ஸ்பெயின் வெற்றி: சௌதி ஆட்டங்களில் மட்டும் தேசிய கொடிகள் தரையில் படாமல் உயர்த்திப் பிடிக்கப்படுவது ஏன்?

ஸ்பெயின் - சௌதி அரேபியா, உலகக்கோப்பை கால்பந்து 2026, சௌதி அரேபியா கொடி தரையில் படாதது ஏன்?

பட மூலாதாரம், Buda MendesGetty Images

    • எழுதியவர், பிரதீப் கிருஷ்ணா
    • பதவி, பிபிசி தமிழ்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

சௌதி அரேபியாவுக்கு எதிரான ஃபிஃபா உலகக் கோப்பை போட்டியில் 4-0 என்று மிகப் பெரிய வெற்றியைப் பதிவு செய்திருக்கிறது ஸ்பெயின். இந்த உலகக் கோப்பையில் ஸ்பெயின் அணி பெறும் முதல் வெற்றி இது.

அட்லாண்டாவில் நடந்த இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் எச் பிரிவில் முதலிடத்துக்கு முன்னேறியிருக்கிறது ஸ்பெயின். அந்த அணிக்காக மிகேல் ஓயர்சபால் 2 கோல்களும், லமீன் யமால் ஒரு கோலும் அடித்தனர். மற்றொன்று சௌதி அரேபிய வீரர் அடித்த சுய கோல்.

கேப் வெர்டே அணிக்கு எதிரான முந்தைய போட்டியில் 90 நிமிடங்களில் ஒரு கோல் கூட அடிக்க முடியாத ஸ்பெயின் அணி இந்தப் போட்டியில் தொடர்ச்சியாக வாய்ப்புகளை உருவாக்கிக் கொண்டே இருந்தது. அதன் விளைவாகத்தான் இந்தப் போட்டியில் 4 கோல்கள் அடித்திருக்கிறது அந்த அணி.

அதேசமயம் முதல் போட்டியில் உருகுவே அணிக்கெதிராகப் போராடி டிரா செய்த சௌதி அரேபிய அணி இந்தப் போட்டியில் பந்தை தங்கள் கட்டுக்குள் வைக்கவும், வாய்ப்புகளை உருவாக்கவும் தடுமாறியது. அதனால் அந்த அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பு தற்போது கடினமாகியிருக்கிறது.

ஸ்பெயின் அணியின் இந்த அதிரடி ஆட்டத்துக்கான காரணம் என்ன? சௌதி அரேபியே எங்கே பின்தங்கியது? எந்தப் போட்டியிலும் நடக்காத ஒரு விஷயம் இந்தப் போட்டிக்கு முன்பாக நடந்தது ஏன்? அலசுவோம்.

அணுகுமுறையை மாற்றிய ஸ்பெயின்

ஸ்பெயின் - சௌதி அரேபியா, உலகக்கோப்பை கால்பந்து 2026, சௌதி அரேபியா கொடி தரையில் படாதது ஏன்?

பட மூலாதாரம், Buda MendesGetty Images

கேப் வெர்டே அணிக்கெதிரான தங்களின் முந்தைய போட்டியில் ஸ்பெயின் அணி தங்களின் வழக்கமான டிக்கி டாகா பாஸிங்கிலேயே அதிக கவனம் செலுத்தியது. 811 பாஸ்களில் 755 பாஸ்களை வெற்றிகரமாக செய்தது அந்த அணி. அந்தப் போட்டியில் ஷாட்களை மாற்றும் அவர்களின் திறன் அவ்வளவு சிறப்பாக இருக்கவில்லை. அவர்கள் உருவாக்கிய 27 வாய்ப்புகளில், 7 மட்டுமே இலக்கை நோக்கி செலுத்தப்பட்டன.

ஆனால், இந்தப் போட்டியில் ஸ்பெயின் பயிற்சியாளர் லூயிஸ் டி லா ஃப்யூன்டே செய்த சில மாற்றங்கள், ஸ்பெயினின் ஆட்டத்தில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தின. கடந்த போட்டியில் மிட்ஃபீல்டர் காவியை இடது விங்கராக ஆட வைத்திருந்த அவர், இந்தப் போட்டியில் விங்கரான அலெக்ஸ் பேனாவையே களமிறக்கினார். வலது விங்கில் நட்சத்திர வீரர் லமீன் யமால் களமிறக்கப்பட்டார்.

நடுகளத்தில் ஃபேபியன் ரூயிஸுக்குப் பதிலாக, அவரை விட தாக்குதலில் அதிகம் கவனம் செலுத்தக்கூடிய டேனி ஓல்மா போட்டியைத் தொடங்கினார். வலது ஃபுல்பேக் பொசிஷனில் மார்கோஸ் யொரென்டேவுக்குப் பதிலாக பெட்ரோ போரோ களமிறக்கப்பட்டார். இந்த அத்தனை மாற்றங்களுமே தாக்குதல் ஆட்டத்தில் கூடுதலாகப் பங்களிக்கக்கூடிய மாற்றங்கள்.

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

இந்த மாற்றங்களின் விளைவை போட்டியின் தொடக்கத்தில் இருந்தே பார்க்க முடிந்தது. நேரடியாக தாக்குதல்கள் தொடங்கின. பாக்சுக்குள் இன்னும் அதிகமான பாஸ்கள், கிராஸ்கள் செலுத்தப்பட்டன. கடந்த போட்டியில் டாரஸ் இலக்கைக் குறிவைக்கத் தடுமாறிய நிலையில், அவருக்குப் பதில் களமிறங்கிய யமால் 10வது நிமிடத்திலேயே கோலடித்து தன் அணிக்கு முன்னிலை ஏற்படுத்திக் கொடுத்தார். யமாலுக்கும் ஒயர்சபாலுக்கும் இடையிலான புரிதல், ஸ்பெயினின் தாக்குதல் ஆட்டத்தை பெருமளவு பலப்படுத்தியது. யமாலின் அந்த கோலுக்கு அசிஸ்ட் செய்தது ஒயர்சபால் தான்.

அதே உத்வேகத்தோடு ஆடிய ஒயர்சபால் 21வது நிமிடத்திலும், 24வது நிமிடத்திலும் கோலடித்து தன் அணியின் முன்னிலையை அதிகரித்தார்.

யமால், ஒயர்சபால், பேனே ஆகியோரால் முன்களம் சிறப்பாக செயல்பட்டிருக்க, அவர்களின் தாக்கத்தை இரண்டாவது பாதியில் அவர்கள் இல்லாதபோது தெளிவாக உணர முடிந்தது. முதல் பாதியின் முடிவிலேயே யமால், ஒயர்சபால் இருவருக்கும் ஓய்வளிக்கப்பட்டது. அதன்பிறகு ஸ்பெயின் அணி வாய்ப்புகளை உருவாக்கினாலும் அதை அவர்களால் கோலாக்க முடியவில்லை.

53வது நிமிடத்தில் எளிய வாய்ப்பை ஃபெரான் டாரஸ் தவறவிட்டது, பின்னர் ஒரு கோலை ஆஃப் சைட் பொசிஷனில் இருந்து அவரே அடித்தது போன்றவை முதல் போட்டியில் ஸ்பெயின் எதைத் தவறவிட்டது என்பதை உணர்த்தின. அவர்கள் இரண்டாவது பாதியில் அடித்த அந்த ஒரு கோலுமே சௌதி வீரர் அல் தம்பாகதி அடித்த சுய கோலால் வந்தது தான்.

ஸ்பெயின் - சௌதி அரேபியா, உலகக்கோப்பை கால்பந்து 2026, சௌதி அரேபியா கொடி தரையில் படாதது ஏன்?

பட மூலாதாரம், Patrick Smith - FIFAFIFA via Getty Images

வாய்ப்புகளையே உருவாக்காத சௌதி அரேபியா

ஒருபக்கம் ஸ்பெயின் அணி வாய்ப்புக்கு மேல் வாய்ப்பாக உருவாக்கிக் கொண்டிருக்க சௌதி அரேபிய அணியோ கோலடிக்கும் வாய்ப்புகளையே உருவாக்கவில்லை. அந்த அணி ஆரம்பத்தில் இருந்தே தடுப்பாட்டத்தில் கவனம் செலுத்தியது. தங்கள் தொடக்க லெவனில் அந்த அணியின் பயிற்சியாளர் ஜார்ஜியோஸ் டொனிஸ் செய்த மாற்றங்கள் அதையே உணர்த்தின.

உருகுவேவுக்கு எதிராக 4-4-2 ஃபார்மேஷனில் களமிறங்கிய சௌதி அரேபியா, ஸ்பெயினுக்கு எதிராக 5-4-1 ஃபார்மேஷனுக்கு மாறியது. கூடுதலாக ஒரு டிஃபண்டரை அந்த அணி களமிறக்கியுமே கூட அவர்களால் ஸ்பெய்னின் அதிரடியைத் தடுக்க முடியவில்லை. அதேசமயம், அது சௌதி அரேபியாவின் கோல் உருவாக்கும் திறனை பாதித்தது. அவர்களால் பந்தை முன்னே கடத்தவே முடியவில்லை. நடுகளத்தில் மிகவும் பலமான ஸ்பெயின் அணி, அங்கே அதிக வீரர்களைப் பயன்படுத்தும்போது, சௌதி அரேபிய 2 நடுக்கள வீரர்களை மட்டும் பயன்படுத்தியது அவர்கள் பந்துகளை வெல்வதற்கான வாய்ப்பைக் குறைத்தது. எனவே ஸ்பெயின் அணி சௌதி அரேபியாவின் பாதியில் பந்தை எளிதாக தங்கள் வசம் வைத்திருக்க முடிந்தது.

இந்த மொத்த 90 நிமிடங்களில் சௌதி அரேபிய அணி உருவாக்கியது மொத்தமே 3 வாய்ப்புகள் தான். அதில் கோல் நோக்கி அடிக்கப்பட்டவை ஒன்றே ஒன்று. தொடர்ந்து டிஃபன்ஸிவாகவே ஆடிக் கொண்டிருந்ததன் விளைவாக அந்த அணியால் ஒரு கோல் கூட அடிக்க முடியாமல் போயிருக்கிறது. இது அவர்களுக்கு மிகப் பெரிய தோல்வி ஒன்றைப் பரிசளித்திருக்கிறது.

ஸ்பெயின் - சௌதி அரேபியா, உலகக்கோப்பை கால்பந்து 2026, சௌதி அரேபியா கொடி தரையில் படாதது ஏன்?

பட மூலாதாரம், Mattia Ozbot/Getty Images

சௌதி அரேபிய கொடி தரையில் படாதது ஏன்?

இந்தப் போட்டி தொடங்குவதற்கு முன்பாக ஒரு வித்தியாசமான விஷயத்தைக் காண முடிந்தது. இந்த 2026 உலகக் கோப்பை தொடரில் வழக்கமாக போட்டி தொடங்குவதற்கு முன் தேசிய கீதங்கள் பாடும்போது இரு நாடுகளின் கொடியும் தரையில் விரிக்கப்பட்டிருக்கும். ஆனால், இந்தப் போட்டியில் இரு நாட்டுக் கொடிகளும் பலரால் உயர்த்திப் பிடிக்கப்பட்டிருந்தன.

ஆனால், இந்தப் போட்டியில் மட்டுமல்ல, இதற்கு முன்பு உருகுவே - சௌதி அரேபியா அணிகள் விளையாடிய போட்டியிலுமே அந்த இரு நாட்டு கொடிகளும் பலரால் தரைக்கு மேலே உயர்த்திப் பிடிக்கப்பட்டிருந்தன. சௌதி அரேபியா விளையாடும் போட்டிகளில் மட்டும் கொடிகளை உயர்த்திப் பிடிக்கும் நடைமுறை பின்பற்றப்படுவது ஏன் என்ற கேள்வி வெகுவாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

ஸ்பெயின் - சௌதி அரேபியா, உலகக்கோப்பை கால்பந்து 2026, சௌதி அரேபியா கொடி தரையில் படாதது ஏன்?

பட மூலாதாரம், Buda MendesGetty Images

சௌதி அரேபியாவின் தேசியக் கொடி வெறும் ஒரு நாட்டின் அடையாளமாக மட்டும் பார்க்கப்படுவதில்லை, அது ஒரு புனித சின்னமாகப் பார்க்கப்படுகிறது. இஸ்லாத்தின் மிக அடிப்படையான விசுவாசப் பிரகடனமாகக் கருதப்படும் ஷஹாதா (Shahada) சௌதி அரேபியாவின் கொடியில் எழுதப்பட்டிருக்கும்.

அந்த ஷஹாதா என்பது இஸ்லாம் மதத்தின் ஐந்து தூண்களில் முதலாவதாக கருதப்படுகிறது. "வணக்கத்திற்குரியவன் அல்லாவைத் தவிர வேறு யாருமில்லை என்றும், முஹம்மது நபி அவர்கள் அல்லாவின் தூதர் என்றும் நான் சாட்சி கூறுகிறேன்" என்ற பொருள் கொண்ட வாசகமே ஷஹாதா.

அந்த வாசகங்கள் இருப்பதால் சௌதி அரேபியாவின் கொடி தரையில் படுவது அவமதிப்பாகக் கருதப்படுகிறது. இஸ்லாமிய நம்பிக்கையின்படி, இறைவனின் பெயரும் இந்த புனித வாசகமும் கொண்ட ஒரு பொருள் எக்காரணம் கொண்டும் அவமதிக்கப்படக் கூடாது. அதனால்தான், அவர்கள் கொடி உலகக் கோப்பை போட்டியின்போது தரையில் விரிக்கப்படாமல், மேலே உயர்த்திப் பிடிக்கப்படுகின்றன.

சொல்லப்போனால், சௌதி அரேபியா கொடி விஷயத்தில் பல கட்டுப்பாடுகளைக் கொண்டுள்ளது. அவற்றை மிகவும் தீவிரமாகவும் கடைபிடிக்கிறது. அந்நாட்டு கொடி தரை, புல்வெளி, தண்ணீர் அல்லது அதற்கு அடியில் உள்ள எந்தவொரு பரப்பிலும் படவே கூடாது.

ஸ்பெயின் - சௌதி அரேபியா, உலகக்கோப்பை கால்பந்து 2026, சௌதி அரேபியா கொடி தரையில் படாதது ஏன்?

பட மூலாதாரம், Mattia OzbotGetty Images

உலகில் எந்தவொரு பெரிய துயரச் சம்பவம் அல்லது நாட்டின் தலைவர்கள் மறைந்தாலும், துக்கம் அனுசரிப்பதற்காகத் தேசியக் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படுவது உலக வழக்கம். ஆனால், சௌதி அரேபியக் கொடி உலகிலேயே அரைக்கம்பத்தில் இறக்கப்படாத மிகச் சில கொடிகளில் ஒன்று. புனித வாசகம் கொண்ட கொடியைக் கீழே இறக்குவது ஆன்மீக ரீதியாகத் தவறானது என்பதால், எப்போதும் அது உச்சிக் கம்பத்திலேயே பறக்கவிடப்படும்.

அதேபோல், சௌதி கொடியையோ அல்லது அதில் உள்ள வாசகத்தையோ உடைகள், காலணிகள் அல்லது விளம்பரப் பொருட்களில் அச்சிட அந்நாட்டு வர்த்தக அமைச்சகம் முழுமையாகத் தடை விதித்துள்ளது. இப்படியாக பல்வேறு கட்டுப்பாடுகள் அவர்களின் கொடி மீது விதிக்கப்பட்டிருக்கிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு