தாராபுரம் இடைத்தேர்தலில் அதிகம் பேசப்படும் 'சத்தியபாமா ராஜிநாமா' - மக்கள் கூறுவது என்ன? பிபிசி தமிழ் கள ஆய்வு

''அமராவதி ஆறு வறண்டுவிட்டது. மழையே இல்லை. குடிநீருக்கும், ஆடு, மாடுகளுக்கும் தண்ணீரை விலைக்கு வாங்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். விவசாயம் செய்யும் நாங்கள், லாரி தண்ணீர் வாங்கி ஊற்றி தென்னையைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறோம். வீட்டில் குடிதண்ணீர் இணைப்பு இருந்தாலும் தண்ணீரே வருவதில்லை.''
விரக்தியும் வேதனையுமாக பிபிசியிடம் பேசினார், தாராபுரம் ரங்கபாளையத்தைச் சேர்ந்த சின்னாத்தாள்.
''3 சென்ட இடத்தில் 3 குடும்பம் குடியிருக்கிறோம். எங்களுக்கு பட்டா வேண்டும். கொடுப்பதாக இருந்தால் வேறிடத்தில் கொடுக்க வேண்டும். ஏற்கெனவே கொடுத்த இடத்தில் எந்த அடிப்படை வசதியுமே இல்லை. அங்கே கொடுப்பதாக இருந்தால் எங்களுக்கு இடமே வேண்டாம்.''
இது பட்டத்திபாளையத்தைச் சேர்ந்த முருகம்மாளின் கோரிக்கை.
இவர்களைப் போலவே, தாராபுரம் தொகுதியெங்கும் பலவிதமான பிரச்னைகளை மக்கள் அடுக்கினாலும் அக்டோபர் 6 அன்று நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் இவையனைத்தும் பின்னுக்குத் தள்ளப்பட்டு, அரசியல் ரீதியான மோதலே வலுப்பெற்றுள்ளது.
கடந்த முறை அதிமுக சார்பில் வென்று அதை ராஜிநாமா செய்தவரே, இப்போது தவெக வேட்பாளராக நிற்பதே இடைத்தேர்தலின் பேசுபொருளாகியுள்ளது.
வென்ற தேதி மே 4: ராஜிநாமா செய்த தேதி மே 25

கடந்த ஏப்ரலில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தாராபுரம் தொகுதியில் அதிமுக சார்பில் நின்ற சத்தியபாமா வெற்றி பெற்றார். மே 4 அன்று வெற்றிச்சான்றிதழ் பெற்று பதவியேற்ற அவர், மே 25 அன்று சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்து, தவெகவில் இணைந்தார். இப்போது 7 தொகுதிகள் காலியாக இருந்தாலும் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தனி தொகுதிகளுக்கு மட்டும் அக்டோபர் 6 அன்று இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடக்கிறது. அக்டோபர் 9 அன்று வாக்குகள் எண்ணப்படுகின்றன.
பதவியை ராஜிநாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்த முன்னாள் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் 6 பேருக்கும் மீண்டும் அதே தொகுதிகளில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படுமா என்ற கேள்வி எழுந்த நிலையில், தற்போது இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள இரு தொகுதிகளிலும் ராஜிநாமா செய்தவர்களுக்கே மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தாராபுரத்தில் கடந்த முறை அதிமுகவில் நின்று வென்ற சத்தியபாமா, இப்போது தவெக வேட்பாளராக நிறுத்தப்பட்டிருக்கிறார்.
இத்தொகுதியில் மீண்டும் வெற்றி பெறவேண்டுமென அதிமுகவும், ஆளுங்கட்சியைத் தோற்கடிக்க வேண்டுமென்ற இலக்குடன் திமுகவும் தீவிரமாகக் களமாடுகின்றன. தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளித்து வரும் இடதுசாரிகள் சார்பில் இத்தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடுகிறது. நாம் தமிழர் கட்சியும் களத்தில் இருப்பதால் 5 முனைப்போட்டி நிலவுகிறது.
இந்தச் சூழலில் தாராபுரம் தொகுதியில் பிபிசி தமிழ் களஆய்வு மேற்கொண்டது. தாராபுரம் தொகுதி, திருப்பூர் மாவட்டத்திலும், ஈரோடு மக்களவைத் தொகுதியிலும் இடம் பெற்றுள்ளது. தாராபுரம் நகராட்சி, சின்னக்காம்பாளையம், கொளத்துப்பாளையம், மூலனூர், கன்னிவாடி, ருத்திராவதி ஆகிய 5 பேரூராட்சிகள், 37 கிராம ஊராட்சிகளை உள்ளடக்கியுள்ள இத்தொகுதியில் தற்போது சுமார் 2.22 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இந்தத் தேர்தலில் சுயேச்சைகள் உட்பட 22 பேர் களத்தில் இருக்கின்றனர்.
பெரும்பாலும் கிராமப்பகுதிகளை உள்ளடக்கிய தாராபுரம் தொகுதியில் விவசாயமே பிரதானத் தொழிலாக உள்ளது. அதைச்சார்ந்த கால்நடை வளர்ப்பு, கோழிப்பண்ணைத் தொழிலும் பரவலாக நடக்கிறது. பின்னலாடைத் தொழிலும் இருக்கிறது. ஆனால் வேலை வாய்ப்பு தரும் பெரிய தொழிற்சாலைகள், தொழிற்பேட்டைகள் எதுவும் இங்கில்லை.
பரம்பிக்குளம்–ஆழியாறு பாசனத் திட்டத்தில் திருமூர்த்தி அணையின் உபரி நீரால் பயன்பெறும் உப்பாறு அணையை நம்பி 6100 ஏக்கர் பாசன நிலங்கள் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் உபரி நீரும் உயிர் நீரும் கேட்டு இங்குள்ள விவசாயிகள் போராடுவதும், அதை எதிர்த்து பாலாறு படுகை விவசாயிகள் போராடுவதும் பல ஆண்டுகளாகத் தொடர்கிறது. ஆனைமலையாறு–நல்லாறு அணைத் திட்டங்களை நிறைவேற்றினால் கூடுதல் தண்ணீர் கிடைக்குமென்று விவசாயிகள் கோரிக்கையை முன்வைக்கின்றனர். மாறிமாறி வந்த அரசுகள் இவற்றை நிறைவேற்றவேயில்லை என்பதே விவசாயிகளின் புகாராகவுள்ளது.
அமராவதி ஆறு, தாராபுரம் நகரை கடந்து செல்கிறது. இந்த ஆண்டில் தென்மேற்குப் பருவமழை குறைந்து அமராவதி ஆறு வறண்டுள்ள நிலையில், தண்ணீர்ப் பிரச்னை பெரிதாக மாறியுள்ளது. தொகுதியில் எங்கு சென்றாலும் குடிநீர்ப் பிரச்னையைப் பற்றி மக்கள் பேசுகின்றனர்.

ரங்கபாளையம் கிராமத்தைச் சேர்ந்த முருகாத்தாள், ''கடந்த 2 ஆண்டாக மழையில்லை. குடிக்கவும். ஆடு, மாடுகளுக்கும், அன்றாடப் புழக்கத்துக்கும் விலைக்கு தண்ணீர் வாங்கிக் கொண்டிருக்கிறோம். லாரித்தண்ணீர் வாங்கி ஊற்றி தென்னையைக் காப்பாற்றுகிறோம். ஆற்றிலும் தண்ணீரில்லை. தண்ணீர் வந்தாலும் அதை ஊருக்குக் கொண்டு சேர்க்க வழியில்லை. குடிநீர் இணைப்பு இருக்கிறது. தண்ணீரே வருவதில்லை.'' என்றார்.
அன்புச்செல்வி, ''திமுக, அதிமுக இரு ஆட்சிகளிலும் குடிநீர்ப் பிரச்னைக்குத் தீர்வு காணவில்லை. ஊருக்குள் ரேஷன் கடையில்லை. பாதி ரோடு மண் ரோடாகவுள்ளது. இப்போது குடிக்கவே தண்ணீரை காசு கொடுத்து வாங்கும் நிலைமை வந்துவிட்டது.'' என்றார்.
தொகுதிக்குள் தொழிற்சாலைகள், வேலைவாய்ப்பு கொடுக்கும் நிறுவனங்கள் எதுவுமில்லை என்பதால் படித்த இளைஞர்கள் வெளியே வேலைக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் இருப்பதாகச் சொல்கிறார் நெசவுத்தொழிலாளி ரத்தினசாமி.
பிபிசியிடம் பேசிய ரத்தினசாமி, ''படித்தவர்களுக்கு மட்டுமில்லை. படிக்காதவர்களுக்கும் இப்போது எந்த வேலையும் கிடைப்பதில்லை. வருவாய் குறைந்து கொண்டேயிருக்கிறது. மழை பெய்து அமராவதி ஆற்றிலும், அணையிலும் தண்ணீர் வந்துவிட்டால் குடிநீர்ப் பிரச்னை, பாசனவசதி பிரச்னை தீர்ந்துவிடும். ஆனால் வேலைவாய்ப்பின்மைதான் பெரும் பிரச்னை. அதற்குத் தீர்வு காணவேண்டும்.'' என்றார்.
தண்ணீர் பற்றாக்குறை, வேலைவாய்ப்பின்மை போன்றே இலவச வீட்டுமனைப் பட்டா பிரச்னைகளையும் பல்வேறு கிராமப்பகுதிகளைச் சேர்ந்த மக்களும் பரவலாகப் பதிவு செய்தனர். பட்டத்திபாளையம் கிராமத்தில் பட்டியல் பிரிவினர் வசிக்கும் பகுதிக்கு பல்வேறு அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டிருந்தாலும், தங்களுக்கு தரப்பட்டுள்ள பட்டா இடத்தைப் பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதாகச் சொல்கின்றனர்.
பிபிசியிடம் பேசிய முருகம்மாள், ''மொத்தம் 3 சென்ட் இடத்தில் 3 குடும்பங்கள் குடியிருக்கிறோம். ஏற்கெனவே பட்டத்திபாளையத்தில் மற்றவர்களுக்கு அரசு பட்டா கொடுத்த இடத்தில் எந்த வசதியுமே இல்லை. அங்கே கொடுப்பதாக இருந்தால் எங்களுக்கு பட்டாவே வேண்டாம். நல்ல இடமாகக் கொடுத்தால் எங்களைப் போன்ற பல ஏழைக்குடும்பங்கள் பயன்பெறும்.'' என்றார்.

ஆனால் அந்தப் பகுதிக்கு கடந்த திமுக ஆட்சியில் பல்வேறு வசதிகள் செய்து தரப்பட்டிருப்பதாகக் கூறினார் அதே கிராமத்தைச் சேர்ந்த முதுகலைப் பட்டதாரி கல்பனா. பிபிசியிடம் பேசிய அவர், ''பட்டா பலருக்குக் கிடைக்கவில்லை என்பது உண்மைதான். சிலருக்கு பட்டா கொடுத்தும் அளந்து கொடுக்கவில்லை. ஆனால் எங்கள் கிராமத்தில் பலருக்கு வீடு கட்ட நிதியுதவி, கிச்சன் ஷெட், பஸ் வசதி, பள்ளிக்கூடத்தில் காலை உணவு திட்டம் என திமுக ஆட்சியில் இப்பகுதியில் பல பணிகள் நடந்ததை யாரும் மறுக்கமுடியாது.'' என்றார்.
பின்னுக்கு தள்ளப்பட்ட தொகுதி பிரச்னைகள்: முன்னுக்கு வந்த தேர்தல் அரசியல்!
பொதுமக்களின் தேவைகள், கோரிக்கைகள் பல இருந்தாலும், அவை அனைத்துமே பின்னுக்குத் தள்ளப்பட்டு, சத்தியபாமா ராஜிநாமா குறித்த விஷயங்களே இந்த இடைத்தேர்தலின் மையப்பொருளாக மாறியுள்ளது. தொகுதிக்கான வாக்குறுதிகளைப் பேசுவதை விட, இதைப்பற்றியே வேட்பாளர்கள் பரப்புரைகளில் அதிகம் பேசுகின்றனர். பொதுமக்கள் தரப்பிலும் இந்த விஷயமே அதிகமாக விவாதிக்கப்படுவதையும் பார்க்க முடிந்தது.
பிபிசியிடம் பேசிய குண்டடம் காளிமுத்து, ''கடந்த முறை அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்குதான் வாக்களித்தோம். அவர் வென்றதும் கட்சி மாறினார். அதற்கு பல காரணங்கள் சொல்கிறார்கள். அது உண்மையா இல்லையா என்று தெரியாவிடினும் அவர் பதவியை ராஜிநாமா செய்து கட்சி மாறியதை வாக்களித்த மக்களுக்குச் செய்த துரோகமாகத்தான் நாங்கள் பார்க்கிறோம். '' என்றார்.

அகில இந்திய மாதர் சங்கத்தின் மாநிலச்செயலாளர் கண்ணகி, ''மக்கள் பிரதிநிதி ஒருவர் இறந்தால் அல்லது நீதிமன்ற தண்டனையால் இடைத்தேர்தல் வரும். இப்போது நடப்பது திணிக்கப்பட்ட தேர்தல். தவெகவில் டாக்டர், வக்கீல், இன்ஜினியர் என எல்லோரும் இருப்பதாகச் சொல்லும்போது, எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்து கட்சி மாறி வந்தவருக்கே மீண்டும் வாய்ப்பு வழங்கியதற்கான காரணத்தை தூயசக்தி என்று சொல்லிக் கொள்ளும் முதல்வரும் சொல்லத் தயாராகயில்லை. கட்சி மாறியவரும் சொல்லவில்லை.'' என்றார்.
கடந்த தேர்தலில் இரட்டை இலைக்கு வாக்குக் கேட்ட சத்தியபாமா இந்த முறை தவெக வேட்பாளராக விசில் சின்னத்துக்கு வாக்குக்கேட்டு வருவதைச் சுட்டிக்காட்டி, மற்ற கட்சிகளின் வேட்பாளர்களும், தலைவர்களும், பேச்சாளர்களும் கடுமையாக விமர்சிக்கின்றனர். நீங்கள் நம்பி தேர்ந்தெடுத்த சத்தியபாமா, குதிரை பேரத்தில் விலை போய்விட்டார் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் பரப்புரையில் பேசினார்.
சத்தியபாமா பரப்புரைக்குச் செல்லும் பல இடங்களில் அவருக்கு எதிர்ப்பு கிளம்புவதாக தொடர்ந்து காணொளிகள், செய்திகள் வெளியாகி வருகின்றன. கடந்த செப்டெம்பர் 30 ஆம் தேதி, தாராபுரத்தில் முதல்வர் விஜய் பங்கேற்ற தேர்தல் பரப்புரை நிகழ்ச்சியில் சத்தியபாமா பேசும்போது, இதைக்குறிப்பிட்டு கண்ணீர் விட்டு அழுதார். அப்போது அவரை அரவணைத்து ஆறுதல் கூறினார் முதல்வர் விஜய்.
பிபிசியிடம் பேசிய சத்தியபாமா, ''இதன் பின்னணியில் திமுக, அதிமுக இரு கட்சிகளும் உள்ளன. நான் 40 ஆண்டுகள் அதிமுகவில் இருந்திருக்கிறேன். ஆனால் எப்போதுமே இப்படி திமுகவுடன் சேர்ந்து எதையும் செய்ததில்லை. இப்போது அது நடக்கிறது. நான் வாக்குச் சேகரிக்கச் செல்லும் இடங்களில் நான்கைந்து பேரை உள்ளே அனுப்பி, பிரச்னை செய்ய வைத்து, அதை கேமராவில் எடுத்து சமூக ஊடகங்களில் எனக்கு எதிர்ப்பு என்பது போல பொய்ச்செய்தி பரப்புகின்றனர்.'' என்றார்.
ஆனால் இந்த எதிர்ப்பு அனைத்துமே அவருக்கு எதிராக தன்னிச்சையாக நிகழ்வதாகச் சொல்கின்றனர் மற்ற கட்சிகளின் வேட்பாளர்கள். இந்த எதிர்ப்பு காரணமாகவே, முதல்வர் விஜய், தாராபுரத்துக்கு இரு முறை வருவதாக அவர்கள் கூறுகின்றனர்.

பிபிசியிடம் பேசிய அதிமுக வேட்பாளர் பானுமதி, ''இது அதிமுக கோட்டை. கடந்த முறை சத்தியபாமாவுக்காக யாரும் வாக்களிக்கவில்லை. இரட்டை இலைக்காக விழுந்த வாக்குகளால் அவர் வென்றார். அந்த நம்பிக்கைக்கு துரோகம் செய்ததால் இப்போது மக்களே தன்னிச்சையாக அவரை எதிர்த்துக் கேள்வி எழுப்புகின்றனர். இதில் அதிமுகவுக்கு எந்தப் பங்கும் இல்லை. அவர் துரோகம் செய்ததற்காகவே இந்த தேர்தலில் என்னை ஆதரிப்பதாக மக்கள் சொல்கின்றனர். தொகுதியின் தேவைகளை நான் நிறைவேற்றுவேன் என்று நம்புகின்றனர்.'' என்றார்.
இத்தொகுதியில் திமுக வேட்பாளராக நிற்கும் சுகன்யா, ஒரு வழக்கறிஞர். அவரும் இந்த விஷயத்தை தனது பரப்புரையில் பிரதானமாகப் பேசுகிறார். அவருடைய பரப்புரை வாகனத்தில் வரும் பேச்சாளர்கள், சூட்கேஸ் ஒன்றைக் காண்பித்து விட்டு, சத்தியபாமா குறித்துப் பேசுவதை அல்லது மக்களிடம் கேள்வி கேட்பதை வழக்கமாக வைத்துள்ளனர்.
பிபிசியிடம் பேசிய சுகன்யா, ''முதல்வர் விஜய் பங்கேற்ற பரப்புரை நிகழ்ச்சியிலும் சத்தியபாமா அழுது நடிப்பது வெளிப்படையாகத் தெரிந்தது. அவர் செய்த தவறால் மக்களே தாமாக எதிர்க்கிறார்கள். திமுகவுக்கு இதில் எந்தத் தொடர்புமில்லை'' என்றார்.
கடந்த 5 ஆண்டுகளாக திமுகவைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர் கயல்விழி அமைச்சராக இருந்தும் பெரிய திட்டங்களை நிறைவேற்றவில்லை என்ற குற்றச்சாட்டை மக்கள் வைப்பது பற்றி அவரிடம் கேட்டபோது, ''அவர் பல பணிகளைச் செய்துள்ளார். அவரால் செய்து முடிக்க முடியாத பல பணிகளை நான் செய்வேன் என்று கூறியே வாக்குச்சேகரிக்கிறேன்.'' என்றார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கட்டடத் தொழிலாளியான லட்சுமணன், வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். தவெக அரசை ஆதரிக்கும் அதேவேளையில் தனித்துப் போட்டியிடுவதைப் பற்றி அவரிடம் பிபிசி தமிழ் கேள்வி எழுப்பியது.
''நாங்கள் மக்களுக்காகவே இந்த அரசை ஆதரித்தோம். ஆனால் இங்கே நடப்பது திணிக்கப்பட்ட தேர்தல். வாக்காளர்களுக்கு நன்றி கூட சொல்லாமல் கட்சி மாறினார் சத்தியபாமா. அந்த அதிருப்தி அலை மக்களிடம் இருக்கிறது.'' என்றார் லட்சுமணன்.
மேலும் பேசிய அவர், ''கிராமங்களில் குடிநீரை விலைக்கு வாங்கிக் குடிக்கின்றனர். விவசாயத்துக்கு தண்ணீர் இல்லை. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை. நான் சாதாரண கட்டடத்தொழிலாளி. எனக்கு இந்த மக்களின் தேவைகள் தெரியும். பிரச்னை என்றால் முதலில் வந்து நிற்கப்போவது நான்தான்.'' என்றார்.
நாம் தமிழர் கட்சி வேட்பாளரான கார்த்திகா, மக்கள் பிரச்னைகளை முன்னிறுத்தி தனது பரப்புரையில் விரிவாகப் பேசுகிறார்.
பிபிசியிடம் பேசிய கார்த்திகா, ''பிரதான பிரச்னை தண்ணீர்தான். குடிநீர், விவசாயம் எல்லாவற்றுக்குமே தண்ணீர் பற்றாக்குறையுள்ளது. உப்பாறு அணைக்கு தண்ணீர் கொண்டு வருவதில் விவசாயிகளிடையே முரண்பாடு உள்ளது. ஆனைமலையாறு– நல்லாறு அணை கட்டினால் இதற்குத் தீர்வு காணப்படும். இதற்கான தீர்வுகளைக் கூறாமல் அரசியல் பேசுவதையே பிரதானக் கட்சிகள் தேர்தல் பணியாக செய்கின்றன.'' என்றார்.

தாராபுரத்தில் திமுக, அதிமுக தலா 6 முறை வெற்றி
கடந்த 1967 ஆம் ஆண்டிலிருந்து 2026 சட்டப்பேரவை பொதுத்தேர்தல் வரையிலும் இத்தொகுதியில் திமுகவும் அதிமுகவும் தலா 6 முறை வெற்றி பெற்றுள்ளன.
தவெக வேட்பாளர் சத்தியபாமாவுக்காக தேர்தல் பிரசாரம் செய்த முதல்வர் விஜய், தாராபுரம் தொகுதியில் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள இலவச வீட்டு மனைப் பட்டா, ஆனைமலையாறு - நல்லாறு திட்டம், காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம், நகராட்சி உள்கட்டமைப்புப் பணிகள் ஆகியவை விரைந்து நிறைவேற்றப்படும் என்ற வாக்குறுதியை கூறியிருக்கிறார்.
ஒரே மாதத்தில் கட்சி மாறியவர் என்ற குற்றச்சாட்டு சத்தியபாமா மீது இருந்தாலும் அவற்றையும் மீறி விஜய் செல்வாக்கினால் இத்தொகுதியில் தவெக வெல்லும் என்று நம்புகின்றனர் அக்கட்சியினர். விஜய் பரப்புரையின்போது அங்கு வந்திருந்த பலரிடமும் பிபிசி தமிழ் பேசியபோது, ''வேட்பாளர் மீதான அதிருப்தியெல்லாம் முதல்வரின் பரப்புரையில் கரைந்துவிடும். நிச்சயமாக அவர் மீண்டும் வெல்வார்.'' என்று தெரிவித்தனர்.
குற்றச்சாட்டுகளுக்கு சத்தியபாமா பதில்

''தவெக தூய்மையான இயக்கம். நான் அப்படி பணம் வாங்கியிருந்தால் எனக்கே மீண்டும் வாய்ப்பு வழங்கியிருக்க மாட்டார்கள். திமுகவுடன் கூட்டணி வைத்த ஒரே காரணத்துக்காகவே நான் தவெகவுக்குச் சென்றேன். இப்போது திமுகவை எதிர்க்கும் ஒரே கட்சி தவெகதான்.'' என்றார் சத்தியபாமா.
தொகுதியின் தேவைகள் குறித்துப் பேசிய அவர், ''தாராபுரம் நகருக்குள் அமராவதி ஆறு ஓடினாலும் தண்ணீர் பிரச்னை பெரிதாகவுள்ளது. அதற்காக ஒரு சிறப்புத் திட்டம் கொண்டு வரவேண்டும். அது முதல்வர் கவனத்திற்கு போய்விட்டது. அதற்கான தீர்வு சீக்கிரம் கிடைக்கும். நான் வெற்றி பெற்றால், ஏழை மக்களுக்கு பட்டா கொடுத்த நிலங்களில் குடிநீர், கழிப்பிடம், தெருவிளக்கு மற்றும் சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளைச் செய்து கொடுப்பதுதான் என்னுடைய முதல் வேலை.'' என்றார்.
கடந்த தேர்தலில் இரட்டை இலையால்தான் வெற்றி பெற்றதாக அதிமுகவினர் கூறுவதை மறுத்த சத்தியபாமா, ''இரட்டை இலைக்கு குறிப்பிட்ட சதவீத வாக்கு இருந்தது உண்மைதான். அதற்காக மட்டுமின்றி, எங்களுடைய களப்பணிக்கும், மக்கள் எங்கள் மீது வைத்த நம்பிக்கைக்கும் கிடைத்த வாக்கால்தான் நான் வென்றேன். அவை அதிமுக தலைமைக்கு விழுந்த வாக்குகளில்லை. கடந்த முறை 81 ஆயிரம் வாக்குகள் பெற்று வெற்றிபெற்ற நான் இந்த முறை ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் பெற்று ஜெயிப்பேன்.'' என்றார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு


































