நீட் தேர்வு ரத்து: வினாத்தாள் கசிவு விவகாரத்தில் என்ன நடந்தது?

பட மூலாதாரம், ANI
கடந்த மே 3-ஆம் தேதி நடைபெற்ற நீட் (இளநிலை) 2026 நுழைவுத்தேர்வை, வினாத்தாள் கசிவு புகார்களையடுத்து தேசியத் தேர்வு முகமை (என்.டி.ஏ) ரத்து செய்துள்ளது. மத்திய அரசின் ஒப்புதலுக்குப் பிறகு இந்தத் தேர்வு ரத்து செய்யப்பட்டதாக என்.டி.ஏ தெரிவித்துள்ளது.
இந்தத் தேர்வு மீண்டும் நடத்தப்படும் என்றும், புதிய தேர்வுத் தேதிகள் மற்றும் ஹால் டிக்கெட் குறித்த விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வ இணையதளங்களில் வெளியிடப்படும் என்றும் என்.டி.ஏ கூறியுள்ளது.
ராஜஸ்தானில் கடந்த மே 10-ஆம் தேதி வினாத்தாள் கசிந்தது தொடர்பான செய்திகள் வெளியானதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மருத்துவப் படிப்பிற்காக நடத்தப்பட்ட இந்தத் தேர்வில் சுமார் 22 லட்சம் மாணவர்கள் பங்கேற்றனர். அவர்கள் அனைவரும் இப்போது மீண்டும் தேர்வு எழுத வேண்டும். இருப்பினும், இதற்காகத் கூடுதல் கட்டணம் எதுவும் வசூலிக்கப்படாது.
நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகள் மோதி அரசை கடுமையாக விமர்சித்துள்ளன.
"இது இப்போது ஒரு தேர்வாக இல்லை; நீட் என்பது ஒரு ஏலமாக மாறிவிட்டது," என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
தேர்வு ரத்து செய்யப்பட்டதைக் கண்டித்து டெல்லியில் 'என்.எஸ்.யு.ஐ' மாணவர் அமைப்பு போராட்டங்களை நடத்தியுள்ளது.
அந்த அமைப்பின் தேசியத் தலைவர் வினோத் ஜாக்கர், "நாடு முழுவதும் உள்ள மாணவர்கள் வீதிகளில் இறங்கிப் போராடுகிறார்கள்; அரசாங்கம் எங்கே இருக்கிறது என்று அவர்கள் கேட்கிறார்கள். கடினமாக உழைத்துத் தேர்வுக்குத் தயாரானவர்களின் எதிர்காலம், வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் குழுக்களில் வெறும் ஐந்தாயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளது," என்றார்.
"குற்றம் செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நான் அரசை வலியுறுத்துகிறேன். வினாத்தாள் கசிவுகள் தொடர்ந்து நீடித்தால், மோதி அரசாங்கமும் என்.டி.ஏ-வும் தேர்வுகளை நடத்துவதற்குத் தகுதியற்றவர்கள் என்பதையே இது காட்டுகிறது," என்றும் அவர் தெரிவித்தார்.
தேசிய தேர்வு முகமை கூறுவது என்ன?

பட மூலாதாரம், ANI
தேசியத் தேர்வு முகமை தனது அதிகாரப்பூர்வ 'எக்ஸ்' பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "இந்த விவகாரத்தை முழுமையாக விசாரணை செய்ய சிபிஐ-யிடம் ஒப்படைக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த விசாரணைக்கு என்.டி.ஏ முழு ஒத்துழைப்பு வழங்கும்; தேவையான அனைத்து ஆவணங்களையும் தகவல்களையும் விசாரணை அமைப்பிடம் சமர்ப்பிக்கும்," என்று குறிப்பிட்டுள்ளது.
ராகுல் காந்தி கூறியது என்ன?

பட மூலாதாரம், ANI
காங்கிரஸ் எம்.பி-யும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டது குறித்துப் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.
ராகுல் காந்தி தனது 'எக்ஸ்' தளப் பதிவில், "நீட் 2026 தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. 22 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்களின் உழைப்பு, தியாகம் மற்றும் கனவுகளை இந்த ஊழல் நிறைந்த பாஜக அரசு நசுக்கிவிட்டது," என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர், "யாரோ ஒரு தந்தை கடன் வாங்கினார், ஒரு தாய் தனது நகைகளை விற்றார், லட்சக்கணக்கான குழந்தைகள் இரவு பகலாக கண்விழித்துப் படித்தனர். ஆனால் அவர்களுக்குப் பதிலாகக் கிடைத்தது என்னவோ வினாத்தாள் கசிவு, அரசின் அலட்சியம் மற்றும் கல்வியில் திட்டமிடப்பட்ட ஊழல் மட்டுமே," என்று எழுதியுள்ளார்.
"இது வெறும் தோல்வி மட்டுமல்ல, இளைஞர்களின் எதிர்காலத்திற்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றம். ஒவ்வொரு முறையும் வினாத்தாள் மாஃபியாக்கள் தப்பிவிடுகிறார்கள், நேர்மையான மாணவர்கள் தண்டனையை அனுபவிக்கிறார்கள். இப்போது லட்சக்கணக்கான மாணவர்கள் மீண்டும் அதே மன அழுத்தம், பொருளாதாரச் சுமை மற்றும் நிச்சயமற்ற நிலையை எதிர்கொள்வார்கள்," என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
"ஒருவருடைய விதியைத் தீர்மானிப்பது கடின உழைப்பு அல்ல, பணமும் செல்வாக்கும்தான் என்றால், பிறகு கல்வியின் அர்த்தம் என்ன? பிரதமரின் 'அமிர்த காலம்' என்று அழைக்கப்படுவது, நாட்டிற்கு இப்போது 'விஷக் காலமாக' மாறிவிட்டது," என்று அவர் சாடியுள்ளார்.
இந்த விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் எம்.பி பிரியங்கா காந்தி உள்ளிட்ட மற்ற தலைவர்களும் கேள்விகளை எழுப்பியுள்ளனர்.
வினாத்தாள் எங்கு கசிந்தது?
நீட் வினாத்தாள் ராஜஸ்தான் மற்றும் கேரளாவில் கசிந்ததாகப் பல ஊடக செய்திகள் கூறுகின்றன.
ஊடகத் தகவல்களின்படி, ராஜஸ்தான் சிறப்பு அதிரடிப்படை நடத்திய முதற்கட்ட விசாரணையில் வினாத்தாள் கசிந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. அதன் அடிப்படையில், வினாத்தாளின் பிடிஎஃப் கோப்பு ஒன்று கேரளாவிலிருந்து ராஜஸ்தானின் சீக்கர் பகுதிக்குப் பகிரப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து ராஜஸ்தான் அமைச்சர் கிரோடி லால் மீனா ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம், "அரசாங்கம் வினாத்தாள் கசிந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்தவுடனேயே அரசு தேர்வை ரத்து செய்துவிட்டு, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது," என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "வினாத்தாளின் 320 கேள்விகளில் 120 கேள்விகள் கசிந்துள்ளதாகக் கூறப்படுகிறது. கேரளா அல்லது சீக்கர் (ராஜஸ்தான்) என எங்கிருந்தாலும் சரி, குற்றம் செய்தவர்கள் தப்பிக்க முடியாது. இந்த விவகாரத்தை அரசு மறைக்க முயற்சிப்பதாக எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. ஆனால், உடனடியாகத் தேர்வை ரத்து செய்துவிட்டு சிபிஐ விசாரணை தொடங்கப்பட்டுள்ளது," என்று தெரிவித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































