குஜராத் சிறையில் தப்பிய கொலை குற்றவாளி மும்பை சென்று பிரபல நடிகரான கதை - 12 ஆண்டுக்கு பின் சிக்கியது எப்படி?

    • எழுதியவர், பார்கவ் பாரிக்
    • பதவி, பிபிசி குஜராத்திக்காக
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

12 ஆண்டுகளுக்கு முன்பு கொலை வழக்கு ஒன்றில் தண்டனை பெற்று சிறையில் தண்டனை அனுபவித்துக் கொண்டிருந்த குற்றவாளி தப்பிச் சென்று பாலிவுட்டில் நடிகராக பணியாற்றிக் கொண்டிருந்த போது குஜராத் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

2008 ஆம் ஆண்டு கொலை வழக்கு ஒன்றில் ஹேமந்த் மோதி என்ற வழக்கறிஞருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு பரோல் கிடைத்தபோது அவர் தப்பியோடிவிட்டார்.

அவர் மும்பைக்குச் சென்று நடிகராக அவதாரம் எடுத்து, ஏராளமான திரைப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்கள் மற்றும் இணையத் தொடர்களில் நடித்துள்ளார்.

ஆமதாபாத்திலேயே தொலைக்காட்சித் தொடரின் படப்பிடிப்பில் இருந்தபோது, போலீஸார் அவருக்கு பொறிவைத்து கைது செய்தனர்.

இந்த வழக்கு குறித்து விரிவாக தெரிந்துகொள்வதற்காக, குற்றப்பிரிவு அதிகாரிகளிடமும், ஹேமந்த் மோதியை அறிந்தவர்களுடனும் பிபிசி உரையாடியது.

இவ்வுரையாடல்கள் வாயிலாக, இத்தனை ஆண்டுகளாகத் தலைமறைவாக இருந்த குற்றவாளி ஒருவர், இறுதியில் எவ்வாறு காவல்துறையின் பிடியில் சிக்கிக்கொண்டார் என்பது தெரியவந்தது.

முழு பின்னணி என்ன?

ஆமதாபாத் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பி.எம். தாக்டா கூறுகையில், "'மோதி பானி நானி பஹு' என்ற தொலைக்காட்சித் தொடரில் நடித்துக் கொண்டிருந்த நடிகரை கைது செய்யச் சென்றபோது, அவருடைய நடிப்புத் திறன் எவ்வளவு பிரமாதமாக இருந்தது என்றால், அவரை அடையாளம் காண்பதே கடினமாக இருந்தது. ஆனால், அவர் கைது செய்யப்பட்ட நேரத்தில் பதிவான அவரது உடலில் உள்ள அடையாளங்களை ஒப்பிட்டுப் பார்த்து, அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. இறுதியில், காவல்துறையிடம் சிக்காமல் தப்பியோடி கடந்த 12 ஆண்டுகளாக நடிகராக மாறிய ஹேமந்த் மோதி தான் என்பதை அவர் ஒப்புக்கொண்டார்" என்றார்.

வழக்கின் பின்னணியின்படி, அவர் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்த அந்த கொலைச் சம்பவத்துக்கு முன்பு ஹேமந்த் மோதி ஆமதாபாத்தின் நரோடா பகுதியில் உள்ள சைஜ்பூர் போகாவில் இருக்கும் தாஸ்கி சாவ்லில் வசித்து வந்தார். 2005 ஜூன் 12 அன்று தனது அண்டை வீட்டாருடன் ஏற்பட்ட தகராறில் அவர் தனது சகோதரர் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து அண்டை வீட்டுக்காரரின் நண்பரான நரேந்திர தாம்பலே என்ற நன்னோவை கொலை செய்தார்.

ஹேமந்த் மோதி வழக்கறிஞராக இருந்ததால், தனக்கு மட்டுமல்ல, தன்னுடன் கைது செய்யப்பட்ட மற்ற ஏழு பேருக்காகவும் அவரே நீதிமன்றத்தில் வாதாடினார். ஆனால் 2008-இல், மூன்று ஆண்டுகள் நடைபெற்ற விசாரணைக்குப் பிறகு, நீதிமன்றம் ஹேமந்த் மோதி உட்பட ஏழு பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்தது.

வழக்கறிஞராக இருந்ததால் சிறை விதிமுறைகளை நன்கு அறிந்திருந்த ஹேமந்த், அப்போதைய சிறை அதிகாரி கேசவ் குமாருக்கு எதிராக மனு தாக்கல் செய்தார். தனக்கு மன அழுத்தம் இருப்பதாக முறையிட்டார். அதன் பிறகு, அவர் ஆமதாபாத்தின் சபர்மதி சிறையிலிருந்து மெஹ்சானா சிறைக்கு மாற்றப்பட்டார்.

நீதிமன்றத் தீர்ப்பு வெளியான ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு, மெஹ்சானா சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஹேமந்துக்கு குஜராத் உயர் நீதிமன்றம் 30 நாட்கள் பரோல் வழங்கியது. பரோலில் விடுதலையான அவர் அங்கிருந்து தலைமறைவானார். பின்னர் நடிகராக தனது வாழ்க்கையை அவர் தொடங்கினார்.

காவல்துறை என்ன சொல்கிறது?

பரோல் வழங்கப்பட்ட பிறகு, ஹேமந்த் தலைமறைவாகிவிட்டதாக ஆய்வாளர் பி.எம். தக்ரா தெரிவித்தார். சில காலம் வெவ்வேறு இடங்களில் வசித்த அவர் நடிப்புத் துறையில் வாய்ப்புகளைத் தேடி மும்பைக்குச் சென்றார்.

அவர் மேலும் கூறுகையில், "அங்கே, ஒரு பிரபலமான நடிகருடன் இணைந்து துணை வேடங்களைப் பெறத் தொடங்கினார்; நாடகங்களில் நடிக்க அவருக்கு வாய்ப்புகள் கிடைத்தன. இக்காலகட்டத்தில், அவர் தனது பெயரை 'ஸ்வப்னில் மோதி' என மாற்றிக்கொண்டார். தனது சிகை அலங்காரத்தையும் அவர் மாற்றியமைத்துக்கொண்டார். திரைப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்கள் மற்றும் இணையத் தொடர்களில் அவர் பணியாற்றத் தொடங்கினார். தென்னிந்தியத் திரைப்படங்கள் மட்டுமின்றி, குஜராத்தி மொழித் திரைப்படங்களிலும் அவர் பணியாற்றினார். ஆனால், யாரும் அவரை அடையாளம் காணாததால், அவருடைய தைரியம் அதிகரித்தது. இதனால், அவர் குஜராத்தி திரைப்படங்கள் மற்றும் தொடர்களில் தொடர்ந்து குணச்சித்திர வேடங்களில் நடிக்கத் தொடங்கினார்."

காவல்துறையின் கூற்றுப்படி, ஆமதாபாத்துக்குத் திரும்பிய பிறகு, அவர் ஆமதாபாத்தின் கோட் பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, 'மோதி பனி நானி பஹு' என்ற தொடரில் நடிக்கத் தொடங்கினார்.

ஹேமந்த் ஆமதாபாத்துக்கு வரும்போதெல்லாம், தான் ஒரு பெரிய நடிகர் என்று தனது வீட்டின் அருகில் உள்ளவர்களிடம் கூறுவது வழக்கம் என்று காவல் துறையினர் தெரிவித்தனர். ஆனால், அந்தப் பகுதியைச் சேர்ந்த ஒரு சமூக ஆர்வலருக்கு அவருடைய நடவடிக்கைகளில் சந்தேகம் ஏற்பட்டது.

குறிப்பாக, ஹேமந்த் தனது ஆதார் அட்டை மற்றும் பிற அடையாள ஆவணங்களை வீட்டு உரிமையாளரிடம் சமர்ப்பிக்கத் தவறியதே இந்தச் சந்தேகத்துக்கு முக்கியக் காரணமாக அமைந்தது.

தலைமறைவாக இருக்கும் ஒரு தேடப்படும் குற்றவாளியைப் போலவே ஹேமந்த் இருப்பதாக, அப்பகுதியைச் சேர்ந்த மற்றொரு வழக்கறிஞர் அந்த சமூக ஆர்வலரிடம் தெரிவித்தார். ஒரு தருணத்தில், ஹேமந்த் மீதான சந்தேகம் காவல்துறையின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்படும் நிலையை அடைந்தது.

இத்தகவலின் அடிப்படையில் ஹேமந்தைத் தீவிரக் கண்காணிப்பின் கீழ் காவல்துறை கொண்டுவந்தது. ஒரு நாள், தனது தொலைக்காட்சித் தொடரின் படப்பிடிப்பை முடித்துவிட்டு அவர் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது, ​​காவல்துறையினர் அவரைத் தங்கள் காவலில் எடுத்தனர்.

விசாரணையின் போது அவர் தனது குற்றங்கள் அனைத்தையும் ஒப்புக்கொண்டார்.

காவல்துறை மேலும் கூறுகையில், "திரையில் தனது உண்மையான பெயர் இடம்பெற்றால், தான் கைது செய்யப்படக் கூடும் என்று அஞ்சிய அவர், திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடல்களில் நடிப்பதற்காக தனது பெயரை மாற்றிக்கொண்டார்" என்று தெரிவித்தது.

இதைப் பற்றி அறிந்தவர்கள் என்ன சொல்கிறார்கள்?

பிபிசியிடம் பேசிய பிரபல குஜராத்தி திரைப்பட ஒளிப்பதிவாளர் ரசிக் திரிவேதி, "மும்பையைச் சேர்ந்த ஒரு நடிகரை வைத்து நான் திரைப்படம் தயாரித்துக் கொண்டிருந்த போது, ​​'ஸ்வப்னில்' என்பவர் என்னிடம் வந்து அந்தப் படத்தில் நடிக்க தனக்கு வாய்ப்பு அளிக்குமாறு கேட்டார். ஆனால், அவரது நடிப்புத் திறமை என்னை ஈர்க்காததால், நான் அவரை அப்படத்தில் சேர்த்துக்கொள்ளவில்லை" என்றார்.

மேலும் அவர், "அவருடைய முகம் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது, ஏனென்றால் அந்த நேரத்தில் அவர் என்னிடம் மிகவும் முரட்டுத்தனமாக நடந்துகொண்டார். தான் மும்பையில் ஒரு துணை நடிகராக பணியாற்றுவதாக என்னிடம் கூறினார். இதைத் தவிர எனக்கு வேறு எதுவும் தெரியாது" என்று கூறினார்.

இதற்கு முன்பு சைஜ்பூர் போகாவில் உள்ள தாஸ் சாவ்லில் வசித்து வந்த மணீஷ் படேல், 2018 முதல் நாரன்புராவில் வசித்து வருகிறார். அவர் தொலைபேசி உரையாடலில் கூறுகையில், "2005-இல் தகராறு நடைபெறுவதற்கு முன்பு, ஹேமந்த் மோதி அனைவருக்கும் சட்டப்பூர்வ நோட்டீஸ் அனுப்பி மக்களை மிரட்டி வந்தார். அவர் தனது மனைவியை விவாகரத்து செய்திருந்தார். அந்த கொலைச் சம்பவத்துக்குப் பிறகு, அக்குடும்பத்தினருடன் எங்களுக்கு எவ்விதத் தொடர்பும் இல்லை" என தெரிவித்தார்.

உள்ளூர் பத்திரிகையாளர் ஒருவரின் உதவியுடன், ஹேமந்த் வசித்து வந்த ஆமதாபாத்தின் கோட் பகுதியில் அமைந்துள்ள ஒரு சலூன் கடையில் பணியாற்றும் இக்பால் என்பவரிடம் பிபிசி பேசியது.

ஹேமந்தைப் பற்றி இக்பால் பிபிசியிடம் கூறுகையில் "அவர் இங்கு வரும்போதெல்லாம், கிரீம்கள், தலைமுடி ஜெல் என தனக்குத் தேவையான பொருட்களையெல்லாம் தானே வாங்கி வருவார். மும்பையில் பெரிய நடிகராவதே தனது லட்சியம் என்று சொல்லி, அதைப் பற்றியே பேசிக் கொண்டிருப்பார். தான் நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படத்தின் கதைக்களத்தையும், அப்பகுதியின் சூழலையும் நன்கு உணர்ந்து கொள்வதற்காகவே இந்த 'கோட்' பகுதியில் தங்கியிருப்பதாக எங்களிடம் கூறினார். அதனால்தான், நாங்கள் அந்த விஷயத்தைப்பற்றி அவரிடம் மேற்கொண்டு எதுவும் விசாரிக்கவில்லை" என்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு