அரசு ஊழியர்களுக்காக டேட்டிங் சேவை - சிங்கப்பூர் அறிமுகம் செய்த திட்டம் சர்ச்சையாவது ஏன்?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், கெல்லி என்ஜி
- பதவி,
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்
அரசு ஊழியர்களுக்காக சிங்கப்பூர் அரசாங்கம், துணை தேடும் (மேட்ச்மேக்கிங்) சேவையைத் தொடங்கியுள்ளது.
நாட்டில் கருவுறுதல் விகிதம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்குக் குறைந்துள்ள நிலையில், சிங்கப்பூர் தனது அரசு ஊழியர்களுக்காக ஒரு துணை தேடும் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. அதில், 21 முதல் 35 வயதுடையோருக்காக இந்த வாரம் ஃபர்ஸ்ட்டேட் (FirstDate) எனும் தளம் தொடங்கப்பட்டுள்ளது.
"டேட்டிங்கில் ஒரு வித்தியாசமான அணுகுமுறையை" கொண்டிருப்பதாக தெரிவிக்கும் இந்தத் தளம், நோபல் பரிசு பெற்ற ஆய்வை அடிப்படையாகக் கொண்ட ஓர் அல்காரிமை பயன்படுத்தி, இதில் பங்கேற்போருக்கு ஒரு நேரத்தில் ஒரு சந்திப்புக்கான துணையை இந்தச் சேவை தேர்வு செய்து முன்வைக்கிறது. "தொடர்ந்து ஸ்வைப் செய்வதால் ஏற்படும் சோர்வு இங்கே முடிவுக்கு வருவதாக" அதன் இணையதளம் குறிப்பிடுகிறது.
பங்கேற்பாளர்கள் தேசிய டிஜிட்டல் அடையாள அமைப்பைப் பயன்படுத்தி உள்நுழைந்து, தங்களது விருப்பங்கள், பழக்கவழக்கங்கள் மற்றும் மதிப்பீடுகள் குறித்துக் கேட்கப்படும் கேள்விகளுக்குப் பதிலளிக்கின்றனர்.
ஃபர்ஸ்ட்டேட் சேவை தொடங்கப்பட்டதற்கு சிங்கப்பூர் மக்களிடையே கலவையான கருத்துகள் வெளியாகியுள்ளன. சிலர் இதை 'டிஸ்டோப்பியன்' (இருண்ட எதிர்காலத்தின் அறிகுறி) என்று வர்ணித்த நிலையில், வேறு சிலர் இதை முயன்று பார்க்க ஆர்வமாக இருப்பதாகக் கூறியுள்ளனர்.
ஃபர்ஸ்ட்டேட் தனது இணையதளத்தில், இந்தத் திட்டத்திற்கு அடிப்படையாக இருப்பது கெய்ல்-ஷாப்லி ஸ்டேபிள் மேரேஜ் அல்காரிதம் எனப்படும் கணித முறை எனக் குறிப்பிட்டுள்ளது.
இந்தக் கணிதக் கட்டமைப்பு, சம எண்ணிக்கையிலான இரு குழுக்களை அவர்களின் விருப்பங்களின் அடிப்படையில் இணைக்கிறது.
இந்த அல்காரிமை கண்டுபிடித்ததற்காக மறைந்த கணிதவியலாளர் லாயிட் ஷாப்லிக்கு 2012ஆம் ஆண்டுக்கான பொருளாதார அறிவியலுக்கான நோபல் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. இந்த அல்காரிதம் அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கை, மருத்துவ உறைவிடப் பொருத்தம், டேட்டிங் செயலிகள் போன்றவற்றில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
சிங்கப்பூர் மக்கள் கூறுவது என்ன?
சிங்கப்பூர் பாதுகாப்பு அமைச்சகத்தில் பணிபுரியும் 29 வயதான எலிசபெத், ஃபர்ஸ்ட்டேட் சேவையை முயன்று பார்க்க ஆர்வமாக உள்ளதாக பிபிசியிடம் கூறினார்.
"வெவ்வேறு செயலிகளுடன் ஒப்பிடுகையில், இந்தச் செயலி மூலம் ஒருவரைச் சந்திக்கும் அனுபவத்தில் பெரிய மாற்றம் இருக்காது என நினைக்கிறேன். ஆனால் மோசடிக்கு உள்ளாகும் வாய்ப்பு மிகவும் குறைவு என்பது மகிழ்ச்சியாக உள்ளது. நாங்கள் அனைவரும் துணையைத் தேடும் அரசு ஊழியர்கள்தானே?" என்று அவர் கூறினார்.
ஆனால், தற்போது முன்னோட்டத் திட்டமாகச் செயல்படுத்தப்படும் இந்த முயற்சி, அரசுப் பணியில் இல்லாதவர்களைப் பாகுபாட்டுக்கு உட்படுத்துவதாக சில சமூக ஊடகப் பயனர்கள் விமர்சித்துள்ளனர்.
குறிப்பாக, வயது வரம்புக்கும் சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். "மொத்த கருவுறுதல் விகிதத்தை உயர்த்துவதற்காகத்தான் அவர்கள் இதைச் செய்கிறார்கள். வேறு விதத்தில் நாங்கள் ஒரு துணையைக் கண்டுபிடிக்கிறோமா என்பது குறித்து அவர்களுக்கு உண்மையான அக்கறை இல்லை. 35 வயது மற்றும் அதற்கு மேல் குழந்தைகளைப் பெற்றுக் கொள்வதில் அதிக அபாயங்கள் இருப்பதால், அரசு வயதான மற்றும் திருமணமாகாதவர்களை ஒதுக்கிவிடுகிறது," என்று மற்றொரு ரெடிட் தள பயனர் பதிவிட்டுள்ளார்.
இந்த முன்னோட்டத் திட்டம் எதிர்காலத்தில் பொது மக்களுக்கும் கிடைக்குமா என்பது தெளிவாகத் தெரியவில்லை. இந்த முன்னோட்டத் திட்டத்திற்குப் பின்னால் உள்ள சட்டபூர்வ வாரியமான கோவ்டெக் அமைப்பிடம் பிபிசி கருத்து கேட்டுள்ளது.

பட மூலாதாரம், Government Technology Agency of Singapore
சிங்கப்பூரின் பிறப்பு விகிதம் வரலாற்றுச் சரிவைச் சந்தித்துள்ள நிலையில் இந்த முன்னோட்டத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. கடந்த 60 ஆண்டுகளில் முதல் முறையாக, 2025ஆம் ஆண்டில் 30,000க்கும் குறைவான குழந்தைகளே பிறந்துள்ளன. அதே நேரத்தில் முதியவர்கள் அதிகமுள்ள இந்த நாட்டில் இறப்பு எண்ணிக்கை சீராக அதிகரித்து வருகிறது, இது 2025இல் சுமார் 26,500ஐ எட்டியுள்ளது.
குடும்பங்களுக்கு சிறந்த ஆதரவை வழங்கவும், தம்பதிகள் குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள ஊக்குவிக்கவும் ஆகஸ்ட் மாதம் பிரதமர் லாரன்ஸ் வோங் தொடர்ச்சியான புதிய நடவடிக்கைகளை அறிவித்தார். இதில் ஒவ்வொரு குழந்தைக்கும் 17 வயதை எட்டும் நேரத்திற்குள் கிட்டத்தட்ட 70,000 சிங்கப்பூர் டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 52 லட்சம் ரூபாய்) நிதியுதவி வழங்கும் திட்டமும் அடங்கும்.
இதுபோல, சிங்கப்பூர் அரசு தனது குடிமக்களுக்காக துணை தேட முயல்வது முதல் முறையல்ல. 1984ஆம் ஆண்டில், திருமணமாகாமல் இருக்கும் பட்டதாரிகள் ஒருவருடன் ஒருவர் பழக வாய்ப்பளிக்கும் சமூக நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதற்காக சமூக மேம்பாட்டுப் பிரிவை (எஸ்டியூ) அரசு உருவாக்கியது. பல்கலைக் கழகப் பட்டதாரிகளை மட்டுமே இலக்காகக் கொண்ட அதன் செயல்பாடு, 'மேல்தட்டு வர்க்கத்தினருக்கானது' என விமர்சிக்கப்பட்டது.
ஆனால் பட்டதாரிகள் அல்லாதவர்கள் துணையைக் கண்டுபிடிப்பதில் எந்தச் சிரமத்தையும் எதிர்கொள்வது போலத் தெரியவில்லை என்று அதிகாரிகள் இந்த அணுகுமுறையை நியாயப்படுத்தினர். பின்னர் எஸ்டியூ அமைப்பு படிப்படியாகக் கலைக்கப்பட்டது. அடுத்த ஆண்டு, பட்டதாரிகள் அல்லாதோரிடையே திருமணங்களை ஊக்குவிக்க அரசாங்கம் மற்றுமோர் அமைப்பை உருவாக்கியது.
அரசாங்கத்தால் நடத்தப்படும் டேட்டிங் சேவை என்ற யோசனை சிங்கப்பூருக்கு மட்டுமே உரித்தானதல்ல. 2024 செப்டம்பரில், ஜப்பான் நாட்டின் குறைந்து வரும் பிறப்பு விகிதத்தை எதிர்த்துப் போராடும் முயற்சியாக டோக்கியோ பெருநகர அரசாங்கம் ஏஐ (செயற்கை நுண்ணறிவு) தொழில்நுட்பத்தில் இயங்கும் ஒரு டேட்டிங் செயலியை அறிமுகப்படுத்தியது.
நகரில் வசிக்கும் திருமணமாகாதவர்கள் பயன்படுத்தக்கூடிய அந்தச் செயலி மூலம் 265 ஜோடிகள் திருமணம் செய்துகொண்டதாக, இந்த ஆண்டு ஜூலை மாதம் வெளியிடப்பட்ட அரசுத் தரவுகள் தெரிவிக்கின்றன.
கூடுதல் தகவல்கள் - ஆஸ்மண்ட் சியா, சிங்கப்பூர்
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

































