'எனக்கு இந்த வலி, வேதனை ஏன்?': கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 15 வயது சிறுமி குமுறல்

    • எழுதியவர், லாரா குயென்ஸ்பெர்க்
    • பதவி, சண்டே வித் லாரா குயென்ஸ்பெர்க்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் சங்கடத்தை ஏற்படுத்தலாம்.

இரண்டு பதின்ம வயதுச் சிறுவர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான ஒரு சிறுமி, அவர்களுக்குச் சிறைத் தண்டனை விதிக்காமல் தவிர்த்த நீதிபதியின் முடிவு, "முகத்தில் அறைந்தாற் போன்று இருந்தது" என்று பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

லாரா குயென்ஸ்பெர்க்கிடம் 'சண்டே வித் லாரா குயென்ஸ்பெர்க்' நிகழ்ச்சியில் பிரத்யேகமாகப் பேசிய, தற்போது 16 வயதாகும் அந்தச் சிறுமி, "என்னை அத்தகையதொரு விசாரணை சூழலுக்கு உட்படுத்தியதில் என்ன பயன்?" என்று கேட்டார்.

தனது குடும்பத்தினருடன் இணைந்து பெயர் குறிப்பிடாமல் பேசிய அந்தச் சிறுமி, நீதிபதியின் தீர்ப்பானது, "அந்தச் சிறுவர்கள் செய்த செயல் சரியானது அல்ல என்பது போன்றும், அதேசமயம் அவர்கள் இன்னும் சிறுவர்களாகவே இருந்ததால் சட்டத்தின் பார்வையில் அது சரியானது என்பது போன்றும் தோன்றுமாறு செய்துவிட்டது," என்று கூறினார்.

"மிக இளம் வயதுடைய" சிறுவர்களை "குற்றவியல் முறையில் கையாள்வதை" தவிர்க்க விரும்புவதாக வியாழக்கிழமை கூறியிருந்த நீதிபதி நிக்கோலஸ் ரோவ்லேண்ட் வழங்கிய இளைஞர் மறுவாழ்வு உத்தரவு (YRO) தண்டனைகளை தலைமை வழக்கறிஞர் (attorney general) மறுபரிசீலனை செய்ய உள்ளார்.

அச்சிறுமியின் நேர்காணல் குறித்துப் பதிலளிக்கையில், இது "மனதை உலுக்கும் மற்றும் துணிச்சலான சாட்சியம்" என்று பிரதமர் சர் கியர் ஸ்டாமர் கூறினார்.

"இந்த வழக்கின் மையமாகத் திகழும் இளம் பெண்கள், மிகக் கொடூரமான சூழல்களிலும் அசாதாரணமான துணிச்சலையும் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளனர்," என்று அவர் கூறினார்.

"இது ஒரு அதிர்ச்சியூட்டும் வழக்கு; சட்ட அதிகாரிகள் தண்டனைகளை அவசரமாக மறுஆய்வு செய்வது முற்றிலும் சரியானது."

ஹேம்ப்ஷயரில் உள்ள ஃபோர்டிங்பிரிட்ஜில், ஏவன் நதிக்கரையோரம் அமைந்துள்ள ஒரு சுரங்கப்பாதையில் அந்தச் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானபோது, ​​அவருக்கு வயது 15.

ஸ்நாப்சாட் மூலம் அறிமுகம்

ஸ்நாப்சாட் (Snapchat) எனும் சமூக ஊடகத் தளத்தில், அந்தச் சிறுவர்களில் ஒருவருடன் பழக தொடங்கிய பிறகு, அவரை முதன்முறையாகச் சந்திப்பதற்காக அச்சிறுமி நவம்பர் 2024-இல் அங்கு சென்றார்.

தற்போது 15 வயதாகும் அந்த இரு பதின்ம வயது சிறுவர்களும், 2025-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஒரு வயல்வெளியில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான மற்றொரு நபர் மீது தாக்குதல் நடத்திய குற்றத்துக்காகவும் தண்டிக்கப்பட்டனர். தற்போது 14 வயதாகும் மற்றொரு சிறுவனும், இந்த இரண்டாவது தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடையதாக தண்டிக்கப்பட்டார்.

அந்தச் சிறுவர்கள் பாலியல் வன்கொடுமைகளைத் தங்கள் செல்போன்களில் வீடியோ எடுத்து, பின்னர் அந்தக் காட்சிகளில் சிலவற்றை இணையத்தில் பகிர்ந்தனர்.

சவுதாம்ப்டன் கிரவுன் நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின்போது, ​​நீதிபதி அக்குற்றங்களின் "தீவிரத்தன்மையை" வலியுறுத்திக் கூறியதுடன், தாக்குதல்களைக் காணொளியாகப் பதிவு செய்த செயல் அவற்றை இன்னும் "மிகவும் தீவிரமானவையாக" மாற்றியதாகவும் தெரிவித்தார். அச்சிறுவர்களின் வயது குறித்துக் கருத்து தெரிவித்த பிறகு, விசாரணை நடைபெற்ற காலத்தில் அவர்கள் நடந்துகொண்ட விதத்துக்காக நீதிபதி அவர்களைப் பாராட்டினார்.

