You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இரான் போரை முடிவுக்கு கொண்டுவர டிரம்ப் விரும்பினாலும் அது சாத்தியமாகாதது ஏன்?
- எழுதியவர், ஜெர்மி போவன்
- பதவி, சர்வதேச ஆசிரியர்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
ஏப்ரல் 8 அன்று போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதில் இருந்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ள போருக்கு மீண்டும் திரும்ப தங்களுக்கு விருப்பமில்லை என்று அமெரிக்கா மற்றும் இரான் ஆகிய இரு நாடுகளுமே சுட்டிக்காட்டியுள்ளன.
இரு தரப்புக்கும் இடையே தொடர்ந்து ராணுவத் தாக்குதல்கள் நடந்துகொண்டிருந்தாலும், பாகிஸ்தான், கத்தார் உள்ளிட்ட நாடுகள் முன்னெடுக்கும் பேச்சுவார்த்தைகளை அவர்கள் கைவிடவில்லை.
அமெரிக்கா இன்னும் இரானைத் தாக்கும் தூரத்தில் சக்திவாய்ந்த கடற்படை மற்றும் வான்படைகளைக் கொண்டுள்ளது.
இரானிய அரசாங்கம் தனது படைகளைத் தீவிரமான தயார் நிலையில் வைத்திருக்கும் என்றும், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலால் ஏற்பட்ட சேதங்களை மறுசீரமைக்க இந்த போர் நிறுத்தத்தைப் பயன்படுத்தும் என்றும் கருதலாம்.
வளைகுடா பகுதி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிலவும் ஆயுதப் பதற்றம், தவறான கணிப்புகள் அல்லது எதிர் தரப்பின் நடவடிக்கைகளை தவறாக புரிந்துகொள்ளும் அபாயத்தை இரு தரப்புக்கும் தெளிவாக உருவாக்குகிறது.
தாங்கள் இரானுக்கு மிக அருகில் இருப்பதுடன், பெரும் சேதத்தை ஏற்படுத்தும் திறனும் கொண்டவர்கள் என்பதை வெளிப்படுத்துவதன் மூலம், இரான் ஆட்சியின் மீது அமெரிக்கா தொடர்ந்து அழுத்தம் கொடுக்க முயல்கிறது.
எதிர்த்துப் போராடுவதற்கான தங்களது நிலைப்பாடு குறையவில்லை என்பதையும், தேவைப்பட்டால் அமெரிக்கத் தளங்கள் மற்றும் அரபு வளைகுடாவின் பரந்த உள்கட்டமைப்புகளைத் தாக்குவோம் என்பதையும் இரானியர்கள் அமெரிக்காவிற்கு நினைவூட்டி வருகின்றனர்.
அமெரிக்காவுக்கும் இரானுக்கும் இடையே ஒரு விரிவான ஒப்பந்தத்தை எட்டுவதற்கான நீண்ட மற்றும் ஒருவேளை எட்ட முடியாத பாதையில் உள்ள முதல் நோக்கம் என்னவென்றால், இந்த போர்நிறுத்தத்தைத் தொடர்வதும், அவர்களுக்கு இடையேயான கூடுதல் பேச்சுவார்த்தைகளின் செயல்திட்டம் குறித்த "புரிந்துணர்வு ஒப்பந்தம்" குறித்த உடன்பாட்டிற்கு வருவதும் ஆகும். ஆனால் அதை அடைவது கடினமாக உள்ளது.
தனது குண்டுவீச்சு விமானங்கள் பெய்ரூட்டிற்குத் திரும்பும் என இஸ்ரேல் அறிவித்திருப்பது, டொனால்ட் டிரம்புக்கு இருக்கும் தேர்வுகளை இன்னும் சுருக்கியுள்ளது.
போர்நிறுத்தத்தை விரும்பாத நெதன்யாகு
லெபனானில் தான் மீண்டும் தொடங்கியுள்ள தாக்குதல், இரானுடன் அமெரிக்கா ஒப்பந்தம் செய்துகொள்வதைக் கடினமாக்கினாலும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அதைப் பற்றிக் கவலைப்பட மாட்டார்.
ஆரம்பத்திலிருந்தே இரான் அரசாங்கத்துடனான இந்த போர்நிறுத்தத்தை அவர் விரும்பவில்லை.
அவரைப் பொறுத்தவரை, அமெரிக்காவிற்கும் இரானுக்கும் இடையிலான எந்தவொரு ஒப்பந்தமும் ஒரு மோசமான ஒப்பந்தமே ஆகும்.
இரானியர்கள் லெபனானில் உள்ள தங்களது கூட்டாளி ஹெஸ்பொலாவைத் தொடர்ந்து ஆதரித்து வருகின்றனர்.
அமெரிக்காவுடனான ஒரு விரிவான ஒப்பந்தத்தில், இஸ்ரேலின் தாக்குதலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதும் இடம்பெற வேண்டும் என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர் .
அதிபர் டிரம்ப் தற்போதைக்கு இஸ்ரேலைக் கட்டுப்படுத்த முயல்வது போல் தெரிகிறது.
ஹோர்மூஸ் நீரிணையைப் பொறுத்தவரை, இந்த நீரிணையை மீண்டும் திறப்பதற்கு இரான் அரசாங்கம் ஒரு விலையைக் கோரும், அது ஒருவேளை தடைகளை நீக்குவது அல்லது முடக்கப்பட்ட சொத்துக்களை விடுவிப்பது போன்ற வடிவத்தில் இருக்கலாம். தீவிரமான பேச்சுவார்த்தைகளுக்கு இது ஒரு முன்நிபந்தனையாகத் தெரிகிறது.
முன்பு மிக முக்கியமான மற்றும் பரபரப்பான நீர்வழியாக இருந்த இந்த ஹோர்மூஸ் நீரிணையின் வழியாக இப்போது மிகக் குறைந்த எண்ணிக்கையிலான கப்பல்கள் மட்டுமே கடந்து செல்கின்றன.
கடந்த பிப்ரவரி 28 அன்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேலால் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து இரான் ஹோர்முஸ் நீரிணையை மூடியது.
டிரம்புக்கு இருக்கும் சிக்கல்
சௌதி அரேபியா தனது எண்ணெயின் ஒரு பகுதியை செங்கடல் துறைமுகங்களுக்கு குழாய் வழியாக கொண்டு செல்கிறது.
மேலும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் , ஹோர்மூஸ் நீரிணைக்கு அப்பால் ஓமன் வளைகுடாவை ஒட்டியுள்ள தனது சிறிய கடலோரப் பகுதியில் உள்ள முனையங்களுக்கு எண்ணெயைக் கொண்டு செல்லும் குழாய் அமைப்பைக் கொண்டுள்ளது.
ஆனால், உலகின் பிற பகுதிகள் தங்களின் வழக்கமான எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தில் சுமார் 20 சதவீதத்தை இழந்துள்ளன. மேலும், மற்ற முக்கிய ஏற்றுமதிகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த நீரிணையைத் தொடர்ந்து மூடி வைத்திருப்பது உலகப் பொருளாதாரத்தின் பெரும்பகுதிக்குப் பேரழிவை ஏற்படுத்தும்.
அமெரிக்கா இனி வளைகுடா எண்ணெயைச் சார்ந்திருக்கவில்லை என்றாலும், அமெரிக்காவில் பெட்ரோல் விலைகள் இன்னும் உலகளாவிய எண்ணெய் சந்தையால் தான் தீர்மானிக்கப்படுகின்றன.
டிரம்ப் ஓர் இக்கட்டான நிலையில் இருக்கிறார். எளிதான வெற்றி கிடைக்கும் என்று நினைத்துப் போருக்குச் சென்றதன் மூலம், தான் செய்த பெரும் தவறின் விளைவுகளில் அவர் சிக்கியுள்ளார்.
அமெரிக்க அதிபரும், அவரது நெருங்கிய கூட்டாளியான இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும், தங்களது தாக்குதல்களை எதிர்கொள்ளவும் தாக்குப் பிடிக்கவும் இஸ்லாமிய அரசாங்கம் எந்த அளவிற்குத் தயாராக இருந்தது என்பதை மிகவும் மோசமாகக் குறைத்து மதிப்பிட்டுவிட்டனர்.
டிரம்புக்கு இதில் இருந்து எளிதில் வெளியேற வழியில்லை, மேலும் இரானிய அரசாங்கமும் நிலைமை அப்படியே நீடிக்க வேண்டும் என்று விரும்புகிறது.
அவர் இந்த நீரிணையை மீண்டும் திறக்க வேண்டிய அவசியம் உள்ளது. ஏனெனில், இரானுக்கு எதிரான போர் அமெரிக்காவில் பெரும் வரவேற்பைப் பெறவில்லை, மேலும் இதனை மீண்டும் தீவிரப்படுத்துவது இன்னும் அதிகமான அமெரிக்க மக்களை இதற்கு எதிராக மாற்றும்.
இந்நிலையில் டிரம்புக்கு உள்ள பிரச்னை என்னவென்றால், நீரிணையை மீண்டும் திறப்பதற்காக இரான் கோரும் சலுகைகளை வழங்க அவரது கட்சியிலுள்ள தீவிரப் போக்காளர்கள் எதிர்க்கின்றனர். அதே நேரத்தில், தானே வெற்றி பெற்றதாக மக்களிடம் காட்டிக்கொள்ளவும் அவர் விரும்புகிறார்.
தான் இரானுடன் செய்யும் எந்தவொரு ஒப்பந்தமும், கூடுதல் பேச்சுவார்த்தைகளுக்காக போர்நிறுத்தத்தை நீட்டிக்கும் ஒரு ஏற்பாடாக இருந்தாலும் கூட 2015-இல் பராக் ஒபாமாவின் கீழ் செய்யப்பட்ட அணுசக்தி ஒப்பந்தத்துடன் ஒப்பிடப்படுவதை அமெரிக்க அதிபர் முற்றிலும் வெறுக்கிறார்.
டிரம்ப் அந்த ஒப்பந்தத்தைக் கண்டித்ததுடன், வெள்ளை மாளிகையில் தனது முதல் பதவிக்காலத்திலேயே அமெரிக்காவை அதிலிருந்து வெளியேற்றினார்.
இரானின் ஆட்சியாளர்கள், தங்கள் ஆட்சி நீடிப்பதற்காகவே போராடுவதாக சில நியாயமான காரணங்களுடன் நம்புகின்றனர்.
அமெரிக்கா, இஸ்ரேலுடனோ அல்லது அது இல்லாமலோ நடத்தும் கூடுதல் தாக்குதல்கள் இந்த விஷயத்தில் அவர்களை அசைக்கப் போவதில்லை என்பது மிகவும் தெளிவாகத் தெரிகிறது.
வளைகுடாவின் செழிப்பான அரபு எண்ணெய் நாடுகள் நீண்ட காலப் பொருளாதாரச் சேதத்தைச் சந்தித்துள்ளன. மேலும் அவை இனி எந்தச் சேதத்தையும் சந்திக்க விரும்பவில்லை.
அவர்களின் வணிக மாதிரி மற்றும் அந்த நாடுகளின் நீண்ட கால வளர்ச்சி ஆகியவை, உலகப் பொருளாதாரத்திற்கான ஒரு நிலையான மையமாக வளைகுடா இருப்பதையும், வெளிநாட்டு முதலீடுகளுக்குப் பாதுகாப்பாக இருப்பதையும் ஓர் அடித்தளமாகக் கொண்டுள்ளது.
இந்தப் போர் அவர்களுக்குக் கடுமையான பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது, மேலும் அவர்களின் நிலைத்தன்மையை மீட்டெடுக்க பல ஆண்டுகள் ஆகும்.
பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்கான ராஜ்ஜீய முயற்சியில், பாகிஸ்தானுடன் இணைந்து கத்தாரும் செயல்படுகிறது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸும் சௌதி அரேபியாவும் இரானுக்கு வெவ்வேறு கோணங்களில் இருந்து பதிலடி கொடுத்துள்ளன.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இஸ்ரேல் உடனான உறவை மேலும் வலுப்படுத்தியுள்ளது.
இஸ்ரேலியர்கள் தங்களது 'அயன் டோம்' ஏவுகணை பாதுகாப்பு அமைப்பை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நிறுவியுள்ளனர், மேலும் அதனை இயக்குவதற்கு இஸ்ரேல் பாதுகாப்புப் படை வீரர்களையும் அனுப்பியுள்ளனர்.
இரானிய தாக்குதல்களுக்குப் பழிவாங்கும் நடவடிக்கையாகவே தாங்கள் இரான் மீது தாக்குதல் நடத்தியதாக சௌதி கூறியிருப்பது இப்போது தெரியவந்துள்ளது.
ஆனால் குறிப்பிடத்தக்க வகையில், தாங்கள் அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டணியின் ஒரு பகுதியாக இல்லாமல், தனித்தே செயல்பட்டோம் என்பதை இரானுக்குத் தெளிவுபடுத்தியதாக மூத்த சௌதி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
டொனால்ட் டிரம்ப்பும் பெஞ்சமின் நெதன்யாகுவும் இரானுக்கு எதிராகப் போருக்குச் சென்றபோது, தங்கள் நாடுகளின் கணிசமான வான்படை பலமே இரானில் உள்ள இஸ்லாமிய அரசாங்கத்தை அகற்றுவதற்குப் போதுமானதாக இருக்கும் என்று இருவருமே கூறினர். அவர்கள் தவறாக கணித்து விட்டனர்.
போர், தடைகள் மற்றும் தனிமைப்படுத்துதல் ஆகியவற்றால் ஏற்பட்ட கடுமையான சோதனைகளையும் கடந்து, கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு காலமாக நீடித்து வரும் ஓர் அரசாங்கத்தின் தன்மையை அவர்கள் தவறாகப் புரிந்து கொண்டனர்.
இப்போது அமெரிக்காவுடனும் இஸ்ரேலுடனும் சேர்ந்து, ஒட்டுமொத்த உலகமும் அதன் விளைவுகளை எதிர்கொண்டு வருகிறது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு