லக்னௌ பயிற்சி மையத்தில் தீ விபத்து: 15 மாணவர்கள் பலி; 5 பேர் காயம்

உத்தரபிரதேசத்தின் தலைநகரான லக்னௌவில் உள்ள அலிகஞ்ச் பகுதியில் இயங்கி வந்த தனியார் பயிற்சி மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 15 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 5 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்தத் தகவலை கே.ஜி.எம்.யு மருத்துவமனை அவசர சிகிச்சை மையத்தின் மருத்துவ கண்காணிப்பாளர் அமிய அகர்வால் உறுதிப்படுத்தியுள்ளார்.
இது குறித்து பிடிஐ செய்தி முகமையிடம் அவர் கூறுகையில், "21 முதல் 22 மாணவர்கள் வரை கொண்டு வரப்பட்டனர். 5 பேருக்குக் காயங்கள் ஏற்பட்டுள்ளதால், அவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இருவர் கட்டடத்திலிருந்து குதித்ததால் காயமடைந்துள்ளனர்; அவர்களின் இடுப்புப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு சி.டி ஸ்கேன் செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 15 மாணவர்கள் இறந்த நிலையிலேயே கொண்டு வரப்பட்டனர். அவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு பிணவறைக்கு அனுப்பப்படும். " என்று தெரிவித்தார்.
உத்தரபிரதேச துணை முதலமைச்சர் பிரஜேஷ் பதக், இந்தச் சம்பவம் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் சம்பவ இடத்தைப் பார்வையிட்டார்.
இதற்கு முன்னதாக, துணை முதலமைச்சர் பிரஜேஷ் பதக் பேசுகையில், "நான் 11-12 உடல்களை என் கண்களால் பார்த்தேன்" என்று கூறியிருந்தார்.
இதன்பின், 'இங்கிருந்து 15 உடல்கள் எடுக்கப்பட்டுள்ளன' என்று பத்திரிகையாளர் ஒருவர் கேள்வி எழுப்பியபோது, "நான் 13-14 உடல்களைப் பார்த்தேன்" என்று துணை முதலமைச்சர் பதிலளித்தார்.
துணை முதலமைச்சர் கூறுவது என்ன?
இந்தச் சம்பவம் குறித்து துணை முதலமைச்சர் பிரஜேஷ் பதக் கூறுகையில், "இந்தத் துயரச் சம்பவத்தில் நம் குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்கள் உயிரிழந்துள்ளனர், காயமடைந்த மாணவர்கள் கே.ஜி.எம்.சி அவசர சிகிச்சை மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்" என்று தெரிவித்தார்.
"இந்தச் சம்பவம் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. முதலமைச்சர் அலிகஞ்சில் திட்டமிடப்பட்டிருந்த தமது அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்துவிட்டு, சம்பவ இடத்துக்கு வந்து கொண்டிருக்கிறார். காயமடைந்தவர்களுக்குச் சிறந்த சிகிச்சையை வழங்குவதே எங்களின் முன்னுரிமையாகும். பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் ஒட்டுமொத்த அரசும் துணைநிற்கும்; அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும்."
"கட்டடத்தின் உள்ளே வேறு யாரும் இருக்கிறார்களா என்பதற்கான தேடுதல் பணி நிறைவடைந்துவிட்டது, அங்கு இப்போது மாணவர்கள் யாரும் இல்லை. கட்டடம் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டுவிட்டது. இந்த விபத்துக்குப் பொறுப்பானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், எந்தவித சமரசமும் இருக்காது" என்று அவர் கூறினார்.
அரசியல் தலைவர்கள் கூறுவது என்ன?

பட மூலாதாரம், ANI
இந்தச் சம்பவம் குறித்து உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தும் கருத்து தெரிவித்துள்ளார். அவர் அலிகஞ்ச் பயணத்தில் இருந்த நிலையில், அங்கிருந்து லக்னௌவுக்குப் புறப்பட்டுள்ளார். முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் சம்பவ இடத்தைப் பார்வையிட்டார்.
யோகி ஆதித்யநாத் கூறுகையில், "லக்னௌவில் ஒரு விபத்து நிகழ்ந்துள்ளது. அங்கு ஏற்பட்ட தீ விபத்தில் சில மாணவர்கள் சிக்கிக்கொண்டனர். அதன் காரணமாக அவர்களின் துயரமான மரணம் ஏற்பட்டுள்ளது. நிர்வாகம் அங்கு மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளது" என்று தெரிவித்தார்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு யோகி ஆதித்யநாத் தனது இரங்கலைத் தெரிவித்துக்கொண்டார்.
காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, எக்ஸ் தளத்தில், துயரமடைந்த குடும்பங்களுக்குத் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
அவர் தனது பதிவில், "லக்னௌவில் உள்ள பயிற்சி மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பலர் உயிரிழந்ததும், பலர் காயமடைந்ததும் மிகுந்த வேதனை அளிக்கிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.
"துயரத்தில் இருக்கும் அனைத்து குடும்பங்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்" என்றும் அவர் கூறியுள்ளார்.

சமாஜ்வாதி கட்சித் தலைவரும் உத்தரபிரதேச முன்னாள் முதலமைச்சருமான அகிலேஷ் யாதவ், எக்ஸ் தளத்தில், "லக்னௌவில் உள்ள ஒரு பயிற்சி மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிர்நீத்தவர்களுக்கு எங்கள் அஞ்சலியைச் செலுத்துகிறோம். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த துயரத்தில் இருக்கும் அந்தக் குடும்பங்களுக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்."
மேலும், காயமடைந்தவர்களுக்குச் சிறந்த மருத்துவ வசதியை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று அகிலேஷ் கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர் கூறுகையில், "இது மிகவும் துயரமான சம்பவமாகும். இந்த விபத்துக்கான காரணங்கள் நேர்மையாக விசாரிக்கப்பட வேண்டும்; எந்தக் குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்கும் இது நேர்ந்திருக்கலாம். வருங்காலத்தில் இத்தகைய கொடூரமான விபத்துகள் நிகழாமல் தடுப்பதே நம் அனைவரின் முயற்சியாக இருக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












