You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மணிக்கணக்கில் அமர்ந்து வேலை பார்க்கிறீர்களா? - 5 நிமிட நடைபயிற்சி உங்களுக்கு உதவலாம்
- எழுதியவர், மிஷெல் ராபர்ட்ஸ்
- பதவி, டிஜிட்டல் சுகாதார ஆசிரியர்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்
மின்னஞ்சல்களுக்குப் பதிலளிப்பதாக இருந்தாலும் சரி, அல்லது டீம்ஸ் அழைப்புகளில் பேசுவதாக இருந்தாலும் சரி, வேலை வாழ்க்கையின் பெரும்பகுதி ஒரு நாற்காலியில் அமர்ந்திருப்பதைச் சுற்றியே சுழல்கிறது.
ஆனால், இவ்வாறு அமர்ந்திருக்கும் பழக்கம் நமது ஆரோக்கியத்தைப் பாதித்து வருகிறது.
நீண்ட நேரம் அமர்ந்திருப்பது உடல் பருமன், இதய நோய் மற்றும் வகை 2 நீரிழிவு நோய் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.
இருப்பினும், வேலையில் உற்பத்தித்திறனைப் பராமரிக்கும் அதே வேளையில், எவ்வளவு நேரத்துக்கு ஒருமுறை எழுந்து நடமாட வேண்டும் என்பது குறித்துத் தெளிவாகத் தெரியவில்லை.
இதற்கான சரியான சமநிலை என்ன?
பிரிட்டிஷ் ஜர்னல் ஆஃப் ஸ்போர்ட்ஸ் மெடிசினில் இந்த வாரம் வெளியிடப்பட்ட கொலம்பியா பல்கலைக்கழகத்தின் ஆய்வின்படி, ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஐந்து நிமிட இடைவெளிகளை அல்லது "குறுகிய உடல் இயக்க இடைவெளிகள் (மூவ்மென்ட் ஸ்நாக்ஸ்)" எடுப்பது, வேலையின் திறனை இழக்காமல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான சிறந்த மற்றும் சாத்தியமான வழியாகும்.
உற்பத்தித்திறன், மனநிலை மற்றும் விழிப்புணர்வில் முன்னேற்றம்
தற்போது பெரும்பாலான மக்கள் தாங்கள் விழித்திருக்கும் நேரத்தில் முக்கால்வாசிப் பகுதியை ஒரே இடத்தில் அமர்ந்தே கழிக்கிறார்கள் என்று முதன்மை ஆராய்ச்சியாளர் கீத் டயஸ் பிபிசி நியூஸிடம் தெரிவித்தார்.
"குறைவாக அமருங்கள், அதிகமாக நடமாடுங்கள்" என்ற பொதுவான அறிவுரை சரியானது என்றாலும், மக்கள் அதற்கான சரியான அளவு என்ன என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.
"நல்ல செய்தி என்னவென்றால், ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஐந்து நிமிடங்கள் நடைப்பயிற்சி இடைவெளி எடுப்பது மனநிலையை மேம்படுத்தவும் சோர்வைக் குறைக்கவும் போதுமானது. மேலும் மக்கள் இதை யதார்த்தமானது மற்றும் சாத்தியமானது எனக் கண்டறிந்துள்ளனர்" என்று டயஸ் கூறினார்.
இந்த ஆய்வு 11,000-க்கும் மேற்பட்ட அமெரிக்க ஊழியர்களிடம் நடத்தப்பட்டது. அவர்களில் பெரும்பாலோர் அலுவலகப் பணிகளில் இருந்தவர்கள் மற்றும் எட்டு முதல் ஒன்பது மணி நேர வேலை நேரத்தைக் கொண்டவர்கள்.
முதல் வாரத்தில், அவர்கள் தங்களின் வழக்கமான நடைமுறைகளைப் பின்பற்றி, சோர்வு, அவர்களின் மனநிலை மற்றும் வேலைத் திறன் பற்றிய தினசரி கணக்கெடுப்புகளையும் மேற்கொண்டனர்.
அடுத்த இரண்டு வாரங்களுக்கு, அவர்கள் வேலையின் போது ஒவ்வொரு அரை மணி நேரம், ஒவ்வொரு மணி நேரம் அல்லது ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் ஒருமுறை ஐந்து நிமிட நடைப்பயிற்சி இடைவெளிகளை எடுத்துக்கொண்டு, அது போன்ற கணக்கெடுப்புகளைப் பூர்த்தி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் ஒருமுறை நடப்பது மனநிலைக்கும் சோர்வைக் குறைப்பதற்கும் நன்மையளிப்பதாக இருந்தது, ஆனால் அது அன்றாட வேலைக்கு இடையூறாக இருந்தது.
ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை நடப்பது முற்றிலும் நடக்காமல் இருப்பதை விட மேலானது என்றாலும், ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஐந்து நிமிட நடைப்பயிற்சி மேற்கொள்வது, உற்பத்தித்திறன், மனநிலை மற்றும் விழிப்புணர்வு ஆகியவற்றில் மிகப்பெரிய மற்றும் மிகவும் சாத்தியமான முன்னேற்றத்திற்கு வழிவகுத்ததை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.
மணி கணக்கில் அமர்ந்திருக்கும் பழக்கம், மாற்றிக்கொள்வதற்கு கடினமான ஒரு பழக்கமாக இருக்கலாம் என்று கூறிய டயஸ், ஆய்வில் பங்கேற்ற பல ஊழியர்கள் தங்கள் இடைவெளிகளைப் பற்றி தங்களின் மேலதிகாரி அல்லது சக ஊழியர்கள் என்ன நினைப்பார்கள் எனக் கவலைப்பட்டதாகக் குறிப்பிட்டார்.
மேலும்,"இது எதிர்மறையாகத் தோன்றினாலும், உடல் இயக்க இடைவேளைகள் உண்மையில் பணித்திறனை அதிகரிக்கச் செய்யும்" என்று கூறிய டயஸ், "அவை நிர்வாகச் செயல்பாடு , கவனம் மற்றும் நினைவாற்றலை மேம்படுத்தும். மேலும் இது மக்கள் மிகவும் நிதானமாகவும் புத்துணர்ச்சியுடனும் உணர உதவுகிறது"என்றும் குறிப்பிட்டார்.
நடைப்பயிற்சி என்பது குறைந்த செலவுடையது மற்றும் அதற்காக வேலையை நிறுத்த வேண்டிய அவசியமில்லை என்று கூறிய அவர், திறந்தவெளியிலோ அல்லது அலுவலகத்தைச் சுற்றியோ நடக்கும்போதே கூட்டங்களை நடத்துவது அல்லது தொலைபேசி அழைப்புகளின் போது நடப்பது ஆகியவற்றைச் சுட்டிக்காட்டினார்.
பிரிட்டிஷ் ஹார்ட் பவுண்டேஷனின் மூத்த இதயப் பராமரிப்பு செவிலியரான எமிலி மெக்ராத், இந்த ஆராய்ச்சி முடிவுகளை வரவேற்று, "எளிய உடற்பயிற்சிகள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தும்" என்று கூறினார்.
இருப்பினும், "இந்த ஆய்வு, மக்கள் தாங்களாகவே அளித்த தரவுகளை அடிப்படையாகக் கொண்டது மற்றும் குறுகிய கால ஆய்வாகும். எனவே இதய ஆரோக்கியத்தில் அதன் தாக்கத்தை உறுதிப்படுத்த நீண்ட கால ஆராய்ச்சி தேவைப்படுகிறது" என்றும் அவர் குறிப்பிட்டார்.
-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு