பெண் யூட்யூபரின் 'வீடியோக்களால்' ஒரு கோடி மதிப்புள்ள நகை கொள்ளை - நால்வர் சிக்கிய பின்னணி

பட மூலாதாரம், X/Kanniyakumari District Police
"வீட்டைக் கண்டறிவதற்கு பெண்ணின் ரீல்ஸ் உதவி செய்துள்ளது. அவரது மகள் எந்தப் பள்ளியில் படிக்கிறார் என்பதை ரீல்ஸ் மூலம் கண்டறிந்து குற்றத்தில் ஈடுபட்ட நபர்கள் பின்தொடர்ந்துள்ளனர்," எனக் கூறுகிறார், கன்னியாகுமரி எஸ்.பி அன்சுல் நாகர்.
அத்துடன், பெண் யூட்யூபர் வெளியிட்ட காணொளிகள் மூலமாக நகை, பணம் வைக்கப்பட்டிருந்த இடத்தை அடையாளம் கண்டு, கொள்ளையடிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
நாகர்கோயிலில் பெண் யூட்யூபர் வீட்டில் சுமார் 110 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் நான்கு பேரை காவல்துறை கைது செய்துள்ளது. இதுகுறித்து நாகர்கோயில் டிஎஸ்பி பிரகாஷ் பிபிசி தமிழிடம் பேசியபோது, "தங்களிடம் இருக்கும் நகை, பணம் போன்ற விவரங்களை சமூக ஊடகங்களில் வெளியிடுவது சரியல்ல." என்றார்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயில் அருகே உள்ள தம்மத்துகோணம் பகுதியைச் சேர்ந்த வினோத்குமார் என்பவர் ஃபைனான்ஸ் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். ஏலக்காய் வியாபாரத்தில் ஈடுபடும் வணிகர்களுக்குக் கடன் உதவி செய்வது இவரது பிரதான தொழில். இவரது மனைவி மதுமிதா, கடந்த சில மாதங்களாக சமூக ஊடகங்களில் தீவிரமாக இயங்கி வந்துள்ளார். மதுமிதா தன்னிடமுள்ள நகைகள், பணம், தான் வாங்கும் புதிய ஆபரணங்கள் ஆகியவற்றைக் காணொளிகளாக வெளியிட்டு வந்துள்ளார்.
இந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை இரவு (செப்டம்பர் 24) தனது வீட்டிலிருந்து சுமார் 110 சவரன் தங்க நகைகள் திருடப்பட்டதாக, ராஜாக்கமங்கலம் காவல் நிலையத்தில் வினோத்குமார் புகார் அளித்தார்.
'7 தனிப் படைகள், 160 சிசிடிவி கேமராக்கள்'
"சம்பவம் நடந்த நாளில் மாலை ஆறு மணியளவில் நெல்லை சென்றுவிட்டு இரவு 12 மணியளவில் வீடு திரும்பினோம். வீட்டின் பின்புறக் கதவு உடைக்கப்பட்டிருந்தது. மாடியிலுள்ள அறைக்குச் சென்று பார்த்தபோது நகைகள் திருடுபோனது தெரிய வந்தது," என்று காவல் துறையிடம் அளித்த புகாரில் வினோத்குமார் தெரிவித்துள்ளார்.
"வீட்டின் பின்புறம் வழியாக மர்ம நபர்கள் உள்ளே நுழைந்துள்ளனர். வீட்டுக்குள் வந்ததும் முன்பக்க கதவைப் பூட்டிவிட்டனர். நெல்லை சென்ற தம்பதி திரும்பி வந்தால்கூட கதவைத் திறக்க முடியாத அளவுக்கு அவர்கள் பூட்டிவிட்டதாக," கூறுகிறார் நாகர்கோயில் டி.எஸ்.பி பிரகாஷ்.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், "கதவு இயல்பாகவே பூட்டிக் கொண்டதாக நினைத்து தச்சர் ஒருவரை உதவிக்காக வினோத்குமார் அழைத்து, கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார். பின்பக்கம் சென்று பார்த்தபோது கதவை உடைத்துள்ளது தெரிய வந்துள்ளது" எனக் குறிப்பிட்டார். மேலும், "அது முக்கியப் பிரமுகர்கள் வசிக்கும் பகுதி. இவர்கள் வீட்டில் மூன்று கண்காணிப்பு கேமராக்கள் மட்டுமே வைக்கப்பட்டுள்ளன. மிகப் பெரிய வீடாக இருப்பதால் குறைந்தது 8 கேமராக்கள் வைக்கப்பட்டிருக்க வேண்டும்." என்றார் டி.எஸ்.பி பிரகாஷ்.
நகைத் திருட்டு தொடர்பாக ராஜாக்கமங்கலம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. டி.எஸ்.பி பிரகாஷ் தலைமையில் ஏழு தனிப் படைகள் அமைக்கப்பட்டதாக, கன்னியாகுமரி மாவட்ட காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. அதில், "சம்பவம் நடந்த இடம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டன. இதில் மொத்தமாக சம்பவ இடத்தில் இருந்து ஸ்ரீவைகுண்டம் வரை 160 சிசிடிவி கேமராக்களும் 35 அழைப்பு விவரப் பதிவுகளும் (Call Detail Record) ஆய்வு செய்யப்பட்டன." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், X/Kanniyakumari District Police
'இரண்டு கையுறைகள், ஒரு முகமூடி'
கைரேகை நிபுணர்கள், மோப்ப நாய் ஆகியவற்றின் உதவியுடன் குற்றம் நடந்த இடத்தில் தடயங்களைச் சேகரிக்கும் பணிகள் நடந்தன. "சம்பவம் நடந்த வீட்டில் இரண்டு கையுறைகள், ஒரு முகமூடி கிடைத்தது. கட்டிங் இயந்திரத்தின் பிளேடு ஒன்றும் கிடைத்தது" என்றார் கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி. அன்ஷுல் நாகர்.
செவ்வாய்க் கிழமையன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், "அவர்கள் வீட்டுக்குள் எப்படி வந்தார்கள் என்பதைக் கண்டறிய ஒரு தனிப் படையும், வெளியில் எங்கு சென்றார்கள் என்பதைக் கண்டறிய ஒரு தனிப் படையும் அமைக்கப்பட்டதாக" தெரிவித்தார்.
குறிப்பாக, "சம்பவ இடத்தின் அருகிலிருந்த சிசிடிவியை ஆராய்ந்தபோது இரவு 11.30 முதல் 12.30 மணிக்குள் அந்தப் பகுதியில் மூன்று இருசக்கர வாகனங்கள் சந்தேகப்படும் வகையில் தென்பட்டன" எனவும் அன்ஷுல் நாகர் தெரிவித்தார். அவற்றில் ஒரு வாகனம் மீது சந்தேகம் வலுத்ததால் அதன் விவரங்களைக் காவல்துறை சேகரித்துள்ளது.
"அந்த வாகனத்தில் வந்த நபர் அணிந்திருந்த சட்டை மற்றும் கால் சட்டையின் நிறம் ஆகியவற்றை வைத்து மதியம் எத்தனை மணிக்கு அந்த நபர் வந்தார் என்பதை ஆய்வு செய்ததாக" தங்கள் விசாரணை குறித்து எஸ்.பி அன்ஷுல் நாகர் விளக்கினார்.
ஒரு சிசிடிவியில் இருந்து அடுத்தடுத்த சிசிடிவி என 160 கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்ததாகக் கூறிய அன்ஷுல் நாகரின் கூற்றுப்படி, "கடந்த மூன்று நாட்களாக நாகர்கோயிலில் இருந்து கன்னியாகுமரி எல்லை வரையிலும் அதையடுத்து அங்கிருந்த மற்றுமொரு மாவட்டத்தின் எல்லை வரையிலும் இருந்த கண்காணிப்பு கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டன."

பட மூலாதாரம், YOUTUBE
இதன் தொடர்ச்சியாக, குற்றம் சுமத்தப்பட்ட நபர் பயன்படுத்திய இருசக்கர வாகனத்தின் எண்ணும் அவர் முகமும் தெளிவாகக் கிடைத்ததாக மாவட்ட எஸ்.பி தெரிவித்தார்.
சந்தேக நபர் குறித்து ஆராய்ந்தபோது தூத்துக்குடியில் உள்ள ஸ்ரீவைகுண்டம் பகுதியைக் காட்டியதாகக் கூறிய அன்ஷுல் நாகர், "அந்த நபர் ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து கன்னியாகுமரி சென்றுள்ளார். 28-ஆம் தேதி இரவு நடந்த வாகன சோதனையில் பிடிபட்டார்." என்றார்.
சந்தேக வளையத்தில் இருந்த நபர் பயன்படுத்திய இருசக்கர வாகனத்தின் நிறம் கறுப்பு எனவும் காவல்துறை விசாரணையில் முன்புறத்தில் இசக்கி பாண்டியன் என்பவரும் பின்புறத்தில் முருகன் என்பவரும் அமர்ந்திருந்ததாகவும் மாவட்ட எஸ்.பி தெரிவித்தார்.
மேலும், "அவர்கள் வைத்திருந்த பையில் ஐந்து சவரன் நகை கிடைத்தது. அவர்களிடம் விசாரித்தபோது குற்றத்தை ஒப்புக் கொண்டனர். குற்றச் சம்பவத்தில் முக்கிய நபராக இசக்கி பாண்டியன் இருந்துள்ளார்." என்றும் குறிப்பிட்டார்.
வழக்கின் மேலதிக விசாரணையில் முருகன், முருகேசன், தங்கபாண்டி ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். "இவர்கள் திருடிய நகைகளை விற்றுவிட்டனர். அதைப் பறிமுதல் செய்துள்ளோம். வழக்கில் 98 சவரன் நகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது." என்றார் மாவட்ட எஸ்.பி.

பட மூலாதாரம், X/Kanniyakumari District Police
'ரீல்ஸ் பார்த்து கொள்ளையடிக்கத் திட்டம்'
வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட நபர்களிடம் காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருவதாகக் கூறிய மாவட்ட எஸ்.பி. "மதுமிதாவின் சமூக ஊடக பக்கத்தைக் கடந்த நான்கைந்து மாதங்களாக கைதான நபர்களில் ஒருவர் பின்தொடர்ந்துள்ளதாக" செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
அவரது கூற்றுப்படி, "வீட்டின் முகப்பு, எந்த அறையில் என்ன உள்ளது, எவ்வளவு நகை, பணம் உள்ளது என்பதைக் குற்றத்தில் ஈடுபட்ட நபர்கள் ஆராய்ந்துள்ளனர். ஒரு கட்டத்தில், வீட்டுக்குள் நுழையலாம் என அவர்களுக்குத் தோன்றியுள்ளது."
கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதியில் இருந்தே மதுமிதா வசிக்கும் பகுதிக்கு தினமும் வந்து செல்வதைக் கைதான நபர் வழக்கமாக வைத்திருந்ததாகக் கூறிய மாவட்ட எஸ்.பி, வீட்டை அடையாளம் காண அவர்களுக்கு மதுமிதாவின் ரீல்ஸ் பயன்பட்டதாகக் குறிப்பிட்டார்.
இதுகுறித்து விவரித்த அவர், "மதுமிதாவின் மகள் எந்தப் பள்ளியில் படிக்கிறார் என்பதை அவரது அடையாள அட்டை மூலம் கண்டறிந்துள்ளனர். பள்ளியில் இருந்தே பின்தொடர்ந்து வீட்டைக் கண்டுபிடித்துள்ளனர். அதுதவிர, வீட்டின் முகப்பிலும் தம்பதியின் பெயர் இருந்ததை வைத்து உறுதி செய்துள்ளனர்." எனக் கூறினார்.
வீட்டில் கார் உள்ளதா என்பதை கைதான நபர் தினசரி ஆராய்ந்து வந்ததாகக் கூறிய மாவட்ட எஸ்.பி, " சம்பவ நாளில் கார் இல்லை என்பதை அறிந்த பிறகு திருட்டில் ஈடுபட்டுள்ளார். நகை மட்டுமே திருடு போயுள்ளது. பணம் தொடர்பான எந்தப் புகாரும் வரவில்லை." என்றார்.

பட மூலாதாரம், YOUTUBE
'கைதான நபர்கள் மீது ஏதேனும் குற்ற வழக்குகள் உள்ளதா?' என்ற கேள்விக்குப் பதிலளித்த மாவட்ட எஸ்.பி, "அவர்களுக்கு இது முதல் குற்றம். அவர்கள் மீது குற்ற வழக்குகள் எதுவும் நிலுவையில் இல்லை" எனக் கூறினார்.
நகை பறிபோனது குறித்து யூட்யூபர் மதுமிதாவிடம் விளக்கம் பெற பிபிசி தமிழ் முயன்றது. ஆனால், "அவர் பேசத் தயாராக இல்லை" என்ற பதில் மட்டும் கிடைத்தது. அதே நேரம், கொள்ளை நடந்த பிறகு செப்டம்பர் 26ஆம் தேதியன்று காணொளி ஒன்றை மதுமிதா வெளியிட்டுள்ளார். அதில், தனது மகளுக்குப் பள்ளி காலாண்டு விடுமுறை அளிக்கப்பட்டது குறித்து உற்சாகமாகப் பேசும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. கூடவே, 500 ரூபாய் நோட்டுகளைக் காட்சிப்படுத்தும் காட்சிகளும் அதில் இடம்பெற்றுள்ளன.
நாகர்கோயில் டி.எஸ்.பி கூறுவது என்ன?
"தன்னிடம் இருக்கும் சொத்து, நகை, பணம் ஆகியவற்றைக் காட்சிப்படுத்தி யூட்யூபர் மதுமிதா பேசும் காணொளிகள் அவரது சமூக ஊடக பக்கத்தில் உள்ளன. அவரைப் பின்தொடரும் நபர்களும் அதிகளவில் உள்ளனர்," என்றார் நாகர்கோயில் டி.எஸ்.பி பிரகாஷ்.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், "குற்றத்தில் ஈடுபட்ட நபர்களை காவல் துறை கைது செய்வது என்பது வேறு விஷயம். ஆனால், நகைகளைப் பறிகொடுப்பதன் மூலம் அவர்கள் இழப்பைச் சந்திக்கிறார்கள்" எனக் கூறுகிறார்.
"தன்னிடம் இருக்கும் நகை, பணம் போன்ற விவரங்களை ஒருவர் பொதுவெளியில் வெளியிடுவது சரியானதல்ல," எனக் கூறும் டி.எஸ்.பி பிரகாஷ், "தன்னிடம் இருக்கும் பணம், நகையைக் காட்டி காணொளிகளை வெளியிடும்போது, இதுபோன்ற நபர்களுக்குத் தாங்களே வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதாக அமைந்துவிடக்கூடும். ஆகையால், இதைத் தவிர்ப்பது நல்லது." எனவும் அவர் வலியுறுத்தினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

































