செளதி 20 ஆண்டுகளில் சந்திக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தல் - சேதத்தைவிட கடுமையான பாதிப்பு என்ன?

பட மூலாதாரம், EPA/Shutterstock
- எழுதியவர், ஃபிராங்க் கார்ட்னர் மற்றும் ஜான் டோனிசன்
- பதவி, பிபிசி
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
செளதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தின் மீது நடத்தப்பட்ட இரண்டாவது தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார். 11 பேர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை கிங் காலித் சர்வதேச விமான நிலையத்தின் மீது ஏவுகணை போன்ற ஒரு பொருள் விழுந்ததாக செளதி ராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். இதனால், பயணிகள் முனையங்களில் ஒன்றில் தீப்பற்றியது. இந்தத் தாக்குதலில் பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்ததாக செளதி அரேபியாவின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதற்கு முந்தைய நாளில், இதே விமான நிலையத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 13 பேர் உயிரிழந்ததாகவும், 308 பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
ரியாத்தில் உள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள், ஏற்கெனவே பதற்றமும் மோதல்களும் நிலவும் பிராந்தியத்தில் மீண்டும் ஓர் ஆபத்தான சூழலை உருவாக்கியுள்ளன.
இத்தகைய தாக்குதல்களை எதிர்கொள்ள செளதி அரேபியா தயாராக இருக்கவில்லை.
சமீபத்திய வாரங்களில், ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் செளதி அரேபியப் பகுதிகளில் தங்களது தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளனர். ஆனால், கடந்த சில நாட்களாக அவர்கள் நடத்திய தாக்குதல்கள், அந்நாட்டின் முக்கிய உள்கட்டமைப்புகளைக் குறிவைத்துள்ளன. குறிப்பாக, தலைநகரின் பிரதான விமான நிலையம் தாக்கப்பட்டுள்ளது. செளதி அரேபியாவின் வான் பாதுகாப்பு அமைப்புகளை இந்தத் தாக்குதல்கள் எளிதில் ஊடுருவியதாகத் தெரிகிறது.
ஞாயிற்றுக்கிழமை, ஹூத்தி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராகப் போரிட்டு வரும் செளதி தலைமையிலான கூட்டுப் படை வெளியிட்ட தகவலின்படி, அடையாளம் தெரியாத ஏவுகணை போன்ற ஒரு பொருள் பயணிகள் முனையத்தில் விழுந்தது. அருகே வந்த ஒரு குரூஸ் ஏவுகணையும் இடைமறித்துத் தடுக்கப்பட்டது.
விமான நிலையத்துக்கு ஏற்பட்டுள்ள சேதங்களை விரைவாகச் சரிசெய்ய முடியும். ஆனால், பாதுகாப்பும் நிலைத்தன்மையும் கொண்ட நாடு என்ற செளதி அரேபியாவின் பெயர் இத்தகைய தாக்குதல்களால் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது.

பட மூலாதாரம், Reuters
விமான நிலையங்கள் மீதான தாக்குதல்களுடன் மட்டுமின்றி, செங்கடல் கடற்கரைப் பகுதிகளிலும் பாப் அல்-மண்டெப் நீரிணையைச் சுற்றியுள்ள முக்கியத்துவம் வாய்ந்த இடங்களிலும் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் முயன்று வருகின்றனர். இதனால், உலக வர்த்தகத்துக்கு முக்கியமான இந்தக் கடல்வழிப் பாதையில் கப்பல் போக்குவரத்தின் பாதுகாப்புக்கு மேலும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. எனினும், அந்த நீரிணையைப் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக ஏமன் அரசு தெரிவித்துள்ளது.
செளதி அரேபியாவின் ஆதரவைப் பெற்ற, சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட ஏமன் அரசுக்கும், இரானின் ஆதரவைப் பெற்ற ஹூத்தி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையிலான உள்நாட்டுப் போர் ஒரு தசாப்தத்துக்கும் மேலாக நீடித்து வருகிறது. இந்தப் போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். மேலும், உலகின் மிக மோசமான மனிதாபிமான நெருக்கடிகளில் ஒன்றை ஏமன் எதிர்கொண்டுள்ளது.
இது சிக்கலான, பல நேரங்களில் புரிந்துகொள்வதற்குக் கடினமான புவிசார் அரசியல் மோதலாகும். தற்போது ஏற்பட்டுள்ள இந்தத் தீவிரமடைதலை, இரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையே நிலவும் பரந்த பிராந்தியப் பதற்றத்தின் பின்னணியிலும் பார்க்க வேண்டும்.

பட மூலாதாரம், Getty Images
ஹூத்திகளின் தெளிவான திட்டம்
2000-களின் மத்தியில் அல்-கய்தா நடத்திய கிளர்ச்சிக்குப் பிறகு, செளதி அரேபியா இவ்வளவு தீவிரமான அச்சுறுத்தலை எதிர்கொண்டதில்லை.
அந்தச் சவாலை, மக்களின் ஆதரவைப் பெறுவதையும் நம்பிக்கையை வளர்ப்பதையும் நோக்கமாகக் கொண்ட நடவடிக்கைகள் மூலம் செளதி அரசு சமாளித்தது.
அதன்பிறகு, பிராந்தியத்தின் பல நாடுகளில் ஆட்சியாளர்களைப் பதவியிலிருந்து அகற்றிய அரபு வசந்தப் போராட்டங்களையும் அது எதிர்கொண்டது. துனிசியா, லிபியா, எகிப்து மற்றும் ஏமன் ஆகிய நாடுகளில் அந்தப் போராட்டங்கள் ஆட்சியாளர்களின் வீழ்ச்சிக்கு வழிவகுத்தன.
மார்ச் மாதத்தில் ரியாத் மீது இரான் நடத்திய பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதலையும் செளதி அரேபியா ஓரளவு எரிச்சலுடன் எதிர்கொண்டு கடந்து சென்றது.
ஆனால், தற்போதைய நிலைமை வேறுபட்டது. மத்திய கிழக்கில் மிகவும் சக்திவாய்ந்த விமானப் படைகளில் ஒன்றை செளதி அரேபியா கொண்டுள்ளது. ஹூத்தி கிளர்ச்சியாளர்களின் நிலைகளைக் குறிவைத்து அது பேரழிவை ஏற்படுத்தும் வான்வழித் தாக்குதல்களையும் நடத்தி வருகிறது. இருந்தபோதிலும், எதிர்த் தரப்பினர் ஏமன் நாட்டின் பெரும் பகுதிகளைக் கைப்பற்றியுள்ளனர். குறிப்பாக, வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் அவர்களது கட்டுப்பாடு விரிவடைந்துள்ளது.
ஆனால், எங்கு தாக்கினால் செளதி அரேபியாவுக்குப் பதிலடி கொடுக்க முடியும் என்பது ஹூத்தி கிளர்ச்சியாளர்களுக்கு நன்றாகத் தெரியும். நாட்டின் பொருளாதாரத்தில் எளிதில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய பகுதிகளையே அவர்கள் குறிவைக்கின்றனர்.
'எதிர்ப்பின் அச்சு' என்று அழைக்கப்படும் கூட்டணியின் ஒரு பகுதியாக, இரானுக்கு முக்கியமான கூட்டாளியாக ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் உள்ளனர். செங்கடல் கடற்கரையில் உள்ள ஜிசான் முதல் குரைஸ் நகரில் அமைந்துள்ள பெட்ரோவேதியியல் வளாகம் வரை, அவர்கள் வெடிகுண்டுகள் பொருத்தப்பட்ட ஆளில்லா விமானங்களையும் ஏவுகணைகளையும் மிகத் துல்லியமாக ஏவி வருகின்றனர்.
செங்கடல் வழியாக நடைபெறும் கப்பல் போக்குவரத்தின் முக்கியத்துவம் அதிகரித்துள்ளது. ஏனெனில், வளைகுடாவின் மறுபுறத்தில் உள்ள ஹோர்முஸ் நீரிணை இன்னும் முழுமையாகத் திறக்கப்படவில்லை. தங்களுக்கிடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தத்தை எட்டுவதில் அமெரிக்காவும் இரானும் தோல்வியடைந்துள்ளன.

பட மூலாதாரம், Getty Images
சிக்கலில் செளதி - அமெரிக்கா
செங்கடலில் கப்பல்களைக் குறிவைத்துத் தாக்குவதும், செளதி அரேபியா மீது அழுத்தம் கொடுப்பதற்கான ஹூத்தி கிளர்ச்சியாளர்களின் மற்றொரு வழியாகும். இந்தத் தாக்குதல்கள் உலகப் பொருளாதாரத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இதுவே இரானின் பேரம் பேசும் வலிமையை அதிகரிக்கும் முக்கியக் காரணியாக உள்ளது.
செப்டம்பர் தொடக்கத்தில், ஏமன் மோதலில் அமெரிக்கா நேரடியாகத் தலையிடாது என்றும், ஆனால் செளதி அரேபியாவுக்கு உளவுத் தகவல்களை வழங்கக்கூடும் என்றும் வெள்ளை மாளிகை தெரிவித்தது. பின்னர், செளதி அரேபியாவுக்கு உளவுத் தகவல்களை வழங்கி வருவதாகவும், அங்கு ராணுவ நிபுணர்களை அனுப்பியுள்ளதாகவும் அமெரிக்கா உறுதிப்படுத்தியது.
ஆனால், ரியாத் மீது சமீபத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் அமெரிக்கக் குடிமகன் ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து நிலைமை புதிய திருப்பத்தை எடுத்திருக்கலாம்.
செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சனிக்கிழமை நடத்தப்பட்ட தாக்குதல் "மிகவும் மோசமானது" என்று கூறினார். மேலும், செளதி அரேபியாவுடன் இணைந்து அமெரிக்கா ராணுவ ரீதியாகத் தலையிடக்கூடும் என்றும் அவர் சூசகமாகத் தெரிவித்தார்.
"சமீபத்திய தாக்குதல் குறித்து இப்போதுதான் எங்களுக்குத் தெரியவந்தது. எனவே, நாங்கள் ஒரு முடிவை எடுப்போம். நாங்கள் மிக விரைவாகச் செயல்படுவோம்," என்று டிரம்ப் கூறினார்.
ஆனால், அடுத்த மாதம் நடைபெறவுள்ள அமெரிக்காவின் முக்கியமான இடைக்காலத் தேர்தல்களுக்கு முன்பு அமெரிக்கா ராணுவ ரீதியாகத் தலையிடுவதற்கான வாய்ப்பு தற்போது குறைவாகவே தெரிகிறது.
2024-ஆம் ஆண்டு மீண்டும் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, உலகெங்கிலும் நடைபெறும் போர்களில் அமெரிக்காவின் தலையீட்டை முடிவுக்குக் கொண்டு வருவதாக டிரம்ப் உறுதியளித்திருந்தார். இருப்பினும், தற்போது மத்திய கிழக்கில் தீர்வு எட்டப்படாத மூன்று மோதல்களில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது. அவை காஸா, லெபனான் மற்றும் இரான் தொடர்பான மோதல்கள்.
இந்நிலையில், ஏமனிலும் அமெரிக்கா மற்றொரு போரில் சிக்கிக்கொண்டால், அது வாக்காளர்களிடம் நல்ல வரவேற்பைப் பெறுவதற்கான வாய்ப்பு குறைவு.
இந்தப் போர் முடிவுக்கு வருவதற்கு முன்பு மேலும் தீவிரமடையும் என்றும், இறுதியில் அமெரிக்கா தலையிட்டாலும் இல்லாவிட்டாலும், நிலையற்ற மற்றொரு போர் நிறுத்தத்துடன் முடிவடையக்கூடும் என்றும் தெரிகிறது.
கூடுதல் பகுப்பாய்வு: பிபிசி அரபு சேவையின் அப்தெல்பசீர் ஹசன்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

