தன்னை தண்டித்ததாக கருதும் சிறுமி

ஆனால், வழங்கப்பட்ட தண்டனைகள் "மிக குறைவானவை" என்று கூறி, அத்தண்டனைகளை மாற்றி, அச்சிறுவர்களைச் சிறைக்கு அனுப்ப வேண்டும் என்று அந்தச் சிறுமியும் அவரது குடும்பத்தினரும் விரும்புகின்றனர்.

"நான் ஏன், நீதிமன்றத்துக்குச் செல்வது, விசாரணைக்கு முகங்கொடுப்பது, ஆதாரங்களுக்காக அனைத்தையும் மீண்டும் நினைவுகூர்வது, மற்றும் அவை அனைத்தும் மீண்டும் நிகழ்வதைப் பார்ப்பது என, இத்தனை வேதனைகளுக்கும் என்னை ஆளாக்கிக் கொண்டேன்?" என்று அந்த சிறுமி கூறினார்.

"இவற்றால் என்ன பயன் என்ற உணர்வை அது எனக்கு ஏற்படுத்தியது... 'எல்லாம் சரியாகிவிட்டது' என்று சொல்வதற்காக மட்டுமே, என்னை அத்தனைக்கும் ஆளாக்கியதில் என்ன அர்த்தம் இருந்தது?"

அந்தத் தாக்குதலைப் பற்றிப் பேச, தனக்கு ஆறு மாதங்கள் ஆனதாக அந்தச் சிறுமி கூறினார்.

"அதைச் சொன்னதற்குக் காரணம், நான் மனஅழுத்தத்தில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தேன். நிலைமை மோசமாகிக் கொண்டே இருந்தது. எனக்கு உதவி தேவைப்பட்டது. ஆனால் அதை எப்படி பெறுவது என்று தெரியவில்லை. அதனால் தான் நான் வெளிப்படையாகப் பேசினேன்," என்று அவர் கூறினார்.

"அந்தத் தாக்குதலுக்குப் பிறகு, துயரம், கோபம், மன அழுத்தம், சோர்வு, படிப்பு, வேலைக்கான தேவை ஆகியவற்றுடன் என் வாழ்க்கை சிதறிப் போவது போன்ற உணர்வுடன், அதை மீண்டும் சீரமைக்க நான் மேற்கொள்ளும் முயற்சிகள்... இவற்றைத் தவிர வேறு எதைப் பற்றியும் என்னால் சிந்திக்க முடியவில்லை," என்று அவர் கூறினார்.

இந்தத் தண்டனைகளை மேல்முறையீட்டு நீதிமன்றத்துக்குப் பரிந்துரைக்க வேண்டுமா என்பதைத் தீர்மானிக்க, தலைமை வழக்கறிஞருக்கு 28 நாட்கள் அவகாசம் இருக்கும்.

"நாம் அனைவரும் இதனை அவசரமாகக் கவனிக்க விரும்புகிறோம்," என்று கூறிய அமைச்சர் டாரென் ஜோன்ஸ், தலைமை வழக்கறிஞர் அதைவிட விரைவாகவே ஒரு முடிவை எடுப்பார் என்று எதிர்பார்ப்பதாக அந்த நிகழ்ச்சியில் தெரிவித்தார்.

"அந்தப் பெண்கள் நீதிக்குத் தகுதியானவர்கள்; அவர்களைப் போலவே, அவர்களது குடும்பத்தினரும் நீதிக்குத் தகுதியானவர்களே. இது அவர்களுக்காக மட்டுமல்லாமல், அதேபோன்ற இக்கட்டான சூழலில் தள்ளப்படும் பிற பெண்களுக்காகவும் ஆகும்," என்று அவர் கூறினார்.

"எல்லாமே நின்றுபோனது போல இருந்தது," என்று அச்சிறுமி கூறினார்.

அவர் நேரடியாகப் பிரதமரிடம், "தயவுசெய்து உதவுங்கள். இது உங்கள் மகளாகவோ, மகனாகவோ அல்லது உங்கள் குடும்ப உறுப்பினராகவோ இருந்திருந்தால், நீங்கள் மகிழ்ச்சியடைந்திருப்பீர்களா?" என வேண்டுகோள் விடுத்தார்.

"ஏனெனில் நாங்கள் மகிழ்ச்சியாக இல்லை; பொதுமக்களில் வேறு யாரும் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்றும் நான் கருதவில்லை. எனவே, உதவுவதற்கான அதிகாரமிக்க நிலையில் நீங்கள் இருக்கிறீர்கள்; தயவுசெய்து உதவுங்கள்."

தண்டனைகள் அறிவிக்கப்பட்டபோது அச்சிறுமியுடன் நீதிமன்றத்தில் உடனிருந்த, அவரது தாயின் துணைவர், நீதிபதியின் தீர்ப்பைக் கேட்டதும் தாம் "உடல்நலக்குறைவு ஏற்பட்டது போல உணர்ந்ததாக" கூறினார்.

அவர் கூறுகையில், "பாதிக்கப்பட்டவர்களே துன்பப்படுவதாகவும், குற்றமிழைத்தவர்களோ எவ்விதத் தண்டனையுமின்றித் தப்பித்துவிட்டதாகவும் எனக்குத் தோன்றுகிறது." என்றார்.

​​15 வயது சிறுவர்களில் ஒருவருக்கு — இரண்டு சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்தமை மற்றும் அதனை படம்பிடித்தது தொடர்பான குற்றச்சாட்டுகளுக்காக, 180 நாட்கள் தீவிரக் கண்காணிப்பு மற்றும் மேற்பார்வையுடன் கூடிய, மூன்று ஆண்டுகால 'இளைஞர் மறுவாழ்வு ஆணை' (YRO) வழங்கப்பட்டது.

மற்றொரு 15 வயது சிறுவனுக்கும் நீதிமன்றம் இதேபோன்ற தண்டனையை விதித்தது. பாலியல் வன்கொடுமை தொடர்பான மூன்று குற்றச்சாட்டுகள் மற்றும் அதை படம்பிடித்ததாக கூறப்படும் நான்கு குற்றச்சாட்டுகளில் அவர் தண்டிக்கப்பட்டார்.

2025-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் நடைபெற்ற தாக்குதலின்போது, ​​குற்றவாளிகளில் ஒருவரைத் தூண்டியதன் மூலம் பாலியல் வன்கொடுமைக்கு உடந்தையாக இருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட 14 வயது சிறுவனுக்கு, 18 மாத கால இளைஞர் மறுவாழ்வு உத்தரவு (YRO) வழங்கப்பட்டது.

அரசு கூறுவது என்ன?

நீதி நிலைநாட்டப்படவில்லை என்று சீர்திருத்த கட்சியின் (Reform UK) நாடாளுமன்ற உறுப்பினர் ராபர்ட் ஜென்ரிக் கூறினார்.

"ஒரு நீதிபதி மிக மோசமான தவறை இழைத்திருந்தால் அதற்கு அவர்கள் பொறுப்பேற்க வேண்டும். இந்த வழக்கில் மிக மோசமான தவறு நிகழ்ந்திருப்பதாக நான் கருதுகிறேன்," என்று அவர் அந்த நிகழ்ச்சியில் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு, அந்தக் குடும்பத்தினர் அமைச்சர் டாரெட் ஜோன்ஸை தனிப்பட்ட முறையிலும், ஜென்ரிக்கை தனியாகவும் சந்தித்தனர்.

பழமைவாதக் கட்சித் தலைவர் கெமி பேடனாக், வெள்ளிக்கிழமை இச்சம்பவம் தன்னை "மிகுந்த அதிர்ச்சியடையச் செய்ததாகக்" கூறினார்; "இக்குற்றம் இதைவிடக் கொடியதாக இருக்க முடியாது; ஆனாலும், இதற்கான தண்டனை என்பது தண்டனையே அல்ல," என்றும் அவர் குறிப்பிட்டார்.

லிபரல் ஜனநாயகக் கட்சி எம்.பி.யான என். மகுவேர், இந்த வழக்கை "முற்றிலும் பயங்கரமானது" என்று விவரித்ததோடு, இந்த மறுஆய்வு "விரைவாகவும் உறுதியாகவும்" நடத்தப்பட வேண்டும் என்றும் கூறினார்.

இங்கிலாந்தின் குழந்தைகள் ஆணையரான டேம் ரேச்சல் டிசோசா, தாம் "மிகவும் கவலையடைந்துள்ளதாகத்" தெரிவித்தார்; பாதிக்கப்பட்ட குடும்பங்களை அணுகி ஆதரவளிக்கத் தனது அலுவலகம் முன்வரும் என்றும் கூறினார்.

"இந்த நாட்டில் உள்ள எந்தவொரு இளம்பெண்ணும், இத்தகைய நிகழ்வுகள் நடக்கக்கூடும் என்றும், அவற்றுக்கு உரிய முறையில் தீர்வு காணப்படாது என்றும் உணர்வதை நான் விரும்பவில்லை," என்று டேம் ரேச்சல் கூறினார்.

அரசு செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், "இந்தக் கொடூரமான வழக்கின் விவரங்களைக் கண்டு பொதுமக்கள் அடைந்துள்ள அதிர்ச்சியை நாங்களும் பகிர்ந்துகொள்கிறோம்; இந்தத் துயரமான நேரத்தில், பாதிக்கப்பட்ட இளம் சிறார்களின் மீது எங்கள் எண்ணங்கள் பதிந்துள்ளன" என்றார்.

"சட்ட அதிகாரிகள் இவ்வழக்கை மிகுந்த கவனத்துடனும் அக்கறையுடனும் அவசரமாக மறுஆய்வு செய்து வருகின்றனர்."

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு