அமெரிக்கா தரும் நெருக்கடியை ரஷ்யா, சீனா உதவியுடன் கியூபா எதிர்கொள்வது எப்படி?

    • எழுதியவர், பாஸ்கல் பிளெட்சர்
    • பதவி, லத்தீன் அமெரிக்க நிபுணர், பிபிசி மானிட்டரிங்
    • எழுதியவர், டங்கன் வாக்கர்
    • எழுதியவர், அலிசியா கரி
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

பல தசாப்தங்களாக பதற்றமாகவும் பலவீனமாகவும் இருந்துவரும் அமெரிக்கா - கியூபா இடையிலான உறவு, சமீபத்திய வாரங்களில் மிக வேகமாக மோசமடைந்து வருகிறது. அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்கு கியூபா அச்சுறுத்தலாக விளங்குவதாக அமெரிக்கா குற்றம் சாட்டுகிறது.

கியூபா மீது எண்ணெய் முற்றுகை, பொருளாதாரத் தடைகள் மற்றும் தற்போது அதன் முன்னாள் தலைவர் ராவுல் காஸ்ட்ரோவுக்கு எதிராக முன்னோடியில்லாத கொலைக் குற்றச்சாட்டையும் சுமத்தியுள்ளது.

கியூபாவுடன் அமைதி உடன்பாடு ஏற்படுவது சாத்தியமில்லை என அமெரிக்கா எச்சரித்துள்ள நிலையில், இது அமெரிக்காவின் ராணுவத் தலையீட்டை நியாயப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட ஒரு "மோசடியான வழக்கு" என கியூபா குற்றம்சாட்டுகிறது.

ஆனால், கியூபா மீது அமெரிக்கா இத்தகைய அழுத்தத்தை பிரயோகிப்பதன் பின்னணியில் உள்ள தூண்டுதல் என்ன, இதற்கு அந்நாடு எவ்வாறு பதிலடி கொடுத்து வருகிறது?

கியூபாவுக்கு எதிராக அமெரிக்கா ராணுவ நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளதா?

அமெரிக்க அதிபராக இரண்டாம் முறை அதிபராக பதவியேற்ற பிறகு கியூபாவின் தலைமைத்துவத்தை மாற்றியமைக்க வேண்டும் என்ற தனது விருப்பத்தை டொனால்ட் டிரம்ப் பலமுறை வெளிப்படுத்தியுள்ளார். அதோடு, கியூபா "வீழ்வதற்குத் தயாராக" உள்ளது என்றும் அவர் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார்.

கடந்த மார்ச் மாதத்தில், "நட்புரீதியான ஆக்கிரமிப்பு" குறித்து எச்சரித்த டிரம்ப், கியூபா "கடுமையான சிக்கலில்" இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

ராணுவத் தலையீட்டுக்கான எந்தவொரு திட்டத்தையும் அமெரிக்கா இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்காவிட்டாலும், கரீபியன் பகுதியில் அமெரிக்காவின் கண்காணிப்பு நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதால் கியூபாவில் பதற்றம் நிலவுகிறது.

கடந்த ஒரு வாரமாக, விமானங்களைக் கண்காணிக்கும் வலைத்தளங்களில் கியூபாவுக்கு அருகிலுள்ள தனது விமானங்களின் இருப்பிடத்தை அமெரிக்க ராணுவம் பகிரங்கமாக ஒளிபரப்பி வருகிறது.

விமானங்களின் டிரான்ஸ்பாண்டர்களை ஆன் செய்து வைத்திருப்பது "பெரும்பாலும் திட்டமிட்ட ஒன்றாகவே இருக்கும்" என்று பிரிட்டனைச் சேர்ந்த டிரோன் நிபுணர் டாக்டர் ஸ்டீவ் ரைட் தெரிவித்துள்ளார். "தங்களது பிடியை இறுக்குவதற்காக, வானில் தங்களுக்குக் கண்கள் உள்ளன என்ற செய்தியை" கியூபாவுக்கு தெளிவாக அனுப்பவே அமெரிக்கா இவ்வாறு செய்வதாகவும் அவர் கூறினார்.

இருப்பினும், விமானக் கண்காணிப்புத் தரவுகள் முழுமையான விவரங்களைத் தருவதில்லை; ஏனெனில், ராணுவ விமானங்கள் பெரும்பாலும் தங்களது பயணத்தின் சில பகுதிகளில் மட்டுமே இருப்பிடத்தைப் பகிர்ந்துகொள்கின்றன.

இதற்கிடையில், வகைப்படுத்தப்பட்ட உளவுத்துறைத் தகவல்களை மேற்கோள் காட்டி அமெரிக்க செய்தி தளமான ஆக்சியோஸ் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது.

அதில், கியூபாவிடம் 300 டிரோன்கள் இருப்பதாகவும், குவாண்டநாமோ விரிகுடா, புளோரிடாவில் உள்ள கீ வெஸ்ட் மற்றும் அமெரிக்க கடற்படை தளங்கள் உள்பட அருகிலுள்ள அமெரிக்க இலக்குகளைத் தாக்குவது குறித்து அது ஆலோசித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் ராணுவத் தலையீட்டுக்கான ஒரு சாத்தியமான சாக்குப்போக்காக அந்த உளவுத்துறைத் தகவல் பார்க்கப்படுகிறது. கியூபாவில் இரானிய ராணுவ ஆலோசகர்கள் இருப்பதை உணர்த்துவதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் கூறியதும் அந்த செய்தியில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.

இதற்குப் பதிலளித்த கியூபா வெளியுறவு அமைச்சர் புருனோ ரோட்ரிக்ஸ், தங்கள் நாடு "யாரையும் அச்சுறுத்தவில்லை, போரையும் விரும்பவில்லை" என்று கூறினார். ராணுவத் தலையீட்டை நியாயப்படுத்துவதற்காக அமெரிக்கா ஒரு "போலியான வழக்கை" உருவாக்கி வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

வியாழன் அன்று பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ, அமெரிக்காவின் முன்னுரிமை "ராஜீய ரீதியிலான தீர்வு" தான் என்று குறிப்பிட்டார். ஆனால், எந்தவொரு அச்சுறுத்தலிருந்தும் தனது நாட்டைப் பாதுகாக்கும் உரிமையும் கடமையும் டிரம்புக்கு உள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.

கியூபாவை "தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல்" என்று குறிப்பிட்ட அவர், அமைதியான உடன்பாடு ஏற்படுவதற்கான வாய்ப்பு "பெரும்பாலும் இல்லை" என்றும் கூறினார்.

இதற்கு எதிர்வினையாற்றிய புருனோ ரோட்ரிக்ஸ், ரூபியோ "ராணுவ ஆக்கிரமிப்பைத் தூண்ட" முயல்வதாகவும், அமெரிக்க அரசு தனது நாட்டின் மீது "இரக்கமின்றியும் முறையான திட்டமிடலுடனும்" தாக்குதல் நடத்துவதாகவும் குற்றம் சாட்டினார்.

கியூபாவின் அதிகாரப் படிநிலை

உலகின் பல நாடுகளைப் போலவே, கியூபாவிலும் அதிபர், பிரதமர் ஆகிய இரு பதவிகள் உள்ளன. ஆனால், அது தனித்துவமான அதிகாரப் படிநிலையால் ஆளப்படுகிறது.

அந்த படிநிலை, கரீபியன் பிராந்தியத்திலிருந்து உருவான மிக புகழ்பெற்ற பெயர்களில் ஒன்றான 'காஸ்ட்ரோ' என்ற பெயருடன் பிணைந்துள்ளது.

கியூபாவின் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள், தங்களை ஃபிடல் காஸ்ட்ரோவின் 1959-ஆம் ஆண்டு கியூபா புரட்சியின் வாரிசுகளாகவும் அதைத் தொடர்பவர்களாகவும் கருதுகின்றனர். அந்தப் புரட்சிதான் அமெரிக்க ஆதரவு பெற்ற சர்வாதிகாரி ஃபுல்ஜென்சியோ பாடிஸ்டாவை பதவியிலிருந்து அகற்றி, அடுத்தடுத்த தசாப்தங்களில் கியூபா அரசாங்கத்தின் அடையாளமாக "ஏகாதிபத்திய எதிர்ப்பை" நிலைநிறுத்தியது.

இதற்காகவே, முன்னாள் அதிபர் ராவுல் காஸ்ட்ரோவுக்கு எதிரான அமெரிக்காவின் குற்றச்சாட்டை, கியூபாவின் ஒற்றை கட்சி கம்யூனிஸ்ட் அமைப்பின் உச்சக்கட்ட அடையாளத்துக்கு எதிராகத் திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒரு தாக்குதலாக அவர்கள் கருதுகின்றனர்.

2008 முதல் 2018 வரை கியூபாவின் அதிபராகப் பணியாற்றிய ராவுல் "கியூபா புரட்சியின் தலைவர்" என்ற அதிகாரப்பூர்வப் பட்டத்தைக் கொண்டுள்ளார்.

கட்சியின் முக்கியப் பொறுப்பாளரான 66 வயது மிகுவெல் டயஸ்-கானெல் தற்போது கியூபாவின் அதிபர் பதவியையும், கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைப் பொறுப்பையும் வகிக்கிறார். இருப்பினும், காஸ்ட்ரோ என்ற குடும்பப் பெயர்தான் இப்போதும் அந்தத் தீவின் உண்மையான அதிகாரத்தைப் பிரதிபலிக்கிறது. அந்நாட்டின் ராணுவம் மற்றும் பாதுகாப்புப் படைகளிடையே மிகுந்த மரியாதையையும் பெற்றுள்ளது.

இந்த ராணுவப் படைகள் நாட்டின் பொருளாதாரத்தின் பெரும்பகுதியைத் திறம்பட நடத்துவதோடு, உள்நாட்டு ஒழுங்கைப் பராமரித்து, உள்நாட்டுக் கருத்து வேறுபாடுகளையும் எதிர்ப்புகளையும் ஒடுக்குகின்றன.

டிரம்ப் நிர்வாகம் கியூபாவுடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகள் மற்றும் பிற சமீபத்திய அணுகுமுறையிலும், ராவுல் காஸ்ட்ரோவின் 41 வயது பேரனும் அவரது பாதுகாவலருமான ராவுல் கில்லெர்மோ ரோட்ரிக்ஸ் காஸ்ட்ரோவும் இடம்பெற்றிருந்தார்.

உள்துறை அமைச்சகத்தின் கர்னலான அவர், அரசாங்கத்திலோ அல்லது கட்சியிலோ எந்தவொரு அதிகாரப்பூர்வ தலைமைப் பதவியையும் வகிக்கவில்லை என்ற போதிலும், பரவலாக தனது தாத்தா ராவுல் காஸ்ட்ரோவுக்கு மிக நெருக்கமானவராக கருதப்படுகிறார்.

இருப்பினும், நாட்டை ஆளும் அரசியல் மற்றும் ராணுவ உயரடுக்கினரிடையே கூட்டு முடிவெடுக்கும் வழக்கம் நடைமுறையில் இருப்பதை டயஸ் கானெல் சுட்டிக்காட்டியுள்ளார்.

காஸ்ட்ரோவின் விசுவாசியும், ராணுவ தொழில்நுட்ப வல்லுநருமான 62 வயது மானுவல் மாரெரோ கியூபாவின் பிரதமராகப் பணியாற்றுகிறார். 68 வயது வெளியுறவு அமைச்சர் ரோட்ரிக்ஸ், அமெரிக்காவுக்குப் பதிலளிக்கும் அரசாங்கத்தின் மிக முக்கியமான "குரலாக" பெரும்பாலும் ஒலிக்கிறார்.

மாரெரோ, கியூபா ஜெனரல்களால் நடத்தப்படும் மறைமுகமான ராணுவக் கூட்டு நிறுவனமான கயேசாவுடன் (GAESA) தொடர்புடையவர். இந்த நிறுவனம், நாட்டின் ராணுவம் மற்றும் அரசியல் உயரடுக்கினருக்குத் தேவையான பொருளாதாரச் சொத்துகளை இயக்கும் ஒரு வெளிப்படைத்தன்மையற்ற அமைப்பாகப் பார்க்கப்படுகிறது.

மே 20 அன்று கியூபா மக்களுக்கு வெளியிட்ட வீடியோ செய்தி ஒன்றில் ரூபியோ இந்த அதிகார அமைப்பைக் சுட்டிக்காட்டிப் பேசினார். "கியூபா எந்தப் புரட்சியாலும் கட்டுப்படுத்தப்படவில்லை. கியூபா, 'அரசுக்குள்ளேயே ஒரு அரசு' போலச் செயல்படும் 'கயேசா' அமைப்பாலேயே கியூபா கட்டுப்படுத்தப்படுகிறது" என்று கூறினார்.

மேலும், "ஊழல் மிகுந்த" மற்றும் "திறமையற்ற" ஆளும் வர்க்கத்தினர் சீர்திருத்தங்களைத் தடுத்து வருவதாகவும், அமெரிக்காவுடனான சிறந்த உறவு உருவாவதைத் தடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ராவுல் காஸ்ட்ரோ மீது அமெரிக்கா கொலைக் குற்றம் சுமத்தியதன் பின்னணி

காஸ்ட்ரோவுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள சமீபத்திய குற்றச்சாட்டுகள் முப்பதாண்டுகளுக்கு முந்தைய ஒரு சம்பவத்துடன் தொடர்புடையவை ஆகும்.

கடந்த 1996 பிப்ரவரியில், மயாமி நகரைச் சேர்ந்த கியூபா அகதிகள் குழுவுக்குச் சொந்தமான இரண்டு சிறிய பயணிகள் விமானங்களை கியூபாவின் போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தின. அந்த விமானங்களில் இருந்த மூன்று அமெரிக்க குடிமக்கள் உட்பட நான்கு பேர் இந்தச் சம்பவத்தில் கொல்லப்பட்டனர்.

அக்காலகட்டத்தில், கியூபாவின் ஆயுதப்படை அமைச்சராக ராவுல் காஸ்ட்ரோ தனது சகோதரரின் ஆட்சியில் மிகவும் சக்திவாய்ந்த நபர்களில் ஒருவராகவும் இருந்தார்.

சர்வதேச கடல் பகுதியில் சிவிலியன் விமானங்களை கியூபா சட்டவிரோதமாக இலக்கு வைத்துள்ளதாக அமெரிக்கா குற்றம் சாட்டியது, வேறு பிற நாடுகளும் இந்த நடவடிக்கையைக் கண்டித்தன.

இந்தச் சம்பவம் தங்கள் நாட்டின் வான்வெளியில் நடந்ததாகக் கூறும் கியூபா அரசு, 'பிரதர்ஸ் டு தி ரெஸ்க்யூ' என்ற அகதிகள் குழு தங்களது வான் எல்லைக்குள் மீண்டும் மீண்டும் அத்துமீறி நுழைந்து தங்களது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியதாக விளக்கமளித்தது.

இந்த வார தொடக்கத்தில், ராவுல் மற்றும் ஐந்து பேர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளைச் சுமத்தி அமெரிக்கா வழக்குப்பதிவு செய்துள்ளது. அதில் அமெரிக்க குடிமக்களைக் கொல்ல சதித் திட்டம் தீட்டுதல், கொலை மற்றும் அமெரிக்க விமானங்களை அழித்தல் போன்ற குற்றச்சாட்டுகள் அடங்கும்.

அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை விதிக்கப்படலாம்.

இந்தக் குற்றச்சாட்டுகளை அறிவித்தபோது, அமெரிக்கா "தனது குடிமக்களை ஒருபோதும் மறக்காது, மறக்கவும் போவதில்லை" என்று தற்காலிக அட்டர்னி ஜெனரல் டாட் பிளான்ச் கூறுகிறார். ஆனால், கியூபாவின் மிக முக்கியமான ஒரு முக்கிய நபரை அமெரிக்கா குறிப்பாக இலக்கு வைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கியூபாவுக்கு எதிரான "ராணுவ ஆக்கிரமிப்பு என்ற முட்டாள்தனத்தை நியாயப்படுத்தவே" இந்த குற்றச்சாட்டுகள் பயன்படுத்தப்படுவதாக டயஸ்-கானெல் கூறினார்.

"எந்தவொரு சட்டப்பூர்வமான அடிப்படையும் இல்லாத ஒரு அரசியல் சூழ்ச்சி" என்று இந்தக் குற்றச்சாட்டை குறிப்பிட்ட அவர், கியூபா அந்த விமானங்களை வீழ்த்தியது "தங்கள் எல்லைக்குட்பட்ட கடல் பகுதியில் நடத்திய சட்டப்பூர்வமான தற்காப்பு நடவடிக்கையே" என்று கூறினார்.

மின்வெட்டுகளால் நிலைகுலைந்த கியூபா

எண்ணெய் முற்றுகை மற்றும் பொருளாதாரத் தடைகள் மூலமாக கியூபா மீது அமெரிக்கா அழுத்தம் கொடுத்துவருகிறது. கடந்த பல மாதங்களாக கியூபாவில் எரிபொருள் பற்றாக்குறை தொடர்வதால் அந்நாடு பரவலான மின்வெட்டுகளால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த காலத்தில் வெனிசுவேலாவும் மெக்சிகோவும் கியூபாவுக்குத் தேவையான பெரும்பாலான எண்ணெய் மற்றும் எரிபொருளை வழங்கி வந்தன. ஆனால், கடந்த ஜனவரி மாதம் வெனிசுவேலா அதிபரை அமெரிக்கா பதவியிலிருந்து நீக்கிய பிறகு கியூபாவுக்கு கச்சா எண்ணெய் அனுப்பும் நாடுகள் மீது சுங்கவரி விதிப்பதாக டொனால்ட் டிரம்ப் அச்சுறுத்தியதால், அவை கியூபாவுக்கான தங்களது விநியோகத்தைப் பெருமளவில் நிறுத்திவிட்டன.

இந்தத் தடை விதிக்கப்பட்டதிலிருந்து ஒரே ஒரு ரஷ்ய எண்ணெய் கப்பல் மட்டுமே கியூபாவைச் சென்றடைந்துள்ளது; கியூபாவுக்குச் செல்லவிருந்த பல எண்ணெய் சரக்குகளை அமெரிக்கா கைப்பற்றியுள்ளது.

மின்வெட்டு மட்டுமின்றி உணவு, எரிபொருள் மற்றும் மருந்துப் பற்றாக்குறையாலும் கியூபா மக்களிடையே அதிருப்தி அதிகரித்து வருகிறது. வழக்கம் போல் செயல்பட முடியாமல் மருத்துவமனைகள் திணறி வரும் நிலையில், பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் மூடப்பட வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டுள்ளன.

கியூபாவின் தலைநகர் ஹவானாவில் போராட்டக்காரர்கள் வீதிகளில் இறங்கி தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். புதன்கிழமை நடந்த ஒரு ஆர்ப்பாட்டத்தில், குப்பைகளை எரித்துச் சாலைகளை மறித்ததோடு, போராட்டக்காரர்கள் அரசாங்கத்துக்கு எதிரான முழக்கங்களையும் எழுப்பினர்.

இந்த மாதத்தில், கியூபாவின் எரிசக்தி, பாதுகாப்பு, நிதி அல்லது பாதுகாப்புத் துறைகளில் உள்ள மூத்த அதிகாரிகளை இலக்கு வைத்து, மனித உரிமை மீறல்கள் அல்லது ஊழலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டி அமெரிக்கா புதிய தடைகளை விதித்துள்ளது.

இதற்கிடையில், அமெரிக்கா 100 மில்லியன் டாலர் நிதியுதவி வழங்க முன்வந்துள்ளது. ஆனால், இந்த உதவி கியூபா அரசாங்கத்தைத் தவிர்த்து, கத்தோலிக்க தேவாலயம் மற்றும் சுதந்திரமான மனிதநேய அமைப்புகள் மூலமாக மட்டுமே விநியோகிக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் வழங்கப்படுகிறது.

இந்த உதவியை கியூபா நிராகரித்துவிட்டதாக அமெரிக்கா தெரிவித்தாலும், "நல்லெண்ணத்துடன் வழங்கப்படும்" எந்தவொரு உதவியையும் தங்கள் நாடு நிராகரிக்கவில்லை என்றும், அமெரிக்கா உதவ நினைக்கும் சிறந்த வழி இந்த எண்ணெய் முற்றுகையை நீக்குவதுதான் என்றும் கியூபா நாட்டின் வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் அழுத்தத்தை கியூபா எதிர்கொள்வது எப்படி?

அமெரிக்காவும் கியூபாவும் ரகசியமாக பேச்சுவார்த்தைகள் மேற்கொண்டதை கடந்த மார்ச் மாதத்தில் இரு நாடுகளுமே உறுதிப்படுத்தியிருந்தாலும், கியூபாவின் எதிர்வினை என்பது அதன் தலைவர்களின் கடுமையான அறிக்கைகளுடன் மட்டுமே சுருங்கிவிட்டது.

கியூபா மக்கள் மீது அமெரிக்கா "கூட்டுத் தண்டனையை" திணிப்பதாகக் குற்றம் சாட்டியுள்ள டயஸ் கானெல், இந்த முற்றுகையை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்று பலமுறை வலியுறுத்தியுள்ளார். இதனை "உலகின் மிகப்பெரிய ராணுவ சக்தியின் அச்சுறுத்தும் மற்றும் ஆணவமான நடத்தை" என்றும் அவர் விவரித்துள்ளார்.

டிரோன்கள் விநியோகிக்கப்பட்டதாகக் கூறப்படும் அறிக்கை குறித்துப் பதிலளித்த ரோட்ரிக்ஸ், அமெரிக்கா "கியூபா மக்களுக்கு எதிரான இரக்கமற்ற பொருளாதாரப் போரையும், அதன் விளைவாக நடக்கவிருக்கும் ராணுவ ஆக்கிரமிப்பையும்" நியாயப்படுத்துவதற்கான ஒரு காரணத்தை உருவாக்கி வருவதாகக் கூறினார்.

கியூபா போரை விரும்பவில்லை என அவர் உறுதியாகக் கூறும் அதே வேளையில், தங்களது நாடு "வெளிநாட்டு ஆக்கிரமிப்பை" எதிர்கொள்ளத் தயாராகி வருவதாகவும் தெரிவித்தார்.

இதற்கிடையில், கியூபாவின் நட்பு நாடுகளான சீனாவும் ரஷ்யாவும், கியூபா மீது அமெரிக்கா தொடர்ந்து செலுத்தி வரும் அழுத்தத்தை, குறிப்பாக ராவுல் காஸ்ட்ரோ மீதான குற்றச்சாட்டைக் கடுமையாகக் கண்டித்துள்ளன.

தனது நட்பு நாட்டுக்கு எதிராக அமெரிக்கா "கட்டாயப்படுத்துதல்" மற்றும் "அச்சுறுத்தல்களை" பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்று சீன வெளியுறவு அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது. அதே நேரத்தில், கியூபா மீது பிரயோகிக்கப்படும் இந்த அழுத்தம் "வன்முறைக்கு இணையானது" என ரஷ்யா தெரிவித்துள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு