ஜப்பானின் தனித்துவமான உத்தி: வெள்ளை போர்டு மூலம் வீரர்களுக்கு பயிற்சியாளர் என்ன சொல்கிறார்?

பட மூலாதாரம், ANP via Getty Images
- எழுதியவர், பிரதீப் கிருஷ்ணா
- பதவி, பிபிசி தமிழுக்காக
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பையில் நேற்று (ஜூன் 21) நடந்த போட்டியில் துனிசியா அணிக்கெதிராக 4-0 என அபார வெற்றி பெற்றது ஜப்பான் அணி.
உலகக் கோப்பை வரலாற்றில் ஆசிய அணி ஒரே போட்டியில் 4 கோல்கள் அடித்திருப்பது இதுவே முதல் முறை. மேலும், ஒரு ஆசிய அணி பெறும் மிகப் பெரிய வெற்றியும் இதுதான். ஃபிஃபா உலகக் கோப்பை வரலாற்றின் 1000வது போட்டியில் இந்த சாதனையை செய்திருக்கிறது ஜப்பான்.
தொடர்ந்து இரண்டாவது தோல்வியை சந்தித்த துனிசியா அணி நாக் அவுட் சுற்று வாய்ப்பை இழந்தது. ஏற்கெனவே துருக்கி மற்றும் ஹைதி அணிகள் அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை இழந்துவிட்டன.
முதல் போட்டியில் நெதர்லாந்துக்கு எதிராக டிரா செய்த ஜப்பான், இரண்டு போட்டிகளில் 4 புள்ளிகள் பெற்று எஃப் பிரிவில் இரண்டாவது இடம் பெற்றிருக்கிறது.
இந்த இரு போட்டிகளிலும் மிகவும் துடிப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜப்பான் அணி வல்லுநர்கள் பலரின் கவனத்தையும் பெற்றிருக்கிறது.
அதேசமயம், களத்துக்கு வெளியே ஜப்பான் அணியின் பயிற்சியாளர் ஹஜிமே மோரியாசு கடைபிடித்த உத்தி ரசிகர்களின் கவனத்தைப் பெற்றதோடு, பலரின் பாராட்டையும் பெற்றிருக்கிறது.
அதுமட்டுமல்லாமல், இந்தப் போட்டியில் ஜப்பான் அணிக்கு ஒரு கோல் வழங்கப்படாததும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 2022 உலகக் கோப்பையில் அவர்களுக்கு சாதகமாக இருந்த விதி, தற்போது அவர்களுக்கு எதிராகச் சென்றுவிட்டதாக ரசிகர்கள் விவாதித்து வருகின்றனர்.
நான்காவது நிமிடத்திலேயே ஜப்பான் முன்னிலை
இந்தப் போட்டி தொடங்கியதில் இருந்தே ஜப்பான் அணி பெரும் ஆதிக்கம் செலுத்தியது. சுமார் 60 சதவிகித நேரம் பந்து அவர்களின் கட்டுப்பாட்டில் தான் இருந்தது. பந்தைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தவர்கள் அதை தொடர்ச்சியாக வாய்ப்புகளாகவும் மாற்றினார்கள். அதனால் துனிசியா அணி தொடர்ச்சியாக தற்காப்பில் அதிக கவனம் செலுத்திக்கொண்டே இருக்கவேண்டிய நிலையில் இருந்தது.

பட மூலாதாரம், Carl Recine/Getty Images
நான்காவது நிமிடத்திலேயே டாய்சி கமாடாவின் கோல் காரணமாக முன்னிலை பெற்ற ஜப்பான் அணி, 31வது நிமிடத்தில் அந்த முன்னிலையை இரட்டிப்பாக்கியது. ஸ்டிரைக்கர் அயாஸே யூடா பாக்ஸுக்கு வெளியே இருந்து அடித்த ஷாட், துனிசிய வீரர்களை ஏமாற்றி கோலானது. பின்னர் இரண்டாவது பாதியில் ஜுன்யா இடோ (69வது நிமிடம்) மற்றும் யூடா (83வது நிமிடம்) ஆகியோர் கோல்கள் அடிக்க 4-0 என்ற அந்த வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தது ஜப்பான்.
இந்த உலகக் கோப்பையில் ரசிகர்களைப் பெருமளவு கவர்ந்திருப்பது ஜப்பான் அணியினரின் துடிப்பான ஆட்டம் தான். ஒவ்வொரு நொடியும் முழு உத்வேகத்தைக் கொடுத்துக்கொண்டே இருக்கிறார்கள் அந்த அணியின் வீரர்கள். கடைசி வரை விடாமல் போராடியதால் தான் நெதர்லாந்துக்கு எதிராக அவர்களால் 88வது நிமிடத்தில் கோலடித்து ஆட்டத்தை சமன் செய்ய முடிந்தது.
போர்ச்சுகல் - டி.ஆர்.காங்கோ ஆட்டம் முடிந்த பிறகு பிபிசி தமிழிடம் பேசியிருந்த இந்திய முன்னாள் வீரரும் தமிழ்நாடு சந்தோஷ் டிராபி அணியின் பயிற்சியாளருமான தர்மராஜ் ராவணன், "போர்ச்சுகல் அணி நடுக்களத்தில் பெரிய இடைவெளியைக் கொடுக்கிறது. துடிப்பான ஜப்பான் அணியினருக்கெல்லாம் அப்படி வாய்ப்பு கொடுத்தால் அவர்கள் 2 கோல்களாவது அடித்திருப்பார்கள்" என்று கூறியிருந்தார். அப்படியான ஆட்டத்தைத்தான் அவர்கள் காட்டியிருந்தார்கள்.
ஒவ்வொரு தருணத்திலும் எதிரணிக்கு சவால் கொடுத்துக்கொண்டே இருந்த, ரசிகர்கள், வல்லுநர்கள் அனைவரையும் கவர்ந்த ஜப்பான் அணியினரின் துடிப்பான ஆட்டம் இந்தப் போட்டியிலும் தொடர்ந்தது.

பட மூலாதாரம், David RamosGetty Images
முன்னணி வீரர்கள் இல்லாத வெற்றிடம் தெரியவில்லை
ஜப்பான் அணியின் கேப்டன் வடாரு எண்டோ இந்த உலகக் கோப்பைக்கு முன்பாக காயமடைந்தார். அதனால், அவர் தொடரிலிருந்து வெளியேறியதோடு ஓய்வும் பெற்றார்.
அடுத்ததாக, நட்சத்திர விங்கர் மிடோமா பிரீமியர் லீக் போட்டியின்போது காயமடைந்து உலகக் கோப்பையில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது. மற்றொரு முக்கிய அட்டாக்கரான டகுமி மினாமினோ டிசம்பர் மாதம் ஏற்பட்ட காயத்திலிருந்து மீண்டு வர முடியாததால், அவரும் உலகக் கோப்பை அணியில் பங்கேற்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
தொடர் தொடங்குவதற்கு முன்பே மூன்று பெரிய வீரர்களை இழந்த ஜப்பான் அணிக்கு, நெதர்லாந்து போட்டியிலும் ஒரு பின்னடைவு ஏற்பட்டது.
ஜப்பானின் மற்றொரு முக்கிய அட்டாக்கரான டகெஃபூசா கூபோ முதல் போட்டியின்போது முழங்காலில் காயமடைந்தார். அதனால், அவர் இந்தப் போட்டியில் பங்கேற்கவேயில்லை. நான்கு முக்கிய வீரர்களைக் காயத்தால் இழந்திருந்தாலும், அந்த வெற்றிடம் எதுவும் தெரியாத அளவுக்கான ஒரு செயல்பாட்டையே ஜப்பான் கொடுத்திருக்கிறது.
அந்த அணியின் பயிற்சியாளர் ஹஜிமே மோரியாசு தன் அணியின் ஆட்டமுறையை மாற்றக்கூடியதாக வைத்திருப்பார். போட்டிக்குப் போட்டி தன் அணுகுமுறை மூலம் எதிரணிகளுக்கு ஆச்சரியம் அளிப்பவர். சிறப்பாக விளையாடிய வீரருக்குப் பதில் வேறொரு வீரரைத் தொடங்கவைத்து அதிர்ச்சியளிப்பார். அந்த அணுகுமுறையை அவர் இந்த உலகக் கோப்பையிலும் தொடர்ந்துகொண்டிருக்கிறார்.
பலம் வாய்ந்த நெதர்லாந்துக்கு எதிராக கேப்டன் கோ இடாகுராவை பெஞ்சில் அமரவைத்துவிட்டு அனுபவ ஷோகோ டனிகுசியை தொடங்கினார். அந்தப் போட்டியில் கூடுதல் அட்டாக்கராக டெய்சன் மேடாவை தொடக்க லெவனில் களமிறக்கியவர், துனிசியாவுக்கு எதிராக ஆவ் டனகாவைக் களமிறக்கி நடுகளத்தைக் கூடுதலாக பலப்படுத்தினார்.
டனகாவின் வருகை காரணமாக, 'சென்ட்ரல் மிட்ஃபீல்டர்' ரோலில் ஆடிய கமாடா, துனிசியாவுக்கு எதிரான போட்டியில் 'அட்டாகிங்' ரோலில் ஆடினார். 4வது நிமிடத்திலேயே கோலடித்து தன் அணிக்கு நல்ல தொடக்கமும் கொடுத்தார் அவர்.

பட மூலாதாரம், Getty Images
வெள்ளை போர்ட் மூலம் கவனம் ஈர்த்த மோரியாசு
அணித் தேர்வில், வீரர்களின் ஆட்டத்தில் தன்னுடைய உத்திகள் மூலமாக தாக்கம் ஏற்படுத்திய மோரியாசு, களத்துக்கு வெளியே செய்த புதுமையின் காரணமாக பல்வேறு ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தார்.
நெதர்லாந்துக்கு போட்டிக்குப் பிறகு பல்வேறு ரசிகர்கள் மோரியாசுவின் படங்களை, வீடியோக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்தார்கள். அவற்றில் தன் கையில் பெரிய எண்கள் எழுதப்பட்டிருந்த வெள்ளை போர்டைக் கையில் பிடித்திருந்தார் மோரியாசு. 'அவர் உத்திகளை சைகை மூலம் வீரர்களுக்குத் தெரிவிக்கிறார்' என்றும், 'அவர் எத்தனை நிமிடங்கள் மீதமிருக்கின்றன என்று சொல்கிறார்' பல விதமாக ரசிகர்கள் அதுபற்றி விவாதித்தார்கள். அதனாலேயே அந்த நிகழ்வு சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.
துனிசியாவுக்கு எதிரான போட்டிக்கு முன்பாக நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் அது நேரத்தைக் குறிப்பதற்காக செய்த விஷயம் என்று மோரியாசு கூறியதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி குறிப்பிட்டிருக்கிறது.
"வீரர்களுக்கு இன்னும் எவ்வளவு நேரம் மீதமுள்ளது அல்லது நேரம் என்ன என்பதைத் தெரிவிப்பதற்காகவே அது செய்யப்பட்டது. அங்கு ஒரு பெரிய திரை உள்ளது, ஆனால் அது எங்களுக்கு நேர் மேலே உள்ளது. அதில் நேரம் காட்டப்பட்டாலும் வீரர்கள் கூரையை நோக்கி மேலே பார்க்க வேண்டியிருந்தது. நேரம் என்னவென்று தங்களுக்குத் தெரியவில்லை என்று பல வீரர்கள் கூறினர். அவர்கள் எங்களிடம் வந்து 'இன்னும் எவ்வளவு நேரம் இருக்கிறது' என்று பலமுறை கேட்பதை நான் பார்த்தேன். என்னால் அதைக் சத்தமாகக் கூற முடியும், ஆனால் அவர்களால் எங்களைக் கேட்க முடியவில்லை, என்னால் அவர்களுக்கு சைகை மூலமும் அதைச் சொல்ல முடியவில்லை, எனவே நேரத்தை வெள்ளை போர்டில் எழுத நான் முடிவு செய்தேன், அதுவே அவர்களுக்கு எளிதான வழியாக இருக்கும் என்று நான் நினைத்தேன்." என்று மோரியாசு பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியிருக்கிறார்.

பட மூலாதாரம், Getty Images
2002ல் சாதகம், 2026ல் பாதகம்
நெதர்லாந்து போட்டியில் வெள்ளை போர்டு விஷயம் விவாதிக்கப்பட்டது என்றால், துனிசியாவுக்கு எதிரான போட்டியில் ஒரு கோல் வழங்கப்படாதது தற்போது பேசுபொருளாகியிருக்கிறது.
ஆட்டத்தின் 10வது நிமிடத்தில் கிடைத்த கார்னரை டோமியாசு கோல் நோக்கி அடித்தார். அதை துனிசியா கோல்கீப்பர் தடுத்தாலும், பந்து எல்லையைக் கடந்துவிட்டதாக ஜப்பான் வீரர்கள் நினைத்தார்கள். ஆனால், நடுவரோ அதை கோல் என அறிவிக்கவில்லை. ஆனால், சிறிது நேரம் விஏஆர் (VAR) நடுவர்களோடு அவர் விவாதித்தார். அப்போது, பந்தின் மிகமிக சிறிய பகுதி எல்லையைக் கடக்கவில்லை என்று உறுதியாக கோல் கொடுக்கப்படவில்லை.
கால்பந்து விதிப்படி, பந்தின் முழு பகுதியும், எல்லைக் கோட்டை முழுமையாகத் தாண்டவேண்டும். பந்து தரையில் படவேண்டும் என்றில்லை, காற்றிலேயே இருந்தாலும் கூட எல்லைக் கோட்டை முழுமையாகத் தாண்டவேண்டும். அப்போதுதான் அது கோலாகவே கருதப்படும். அதேசமயம், காற்றிலேயே இருந்தாலும், பந்தின் ஒரு சிறு பகுதி அந்த எல்லையைக் கடக்கவில்லை என்றால் அது கோல் இல்லை.
இந்தப் போட்டியில் நடந்தது அதுதான். தரையில் பட்டிருந்த பந்தின் பகுதி எல்லையைக் கடந்திருந்தாலும், பந்தின் ஒரு மிகச் சிறிய பகுதி எல்லைக் கோட்டைத் தாண்டவில்லை. அதனால், அது கோலாக வழங்கப்படவில்லை.
இது, பலமுறை நிகழ்ந்திருந்தாலும் இப்போது அதிகம் பேசப்படுவதற்கான காரணம் அந்த இடத்தில் ஜப்பான் இருந்ததுதான்.

பட மூலாதாரம், Juancho TorresAnadolu via Getty Images
ஏனெனில், 2022 உலகக் கோப்பையில் இதே விதி ஜப்பானுக்கு சாதகமாக அமைந்தது. ஸ்பெயினுக்கு எதிரான போட்டியில் ஜப்பான் கோலடிப்பதற்கு முன்பாக, அந்தப் பந்து 'அவே' சென்றுவிட்டதாகக் கருதப்பட்டது. ஸ்பெய்ன் வீரர்கள் கோல் கிக் தரப்படவேண்டும் என்று வாதிட்டார்கள். ஆனால், காற்றில் இருந்த பந்தின் ஒரு சிறு பகுதி எல்லையைத் தாண்டவில்லை என்பதால் அது அவே இல்லை என்று கருதி கோல் வழங்கப்பட்டது. அந்த கோல் காரணமாக வெற்றி பெற்றதோடு அடுத்த சுற்றுக்கும் ஜப்பான் முன்னேறியது. அதன் விளைவாக ஜெர்மனி அணி முதல் சுற்றோடு வெளியேறவேண்டிய நிலை ஏற்பட்டது. அதனால், அந்த கோல் அப்போது பல சர்ச்சைகளையும் விவாதங்களையும் ஏற்படுத்தியது.
இந்நிலையில் அதே விதி தற்போது ஜப்பானுக்குப் பாதகமாக அமைந்திருப்பதால் அது அதிகம் பேசப்பட்டுவருகிறது. ஆனால், ஜப்பான் அணி ஆடிய விதம் அந்த முடிவு போட்டியில் தாக்கம் ஏற்படுத்தாத வகையில் அமைந்துவிட்டது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












