தனது 3 குழந்தைகளை கொன்றதை மறுக்காத தாய்: 'முடிவுக்கு வர இயலாத வழக்கு' என அறிவித்த நீதிபதி - அமெரிக்காவை உலுக்கிய வழக்கு

லின்ட்ஸே கிளான்சி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, லின்ட்ஸே கிளான்சி
    • எழுதியவர், மேட்லைன் ஹால்பர்டான் மற்றும் சரீன் ஹபேஷியன்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

அமெரிக்காவில் தனது மூன்று இளம் குழந்தைகளை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட லின்ட்ஸே கிளான்சி என்ற தாயின் வழக்கை, 'முடிவுக்கு வர இயலாத வழக்கு' என்று நீதிபதி அறிவித்தார்

கிளான்சி குற்றவாளியா இல்லையா என்பது குறித்து ஒருமித்த தீர்ப்பை எட்ட முடியவில்லை என்று நடுவர் குழுவினர் (ஜூரி) தெரிவித்ததைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டது

இந்த அறிவிப்பு, அடுத்து என்ன நடக்கும் என்பது குறித்து பல்வேறு சாத்தியக்கூறுகளுக்கு வழிவகுத்துள்ளது.

2023 ஜனவரி 24 அன்று, மாசசூசெட்ஸின் டக்ஸ்பரி நகரில் உள்ள வீட்டில் கிளான்சி தனது குழந்தைகள் கோரா (5), டாசன் (3), எட்டு மாதக் குழந்தை கேலன் ஆகிய மூவரையும் வேண்டுமென்றே கழுத்தை நெரித்துக் கொன்றதாக அரசு தரப்பு குற்றம்சாட்டுகிறது.

அதன்பின்னர், அவர் இரண்டாவது மாடி ஜன்னல் வழியாகக் குதித்தார். இதனால் கிளான்சிக்கு முதுகுத் தண்டில் பலத்த காயம் ஏற்பட்டது. தற்போது 36 வயதாகும் அவர், சக்கர நாற்காலியில் அமர்ந்தபடியே விசாரணையில் பங்கேற்றார்.

மூன்று கொலைக் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்ட கிளான்சி, 2023-ஆம் ஆண்டு தனது குழந்தைகளைக் கொன்றதை மறுக்கவில்லை.

ஆனால், பிரசவத்திற்குப் பிந்தைய பாதிப்பான போஸ்ட்பார்டம் சைக்கோசிஸ் பாதிப்பால் அவதிப்பட்டதால், அவரை குற்றவியல் ரீதியாகப் பொறுப்பேற்கச் செய்ய முடியாது என்று அவரது வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.

கிளான்சிக்கு மனநலம் பாதிக்கப்பட்டிருந்ததாகக் கூறி அவரது தரப்பு வாதிட்டது. தனது இளைய குழந்தையைப் பெற்றெடுத்த பிறகு, கிளான்சிக்கு மாயத்தோற்றங்களும், உண்மைக்குப் புறம்பான நம்பிக்கைகளும் ஏற்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர். இதற்கு ஆதாரமாக, அவர் மனநலப் பிரச்னைகளுக்காகச் சிகிச்சை பெற்றதையும், குழந்தைகள் உயிரிழப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு தாமாக முன்வந்து மனநல சிகிச்சை நிலையத்தில் அனுமதித்துக் கொண்டதையும் சுட்டிக்காட்டினர்.

ஆனால், குழந்தைகளைக் கொல்லும் முடிவை அவர் திட்டமிட்டு, முழுமையான நோக்கத்துடன் எடுத்ததாக அரசு தரப்பு வாதிட்டது. குழந்தைகள் உயிரிழந்தபோது, தனது கணவர் பேட்ரிக் கிளான்சி வீட்டில் இருக்கக் கூடாது என்பதற்காக அவரை சில வேலைகளைச் செய்து வருமாறு வெளியே அனுப்பியதாக அரசு தரப்பு குற்றம்சாட்டியது.

லின்ட்ஸே கிளான்சி

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, லின்ட்ஸே கிளான்சி
வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

அமெரிக்க சட்டத்தின்படி, ஒரு நபர் குற்றவாளி என்பதை நடுவர் குழுவினர் "நியாயமான சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு" ஒருமனதாக முடிவு செய்ய வேண்டும். அவர்கள் அத்தகைய ஒருமித்த முடிவுக்கு வர முடியாவிட்டால், நீதிபதி 'முடிவுக்கு வர இயலாத வழக்கு' என்று அறிவிக்கலாம். இதனால், வழக்கு விசாரணை இறுதி தீர்ப்பின்றி முடிவுக்கு வரும்.

லின்ட்ஸே கிளான்சியின் வழக்கில், நடுவர் குழுவினர் பல நாட்களாக ஒருமித்த முடிவை எட்ட முடியாமல் இருந்தனர். மேலும், தங்களால் ஒருமித்த தீர்ப்புக்கு வர முடியவில்லை என்று அவர்கள் நீதிபதியிடம் மூன்று முறை தெரிவித்தனர்.

வழக்கை விசாரித்த நீதிபதி வில்லியம் சல்லிவன், முடிவு எடுக்கும் வாய்ப்பு முற்றிலும் இல்லையென உறுதியாகும் வரை ஆலோசனையைத் தொடருமாறு நடுவர் குழுவினரைக் கேட்டுக்கொண்டார்.

வழக்கின் இறுதிக்கட்ட முயற்சியாக நீதிபதி, நடுவர் குழுவுக்கு கூடுதல் வழிகாட்டுதல்களை வழங்கினார்.மாசசூசெட்ஸில் இது 'டுயி-ரோட்ரிக்ஸ் உத்தரவு"என்று அழைக்கப்படுகிறது. வழக்கின் அனைத்து கோணங்களையும் பரிசீலிக்கவும், தங்களது சொந்த கருத்துகளையும் மீளாய்வு செய்யவும் நடுவர் குழுவை அவர் ஊக்குவித்தார்.

இருப்பினும், நடுவர் குழுவினர் தொடர்ந்து ஒருமித்த முடிவுக்கு வர முடியவில்லை என்று தெரிவித்ததால், கடந்த வெள்ளிக்கிழமை நீதிபதி முடிவுக்கு வர இயலாத வழக்கு என அறிவிப்பதைத் தவிர வேறு வழியில்லை என்று கூறினார்.

இதனால், அரசு தரப்பு தங்களது குற்றச்சாட்டை நிரூபித்துவிட்டது என்று அர்த்தமில்லை. அதேபோல், பிரதிவாதி குற்றமற்றவர் என்றும் இது அர்த்தப்படுத்தாது.

இப்போது, அரசு தரப்பு மீண்டும் குற்றச்சாட்டுகளை முன்னெடுத்து, புதிய நடுவர் குழுவுடன் விசாரணையைத் தொடங்க முடியும். அல்லது குற்றத்தை ஒப்புக்கொள்ளும் ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தவும் முடியும்.

மற்றொரு வாய்ப்பாக, அரசு தரப்பு அனைத்து குற்றச்சாட்டுகளையும் முழுமையாகத் திரும்பப் பெறவும் முடியும்.

லிண்ட்சே கிளான்சி விடுதலை செய்யப்படுவாரா?

இல்லை. குறைந்தபட்சம் உடனடியாக விடுதலை செய்யப்படமாட்டார்.

கிளான்சி மீது ஏற்கெனவே சுமத்தப்பட்டுள்ள கொலைக் குற்றச்சாட்டுகள் தொடரும். அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து அவரது வழக்கறிஞர்கள் ஆலோசித்து வரும் நிலையில், தற்போது அவர் தங்க வைக்கப்பட்டுள்ள மனநல சிகிச்சை நிலையத்திலேயே தொடர்ந்து இருப்பார்.

மறுவிசாரணை நடத்தத் திட்டமிடப்பட்டால், அது தொடங்கும் வரை கிளான்சி அதே சிகிச்சை நிலையத்திலேயே இருப்பார். இருப்பினும், அவரது ஜாமீன் நிலை குறித்து மறுபரிசீலனை செய்யுமாறு அவரது வழக்கறிஞர்கள் கோரலாம் என நியூயார்க் சட்டப் பள்ளியின் பேராசிரியரும் மனநலச் சட்ட நிபுணருமான ஹீதர் குகோலோ தெரிவித்துள்ளார்.

மறுவிசாரணைக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தாலும், கிளான்சியின் வழக்கறிஞர் குழுவுடன் அரசு வழக்கறிஞர் தரப்பு ஓர் உடன்பாட்டை எட்டுவதற்கான வாய்ப்பு உள்ளது என்றும் குகோலோ கூறினார்.

கிளான்சியின் குழந்தைகள் கோரா (இடது), எட்டு மாதக் குழந்தை கேலன் (நடுவில்), மூன்று வயது டாசன்.

பட மூலாதாரம், Patti Anne Photography

படக்குறிப்பு, கிளான்சியின் குழந்தைகள் கோரா (இடது), எட்டு மாதக் குழந்தை கேலன் (நடுவில்), மூன்று வயது டாசன்

அரசு தரப்பு மறுவிசாரணை கோருமா?

இது போன்ற தீவிரமான குற்ற வழக்குகளில், அரசு தரப்பு பெரும்பாலும் மறுவிசாரணை கோரும்.

அவ்வாறு கோரப்பட்டால், நடுவர் குழுவினரைத் தேர்வு செய்யும் நடைமுறை மீண்டும் நடைபெறும். அதன் பின்னர், புதிய நடுவர் குழுவினருடன் மறுவிசாரணை நடத்தப்படும்.

மற்றொரு விசாரணையைத் தொடங்க எவ்வளவு காலம் ஆகும் என்பது நீதிமன்றத்தின் வழக்கு அட்டவணை, இரு தரப்பினரும் தாக்கல் செய்யக்கூடிய சட்டரீதியான கோரிக்கைகள், நிபுணர் சாட்சிகளை ஏற்பாடு செய்யத் தேவைப்படும் காலம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளைப் பொறுத்து அமையும்.

மாசசூசெட்ஸில் நடைபெற்ற ஆறு வார விசாரணை உலகம் முழுவதும் குறிப்பிடத்தக்க கவனத்தை ஈர்த்தது. நீதிமன்றத்திற்கு வெளியே பொதுமக்கள் திரண்டனர்.

"இந்த வழக்கு மிகவும் பிரபலமானதாகவும், இதில் இடம்பெற்றுள்ள சம்பவங்கள் குறித்து மக்களிடையே மிகுந்த உணர்ச்சிகரமான எதிர்வினையும் இருப்பதால், அரசு தரப்பு மறுவிசாரணை கோருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றே நான் கருதுகிறேன்," என்று குகோலோ கூறினார்.

லின்ட்ஸே கிளான்சி

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, லின்ட்ஸே கிளான்சி கர்ப்பமாக இருந்தபோது

நடுவர் குழுவினர் ஏன் ஒருமித்த முடிவுக்கு வரவில்லை?

அதற்கான காரணம் தெளிவாகத் தெரியவில்லை. ஆனால், இரு தரப்பினரும் ஏராளமான நிபுணர்களின் சாட்சியங்களை முன்வைத்ததால், இந்த வழக்கு சிக்கலானதாக இருந்தது.

வியாழக்கிழமை நீதிபதிக்கு அனுப்பிய குறிப்பில், நியாயமான சந்தேகம் தொடர்பான வழிகாட்டுதலை ஒரு நடுவர் குழு உறுப்பினர் பின்பற்றவில்லை என்று நடுவர் குழுவினர் தெரிவித்தனர்.

அமெரிக்க சட்டப்படி, ஒருவரைக் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்க, அவர் குற்றவாளி என்பதில் '’நியாயமான சந்தேகத்துக்கு அப்பாற்பட்டு’’ நடுவர் குழுவினர் அனைவரும் ஒருமித்த கருத்தைக் கொண்டிருக்க வேண்டும்.

அமெரிக்க சட்ட அமைப்பில் இது மிகவும் கடுமையான நிரூபணத் தரமாகும். குற்றம் சாட்டப்பட்டவர் தாம் நிரபராதி என்பதை நிரூபிக்க வேண்டும் என்பதற்குப் பதிலாக, அவர் குற்றவாளி என்பதை அரசு தரப்புதான் நிரூபிக்க வேண்டும் என்ற பொறுப்பை இது ஏற்படுத்துகிறது.

அந்த ஒரு நடுவர் குழு உறுப்பினர்தான் விசாரணையின் முன்னேற்றத்தைத் தடுத்து, நடுவர் குழுவினர் ஒருமித்த முடிவுக்கு வர முடியாத நிலையை ஏற்படுத்தியதாக கிளான்சியின் வழக்கறிஞர் தெரிவித்தார். அந்த நடுவர் குழு உறுப்பினரை நீக்குமாறு அவர் நீதிபதியிடம் கோரினார்.

ஆனால், அவரது கோரிக்கையை நீதிபதி நிராகரித்தார். அதற்கு மறுநாள், இந்த வழக்கு முடிவுக்கு வர இயலாத வழக்கு என்று நீதிபதி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

நடுவர் குழுவில் இடம்பெற்ற ஒன்பது பெண்கள் மற்றும் மூன்று ஆண்களின் அடையாளங்கள் பொதுமக்களுக்கு வெளியிடப்படவில்லை. அவர்களின் அடையாளம் ரகசியமாக இருக்க வேண்டும் என்பதற்காக, அவர்களைப் புகைப்படம் எடுக்கவோ, காணொளி பதிவு செய்யவோ நீதிபதி தடை விதித்துள்ளார்.

ஆனால், ஒரு வழக்கு முடிவடைந்த பிறகு, அந்த வழக்கு மற்றும் நடுவர் குழுவினரின் ஆலோசனைகள் குறித்து பொதுவெளியில் பேசுவதா, வேண்டாமா என்பதை ஒரு நடுவர் குழு உறுப்பினர் தானாகத் தீர்மானிக்கலாம்.

மற்ற பிரபலமான வழக்குகளின் விசாரணைகளுக்குப் பிறகு, சில நடுவர் குழு உறுப்பினர்கள் முன்வந்து வழக்கு குறித்து பேசியுள்ளனர். சிலர் அது குறித்து புத்தகங்களையும் எழுதியுள்ளனர் அல்லது ஊடகங்களுக்கு நேர்காணல்களையும் அளித்துள்ளனர்.

எனவே, மூடிய கதவுகளுக்குப் பின்னால் என்ன நடந்தது என்பது தற்போது தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், வரும் நாட்கள் அல்லது வாரங்களில் இது தொடர்பான கூடுதல் தகவல்கள் வெளியாகலாம்.

நீங்கள் மன உளைச்சல் அல்லது விரக்தியால் பாதிக்கப்பட்டு, ஆதரவு தேவைப்பட்டால், ஒரு சுகாதார நிபுணரிடம் அல்லது ஆதரவு வழங்கும் அமைப்பிடம் பேசலாம். பல நாடுகளில் கிடைக்கும் உதவிகள் குறித்த விவரங்களை பிஃப்ரெண்டர்ஸ் வேர்ல்ட்வைடு இணையதளத்தில் காணலாம்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு