'ஆல் அவுட் ஆன பெங்களூரு' - எளிய இலக்கை எட்ட திணறிய குஜராத் இறுதியில் வென்றது எப்படி?

வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

குஜராத் - பெங்களூரு இடையிலான ஐபிஎல் போட்டியில் குஜராத் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 19.2 ஓவர்களில் 155 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. குஜராத் அணிக்கு 156 ரன்கள் வெற்றி இலக்காக தீர்மானிக்கப்பட்டது.

குஜராத் - பெங்களூரு அணிகளுக்கான போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பவுலிங்கை தேர்வு செய்தது.

பெங்களூரு அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜேக்கப் பெத்தெலும் விராட் கோலியும் களமிறங்கினர். ஜேக்கப் பெத்தெல் 5 பந்துகளில் 5 ரன்கள் மட்டும் எடுத்து ஆட்டமிழந்தார். விராட் கோலி 13 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதில், 5 பவுண்டரிகளும் ஒரு சிக்சரும் அடங்கும். இதனால் இந்த அணி 3.2 ஓவரில் 35 ரன்களுக்கு 2 விக்கெட்டை இழந்தது.

தொடர்ந்து, தேவ்தத் படிக்கல் 24 பந்துகளில் 40 ரன்கள் சேர்த்தார். இதில் 5 பவுண்டரிகளும் 2 சிக்சர்களும் அடங்கும்.

அணியின் கேப்டன் ரஜத் படிதார் 19 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஜிதேஷ் சர்மா வெறும் ஒரு ரன்னில் வெளியேறினார். டிம் டேவிட் 9 ரன்களும் க்ருணால் பாண்ட்யா 4 ரன்களும் எடுத்தனர்.

ரொமோரியோ ஷெப்பர்ட் 15 பந்துகளில் 17 ரன்கள் எடுத்தார். வெங்கடேஷ் ஐயர் 15 பந்துகளில் 12 ரன்கள் எடுத்தார்.

புவனேஷ்வர் குமார் 15 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். ஜோஷ் ஹேஸில்வுட் ரன் அவுட்டானார்.

குஜராத் அணிக்காக ரஷித் கான் அபாரமாக பந்துவீசி 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார். அர்ஷத் கான் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். ஜேசன் ஹோல்டர் 2 விக்கெட்டுகள் எடுத்தார். முகமது சிராஜ் மற்றும் ககிசோ ரபாடா தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

இறுதியில் ஆர்சிபி அணி வெறும் 155 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

குஜராத் ஆட்டம் எப்படி?

அடுத்து ஆடிய குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் தொடக்கத்திலேயே அதிரடியை கையிலெடுத்தார். சாய் சுதர்ஷன் குறைவான பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட நிலையில், பெரும்பாலான பந்துகளை கில் சந்தித்தார்.

இந்த நிலையில், சாய் சுதர்ஷன் 6 ரன்களில் அவுட் ஆக, விரைவிலேயே 18 பந்துகளில் 43 ரன்கள் எடுத்திருந்த கில்லும் ஆட்டமிழந்தார்.

அடுத்துவந்த ஜாஸ் பட்லர் சிக்ஸர், பவுண்டரி என அதிரடியாக ரன்களை குவித்தார். ஆனால், 39 ரன்களில் புவனேஷ்வர் குமார் பந்தில் அவுட் ஆனார். அப்போது அணியின் ஸ்கோர் 92 ரன்களுக்கு 3 விக்கெட்டாக இருந்தது.

ஆனால் அடுத்தடுத்து ஷாருக் கான், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் அவுட் ஆகினர்.

ராகுல் திவாட்டியா, ஹோல்டர் இணைந்து 36 ரன்கள் கூட்டணி அமைத்தனர். பின்னர் ஹோல்டர் 12 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இந்த நிலையில், ராகுல் திவாட்டியா ஆட்டமிழக்காமல் இருந்து குஜராத் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

ராகுல் திவாட்டியா ஆட்டமிழக்காமல் 27 ரன்களும், ரஷித் கான் ஆட்டமிழக்காமல் 7 ரன்களும் எடுத்தனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு