சுறாவுடன் வீடியோ எடுக்க நெருங்கும் போது கடிபடும் 'இன்ஃப்ளூயன்சர்கள்'

பட மூலாதாரம், Tayane Dalazen
- எழுதியவர், வில் வெர்னன்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
"சுறாக்கள் மேல்பரப்பில் இருந்ததால் ஏதோ ஒன்று வித்தியாசமாக இருக்கிறது என எனக்குத் தெரிந்தது," என்கிறார் 37 வயதான டேயென் டலாசென். பிரேசிலைச் சேர்ந்த இவர் வழக்கறிஞராகவும் சமூக ஊடகப் பிரபலமாகவும் உள்ளார்.
"அங்கே நிறைய சுறாக்கள் இருந்தன. பின்னர் தான் சுற்றுலா ஒருங்கிணைப்பாளர்கள் சுறாக்கள் சுற்றுலாப் பயணிகளுடன் தொடர்பு கொள்ள வேண்டும் என்பதற்காக அவற்றுக்கு தீவனமிட்டு வந்தது எனக்குத் தெரிந்தது," என்று அவர் தெரிவித்தார்.
சாவ் பாலோவைச் சேர்ந்த டலாசென், ஏப்ரல் மாதம் பிரேசில் கரையில் சுறாக்களை காணும் சுற்றுலாவில் இருந்தார். அப்போது அவருடைய காலில் "வலுவான அழுத்தம்" இருப்பதாக திடீரென உணர்ந்தார்.
"சுறா என்னைக் கடித்தபோது வலி மிகவும் அதிகமாக இருந்தது. ஆனால் அந்த விலங்குடன் என்னால் சண்டையிட முடியாது என்பது தெரிந்ததால் நான் அமைதியாக இருந்தேன்." என்கிறார் டலாசென்.
ஏழு அடிக்கும் அதிகமான நீளம் கொண்ட நர்ஸ் சுறா அதன் தாடைகளை அவருடைய தொடையைச் சுற்றி இறுக்கியிருந்தது.
அவரைத் தண்ணீருக்கு அடியில் சில விநாடிகள் வைத்த பிறகே அவரை சுறா விடுவித்தது, இதனால்தான் அவரால் தப்பித்து வர முடிந்தது. அவருடைய தொடைகளில் கடுமையான காயங்களை ஏற்படுத்திய அந்த அனுபவத்தை 'மிகவும் அச்சமூட்டிய ஒன்று" என அவர் விவரிக்கிறார்.
சுறா கடித்த காணொளியை டலாசென் இணையத்தில் பதிவிட்டிருந்தார். அதற்கு லட்சக்கணக்கான பார்வைகள் கிடைத்துள்ளன. அவர் சமூக ஊடகத்தில் பதிவிடுவதற்காகவோ, சுறாவைத் தொடவோ அல்லது தூண்டவோ அங்கு செல்லவில்லை கூறும் நிலையில் அந்த விலங்குக்கு மிக அருகில் இருந்ததை ஒப்புக்கொள்கிறார்.

பட மூலாதாரம், Tayane Dalazen
சுறாக்கள் மனிதர்களைக் கடிப்பது மிகவும் அரிதான ஒன்று. ஆனால் ஓர் ஆண்டுக்குள்ளாக மூன்று இன்ஃப்ளுயென்சர்கள் சுறாக்களால் கடிக்கப்பட்டுள்ளனர். மக்கள் சுறாக்களுக்கு மிக அருகில் நீந்துவது, தொடுவது அல்லது அவற்றின் மீது பயணிப்பது ஆகியவற்றை காட்டும் காணொளிகள் சமூக ஊடகங்களில் அதிகரித்து வருவது பற்றி விஞ்ஞானிகள் கவலை எழுப்பியுள்ளனர்.
"நான் இந்தக் காணொளிகளை தற்போது ஒவ்வொரு வாரமும் பார்க்கிறேன், முன்பு இருந்ததைவிட அதிகமாகவே பார்க்கிறேன்," என்கிறார் சுறா விஞ்ஞானியான க்றிஸ்டியன் பார்டன். இவர் 'ஷார்க் பைட்ஸ்' என்கிற யூ-டியூப் சேனலையும் நடத்தி வருகிறார்.
"மக்கள் சுறாக்களுடன் மிகவும் தீவிரமான சம்பவங்களில் ஈடுபடுவதை நாம் பார்க்கப்போகிறோம்," என்று அவர் எச்சரிக்கிறார்.
ஜூலை மாதம், ஒரு மீனவ இன்ஃப்ளுயென்சர் தண்ணீருக்கு அடியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது பவளப்பாறை சுறாவால் (reef shark) தாக்கப்பட்டார். டிசம்பர் மாதம் சீனாவைச் சேர்ந்த கன்டென்ட் கிரியேட்டர் ஒருவர் மாலத்தீவில் சுறா தாக்குதலுக்கு இலக்கானார். இரண்டு சம்பவங்களும் கேமராவில் பதிவாகியிருந்தன.
உலகம் முழுவதும் மனித - சுறாக்கள் தொடர்பைக் கண்காணித்து வரும் 'இன்டர்நேஷனல் ஷார்க் அட்டாக் ஃபைல்' என்கிற நிறுவனத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் பிபிசியிடம் பேசுகையில், "சுறாக்கள் உடன் காணொளி எடுக்க முயற்சித்தபோது மக்கள் அவற்றால் கடிக்கப்படும் சம்பவங்கள் கடந்த மூன்று ஆண்டுகளில் அதிகரித்து வருவதைப் பார்ப்பதாக" தெரிவித்தனர்.
"கடல்விலங்குடன் நீச்சல்" பயணங்கள் பற்றிய ஆய்வு ஒன்று இன்ஃப்ளுயென்சர்கள் மற்றும் புகைப்படக் கலைஞர்கள் பாதுகாப்பு அறிவுறுத்தல்களைப் புறக்கணிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் எனத் தெரிவிக்கின்றன.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கரீபியனில் ஒரு சுற்றுலாப் பயணி ஆழமற்ற பகுதியில் 'புல் சுறாவை' (Bull shark) புகைப்படம் எடுக்க முயற்சித்தபோது சுறா கடித்ததால் இரு கைகளும் துண்டிக்கப்பட்டதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இரண்டு மாதங்களுக்குப் பிறகு, இஸ்ரேலில் 'செல்ஃபி ஸ்டிக்'கை வைத்திருந்தபடி ஸ்னார்கெலிங் (snorkelling) செய்துகொண்டிருந்த ஒருவர், புகைப்படம் எடுக்க முயன்றபோது சுறாக்களால் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுறாவால் தாக்கப்படும் ஆபத்து மிகக் குறைவாகவே உள்ளது. கடந்த 30 ஆண்டுகளாக 'தூண்டப்படாத சுறாத் தாக்குதல்' என்பது ஆண்டுக்கு 70 கடிகள் என்கிற அளவில் நிலையாகவே இருந்து வருகின்றன.

பட மூலாதாரம், WSL/World Surf League via Getty Images)
டேயென் டலாசென், அமைதியான சுறாக்கள் என்று அறியப்படும் நர்ஸ் சுறா இனத்தால் தாக்கப்பட்டார். ஆனால் சில இன்ஃப்ளுயென்சர்கள் புலி சுறாக்கள் மற்றும் பெரிய வெள்ளை சுறாக்களைத் தொடும் காட்சிகள் பதிவாகியுள்ளன.
"நாம் ஒரு மிகப்பெரிய வேட்டை விலங்கை, மிகப்பெரிய கடல் விலங்கைப் பற்றி பேசுகிறோம். நீங்கள் ஒரு காட்டுக்குள் நுழைந்து ஒரு சிங்கத்தின் முகத்தில் கையை வைக்க மாட்டீர்கள்," என்கிறார் பார்டன்.
மேலும் அவர், 'சுறாக்களின் இடத்தில் வரவேற்பில்லாத மனிதர்கள் நுழைந்தால் தற்காப்பு அல்லது தாக்குவதற்காக கடிக்கும் அணுகுமுறையை அவைகள் பின்பற்றுகின்றன' என்றும் தெரிவித்தார்.
மனிதர்களுடனான தொடர்பும் விலங்குகளுக்கு அழுத்தத்தை உருவாக்கலாம். சுறாக்களை அணுகுவது அல்லது தொடுவது குளோகோகார்டிகாய்ட்ஸ் என்கிற ஹார்மோன்கள் அதிக அளவில் உருவாக வழிவகுக்கின்றன. இவை பலவீனமடைந்த நோய் எதிர்ப்பு மண்டலம், அதிகரித்த இறப்பு விகிதம் மற்றும் கருச்சிதைவுற்ற குட்டிகள் ஆகியவற்றுக்கு வழிவகுக்கும்.
"நீங்கள் ஒரு சுறாவை அதன் வாழ்விடம், இனப்பெருக்கத் தளம், அல்லது உணவு உண்ணும் பகுதியில் அணுகி அழுத்தத்துக்கு உட்படுத்தினால், அந்தச் சுறா உயிர் பிழைத்திருக்க அவசியமான இடத்தை நீங்கள் அதற்கு மறுக்கிறீர்கள். அது நிச்சயம் ஒரு பிரச்னை தான்," என பார்டன் விளக்குகிறார்.
சுறாக்கள் தொடர்பாக விஷயங்களை பதிவிடுபவர்களில் ஓசன் ராம்சே என்பவர் மிகவும் பிரபலமானவர். 38 வயதான முன்னாள் மாடலான இவர் 2019-இல் இதுவரை அறியப்பட்டிதிலேயே மிகவும் பெரிய வெள்ளை சுறா உடன் நீந்தும்போது எடுக்க புகைப்படத்தால் பிரபலமானவர்.

பட மூலாதாரம், Reuters
அவர் அவ்வப்போது சுறாக்களைத் தொடுவது மற்றும் அவற்றின் முதுகுத் துடுப்புகளைப் பிடிப்பது போன்ற காணொளிகளைப் பதிவிடுகிறார்.
ஹவாயில் ஒரு படகின் மீதிருந்து அவர் பிபிசியிடம் பேசினார். இந்த இடத்தில் தான் அவர் கட்டணம் செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு "டைவ் வித் ஓசன்" சுற்றுலா நடத்துகிறார்.
"நான் பதிவிடும் அனைத்து கன்டென்ட் மூலம் பார்வைகளைப் பெறுவது என்னுடைய நோக்கமல்ல, அவை சுறாக்கள் பாதுகாப்பு பெற வேண்டும் என்பதற்காகவே. நான் பல ஆராய்ச்சி கட்டுரைகள், தரவு சேகரிப்புக்கு பங்களித்துள்ளேன், என்னுடைய அனைத்து பணிகளும் கல்வியை அடிப்படையாகக் கொண்டே இருக்கும்," என்று அவர் தெரிவித்த்தார்.
சுறாக்களுக்கு அருகில் சென்று தொடுவது தீங்கு விளைவிக்கும் என்பதை அவர் மறுக்கிறார். "என்னுடைய பணிகள் மற்றும் நான் பகிர்வதில் பெரும்பாலானவை ஒரு தொலைவில் இருந்து மதிப்போடு அவதானிப்பதே," என்று அவர் தெரிவிக்கிறார்.
"நான் அவற்றின் நடத்தையை அவதானிக்கிறேன், என்னைத் தொடர்புகொள்ள அவை தீர்மானிக்கின்றன. எப்போதும் அவையே முதல் நகர்வை எடுக்கின்றன," என்றும் அவர் குறிப்பிட்டார்.
சுறாக்களை மக்கள் தொடுவதைக் காட்டும் காணொளிகள் மற்றவர்களும் ஆபத்துகளை ஏற்றுக்கொண்டு அதையே செய்ய ஊக்குவிக்கிறது என்கிற விஞ்ஞானிகள் கூற்றுக்கள் பற்றிய கேள்விக்கு அவர் பதிலளித்தார்.
அப்போது, "நீங்கள் பொதுமக்களுக்கு சில பொறுப்புக்கூறலை வழங்க வேண்டும்," என அவர் வலியுறுக்கிறார்.
மேலும் அவர், "நான் பகிர்வதைப் பார்க்கும் பலரும் அவை கல்வி சார்ந்த செய்தி என்றே பார்க்கின்றனர். அவர்கள் அதை திருப்பிச் செய்யப்போவதில்லை." என்றார்.

பட மூலாதாரம், Lindsey Nicholson/UCG/Universal Images Group via Getty Images
தாங்கள் சமூக ஊடகப் பார்வைகள், கிளிக் அல்லது வருமானம் ஆகியவற்றால் உந்துதல் பெறவில்லை என மறுக்கும் பல கன்டென்ட் கிரியேட்டர்களிடம் பிபிசி பேசியது. அவர்கள் பாதுகாப்பு அல்லது சுறாக்கள் பற்றிய பொதுமக்களின் பார்வையை மாற்றவே முயற்சிப்பதாகத் தெரிவிக்கின்றனர்.
சுறா வல்லுநரான முனைவர் ஜேக் கூப்பர், இந்தக் கூற்றுகளை "அபத்தமானவை" என்று குறிப்பிடுகிறார்.
இது தொடர்பாக மேலும் விவரித்த ஜேக் கூப்பர், "ஒரு சுறாவிடம் செல்வது, தொடுவது அல்லது அதன் மீது பயணிப்பது அவற்றின் பாதுகாப்புக்கு என்ன செய்கிறது என்பது என்னால் உண்மையில் விளக்க முடியவில்லை. நீங்கள் செய்வதெல்லாம் ஒரு சுறா மனிதனால் துன்புறுதப்படுவதைக் காட்டுவது மட்டுமே. அளவுக்கு அதிகமான மீன்பிடிப்பைக் குறைப்பது அல்லது சுறாக்களுக்கு கூடுதல் பாதுகாப்பை வழங்குவது தொடர்பாக நாம் என்ன செய்யலாம் என்பது குறித்த எந்தவொரு கொள்கையையும் இது ஊக்குவிக்கவில்லை. சுறா இனங்களின் தற்போதைய நிலை என்ன அல்லது அவற்றைப் பாதுகாக்க எந்தக் கொள்கைகள் உண்மையில் உதவும் என்பது குறித்த அறிவியல் பூர்வமான தரவுகளை இது நிச்சயமாக வழங்குவதில்லை." என்று தெரிவித்தார்.

பட மூலாதாரம், Denis Grosmaine
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள மேம்பட்ட ஆய்வுகளுக்கான செயல்முறைப் பள்ளியைச் சேர்ந்த கடல்சார் உயிரியலாளரான எரிக் க்ளுவா, சுறாக்கடிகளின் பின்னால் உள்ள உந்துதல்கள் பற்றி ஆய்வு மேற்கொண்டுள்ளார்.
"சுறாக்களை மக்கள் ஆபத்தாக கருதுவது முன்பை விடக் குறைந்துள்ளது, இதனால் அவற்றுக்கு மிக அருகில் செல்வதால் ஏற்படும் சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது," என்று அவர் தெரிவித்தார்.
"இன்ஃப்ளுயென்சர்கள் சொல்லும் செய்தி என்பது 'பாருங்கள்! சுறாவைத் தொடுங்க, உங்களுக்கு எதுவும் ஆகாது,' என்பதாகவே உள்ளது," என்று அவர் தெரிவித்தார்.
சுறாக்களுடன் நீந்துவது அல்லது குதிப்பது உலகம் முழுவதும் பிரபலமடைந்து வருகிறது. பயண இணையதளமான 'ட்ரிப்அட்வைஸர்' மாலத்தீவில் மட்டுமே அது போன்ற 140 அனுபவங்களைப் பட்டியலிடுகிறது. அவற்றில் சில விளம்பரங்கள் சுறாக்களுடன் "மிகச்சிறந்த செல்ஃபி" எனத் தெரிவிக்கின்றன.
ஆனால் வல்லுநர்களிடமிருந்து வரும் எச்சரிக்கை தெளிவாக உள்ளது. மிகச்சிறந்த அந்த புகைப்படத்தைப் பெறுவதற்கு சில நேரங்களில் பெரும் விலையைக் கொடுக்க வேண்டியிருக்கலாம்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































