தமிழ்நாட்டில் இளம் வயது இறப்பு விகிதம் பெண்களைவிட ஆண்களில் அதிகமா? உண்மை என்ன?

பட மூலாதாரம், Getty Images
தமிழ்நாட்டில் 70 வயதுக்கு மேல் உயிரிழந்தோரின் எண்ணிக்கையை மட்டும் பார்த்தால், ஆண்களும் பெண்களும் வாழ்நாளின் இறுதிக் கட்டத்தை கிட்டத்தட்ட சமமாக எட்டுவதாகத் தோன்றுகிறது. 2025ஆம் ஆண்டில் இந்த வயதுப் பிரிவில் 1,55,093 ஆண்களும் 1,50,545 பெண்களும் உயிரிழந்துள்ளனர்.
ஆனால் அதே தரவுகளை வயது வாரியாகப் பிரித்துப் பார்த்தால் வேறொரு போக்கு தெரிகிறது. முதிய வயதில் இரு பாலரின் இறப்பு எண்ணிக்கை சமமாக இருந்தாலும், அதற்கு முந்தைய பல தசாப்தங்களில் ஆண்கள் பெண்களைவிட கணிசமாக அதிக அளவில் உயிரிழக்கிறார்கள்.
சுமார் 55-64 வயது பிரிவில் 81,840 ஆண்களும் 51,365 பெண்களும் உயிரிழந்துள்ளனர். 45-54 வயதில் இந்த இடைவெளி மேலும் பெரிதாகிறது. அந்த வயது பிரிவில் 54,743 ஆண்களும் 26,269 பெண்களும் இறந்துள்ளனர். 25-34 வயதினரில் ஒவ்வொரு பெண் இறப்புக்கும் கிட்டத்தட்ட மூன்று ஆண் இறப்புகள் பதிவாகியுள்ளன.
கடந்த 2025-ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் மொத்தமாக 4,01,860 ஆண்களும் 2,91,347 பெண்களும் உயிரிழந்துள்ளனர். ஆனால் இந்த வேறுபாட்டின் முக்கியத்துவம் மொத்த எண்ணிக்கையில் இல்லை. ஆண்கள் அதிகம் உயிரிழக்கத் தொடங்கும் வயதில்தான் அதன் அர்த்தம் இருக்கிறது.
அதாவது, 15 முதல் 64 வயது வரை, கல்வி, வேலை, திருமணம், குழந்தைகள் வளர்ப்பு, குடும்பப் பொறுப்புகள், முதிய பெற்றோர் பராமரிப்பு ஆகியவை அதிகம் குவியும் வாழ்க்கைக் கட்டத்தில், 1,94,470 ஆண்களும் 99,678 பெண்களும் உயிரிழந்துள்ளனர். ஆண்-பெண் இறப்புகளுக்கு இடையிலான மொத்த எண்ணிக்கை வித்தியாசத்தில் சுமார் 86 சதவிகிதம் இந்த வயது பிரிவிலேயே உருவாகியுள்ளது.
ஆண்களின் இறப்பு முந்தைய ஆண்டுகளிலும் அதிகம்
இது ஓர் ஆண்டுக்கான விதிவிலக்கான நிகழ்வல்ல. 2018 முதல் 2022 வரையிலான பிறப்பு - இறப்பு பதிவுகளை ஆய்வு செய்த தமிழ்நாட்டு பொது சுகாதார ஆய்வாளர்கள், 15 வயதுக்கு மேல் கிட்டத்தட்ட அனைத்து மாவட்டங்களிலும் ஆண்களின் உயிரிழப்பு பெண்களைவிட தொடர்ந்து அதிகமாக இருந்ததைக் கண்டறிந்துள்ளனர்.
தேசிய அளவிலும் இதே போக்கு காணப்படுகிறது. 2023ஆம் ஆண்டில் இந்தியாவில் பதிவான 86.6 லட்சம் இறப்புகளில் 52.4 லட்சம் ஆண்களும், 34.2 லட்சம் பெண்களும் ஆவர். பெரும்பாலான மாநிலங்களில் ஆண்களின் இறப்புகள் பெண்களைவிட அதிகமாக இருப்பதாக குடிமைப் பதிவு முறை தரவுகள் காட்டுகின்றன.
இறப்பு எண்ணிக்கைகள் மட்டுமே அபாயத்தை முழுமையாகச் சொல்லாது. மக்கள் தொகையின் அளவு மற்றும் வயது அமைப்பும் அதில் தாக்கம் செலுத்தும். இருப்பினும் மாதிரி பதிவு அமைப்பு (SRS) தரவுகளும் இதே போக்கையே சுட்டிக்காட்டுகின்றன. 2022ஆம் ஆண்டில் ஆயிரம் பேருக்கு ஆண்களின் இறப்பு விகிதம் 7.7 ஆக இருந்த நிலையில், பெண்களில் அது 5.8 ஆக இருந்தது.
பெண்களைவிட ஆண்கள் அதிகமாக இறப்பதற்குப் பல காரணிகள் இருக்கக்கூடும் என்கிறார் பொது சுகாதார நிபுணரும் தேசிய சுகாதார அமைப்புகள் வள மையத்தின் முன்னாள் செயல் இயக்குநருமான டி. சுந்தரராமன். "ஆண்களில் இறப்புகளுக்கான முக்கியக் காரணங்களில் ஒன்று இதய நோய்கள். பெண்களில் மாதவிடாய் முடியும் வரை ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் ஓரளவுக்கு பாதுகாப்பு தருகிறது. அதனால் இளம் வயது பெண்களைவிட ஆண்களில் இதய நோய்கள் அதிகமாகக் காணப்படுகின்றன," என்றார் அவர்.
நடுத்தர வயதில் காணப்படும் இந்த இடைவெளிக்கு வாழ்க்கை முறை காரணிகளும் பங்காற்றுகின்றன. "30 முதல் 60 வயது பிரிவில் நீண்டகால நுரையீரல் பாதிப்பான சிஓபிடி முக்கிய காரணமாக உள்ளது. புகையிலைப் பயன்பாடு பெண்களைவிட ஆண்களிடமே அதிகம்," சுந்தரராமன் கூறுகிறார்.
சுமார் 15 முதல் 30 வயது வரையிலான இளைஞர்களின் உயிரிழப்புகளில் வேறுவகையான காரணிகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. "சாலை விபத்துகளும் தற்கொலைகளும் இந்த வயது பிரிவில் முக்கியக் காரணங்களாக உள்ளன. குறிப்பாக இரு சக்கர வாகன விபத்துகள் அதிகம். இதுவே இளம் பெண்களைவிட இளம் ஆண்களில் அதிக உயிரிழப்புகளுக்கு வழிவகுக்கிறது," என்கிறார் அவர்.
இந்தப் புள்ளிவிவரங்களின் முக்கியத்துவம் எண்ணிக்கைகளில் மட்டுமில்லை; இறப்பு நிகழும் வயதிலும் இருக்கிறது. 80 வயதில் நிகழும் ஒரு இறப்பும், 40 வயதில் நிகழும் ஒரு இறப்பும் பதிவேட்டில் ஒரே ஒரு இறப்பாகத் தோன்றலாம். ஆனால் அதன் சமூக, பொருளாதார தாக்கம் ஒன்றல்ல. நடுத்தர வயதில் நிகழும் உயிரிழப்பு குடும்ப வருமானத்தை பாதிக்கலாம்; குழந்தைகள் பெற்றோரை இழக்கலாம்; முதிய பெற்றோர் பராமரிப்பாளரை இழக்கலாம்.
கடந்த 2010 மற்றும் 2025 தரவுகளை ஒப்பிட்டுப் பார்த்தால், தமிழ்நாட்டில் ஆண்களின் அதிக உயிரிழப்பு புதிய நிகழ்வு அல்ல என்பது தெளிவாகிறது. ஆனால் இந்த 15 ஆண்டுகளில் அந்த இடைவெளியின் தன்மை மாறியிருக்கிறது.
கடந்த 2010ஆம் ஆண்டில் 15-24 வயது பிரிவில் 9,108 ஆண்களும் 8,619 பெண்களும் உயிரிழந்திருந்தனர். அதாவது இரு பாலரின் எண்ணிக்கையும் கிட்டத்தட்ட சமமாக இருந்தது. ஆனால் 2025இல் அதே வயது பிரிவில் 9,167 ஆண்கள் உயிரிழந்த நிலையில் பெண்கள் 4,461 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர்.
25-34 வயது பிரிவில் 2010-இல் 17,797 ஆண்களுக்கும் 10,497 பெண்களுக்கும் இடையிலான வித்தியாசம், 2025இல் 17,135 ஆண்கள் மற்றும் 6,177 பெண்கள் என்ற அளவுக்கு விரிந்துள்ளது. 35-44 வயதிலும் ஆண் உயிரிழப்புகள் பெண்களைவிட கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகமாக உள்ளன.
இதற்கு மாறாக, முதிய வயதில் இடைவெளி குறைந்துள்ளது. 70 வயதுக்கு மேற்பட்டோரில் 2010இல் 84,112 ஆண்களும் 76,833 பெண்களும் உயிரிழந்த நிலையில், 2025இல் அது 1,55,093 ஆண்கள் மற்றும் 1,50,545 பெண்கள் என்ற அளவுக்கு கிட்டத்தட்ட சமமாகியுள்ளது. அதாவது ஆண்-பெண் இறப்பு வேறுபாடு முதிய வயதில் குறைந்திருந்தாலும், இளமை மற்றும் நடுத்தர வயதுகளில் அது மேலும் தீவிரமாகி இருப்பதையே தரவுகள் காட்டுகின்றன. குடும்பப் பொறுப்புகள், வேலைவாய்ப்பு மற்றும் சமூகப் பொறுப்புகள் அதிகமாகக் குவியும் வயதுகளில்தான் இந்த இடைவெளி மிகத் தெளிவாகப் பதிவாகியுள்ளது.
பதிவு செய்யப்படாத இறப்புகள்
இந்தத் தரவுகள் பதிவு செய்யப்பட்ட இறப்புகளின் எண்ணிக்கைகள் மட்டுமே, இறப்புக்கான காரணங்களை விளக்கும் தரவுகள் அல்ல. உயிரியல் காரணங்கள், உடல்நலப் பழக்கங்கள், தொழில் சார்ந்த அபாயங்கள், நோய்கள் அல்லது விபத்துகள் எந்த அளவுக்குப் பங்காற்றுகின்றன என்பதை இந்த எண்ணிக்கைகள் மட்டும் வைத்து முடிவு செய்ய முடியாது.
கடந்த 2025-ஆம் ஆண்டில் பதிவான 6,93,207 இறப்புகளில் 2,80,856 இறப்புகளுக்கு மட்டுமே மருத்துவச் சான்றளிக்கப்பட்ட காரணம் பதிவு செய்யப்பட்டிருந்தது. அதாவது மொத்த இறப்புகளில் 41 சதவிகிதத்திற்கு மட்டுமே மருத்துவ உறுதிப்படுத்தல் உள்ளது.
ஆண்களின் இறப்புகளில் 42 சதவிகிதமும், பெண்களின் இறப்புகளில் 38 சதவிகிதமும் மட்டுமே மருத்துவ ரீதியாகச் சான்றளிக்கப்பட்டுள்ளன. 70 வயதுக்கு மேற்பட்டவர்களிடம் இந்த விகிதம் இன்னும் குறைகிறது, மூன்றில் ஒரு இறப்புக்கு மட்டுமே மருத்துவக் காரணம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

































