You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
"கருத்து சுதந்திரத்துக்கு அடி" - வளைகுடா நாடுகளில் பத்திரிகையாளர்கள் கண்காணிக்கப்படுவது ஏன்?
- எழுதியவர், பிபிசி அரபு சேவை
- பதவி,
- வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
இரண்டு மாதங்களுக்கு முன்பு இரானுக்கு எதிராக அமெரிக்க-இஸ்ரேலிய போர் வெடித்ததில் இருந்து, தேசிய பாதுகாப்புக்கு ஊறு விளைவிக்கும் என்று கருதப்படும் உள்ளடக்கங்களை வெளியிட்டதாக குற்றம் சாட்டப்பட்ட நபர்களை வளைகுடா நாடுகள் கைது செய்துள்ளன, வழக்கு தொடர்ந்துள்ளன மற்றும் நாடு கடத்தியுள்ளன.
அதிகாரிகள் புதிய அரசாணைகளை வெளியிட்டுள்ளனர், நீதித்துறை மேல்முறையீட்டுக்கான வழிகளைக் கட்டுப்படுத்தியுள்ளனர், மேலும் தனிநபர்களின் குடியுரிமையைப் பறிப்பது உள்ளிட்ட நடைமுறையில் உள்ள சட்டங்களைச் செயல்படுத்தியுள்ளனர்.
பஹ்ரைன் 69 பேரின் குடியுரிமையை ரத்து செய்த பிறகு, அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் "பகைமை கொண்ட இரானிய செயல்களைப் புகழ்ந்ததற்காக அல்லது அதற்கு அனுதாபம் காட்டியதற்காக, அல்லது வெளித் தரப்பினருடன் தொடர்புகொண்டதற்காக இந்த நபர்களிடம் இருந்து பஹ்ரைன் குடியுரிமை பறிக்கப்பட்டுள்ளது," என அறிவித்தது.
சமூக ஊடகங்களில் பயனர்கள் மற்றும் ஆர்வலர்களைப் பாதுகாப்புப் படையினர் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.
சர்வதேச மற்றும் உள்ளூர் மனித உரிமை அமைப்புகள், இந்த நடவடிக்கைகள் கருத்து சுதந்திரத்திற்கு ஓர் அடியாக இருப்பதாகக் கூறுகின்றன.
பஹ்ரைன் மற்றும் குவைத்தில், தடுத்து வைக்கப்பட்டவர்கள் பல்வேறு பின்னணியைக் கொண்டவர்கள்.
அவர்களில் பத்திரிகையாளர்கள், சமூக ஊடக பிரபலங்கள், மனித உரிமைகள் ஆர்வலர்கள் மற்றும் சாதாரண மக்கள் உள்ளனர்.
மதவெறி மோதலைத் தூண்டுதல், போலிச் செய்திகளைப் பரப்புதல், கைபேசிகளைத் தவறாகப் பயன்படுத்துதல், தேசிய பாதுகாப்பைக் குலைப்பதாகக் கருதப்படும் பிற செயல்கள் ஆகியவை குற்றச்சாட்டுகளில் அடங்கும் என்று அந்த நாடுகள் குறிப்பிடுகின்றன.
பல வளைகுடா நாடுகள், மோதல் தொடங்கியதில் இருந்தே தங்கள் நிலப்பரப்பில் இரானிய தாக்குதல்கள் தொடர்பான வீடியோக்களையோ அல்லது தகவல்களையோ படம்பிடிப்பதற்கும் வெளியிடுவதற்கும் எதிராக எச்சரித்தன.
பஹ்ரைன் மற்றும் குவைத்தில் தடுத்து வைக்கப்பட்டவர்களின் உறவினர்கள், நியாயமான விசாரணைகள் மறுக்கப்படுவது அல்லது தண்டிக்கப்பட்டவர்களின் குடியுரிமை பறிக்கப்படுவது உள்ளிட்ட தன்னிச்சையான நடவடிக்கைகளுக்கு அஞ்சுவதாகக் கூறுகின்றனர்.
குவைத்தில் புதிய குடியுரிமைச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதற்கும், பஹ்ரைனில் சமீபத்திய அரச கட்டளைக்கும் பிறகு இது வந்துள்ளது.
பெயர் வெளியிட விரும்பாமல் பிபிசியிடம் பேசிய குவைத் ஆர்வலர் ஒருவரின் கூற்றுப்படி, இணைய நடவடிக்கைகளைக் கண்காணிக்க அரசு போர்க்கால நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
சில நெடுஞ்சாலைகளில் பாதுகாப்புச் சோதனைகள் உள்ளன, அங்கு அதிகாரிகள் கைபேசிகளைச் சோதிப்பதோடு செய்திகள், புகைப்படங்கள் மற்றும் குரல் குறிப்புகளையும் ஆய்வு செய்கின்றனர் என்று அந்த ஆர்வலர் தெரிவித்தார்.
பத்திரிகையாளர் ஷிஹாப்-எல்டினை விடுவித்த குவைத்
சமூக ஊடகங்களைத் தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் வாரக்கணக்கில் விசாரணைக்கு முந்தைய காவலில் வைக்கப்பட்ட பிறகு, குவைத்தின் பாதுகாப்பு நீதிமன்றம் ஏப்ரல் 23 அன்று 135 பேருக்குத் தீர்ப்புகளை வழங்கியது.
சமூக ஊடகங்கள் தொடர்பான வழக்குகளில் 17 பிரதிவாதிகளுக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
வெளிநாட்டில் வசிக்கும் ஒரு பிரதிவாதிக்கு அவர் இல்லாத நிலையிலேயே மொத்தம் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
நீதிமன்றம் மற்ற 109 பிரதிவாதிகளைத் தண்டிக்க மறுத்துவிட்டது, ஆனால் சில வெளியீடுகளை நீக்க அவர்களுக்கு உத்தரவிட்டது, அதே நேரத்தில் மற்ற ஒன்பது பேர் விடுவிக்கப்பட்டனர்.
அவர்கள் அனைவரும் மதவெறி மோதலைத் தூண்டுதல் மற்றும் போலிச் செய்திகளைப் பரப்புதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டனர்.
விடுவிக்கப்பட்டவர்களில் குவைத்-அமெரிக்க பத்திரிகையாளர் அகமது ஷிஹாப்-எல்டினும் ஒருவர், அவர் மார்ச் தொடக்கத்தில் குவைத்தில் உள்ள தனது குடும்பத்தைப் பார்க்கச் சென்றபோது கைது செய்யப்பட்டார்.
ஷிஹாப்-எல்டின் பல சர்வதேச ஊடகங்களுடன் இணைந்து பணியாற்றிய விருது பெற்ற செய்தியாளர்; அவர் தவறான தகவல்களைப் பரப்புதல், தேசிய பாதுகாப்பிற்குத் தீங்கு விளைவித்தல் மற்றும் கைபேசியைத் தவறாகப் பயன்படுத்துதல் ஆகிய குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
குவைத்திற்கு வெளியே வசிக்கும் அவரது சகோதரிகள் லாரா மற்றும் லூமாவின் சர்வதேச சட்ட ஆலோசகர் காவில்ஃபியன் காலஹர் ஓர் அறிக்கையில், "52 நாட்கள் காவலில் இருந்த பிறகு, அகமது அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுவிக்கப்பட்டதில் நாங்கள் நிம்மதி அடைகிறோம்," என்று கூறினார்.
குடியுரிமை பறிப்பு குறித்த அச்சங்கள்
ராணுவத்தைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் அல்லது "அதன் மீதான நம்பிக்கையை வேண்டுமென்றே சிதைக்கும்" செய்திகளை வெளியிடுவதற்கு 3 முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் 5,000 முதல் 10,000 குவைத் தினார்கள் (16,250- 32,500 டாலர்கள்) அபராதம் விதிக்கும் ஆணையை மார்ச் மாதம் குவைத் வெளியிட்டது.
தேசிய பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத எதிர்ப்புக்கான சிறப்பு நீதிமன்றங்களை உருவாக்குவதாகவும் அரசு அறிவித்தது.
ஆம்னெஸ்டி இன்டர்நேஷனலின் மஹ்மூத் ஷலாபி, இந்த நடவடிக்கைகள் பரவலான சுய-தணிக்கைக்கு வழிவகுத்துள்ளன, இதனால் சுதந்திரமான இதழியல் பெருமளவு கடினமாகிறது என்று குறிப்பிட்டார்.
போரின் தொடக்கத்தில் தனது உறவினர் கைது செய்யப்பட்ட ஒரு குவைத் குடிமகனுடன் பிபிசி பேசியது, சமூக ஊடகங்களில் பதிவிடப்படுவதற்காக மட்டுமின்றி, பதிவுகளை 'லைக்' செய்வதற்காக அல்லது அதனுடன் தொடர்பு கொள்வதற்காகவும் கைதுகள் செய்யப்படுகின்றன - உதாரணமாக, இரானின் அதிஉயர் தலைவர் அலி காமனெயி மறைவுக்குத் துக்கம் தெரிவித்தது போன்றவற்றுக்காக.
அடையாளம் காணப்பட விரும்பாத அந்த குவைத் குடிமகன், கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலோர் ஷியா சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், இது சமூக ஊடகங்களில் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்துவதற்கு முன்பு பலரைத் தயங்கச் செய்துள்ளதாகவும் கூறினார்.
அதே நபரின் கூற்றுப்படி, கர்ப்பிணிப் பெண்கள் உள்பட சில கைதிகள் குவைத் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டனர்.
குவைத் குடிமக்கள் அல்லாத தடுத்து வைக்கப்பட்டவர்கள் நாடு கடத்தும் மையங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டனர், மேலும் இரானுடனான போரால் ரத்து செய்யப்பட்ட விமான நிலைய செயல்பாடுகள் மீண்டும் தொடங்கியதும் அவர்கள் வெளியேற்றப்பட்டனர் என்றும் அவர் கூறினார்.
தடுத்து வைக்கப்பட்டவர்கள் மீது குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் அவர்களில் சிலரது குடியுரிமை பறிக்கப்படலாம் என்று வழக்கறிஞர்கள் அச்சம் தெரிவித்ததாக அந்த குவைத் குடிமகன் குறிப்பிட்டார்.
குவைத்தின் புதிய குடியுரிமைச் சட்டத்தின் பிரிவு 13இன் கீழ், அரசின் பாதுகாப்புக்கு எதிரான குற்றங்கள் மற்றும் கடவுள் அல்லது அமீருக்கு எதிரான அவமதிப்பு, அத்துடன் நாட்டின் அரசியல், சமூக அல்லது பொருளாதார அமைப்புகளுக்குக் கேடு விளைவிக்கும் செயல்களுக்காகக் குடியுரிமையைத் திரும்பப் பெறலாம்.
பிரிவு 14, குவைத்துடன் போரில் ஈடுபட்டுள்ள அல்லது அரசியல் உறவுகள் துண்டிக்கப்பட்ட ஒரு வெளிநாட்டின் நலனுக்காக ஒரு நபர் பணியாற்றியது உறுதியானால் குடியுரிமையை ரத்து செய்ய அனுமதிக்கிறது.
கைது செய்யப்பட்டதற்கான நிபந்தனைகள் மற்றும் காரணங்கள் குறித்த குற்றச்சாட்டுகள் குறித்து கருத்து கேட்க குவைத் அதிகாரிகளை பிபிசி பலமுறை தொடர்பு கொண்டது, ஆனால் எந்த பதிலும் கிடைக்கவில்லை.
69 பேரின் குடியுரிமையை ரத்து செய்த பஹ்ரைன்
குவைத்தில் நடந்த கைதுகள் பஹ்ரைனிலும் நடந்த இதேபோன்ற கைதுகளுடன் ஒத்துப்போகின்றன.
இரு நாடுகளிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ள பலர் "போலிச் செய்தி" பரப்புதல் அல்லது சமூக ஊடகங்களைத் தவறாகப் பயன்படுத்துதல் போன்ற குற்றச்சாட்டுகள் உள்பட, தங்கள் கருத்துச் சுதந்திரத்தைப் பயன்படுத்தியதற்காக வழக்கு தொடரப்படுவதாக ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் குறிப்பிடுகிறது.
மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்காவுக்கான அமைப்பின் பிராந்திய ஆய்வாளர் ஷலாபி பிபிசியிடம் பேசுகையில், முறையான விசாரணை நடைமுறைகள் குறித்து "தீவிர கவலைகள்" இருப்பதாகத் தெரிவித்தார்.
"பஹ்ரைனில், சில கைதிகள் வழக்கறிஞரை அணுக அனுமதிக்கப்படவில்லை," என்று அவர் கூறினார், குவைத்தில் சமீபத்திய சட்ட மாற்றங்கள் "நீதித்துறை அமைப்பில் ஒரு நிலை மேல்முறையீட்டை நடைமுறையில் நீக்கிவிட்டன" என்றும் அவர் மேலும் கூறினார்.
பகைமை கொண்ட இரானிய செயல்களைப் புகழ்ந்ததற்காக அல்லது அதற்கு அனுதாபம் காட்டியதற்காக, அல்லது வெளித் தரப்பினருடன் தொடர்புகொண்டதற்காக 69 பேரின் குடியுரிமையை ரத்து செய்வதாக பஹ்ரைன் உள்துறை அமைச்சகம் ஏப்ரல் 27 அன்று அறிவித்தது.
அவர்கள் அனைவரும் பஹ்ரைன் வம்சாவளியைச் சேராதவர்கள் என்று அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
மன்னர் ஹமத் பின் ஈசா அல் கலீஃபா வெளியிட்ட அரச வழிகாட்டுதல்களின்படி மற்றும் பஹ்ரைன் குடியுரிமைச் சட்டத்தின் பிரிவு 10இன் அடிப்படையில் இந்த ரத்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக அமைச்சகம் சுட்டிக்காட்டியது.
இந்த விதி, "ராஜ்ஜிய நலன்களுக்குப் பாரபட்சம் விளைவிக்கும்" அல்லது அரசுக்கு விசுவாசமாக இருக்க வேண்டிய கடமைக்கு முரணான செயல்களில் ஈடுபடும் சந்தர்ப்பங்களில் குடியுரிமையைத் திரும்பப் பெற அனுமதிக்கிறது.
எக்ஸ் தளத்தில் ஒரு பதிவில், பஹ்ரைன் உரிமைகள் மற்றும் ஜனநாயக நிறுவனத்தின் வழக்கறிஞர் இயக்குநர் சையத் அகமது அல் வதேய், இந்த நடவடிக்கையை "ஓர் ஆபத்தான அடக்குமுறை யுகத்தின் தொடக்கம், இதன் விளைவுகள் தலைமுறைகளாக எதிரொலிக்கும்" என்று விவரித்தார்.
குற்றச் செயல்களின் அடிப்படையிலேயே கைதுகள் நடந்ததாகக் கூறும் பஹ்ரைன்
மோதல் தொடங்கியதில் இருந்து பஹ்ரைனில் அமைதியான போராட்டங்கள், போர் எதிர்ப்பு வெளிப்பாடுகள் அல்லது இணையத்தில் படங்களைப் பரப்புதல் தொடர்பான கைதுகள் உள்பட அடக்குமுறைகள் ஆவணப்படுத்தப்பட்ட அளவில் அதிகரித்துள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
போர் தொடங்கியதில் இருந்து பெண்கள், குழந்தைகள் மற்றும் வெளிநாட்டினர் உள்பட சுமார் 300 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பஹ்ரைன் ஆர்வலர் ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார். சிலர் நாடு கடத்தப்பட்டனர், மற்றவர்கள் இன்னும் நீதிமன்றத்தில் உள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த எண்ணிக்கையை உறுதிப்படுத்துமாறு பிபிசி பஹ்ரைனிடம் கேட்டது, ஆனால் பதில் கிடைக்கவில்லை.
அந்த ஆர்வலரின் கூற்றுப்படி, இந்த வழக்குகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துதல் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுடன் தொடர்புகொள்வது, தகவல்கள் அல்லது ஒருங்கிணைப்பு புள்ளிகளை அனுப்புதல் மற்றும் தவறானதாகக் கருதப்படும் செய்திகளைப் பரப்புதல் போன்ற தேசிய பாதுகாப்பு தொடர்பான குற்றச்சாட்டுகளை உள்ளடக்கியது.
கைதுகள் முற்றிலும் குற்றச் செயல்களின் அடிப்படையிலேயே அமைந்தவை என்று பஹ்ரைன் அதிகாரிகள் பிபிசியிடம் தெரிவித்தனர்.
பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாகவும், அவர் "அப்பட்டமான இரானிய ஆக்கிரமிப்பு" என்று விவரித்ததைக் கையாள்வதற்காகவும், பஹ்ரைன் சட்டத்தின் கீழ் குற்றங்களாக வகைப்படுத்தப்பட்ட செயல்களுக்காகப் பல நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அரசு செய்தித் தொடர்பாளர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
ஒரு வெளிநாட்டுடன் (இரான்) தொடர்புகொள்வது, இரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை போன்ற பயங்கரவாதக் குழுக்கள் என செய்தித் தொடர்பாளர் விவரித்த அமைப்புகளைத் தொடர்புகொள்வது மற்றும் இணையத்தில் தவறான அல்லது தவறாக வழிநடத்தும் தகவல்களைப் பரப்புவது ஆகியவை இதில் அடங்கும், இது "இரானிய ஆக்கிரமிப்பு மற்றும் அதன் பயங்கரவாத செயல்களுக்கு ஆதரவாக அமைகிறது."
தாக்குதல்களைத் திட்டமிட்டதாகவும் உள்நாட்டுப் பாதுகாப்பைக் குலைத்ததாகவும் குற்றம் சாட்டப்பட்ட செல்களை சேர்ந்தவர்களைக் கைது செய்துள்ளதாகப் பல வளைகுடா நாடுகள் அறிவித்துள்ள ஒரு பரந்த பிராந்திய சூழலில் இந்த நிகழ்வுகள் நடக்கின்றன.
சிலர் இரானிய புரட்சிகர காவல் படையுடன் அல்லது லெபனானில் உள்ள ஹெஸ்பொலாவுடன் தொடர்புடையவர்கள் என்று அதிகாரிகளால் கூறப்படுகிறது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு