிடும்) என்ற வரிகள் பக்காவாக செட் ஆனது. இன்றைக்கு கூட ஸ்வர்ணலதாவின் இந்த குரல் ஹிட். அடுத்து ஏ சம்பா நாத்து பாடலைப் பாடக்கொடுத்தேன். அதிலும் தனது திறமையைக் காண்பித்து என்னை வியக்க வைத்தார். இந்த பெண்ணுக்குள் உத்வேகம் இருக்கிறது என்பதை புரிந்துகொண்டேன்." என்றார்.
இந்த இரண்டு பாடல்கள் ஹிட்டான சமயத்தில், வேறு சில பாடல்களும் அவருக்கு ஹிட்டாகியதாகவும் அவர் குறிப்பிட்டார். "சில ஆண்டுகளில் பெரிய பாடகியாக ஸ்வர்ணலதா மாறிவிட்டார். அடுத்தடுத்து என்னுடைய பல படங்களில் பாடினார்.
கிட்டத்தட்ட 20-க்கும் அதிகமான பாடல்களை பாடினார். அதில் பல பாடல்கள் ஹிட். சிந்து நதி பூ படத்தில் என் இசையில் அவர் பாடிய மத்தாளம் கொட்டுதடி மனசு பாடலும் பிரபலம் ஆனது. எஸ்.பி.பியுடன் இணைந்து அந்தப் பாடலை பாடினார்." என்றார்.
அந்தச் சமயத்தில் ஸ்வர்ணலதாவின் தனிப்பட்ட சில நல்ல குணங்களை சொல்ல வேண்டும் எனக் குறிப்பிட்ட அவர், "சில சமயம் அவருக்கான சம்பளம் கொடுக்க தயாரிப்பாளரிடம் பணம் இருக்காது. சில படங்களில் பட்ஜெட் குறைவாக இருக்கும். அந்த சமயத்தில் நான் அவரிடம் பேசும்போது சார், சம்பளத்தை பற்றி உங்களிடம் கேட்டேனா? ஆரம்பத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்தவர் நீங்கள் என்று உரிமையுடன் பேசுவார். கொடுக்கிற சம்பளத்தை வாங்கிக்கொள்வார். அது பெரிய மனசு. அவர் பிரபலம் ஆன பின்னரும் கூட, தேசிய விருது பெற்றபின்னரும் கூட என்னைப் பார்க்கும்போது அன்பாக, மரியாதையாகப் பேசுவார். உங்கள் பாடல்களால் பல படங்கள், கச்சேரி கிடைத்தது என்பார். என் இசையில் பாடிய சில நல்ல பாடல்கள் இன்னும் வெளியாகாமல் கூட இருக்கிறது.'' என்கிறார்.
"துளி துளியாய், முதலாம் சந்திப்பில் பாடலை மறக்க முடியுமா?"
இசையமைப்பாளர் பரணி மறைந்த பின்னணி பாடகி ஸ்வர்ணலதா குறித்து பிபிசி தமிழிடம் பேசுகையில் ''என் இசையில் 12 பாடல்களைப் பாடியிருக்கிறார். இளையராஜா இசையில் அவர் பாடல்கள் ஹிட்டான நிலையில், பெரியண்ணா படத்தில் அவரைப் பாட வைத்தேன். பொள்ளாச்சி மலை ரோட்டுல உள்ளிட்ட பாடல்களைப் பாட வைத்தேன். இதில் பொள்ளாச்சி மலை பாடல் பிரமாண்டமாக எடுக்கப்பட்டு ஹிட்டானது. சுந்தர மாலா பாடலை விஜயுடன் இணைந்து பாடினார் ஸ்வர்ணலதா. என்னைப் பொறுத்தவரையில் பாடகிகளில் எஸ்.ஜானகி, சித்ரா மாதிரி ஸ்வர்ணலதாவும் ட்யூனை கேட்டவுடன் டக்கென பாடுகிற ஆற்றல் உள்ளவர். அதனால், அவரை அடுத்தடுத்து பாட வைத்தேன். அந்தப் பாடல்களும் பிரபலம் ஆகின." என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "குறிப்பாக என் இசையில் பார்வை ஒன்றே போதும் படத்தில் அவர் பாடிய துளிதுளியாய் பாடல் இன்றும் கேட்கப்படுகிறது. சார்லிசாப்ளின் படத்தில் முதலாம் சந்திப்பில் பாடினார். அதுவும் ஹிட். பொட்டு எடுத்து வெச்சுவிடுவா என்ற பாடலும் ஹிட். அடடா ஊர் குளத்தில் என்ற பாடலை சுந்தரா டிராவல்ஸ் படத்தில் பாடிக்கொடுத்தார். அதுவும் பரவலாகப் பேசப்பட்டது. அந்தப் பாடலை பாடுவது சிரமம். அவர் பாடும்போதும் நரம்பு புடைத்தது. ஆனாலும் அதை அவ்வளவு அழகாகப் பாடிக்கொடுத்தார். அவரை நான் இசை ராட்சஸி என்பேன். ஆனால், நேரில் பார்க்கும்போது அப்படித் தெரியாது. மிகவும் அமைதியாக இருப்பார். மென்மையாக பேசுவார். பாட ஆரம்பித்துவி்ட்டால் ஆளே மாறிவிடுவார்." எனத் தெரிவித்தார்.
பாடுவதில் அவருக்கான ஆர்வம் அலாதியானது எனக் கூறும் அவர், "ஒருமுறை பாட வந்தபோது அவர் குரலில் சில மாற்றம். சில நாட்கள் கழித்து பாடலாமே என்றேன். அவரோ எனக்கு வாய்ப்பு கொடுக்கணும், என்னை ஏமாற்றக்கூடாது என்று குழந்தை மாதிரி கேட்டார். பின்னர், அவரே பாடிக்கொடுத்தார். அப்படி பாடிய பாடல்தான் அந்த துளிதுளியாய் பாடல். சின்ன மாற்றம் என்றால் கூட நம்மிடம் கேட்டு இப்படி பாடவா என்பார். இதெல்லாம் நான் ஜானகி அம்மாவிடம் பார்த்து இருக்கிறேன்."
"25 ஆண்டுகளைக் கடந்தும் என் இசையில் அவர் பாடல்கள் கேட்டுக்கொண்டே இருக்கிறது. என்னை பரணிசார் என்று அன்போடு அழைப்பார். என் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்து வாழ்த்தினார். அவரை மறக்க முடியாது. அவர் மறைந்தபோது நானும் பாடகர் மனோவும் அஞ்சலி செலுத்தச் சென்றோம். சின்ன வயதில் அவர் மறைந்தது தமிழ் இசை உலகிற்கு பெரிய இழப்பு." என்றும் தெரிவித்தார்.
"தனது அண்ணனுடன் வருவார்"
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுடன் 14 ஆண்டுகள் பணியாற்றியவர் இசையமைப்பாளர் தாஜ்நுார். அவரிடம் ஸ்வர்ணலதா குறித்து பிபிசி தமிழ் சார்பில் பேசினோம். ''ஏ.ஆர்.ரஹ்மான், ஸ்வர்ணலதா கூட்டணி வெற்றி பாடல்களைக் கொடுத்தது. அவர் மிகவும் எளிமையானவர். அவருடன் நிறைய பேசியிருக்கிறேன். தனது அண்ணனுடன் பாட வருவார். இசை, ஸ்வரம், அர்ப்பணிப்பு என பல விஷயங்களில் திறமைசாலி. பொதுவாக தனித்திறமைக்கு முக்கியத்துவம் கொடுப்பார் ரஹ்மான் சார். அவர் சொல்வதை மிக சர்வ சாதாரணமாக, அவர் நினைத்ததை விட பல மடங்கு சிறப்பாக பாடுவார் ஸ்வர்ணலதா."
"அவர் குரலுக்கு அவ்வளவு ஆற்றல். ஆரம்பத்திலும் சரி, பிரபலமான பின்னரும் கூட அதே எளிமையுடன் இருந்தார். தவிர மனிதநேயம் மிக்கவர். அவர் இளம் வயதில் இறந்தது பெரிய வருத்தம். ஒரு இசை நிகழ்ச்சியின்போது அதிக நேரம் பேசிக்கொண்டிருந்தார். அதெல்லாம் மறக்கமுடியாத அனுபவம்ச்.'' என்கிறார்.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஸ்வர்ணலதா பாடிய பாடல்களில் பிடித்ததைச் சொல்ல முடியுமா என்று தாஜ்நுாரிடம் கேட்டபோது அவர் பட்டியலிட்டார்.
''காதலன் படத்தில் முக்காப்லா, அலைபாயுதே படத்தில் எவனோ ஒருவன், ஜோடி படத்தில் அஞ்சாதே ஜீவா, பாம்பே படத்தில் குச்சி குச்சி ராக்கம்மா, ஜென்டில்மேன் படத்தில் உசிலம்பட்டி பெண்குட்டி மற்றும் அவருக்கு தேசியவிருது பெற்றுக்கொடுத்த கருத்தம்மா படத்தில் இடம்பெற்ற போறாளே பொன்னுதாயி பாடல்கள் பிடிக்கும். இந்தப் பாடல்கள் ஏ.ஆர்.ரஹ்மான், ஸ்வர்ணலதா கூட்டணியில் உருவாகி இன்றும் பேசப்படுகிற, பாடப்படகிற பாடல்கள்," என்கிறார் தாஜ்நுார்
இந்தப் பாடல்கள் தவிர அவரின் பிரபலமான வேறு சில பாடல்களையும் அவர் குறிப்பிட்டார், "என்னுள்ளே என்னுள்ளே (வள்ளி), மாலையில் யாரோ மனதோடு (சத்ரியன்), ராக்கம்மா கையத்தட்டு (தளபதி), போவோமா ஊர்கோலம் (சின்னதம்பி), குயில் பாட்டு வந்ததன்ன என்ன (என் ராசாவின் மனசிலே), என்னைத் தொட்டு அள்ளி கொண்ட (உன்னை அறிந்தால்) பூங்காற்றிலே உன் சுவாசத்தை (உயிர்), காதல் எனும் தேர்வெழுதி (காதலர் தினம்), திருமண மலர்கள் (பூவெல்லாம் உன் வாசம்). மயிலிறகே மயிலிறகே (தென்காசிபட்டனம்). ஆட்டமா தேரோட்டா (கேப்டன் பிரபாகரன்), ஆத்தோரம் தோப்புக்குள்ளே (பஞ்சாலங்குறிச்சி) ஆகிய பாடல்களும் இன்றும் பிரபலம்."
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு