ரூ.2,000 கோடி திட்டத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி ரத்து - பள்ளிக்கரணை சதுப்பு நில சர்ச்சையின் பின்னணி

  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டுவதற்கு தனியார் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதியை ரத்து செய்வதாக மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் (SEIAA) தெரிவித்துள்ளது.

'பணியைத் தொடங்குவதற்கு முன்பு மாநில சதுப்பு நில ஆணையத்திடம் உரிய அனுமதியைப் பெற வேண்டும். ஆனால், அனுமதி பெறாமலேயே கட்டுமானப் பணிகளைத் தொடங்கியுள்ளது சுற்றுச்சூழல் அனுமதி நிபந்தனையை மீறும் செயலாக அமைகிறது' என்று அந்த ஆணையம் கூறியுள்ளது.

"ராம்சார் பகுதியில் எந்தவிதக் கட்டுமானமும் கூடாது என ஈரநிலங்கள் பாதுகாப்பு மற்றும் மேலாண்மை விதிகள் கூறுகின்றன. அதையும் மீறி அந்த நிறுவனத்திற்கு அனுமதி கொடுக்கப்பட்டிருந்தது" என்கிறார், அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம்.

இதனை மறுத்துள்ள தனியார் கட்டுமான நிறுவனம், 'தன்னிச்சையாக சுற்றுச்சூழல் அனுமதியை ரத்து செய்துள்ளனர். கட்டுமானம் அமைய உள்ள பகுதி தனியார் பட்டா நிலங்களைக் கொண்டது' என்று விளக்கம் அளித்துள்ளது.

பின்னணி என்ன?

சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலப் பகுதி 1247.54 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட காப்புக் காடுகளாக உள்ளதாக, தமிழ்நாடு மாநில ஈரநில ஆணையம் தனது இணையதளத்தில் கூறியுள்ளது.

இந்தப் பகுதி கடந்த 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 8 ஆம் தேதி ராம்சார் (Ramsar) தளமாக அறிவிக்கப்பட்டது. ராம்சார் தளம் என்பது சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ஈரநிலங்களையும் உயிரியல் பன்முகத்தன்மையை பாதுகாப்பதில் அவற்றில் முக்கியத்துவத்துக்காகவும் அடையாளப்படுத்தப்படுகிறது.

1971ஆம் ஆண்டு இரானில் உள்ள ராம்சார் நகரில் ஏற்பட்ட ஈரநிலம் தொடர்பான உடன்படிக்கையைத் தொடர்ந்து 'ராம்சார் தளம்' என்ற பெயரில் அழைக்கப்படுவதாக, தமிழ்நாடு ஈரநில ஆணையம் கூறுகிறது.

சென்னையின் புறநகர்ப் பகுதியான செங்கல்பட்டு மாவட்டம் பெரும்பாக்கத்தில் பிரிகேட் மார்கன் ஹைட்ஸ் என்ற பெயரில் குடியிருப்புகளைக் கட்டுவதற்கான முயற்சிகளில் பிரிகேட் குழுமம் ஈடுபட்டு வந்தது. அதற்கான சுற்றுச்சூழல் அனுமதி 2025 ஆம் ஆண்டு ஜனவரி 20 ஆம் தேதி பிரிகேட் குழுமத்துக்கு கிடைத்துள்ளது.

சுற்றுச்சூழல் அனுமதி கிடைத்த மூன்றே நாளில் சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் (CMDA) அனுமதியை பிரிகேட் குழுமம் பெற்றதாகக் கூறுகிறார், இதனை எதிர்த்து வழக்கு தொடர்ந்த அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன்.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், "சதுப்பு நிலம் அமைந்துள்ள 1247 ஹெக்டேரில் சுமார் 690 ஹெக்டர் நிலம் வனத்துறையின் காப்புக் காடுகளாக உள்ளது. மீதம் இருக்கும் 547 ஹெக்டேரில் அரசு மற்றும் தனியார் பெயரில் நிலங்கள் உள்ளன. இந்திய அரசின் ஈரநிலம் பாதுகாப்பு மற்றும் மேலாண்மை சட்டத்தின் பிரிவு 4ன்படி ராம்சார் நிலங்களில் எந்தவிதமான நிரந்தர கட்டுமானங்களும் கட்டுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆனால், ராம்சார் பகுதிக்குட்பட்ட இடத்தில் சுமார் 14 ஏக்கர் நிலத்தில் 1250 அடுக்குமாடி வீடுகளைக் கட்டுவதற்கு சுற்றுச்சூழல் அனுமதியும் கட்டுமான அனுமதியையும் பிரிகேட் குழுமம் கோரியது" என்றார்.

தொடர்ந்து பேசிய ஜெயராம் வெங்கடேசன், "கட்டுமானத்துக்கு தமிழ்நாடு ஈர நில ஆணையத்தின் அனுமதியை பிரிகேட் குழுமம் பெறவில்லை. இதையடுத்து, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் லஞ்ச ஒழிப்புத்துறை, மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை, வனத்துறை உள்பட பத்து துறைகளுக்குப் புகார் மனு அனுப்பினோம்" என்கிறார்.

ஆனால், சுற்றுச்சூழல் அனுமதி ரத்து செய்யப்படாததால் சென்னை உயர் நீதிமன்றத்தில் அறப்போர் இயக்கம் பொதுநல வழக்கு தொடர்ந்தது. ஆனால், 'இந்த விவகாரத்தில் தலையிட முடியாது' என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்தது.

"இந்தியா முழுவதும் ஈரநிலங்கள் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. ஆகவே, அரசிடமோ, உச்ச நீதிமன்றத்திடமோ முறையிடுங்கள் என நீதிமன்றம் கூறியது" என்கிறார் ஜெயராம் வெங்கடேசன்.

இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வதற்கான பணிகளில் அறப்போர் இயக்கம் ஈடுபட்டு வந்ததாக அவர் கூறினார்.

சுற்றுச்சூழல் அனுமதி ரத்து

இந்த நிலையில்தான், கடந்த மே 8 ஆம் தேதி பிரிகேட் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டிருந்த சுற்றுச்சூழல் அனுமதியை ரத்து செய்து மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதில், 'கடந்த ஆண்டு ஜனவரி மாதம் பிரிகேட் குழுமத்துக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்பட்டது. இதுதொடர்பாக தமிழ்நாடு மாநில சதுப்பு நில ஆணையத்தின் முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் அனுப்பிய கடிதம் தமிழ்நாடு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்தால் (சியா) கடந்த ஏப்ரல் 16 ஆம் தேதி பரிசீலிக்கப்பட்டது' எனக் கூறப்பட்டுள்ளது.

'பணியைத் தொடங்குவதற்கு முன்பு மாநில சதுப்பு நில ஆணையத்திடம் உரிய அனுமதியைப் பெற வேண்டும். ஆனால், அனுமதி பெறாமலேயே கட்டுமானப் பணிகளைத் தொடங்கியுள்ளதால் சுற்றுச்சூழல் அனுமதி நிபந்தனையை மீறும் செயலாக அமைகிறது' என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில், செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் வட்டம், பெரும்பாக்கம் கிராமத்தில் உள்ள பிரிகேட் குழுமம் மேற்கொள்ளவிருந்த பணிகளுக்கான சுற்றுச்சூழல் அனுமதி ரத்து செய்யப்படுவதாக மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் கூறியுள்ளது.

பிரிகேட் குழுமம் கூறுவது என்ன?

தங்களது குடியிருப்பு திட்டத்துக்கான சுற்றுச்சூழல் அனுமதியை மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் ரத்து செய்துள்ளதற்கு பிரிகேட் குழுமம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இந்த நடவடிக்கை தன்னிச்சையானது மட்டுமல்ல உண்மைக்கு புறம்பானது எனவும் சட்டப்படி இந்த உத்தரவு நிலைக்காது எனவும் பிரிகேட் குழுமம் தெரிவித்துள்ளது.

'குடியிருப்பு அமைய உள்ள திட்டப்பகுதி தனியார் பட்டா நிலங்களை உள்ளடக்கியது. 1935 ஆம் ஆண்டு வரையில் இவை புன்செய் நிலங்கள். 1985 ஆம் ஆண்டு முதல் தற்போதைய நில உரிமையாளர்கள் வரை தொடர்ச்சியாக கைவசம் இருந்து வந்துள்ளது' என பிரிகேட் குழுமம் கூறுகிறது.

2022ஆம் ஆண்டு நிலத்தின் உரிமையாளருடன் கூட்டு மேம்பாட்டு ஒப்பந்தத்தை (Joint Development Agreement) செய்து கொண்டதாகக் கூறியுள்ள பிரிகேட் குழுமம், 'இதுதொடர்பாக செய்தித்தாள்களில் பொது அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அதற்கு எந்த எதிர்ப்பும் வரவில்லை' என்கிறது.

'அடிப்படை ஆதாரமற்றவை' - சுற்றுச்சூழல் துறை

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் தனியார் கட்டுமானத்துக்கு அனுமதி கொடுக்கப்பட்டதாகக் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சில ஊடகங்களில் செய்தி வெளியானதும் அதனை தமிழ்நாடு சுற்றுச்சூழல், காலநிலை மற்றும் வனத்துறை அமைச்சகம் மறுத்தது. அந்த அமைச்சகம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 28 ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில், 'ஈரநில விதிகளின்படி பள்ளிக்கரணை ஈரநில அறிவிப்பு இன்னும் இறுதி செய்யப்படவில்லை. அந்தவகையில், குற்றச்சாட்டுகள் அனைத்தும் அடிப்படை ஆதாரமற்றவை' எனக் கூறியுள்ளது.

'பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் ராம்சார் தள எல்லையானது, குறிப்பிட்ட சர்வே எண்களுடன் ஒப்பிட்டு பரப்பளவை வரையறுப்பது, சோதனை மற்றும் அறிவிப்பு ஆகிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னரே நடைமுறைக்கு வரும்' எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

'ராம்சார் தளம் அமையும் நிலங்கள் புல எண்களுடன் குறிப்பிட்டு வரையறுக்கப்படவில்லை' எனக் கூறியிருந்த சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை அமைச்சகம், 'பள்ளிக்கரணை சதுப்புநில காப்புக் காட்டு எல்லைக்கு வெளியே உள்ள தனியார் பட்டா நிலங்களுக்கு மட்டுமே சம்பந்தப்பட்ட அலுவலர்களால் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது' எனக் கூறியது.

இந்த அறிக்கையை மேற்கோள் காட்டியுள்ள பிரிகேட் குழுமம், 'இந்த நிலங்கள் தனியார் பட்டா நிலங்கள் என்பதால் அதற்கேற்ப அதிகாரிகளால் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் இறுதியான எல்லை இன்னும் தீர்மானிக்கப்படவில்லை' எனத் தெரிவித்துள்ளது. "எங்களின் திட்டப்பகுதி எந்த சதுப்பு நிலப் பகுதிக்குள்ளும் வரவில்லை" என்றும் அந்நிறுவனம் கூறியுள்ளது.

'உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு'

சுற்றுச்சூழல் அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது குறித்துக் கூறியுள்ள பிரிகேட் குழுமம், 'எங்கள் தரப்பு நியாயத்தை முன்வைப்பதற்கு எந்தவொரு அறிவிப்பும் விசாரணையும் கள சரிபார்ப்பும் செய்யப்படவில்லை. இது நடைமுறை ரீதியாக தவறானது' எனக் குறிப்பிட்டுள்ளது.

திட்டத்தின் பெரும் முதலீடுகள், நடந்து வரும் கட்டுமானங்கள் ஆகியவற்றை அலட்சியப்படுத்தும் வகையில் இவை உள்ளதாகக் கூறியுள்ள பிரிகேட் குழுமம், 'இதுதொடர்பாக சட்டரீதியாக தீர்வு பெற முயற்சித்து வருகிறோம். இந்த உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்துள்ளோம்" எனத் தெரிவித்துள்ளது.

இதையடுத்து, பெரும்பாக்கத்தில் பிரிகேட் குழுமம் மேற்கொண்டு வரும் கட்டுமான தளத்துக்கு பிபிசி தமிழ் சென்றது. தமிழ்ச் செம்மொழி உயராய்வு நிறுவனத்துக்கு எதிரில் இந்நிறுவனத்தின் கட்டுமானப் பணிகள் தொடங்கவிருந்தன.

அங்கே அலுவலகம் அமைத்து கட்டுமானத்துக்கான மண் அதிகளவில் கொட்டப்பட்டிருந்தாலும் பணிகள் எதுவும் நடக்கவில்லை. அந்நிறுவன ஊழியர் ஒருவரிடம் பேசியபோது, "பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன" என்று மட்டுமே பதில் கிடைத்தது.

பிரிகேட் குழுமத்தின் கட்டுமானப் பணிகளுக்கு அருகில் உள்ள சதுப்பு நிலத்தில் ஏராளமான எருமை மாடுகளும் பறவைகளும் தென்பட்டன. அதையொட்டி கட்டுமானப் பணிகள் நடைபெற இருந்ததையும் நேரில் பார்க்க முடிந்தது.

இங்கு கட்டப்பட உள்ள ஒவ்வோர் வீட்டுக்கும் 1.25 கோடி ரூபாய் முதல் 1.46 கோடி ரூபாய் வரை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக, பிரிகேட் குழுமத்தின் விளம்பர அறிவிப்பு கூறுகிறது. அந்தவகையில், "சுமார் இரண்டாயிரம் கோடி ரூபாய் மதிப்பில் திட்டம் நடைபெற இருந்தது" என்கிறார், ஜெயராம் வெங்கடேசன்.

சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை கூறுவது என்ன?

சுற்றுச்சூழல் துறை மீது அறப்போர் இயக்கம் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, தமிழ்நாடு சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் உயர் அதிகாரி ஒருவரிடம் பிபிசி தமிழ் பேசியது.

பெயர் குறிப்பிட விரும்பாமல் பேசிய அவர், "சட்டப்பூர்வ தன்னாட்சி அமைப்பாக (independent statutory authority) மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் (SEIAA) செயல்படுகிறது. இந்த அமைப்பு தான் சுற்றுச்சூழல் அனுமதியை வழங்குகிறது" எனக் கூறினார்.

"இதற்கான அனுமதியை வழங்குவதற்கு அரசு செயலாளருக்கு அதிகாரம் இல்லை" எனக் கூறிய அவர், "மே 8ஆம் தேதி சுற்றுச்சூழல் அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பான விவரங்கள் இணையதளத்தில் உள்ளன" என்று மட்டும் அவர் பதில் அளித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு