"கொல்லப்பட்ட இந்திய மாலுமிகள், மன்னிப்பு கேட்காத அமெரிக்கா" - மோதி அரசின் அணுகுமுறை குறித்து எழும் கேள்விகள்

பட மூலாதாரம், Getty Images
மேற்கு ஆசியாவில் இரானுக்கு எதிராக அமெரிக்கா நடத்திவரும் முற்றுகை நடவடிக்கையின் போது மூன்று இந்திய மாலுமிகள் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்காவின் இந்தத் தாக்குதல் நடவடிக்கையில், இந்தியர்களின் உயிரிழப்புகள் உறுதி செய்யப்பட்ட முதல் சம்பவம் இதுவாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.
இரானின் எண்ணெய் ஏற்றுமதி வருமானத்தைத் தடுத்து, போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரு உடன்படிக்கைக்கு அதனை நிர்ப்பந்திக்கும் நோக்கத்துடன் அமெரிக்கா இந்த தாக்குதலை நடத்தி வருகிறது.
இந்த வாரம், ஓமன் வளைகுடாவில் இந்தியப் பணியாளர்களைக் கொண்ட மூன்று எண்ணெய் கப்பல்கள் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தியது.
இந்த நடவடிக்கை அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையே தூதரக பதற்றத்தை மேலும் அதிகரிக்கக்கூடும்.
இந்த விவகாரத்தில் தனது எதிர்ப்பைப் பதிவு செய்ய இந்தியா மூத்த அமெரிக்க தூதரை நேரில் வரவழைத்துள்ளது.
இந்த விவகாரத்தில் அமெரிக்கத் தூதரக அதிகாரியை இந்தியா வரவழைத்திருந்தாலும், பலரும் அரசாங்கத்தின் இந்த எதிர்வினை போதுமானதாக இல்லை என்றே கருதுகின்றனர்.
மூத்த பத்திரிகையாளர் கலோல் பட்டாச்சார்ஜி எக்ஸ் தளத்தில் இதுகுறித்துப் பதிவிட்டுள்ளார். "இந்தியப் பொதுமக்களுக்கு எதிராக ஹெல்ஃபயர் ஏவுகணைகள் பயன்படுத்தப்படுவது வரலாற்றில் இதுவே முதல் முறையாக இருக்கலாம். நமது குவாட் கூட்டாளி நாடு உண்மையிலேயே வியக்கத்தக்கது"என்று அப்பதிவில் கூறியுள்ளார்.
தடையற்ற கடல்சார் வழித்தடத்தை ஆதரிக்கும் குவாட் குழுவில் இந்தியாவும் ஒரு அங்கமாகும், ஆனால் அமெரிக்கா இதற்கு தடையாக உள்ளது. குவாட் குழுவில் அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் உள்ளன.
இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் வியாழக்கிழமை கூறுகையில், இந்தக் கப்பல்கள் அமெரிக்காவால் தாக்கப்பட்டன என்றும், ஆனால் குறிவைக்கப்பட்ட மூன்று கப்பல்களில் இரண்டு அமெரிக்காவின் தடைகளின் கீழ் இருந்தவை என்றும் தெரிவித்தார்.
மேலும், அவற்றில் ஒன்று "விதிமுறைகளுக்கு இணங்காத கப்பல்" எனக் கருதப்பட்டதாகவும் ஜெய்ஸ்வால் கூறினார்.

பட மூலாதாரம், Getty Images
இந்தியாவின் நிலைப்பாடு குறித்த கேள்விகள்
ஜெயஸ்வாலின் கருத்துக்கள் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளன.
இந்தியாவின் முன்னாள் வெளியுறவுச் செயலாளரும், ரஷ்யாவுக்கான முன்னாள் தூதருமான கன்வல் சிபல் இதுகுறித்து எழுதியுள்ளார்.
அதில், "தடைகள் அல்லது விதிமீறல் போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தி நாம் ஏன் அமெரிக்காவின் நடவடிக்கைகளை மறைமுகமாக நியாயப்படுத்துகிறோம்? இந்தக் கப்பல்கள் இந்தியக் கொடியைக் கொண்டிருக்கவில்லை என்றாலும், இந்த நடவடிக்கைகள் சட்டவிரோதமானவை. இந்திய மாலுமிகள் கொல்லப்பட்டிருப்பதும், சென்ட்காம் இதுவரை எந்த வருத்தத்தையும் வெளிப்படுத்தாததும் தான் எங்கள் கவலை"என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், "இந்தியாவும் அமெரிக்காவும் இந்தியப் பெருங்கடலில் கடல்சார் பாதுகாப்பில் ஒத்துழைத்து, விரிவான கடற்படைப் பயிற்சிகளை மேற்கொண்டு, இந்தோ-பசிபிக் என்ற கருத்தாக்கத்தை ஆதரிக்கின்றன என்றால், சூழ்நிலைகள் எதுவாக இருந்தாலும் இந்தியப் பெருங்கடலில் இந்திய மாலுமிகள் உயிரிழந்த விஷயத்தில் அமெரிக்கா அலட்சியமாக இருக்க முடியாது"என்றும் அவர் அதில் கூறியுள்ளார்.
தி இந்து ஆங்கில நாளிதழின் சர்வதேசப் பிரிவின் ஆசிரியர் ஸ்டான்லி ஜோனியும் இந்தியாவின் எதிர்வினை குறித்துக் கேள்வி எழுப்பியுள்ளார்.
அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "கத்தாரில் இஸ்ரேல் நடத்திய குண்டுவீச்சை இந்தியா கண்டிக்கும் போது, தாக்குதல் நடத்தியவரின் பெயரை குறிப்பிடாமல் இருப்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. யுக்ரேனில் ரஷ்யா நடத்திய தாக்குதல்களைக் கண்டிக்கும் போதும் இந்தியா யாருடைய பெயரையும் குறிப்பிடாமல் இருப்பதையும் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது"
"அதேபோல், பெர்சிய வளைகுடா நாடுகளின் மீது இரான் நடத்திய தாக்குதல்களைக் கண்டிக்கும் போதும் இந்தியா பெயர்களைக் குறிப்பிடாமல் தவிர்த்தால், அதை நான் உத்திசார் சமநிலை என்று அழைக்கலாம். ஆனால், இந்தியாவிற்கு அருகிலுள்ள கடல் பகுதியில், இந்தியக் குடிமக்களை ஏற்றிச் சென்ற கப்பல்கள் மீது ஏவுகணைகளை வீசி, அவர்களில் மூன்று பேரைக் கொன்ற நாட்டின் பெயரை இந்தியா ஏன் குறிப்பிடவில்லை என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை"எனக் குறிப்பிட்டுள்ளார்.
புதன்கிழமை இந்தியா வெளியிட்ட அறிக்கையில், அமெரிக்காவின் பெயர் கூட குறிப்பிடப்படவில்லை.
பிரபல உத்திசார் விவகாரங்கள் ஆய்வாளர் பிரம்மா செலானியும் இந்தியாவின் நிலைப்பாட்டைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். மூன்று அமெரிக்க குடிமக்கள் இறந்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்று செலானி கேள்வி எழுப்பியுள்ளார்.
"ஒரு வான்வழித் தாக்குதலில் மூன்று அமெரிக்க மாலுமிகள் கொல்லப்பட்டிருந்தால், அது அமெரிக்காவில் அரசியல் நெருக்கடியைத் தூண்டியிருக்கும்" என்று அவர் கூறுகிறார்.
"ஆனால், செவ்வாய்க்கிழமை ஹோர்முஸ் நீரிணைக்கு அருகே பலாவு நாட்டு கொடியுடன் சென்ற எண்ணெய் கப்பல் மீது அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில் மூன்று இந்தியப் பணியாளர்கள் உயிரிழந்தது சர்வதேச அளவில் மிகக் குறைந்த கவனத்தையே பெற்றுள்ளது. பிரதமர் மோதி இந்தத் தாக்குதல் குறித்து பகிரங்கமாக எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை, மேலும் இந்த விஷயம் வெளியுறவு அமைச்சகத்தால் பதிவு செய்யப்பட்ட ஒரு வழக்கமான தூதரக எதிர்ப்போடு மட்டுமே நின்றுவிட்டது"என்று செல்லானி பதிவு செய்துள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
அமெரிக்காவின் வாதங்களுக்கு ஆதரவா?
"இது ஒரு தனிப்பட்ட சம்பவம் அல்ல. இந்த வாரத்தில் அமெரிக்க ராணுவத்தால் குறிவைக்கப்பட்ட, இந்தியப் பணியாளர்களைக் கொண்ட மூன்றாவது எண்ணெய் கப்பல் இதுவாகும்.
திங்கட்கிழமை அன்று, ஓமன் வளைகுடாவில் உள்ள மற்றொரு எண்ணெய் கப்பல் மீது அமெரிக்க கடற்படையின் எஃப்/ஏ-18 சூப்பர் ஹார்னெட் போர் விமானம் துல்லியமான ஆயுதங்களால் தாக்குதல் நடத்தியது, இதனால் கப்பலில் இருந்த 24 இந்திய மாலுமிகளையும் வெளியேற்ற ஓமன் அதிகாரிகள் கட்டாயப்படுத்தப்பட்டனர்.
பின்னர் இன்று, ஓமன் கடற்கரைக்கு அப்பால் கினியா-பிசாவு நாட்டு கொடியுடன் சென்ற ஒரு எண்ணெய் கப்பலின் எஞ்சின் மீது அமெரிக்க விமானம் இரண்டு ஹெல்ஃபயர் ஏவுகணைகளை வீசியது, இதனால் அந்த கப்பலில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது"என செல்லானி எழுதியுள்ளார்.
உலக அரசியல் ஆய்வாளர் ஜோராவர் துலத் சிங்கும் இதுகுறித்து பதிவிட்டுள்ளார்.
அதில், "அமெரிக்கா அல்லது மேற்கத்திய நாடுகளின் தடைகளும், அவர்களின் உள்நாட்டுச் சட்டங்களும் உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விதிகளாக முன்வைக்கப்படுகின்றன.
சர்வதேச சட்டங்களுக்கு அப்பாற்பட்டதாக இருக்கும் அமெரிக்காவின் இந்த அணுகுமுறை தான், தற்போதைய உலக ஒழுங்கில் உள்ள சர்வதேச உறவுகளில் மிகப்பெரிய பிரச்னையாகும்.
மேலும் இதுவே பன்முனை உலக ஒழுங்கிற்கான கோரிக்கையின் பின்னணியில் உள்ள முக்கிய காரணமாகும். அதற்கு மாறாக, இந்தியா இன்னும் அமெரிக்காவின் தாக்குதல் நடவடிக்கையின் தர்க்கத்தை விளக்க முயற்சிப்பது போல் தெரிகிறது"என்று கூறியுள்ளார்.
குளோபல் டிரேட் ரிசர்ச் இனிஷியேட்டிவ் என்ற சிந்தனைக் குழுவின் இயக்குநரான அஜய் ஸ்ரீவஸ்தவாவும், இந்தியாவின் மௌனம் கவலையளிப்பதாகக் கருதுகிறார்.
அவர் எக்ஸ் தளத்தில் இதுகுறித்து எழுதியுள்ளார்.
"மூன்று இந்திய மாலுமிகள் கொல்லப்பட்டுள்ளனர். அமெரிக்கா ஒருமுறை கூட மன்னிப்பு கேட்கவில்லை. ஜூன் 8 முதல் 11 வரையான காலப்பகுதியில், ஓமன் வளைகுடாவிற்கு அருகிலுள்ள சர்வதேச கடல் பகுதியில் மூன்று வர்த்தகக் கப்பல்கள் மீது அமெரிக்கப் படைகள் தாக்குதல் நடத்தின. இதில், எம்டி செடெபெலோ கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் மூன்று இந்திய மாலுமிகள் கொல்லப்பட்டனர்"எனக் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச சட்டம்
"வேறொரு நாடு வர்த்தகக் கப்பல்களில் இருந்த இந்திய மாலுமிகளைக் கொன்றிருந்தால், இந்தியாவும் உலக நாடுகளும் இவ்வளவு மௌனமாக இருந்திருக்குமா?
இந்தக் கப்பல்கள் வர்த்தகக் கப்பல்களே தவிர, போர்க்கப்பல்கள் அல்ல. அவை சர்வதேசக் கடல் பகுதியில் இயங்கி வந்தன, மேலும் எந்தவொரு ராணுவ மோதலிலும் அவை பங்கேற்கவில்லை.
ஆனாலும், அமெரிக்கா ஒருதலைப்பட்சமான முற்றுகையின் ஒரு பகுதியாக அவற்றைக் குறிவைத்தது. ஜூன் 9 அன்று செடெபெலோ கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தான் மிகவும் கொடூரமானது.
அமெரிக்க விமானம் கப்பலின் எஞ்சின் அறையைத் தாக்கியதில், மூன்று இந்திய மாலுமிகள் கொல்லப்பட்டனர். அமெரிக்காவின் உலக அரசியல் மோதலில் இந்தியக் குடிமக்கள் தங்கள் உயிரை இழந்துள்ளனர்."
இந்த விவகாரத்தில் சர்வதேச சட்டம் மிகவும் தெளிவாக உள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தில் உள்ள பிரிவு 2(4) படி, தற்காப்பு நடவடிக்கையாகவோ அல்லது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் அனுமதியுடனோ அல்லாமல், எந்த நாடும் வலிமை அல்லது ராணுவ தாக்குதலை பயன்படுத்தக் கூடாது.
பிரிவுகள் 87 மற்றும் 90 ஆகியவை ஆழ்கடல் கப்பல் போக்குவரத்திற்கான சுதந்திரத்தை உறுதி செய்கின்றன.
இந்தியக் குடிமக்கள் உயிரிழந்த போதிலும், அமெரிக்கா பகிரங்கமாக மன்னிப்பு கேட்கவோ, வருத்தம் தெரிவிக்கவோ அல்லது உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவிக்கவோ இல்லை.
இது, இந்தியர்களின் உயிர்கள் ஒரு சாதாரண முறையான அங்கீகாரத்திற்குக்கூட தகுதியானதாகக் கருதப்படவில்லையோ என்ற கவலையளிக்கும் செய்தியை அனுப்புகிறது.
அசோகா பல்கலைக்கழகத்தின் சர்வதேச உறவுகள் துறை பேராசிரியரான காந்தி வாஜ்பாய் இதுகுறித்து எழுதியுள்ளார்.
அதில், "இந்தியா சொல்வது சரியா தவறா என்பது தனி விவாதத்திற்குரிய விஷயம். ஆனால் அமெரிக்கா இனி இந்தியாவை வலுப்படுத்தப்பட வேண்டிய ஒரு சக்தியாகப் பார்க்கவில்லை. மாறாக, இந்தியாவைத் தனது தயாரிப்புகள், முதலீடுகள் மற்றும் ஆயுதங்களுக்கான ஒரு பெரிய சந்தையாகவே அது பார்க்கிறது.
எதிர்காலம் என்பது சித்தாந்தங்களுக்கு உரியதல்ல, மாறாகத் தீர்க்கமான பேரம் பேசுதல் மற்றும் நடைமுறை நலன்கள் சார்ந்த அரசியலுக்கே உரியது"என்று கூறப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
இந்தியாவின் பதில்
வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் வியாழக்கிழமை கூறுகையில், "எங்களது கடல்சார் வர்த்தகத்தின் பாதுகாப்பு மிக முக்கியமானது என்பதை நாங்கள் தெளிவுபடுத்தியுள்ளோம். கப்பல்கள் மீதான இந்தத் தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும்" என்றார்.
அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவின் கூற்றுப்படி, பலாவு நாட்டு கொடியுடன் சென்ற செடெபெலோ எண்ணெய் கப்பல், அமெரிக்கப் படைகளின் எச்சரிக்கைக்கு இணங்காததால் அதன் மீது அமெரிக்க ராணுவம் புதன்கிழமை நடவடிக்கை எடுத்தது.
பின்னர் வியாழக்கிழமை அன்று, ஜல்வீர் என்று பெயரிடப்பட்ட கினியா-பிசாவு நாட்டு கொடியுடன் சென்ற எண்ணெய் கப்பலை அமெரிக்க விமானம் குறிவைத்தது.
அந்தக் கப்பல் ஓமன் வளைகுடா வழியாக இரானில் இருந்து எண்ணெயைக் கடத்த முயன்றதாக அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு குற்றம் சாட்டுகிறது.
இந்திய அதிகாரிகளின் கூற்றுப்படி, ஜல்வீர் கப்பலில் இருந்த 20 இந்திய மாலுமிகளும் பாதுகாப்பாக உள்ளனர்.
இந்தத் தாக்குதல்கள் அமெரிக்க கடற்படையால் நடத்தப்பட்டன என்றும், குறிவைக்கப்பட்ட கப்பல்கள் இந்தியர்களுக்குச் சொந்தமானவை அல்ல என்றும் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்தார்.
செடெபெலோ கப்பல் மீதான தாக்குதல் குறித்து அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு வெளியிட்ட ஆரம்ப அறிக்கையில் உயிரிழப்புகள் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.
கப்பலின் எஞ்சினை இலக்காகக் கொண்டு போர் விமானம் ஆயுதங்களால் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்தது. வெளியிடப்பட்ட வீடியோவில் கப்பலில் இருந்து புகை எழுவது தெரிந்தது.
கப்பலின் பணியாளர்கள் தங்களின் தொடர் எச்சரிக்கைகளை மீறி நடந்துகொண்டதாகவும், துப்பாக்கிச் சூடு அல்லது தாக்குதல் நடத்துவதற்கு முன்பு பலமுறை எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டதாகவும் அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு வியாழக்கிழமை மீண்டும் தெரிவித்தது.
கப்பலில் இருந்த 24 இந்தியப் பணியாளர்களில் 21 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும், மூன்று மாலுமிகளைக் காணவில்லை என்றும் இந்திய வெளியுறவு அமைச்சகம் தொடக்கத்தில் தெரிவித்திருந்தது.
இருப்பினும், காணாமல் போன மூன்று இந்திய மாலுமிகளின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளதாக மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிப்பாதைகள் துறை அமைச்சர் சர்பானந்த சோனாவால் வியாழக்கிழமை எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்துள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
அமெரிக்க முற்றுகை
மீட்கப்பட்ட மாலுமிகளுடன் சேர்ந்து, உயிரிழந்தவர்களின் உடல்களும் இந்தியாவிற்கு கொண்டு வரப்படும் என்று அவர் கூறினார்.
முன்னதாக திங்கட்கிழமை அன்று, மெரிவெக்ஸ் என்று பெயரிடப்பட்ட பலாவு நாட்டு கொடியுடன் சென்ற எண்ணெய் கப்பலை அமெரிக்க ராணுவம் குறிவைத்ததாக அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு மற்றும் இந்திய வெளியுறவு அமைச்சகம் ஆகிய இரு தரப்பும் தெரிவித்துள்ளன.
இரானுக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள முற்றுகையை மீறி, அந்த கப்பல் இரானிய துறைமுகத்தை நோக்கி பயணிக்க முயன்றதாக அமெரிக்கா குற்றம் சாட்டியது.
தாக்குதல் நடப்பதற்கு முன்பு, கப்பலுக்கும் அமெரிக்கப் படைகளுக்கும் இடையே தொடர்பு இருந்தது என்று இந்திய அதிகாரிகள் இந்த வாரம் தெரிவித்தனர்.
மெரிவெக்ஸ் கப்பலில் இருந்த அனைத்து இந்திய மாலுமிகளும் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
இரானுடனான ஆரம்பகட்ட அமைதிப் பேச்சுவார்த்தைகள் எந்தவொரு முடிவும் எட்டப்படாமல் முடிந்ததைத் தொடர்ந்து, இரானின் பொருளாதாரத்தின் மீதான அழுத்தத்தை அதிகரிப்பதற்காக அமெரிக்கா ஏப்ரல் 13 அன்று இந்த முற்றுகையைத் தொடங்கியது.
அமெரிக்காவின் அப்பாச்சி ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டதைத் தொடர்ந்து, அமெரிக்காவும் இரானும் ராணுவ தளங்கள் மீது மீண்டும் தாக்குதல்களை நடத்தியுள்ள நிலையில் இந்த வாரத்தில் இத்தகைய நிகழ்வுகள் நடந்துள்ளன.
அந்த ஹெலிகாப்டர் இரானிய ட்ரோன் மூலம் குறிவைக்கப்பட்டதாக அமெரிக்கா கூறுகிறது.
அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவின் கூற்றுப்படி, ஏப்ரல் 13 அன்று முற்றுகை தொடங்கியதில் இருந்து, உத்தரவுகளுக்கு இணங்கத் தவறிய ஒன்பது கப்பல்களை அமெரிக்கப் படைகள் செயலிழக்கச் செய்துள்ளன, மேலும் 100-க்கும் மேற்பட்ட பிற கப்பல்கள் மாற்றுப்பாதைக்குத் திருப்பப்பட்டுள்ளன.
-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு




























