வாரணாசியில் உள்ள மசூதி குறித்து பாகிஸ்தான் அதிபர் தெரிவித்த கருத்து - இந்திய தரப்பு கடுமையான எதிர்வினை

பட மூலாதாரம், RK
வாரணாசியின் கஞ்ச் ஷஹீதா மசூதி குறித்த பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரியின் கருத்தை இந்தியா நிராகரித்துள்ளது.
வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் சனிக்கிழமை ஊடகங்களின் கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில்,
"பாகிஸ்தான் அதிபரின் ஆதாரமற்ற கருத்துக்களை இந்தியா முற்றிலுமாக நிராகரிக்கிறது. எப்படியிருந்தாலும், இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் கருத்து தெரிவிக்க அவருக்கு எந்த உரிமையும் இல்லை" என்றார்.
இதற்கு முன்னதாக சனிக்கிழமை, பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி வாரணாசியில் உள்ள கஞ்ச் ஷஹீதா மசூதியைக் குறிப்பிட்டு இந்தியாவில் உள்ள முஸ்லிம் மத வழிபாட்டுத் தலங்கள் குறித்து ஒரு கருத்தை வெளியிட்டிருந்தார்.
பாகிஸ்தான் அதிபர் அலுவலக அறிக்கை ஒன்றில், "இந்தியாவில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க முஸ்லிம் மத வழிபாட்டுத் தலங்கள் இடிக்கப்படுவதற்கும், அவற்றிற்கு எழுந்துள்ள அச்சுறுத்தல்கள் குறித்தும் அதிபர் ஆசிப் அலி சர்தாரி ஆழ்ந்த கவலை தெரிவித்தார். இதில் வாரணாசியின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கஞ்ச் ஷஹீதா மசூதியும் அடங்கும்." என கூறப்பட்டுள்ளது.
பாகிஸ்தானுக்கு இந்தியாவின் பதில்
பாகிஸ்தான் அதிபர் அலுவலகத்தின்படி "அதிபர் ஆசிப் அலி சர்தாரி, இந்தியா இத்தகைய நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார், மேலும் இது இந்தியாவில் பிளவையும் நிரந்தர ஒழுங்கில்லாத நிலையையும் உருவாக்கும் அபாயத்தை ஏற்படுத்தும் என்று எச்சரித்தார்."
இந்தியாவில் 'சிறுபான்மையினரின் உரிமைகள் மற்றும் பகிரப்பட்ட கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாக்க' வேண்டும் என்று சர்தாரி இந்தியாவிற்கு வேண்டுகோள் விடுத்தார்.

பட மூலாதாரம், @PressOfPakistan
இந்த விவகாரம் குறித்து பதிலளிக்கையில் இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், பாகிஸ்தான் அதிபரின் கருத்துக்கள் அபத்தமானவை என்று கூறினார்.
"மனித உரிமைகள் விவகாரத்தில் பாகிஸ்தானின் சொந்த சாதனை மிகவும் மோசமாக இருப்பது, உலகம் முழுவதும் விவாதிக்கப்பட்டு வருவதால், இந்தக் கருத்துக்கள் அபத்தமானவை. பல்வேறு மதங்களைச் சேர்ந்த சிறுபான்மையினரை திட்டமிட்ட முறையில் இலக்கு வைப்பதும், அவர்களை ஒடுக்குவதும் பாகிஸ்தானின் நீண்டகால வரலாறு என்பது அனைவருக்கும் தெரியும்" என்று ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறினார்.
"இந்த உண்மையை பார்க்கும்போது, பாகிஸ்தான் அதிபரின் கருத்துக்களை ஒரு திட்டமிட்ட அரசியல் தாக்குதலாக மட்டுமே கருத முடியும்," என அவர் மேலும் கூறினார்.
இத்தகைய அறிக்கைகள் பாகிஸ்தானின் தீவிரவாதம் மற்றும் வெறுப்பின் தேசியக் கொள்கைகளால் தூண்டப்பட்டவை என்று ரந்தீர் ஜெய்ஸ்வால் குற்றம் சாட்டினார்.
கஞ்ச் ஷஹீதா மசூதியின் விவகாரம் என்ன?

பட மூலாதாரம், RK
வாரணாசியில் காசி ரயில் நிலைய விரிவாக்கம் மற்றும் மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ், ரயில்வே நிர்வாகம் நிலையத்தின் முக்கிய நுழைவாயிலுக்கு அருகில் அமைந்துள்ள கஞ்ச் ஷஹீதா மசூதிக்கு நோட்டீஸ் அனுப்பி, ஜூன் 20-க்குள் வளாகத்தை காலி செய்ய உத்தரவிட்டுள்ளது.
செய்தி நிறுவனமான பிடிஐயின்படி, வியாழக்கிழமை காசி ரயில் நிலையத்தின் முக்கிய நுழைவாயிலில் அமைந்துள்ள கஞ்ச் ஷஹீதா மசூதியின் சுவரில் ஒரு நோட்டீஸ் ஒட்டியுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நோட்டீஸில், நிலைய விரிவாக்கத்தின் சட்டப்பூர்வ செயல்முறையின் கீழ் ஜூன் 20-க்குள் இடத்தை காலி செய்யக் கோரப்பட்டுள்ளது.
பிடிஐயின்படி, நிலையத்தின் விரிவாக்கம் மற்றும் முன்மொழியப்பட்ட கட்டுமானப் பணிகளுக்காக காசி ரயில் நிலையத்தைச் சுற்றியுள்ள நிலங்களை ஆக்கிரமிப்பிலிருந்து விடுவிப்பது அவசியம் என கேன்ட் ரயில் நிலையத்தின் ஸ்டேஷன் சூப்பரிண்டெண்டண்ட் அர்பித் குப்தா தெரிவித்துள்ளார்.
மசூதி கமிட்டி என்ன சொல்கிறது

பட மூலாதாரம், RK
மசூதியின் மேலாண்மைக் குழுவான 'இன்திஜாமியா மசூதி கமிட்டி' இந்த நோட்டீஸை சட்டவிரோதமானது என்று கூறியுள்ளதுடன், இதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம் என்றும் கூறியுள்ளது.
பிபிசி செய்தியாளர் பிரேரணா இது தொடர்பாக அஞ்சுமன் இன்திஜாமியா மசூதி கமிட்டியின் இணைச் செயலாளர் எஸ்.எம்.யாசீனுடன் பேசினார்.
''இந்த மசூதி சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. இது 1034 இல் கட்டப்பட்டது. இதற்கு கஞ்ச் ஷஹீதா என்று பெயர் வரக் காரணம், இங்கு யாருடைய கல்லறைகள் உள்ளதோ, அவர்களில் பலர் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றவர்கள். எனவே இதற்கு வரலாற்று முக்கியத்துவமும் உண்டு," என எஸ்.எம்.யாசீன் கூறினார்.
"ரயில்வே 1887 இல் தான் வந்தது. அவர்களின் நோட்டீஸிற்கு நாங்கள் பதிலளித்து வருகிறோம். டிஎம்மிடமிருந்து உறுதிமொழி கிடைத்துள்ளது. மூன்று நாட்களுக்கு முன்பு நாங்கள் அவரை சந்தித்தோம். மசூதி வலுக்கட்டாயமாக இடிக்கப்படாது என்று அவர் எங்களுக்கு உறுதியளித்துள்ளார்."
பாகிஸ்தான் அதிபரின் கருத்தை விமர்சித்த எஸ்.எம்.யாசீன், "பாகிஸ்தான் அதிபர் தனது சொந்த நாட்டுப் பிரச்னைகளைப் பார்க்கட்டும், எங்கள் விவகாரங்களில் தலையிட வேண்டாம். எங்கள் பிரச்னைகளை நாங்களே பார்த்துக் கொள்வோம். அவர் விஷயத்தை மேலும் சிக்கலாக்குகிறார்'' என்றார்.
1883-84 ஆம் ஆண்டின் நில அளவை வரைபடத்திலும், அதற்கு முந்தைய வரைபடங்களிலும் மசூதி பற்றிய குறிப்பு இருப்பதாக இன்திஜாமியா மசூதி கமிட்டி கூறுகிறது.
இன்திஜாமியா மசூதி கமிட்டியின் கூற்றுப்படி தள்ளுபடி செய்யப்பட்டதாக நோட்டீஸில் எழுதப்பட்டுள்ள வழக்கு, மசூதிக்கு வெளியே கிழக்கே உள்ள நிலம் தொடர்பானது. மசூதிக்கும் இந்த வழக்குக்கும் "எந்த தொடர்பும் இல்லை. இந்த நோட்டீஸ் தவறாக வழிநடத்துவதாகும்." என மசூதி கமிட்டி கூறுகிறது.
இது தொடர்பாக ரயில்வே அதிகாரிகளுடன் பேச பிபிசி முயன்றது. ரயில்வேயின் அறிக்கை கிடைத்ததும் செய்தியில் சேர்க்கப்படும்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












