You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பல மணிநேரம் பகற்கனவு காண்கிறீர்களா? உளவியல் சிகிச்சை எப்போது தேவைப்படும்?
- எழுதியவர், மோல்லி கோர்மேன்
- பதவி,
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 10 நிமிடங்கள்
சிலர் பகல் கனவு காண்பதிலேயே அதிக நேரத்தைச் செலவிடுகிறார்கள். அவர்கள் தங்கள் மனதில் மணிக்கணக்கில் கதைகளைக் கற்பனை செய்து பார்ப்பதுடன், அதே கதையைப் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து வளர்த்தெடுத்தும் வருகிறார்கள்.
சிலருக்கு, இது மிகவும் மன உளைச்சலைத் தருவதாகவும், கட்டுப்படுத்தக் கடினமானதாகவும் மாறிவிடக்கூடும். சாதாரண பகல் கனவு எப்போது ஒரு தீவிரமான பிரச்னையாக மாறுகிறது என்பதைப் புரிந்துகொள்ள உதவும் சில அறிகுறிகள் இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
அமெரிக்காவை சேர்ந்த உளவியல் மருத்துவரும் ஆய்வாளருமான காலின் ராஸ் இதுகுறித்துப் பேசியபோது, "ஓர் எழுத்தாளர் தனக்கு மிகவும் தெளிவான, நிஜம் போன்ற பகற்கனவுகள் வருவதாக விவரித்தார். இந்தக் கற்பனைக் கதைகள் மிகவும் உண்மையாக இருப்பதைப் போன்ற உணர்வைத் தருவதால், அவை அந்த எழுத்தாளரை அழவோ அல்லது சத்தமாகச் சிரிக்கவோ வைத்து விடுகின்றன.
இருப்பினும், அந்த எழுத்தாளர் தனக்கு விருப்பமான நேரத்தில் இந்தப் பகற்கனவுகளுக்குள் நுழையவும், அதிலிருந்து வெளியேறவும் முடிவதாகவும், அந்த அனுபவத்தைத் தான் மிகவும் ரசிப்பதாகவும் அவர் கூறினார்" என்று விளக்கினார்.
இதைக் கேட்ட ராஸ், இந்தத் திறமையானது ஒரு வியக்கத்தக்க 'கலைசார்ந்த வரப்பிரசாதம்' என்று அந்த எழுத்தாளரிடம் கூறியுள்ளார்.
இத்தகைய வலுவான கற்பனைத் திறன் இருப்பதால், அந்த எழுத்தாளர் நடிப்புத் துறையில் ஒரு தொழில் வாய்ப்பை உருவாக்கிக் கொள்வது குறித்துச் சிந்திக்கலாம் என்றும் அவர் பரிந்துரைத்தார்.
நடிகராக மாறுவது குறித்து அந்த எழுத்தாளருக்கு முழு நம்பிக்கை இல்லாவிட்டாலும், அந்தப் பாராட்டை அவர் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார்.
எனினும், அனைவராலும் தங்கள் பகற்கனவுகளை இந்த முறையில் கட்டுப்படுத்த முடிவதில்லை. சிலர், தாங்களாகவே நிறுத்த விரும்பினாலும்கூட, பகற்கனவு காண்பதை நிறுத்துவது மிகவும் கடினமாக இருப்பதாக உணர்கிறார்கள். இது 'பொருத்தமற்ற பகற்கனவு காணும் நிலை' (Maladaptive Daydreaming) என்று அழைக்கப்படும் ஒரு நிலையாகும். இது பெரும்பாலும் சுருக்கமாக எம்.டி. என்று குறிப்பிடப்படுகிறது.
எம்.டி. பாதிப்பு உள்ளவர்கள், தங்கள் நாளின் பெரும்பகுதியைத் தங்கள் மனதுக்குள்ளேயே விரிவான கற்பனை உலகங்களை உருவாக்குவதிலேயே செலவிடுகிறார்கள். இந்தக் கற்பனைகளில் பெரும்பாலும் சிக்கலான கதைகள், கதாபாத்திரங்கள், நிகழ்வுகள் இடம்பெற்றிருக்கும்.
ராஸின் கூற்றுப்படி, தீவிரமான பாதிப்பு உள்ள சிலர், தாங்கள் விழித்திருப்பதில் பாதிக்கும் மேலான நேரத்தைப் பகற்கனவு காண்பதிலேயே செலவிடுகிறார்கள். மிகத் தீவிரமான சூழல்களில், ஒரு நபர் ஒரு நாளைக்கு 12 மணிநேரம் வரைகூட பகற்கனவு காணக்கூடும்.
அவர்களின் மனதுக்குள் ஓடும் இந்தக் கதைகள் பல ஆண்டுகள் அல்லது பல தசாப்தங்கள் கூடத் தொடர்ந்து நீடிக்கக்கூடும். ஒரு நபர் ஒரே கற்பனை உலகத்தையும், அதே கதாபாத்திரங்களையும் மிக நீண்ட காலத்திற்குத் தொடர்ந்து வளர்த்து எடுத்துக்கொண்டே இருக்கக்கூடும்.
ஆரம்பத்தில் கேட்கும்போது, இது மகிழ்ச்சி அளிப்பதாகவும், ஆக்கபூர்வமானதாகவும் அல்லது ஊக்கமளிப்பதாகவும் தோன்றலாம். ஆயினும், 'மால்அடாப்டேடிவ் டேடிரீமிங்' பாதிப்பு உள்ளவர்கள் தங்கள் கற்பனை உலகங்களில் மிக ஆழமாக மூழ்கிவிடுவதால், அது அவர்களுடைய நிஜ வாழ்வைப் பாதிக்கத் தொடங்கிவிடுகிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
இது அவர்களின் வேலை, படிப்பு, உறவுகள், அன்றாடப் பொறுப்புகளுக்கு இடையூறாக அமையக்கூடும். இதன் விளைவாகப் பலர் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள்.
இந்த நிலையானது, பலரும் உணர்ந்திருப்பதைவிட அதிக அளவில் பரவலாக இருக்கக்கூடும் என்று ராஸ் கூறுகிறார். அவரது மதிப்பீட்டின்படி, வயது வந்தோரில் சுமார் 2% முதல் 4% வரையிலான மக்களுக்கு எம்.டி. பாதிப்பு இருக்கக்கூடும்.
இது சில முக்கியமான கேள்விகளை எழுப்புகிறது: ஒரு நபர் தனது பகற்கனவு காணும் பழக்கம் ஒரு பிரச்னையாக மாறி வருகிறதா என்பதை எப்படிக் கண்டறிவது? அது சிரமங்களை ஏற்படுத்தி வருமாயின், எத்தகைய சிகிச்சைகள் அல்லது உதவிகள் அதைச் சமாளிக்கக் கிடைக்கும்?
பகற்கனவு காண்பது வரமா? சாபமா?
அடிப்படையில், பகற்கனவு காண்பது என்பதை மொத்தமாகவே ஒரு கெட்ட விஷயமாகக் கருதி புறந்தள்ளிவிட முடியாது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். உண்மையில், அது மிகவும் ஆரோக்கியமானதாகவும், பயனுள்ளதாகவும் இருக்கக்கூடும். "நீங்கள் பகற்கனவு காணவே இல்லையெனில், நான் உங்களுக்காக வருந்துகிறேன்" என்கிறார் காலின் ராஸ்.
பெரும்பாலான நிபுணர்கள், பகற்கனவு காண்பதை ஏறக்குறைய அனைவரும் அனுபவிக்கும் ஓர் இயல்பான மனச் செயல்பாடாகக் கருதுகின்றனர். ஆய்வாளர்கள் இந்த நடத்தையை ஆராய சுய-அறிக்கை வினாப் பட்டியல்களைப் பயன்படுத்தியுள்ளனர்.
இந்த ஆய்வுகளின் அடிப்படையில், நாம் விழித்து இருக்கையில் தோன்றும் எண்ணங்களில் சுமார் 30% முதல் 50% வரை, அந்த நேரத்தில் நாம் செய்யும் எந்தவொரு பணியுடனும் நேரடியாகத் தொடர்பில்லாதவை என்று அவர்கள் மதிப்பிடுகின்றனர்.
பகற்கனவு காண்பதால் பல நன்மைகள் உண்டு. அது மக்கள் தங்கள் உணர்ச்சிகளைச் சிறப்பாகக் கையாளவும், மற்றவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளவும், ஆக்கபூர்வமாக மாறவும் உதவக்கூடும். அது சலிப்பைக் குறைத்து, மக்கள் தங்கள் வாழ்வில் நிகழும் முக்கியமான நிகழ்வுகளையும் அனுபவங்களையும் புரிந்துகொள்ளவும் உதவும்.
மறுபுறம், பொருத்தமற்ற பகற்கனவு என்பது வழக்கமான பகற்கனவில் இருந்து வேறுபட்டது. ராஸின் கூற்றுப்படி, அது "முழுமையாக நம்மை ஆட்கொள்ளும்" ஒன்றாக மாறக்கூடும். "இது மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. உங்கள் அன்றாடப் பணிகளில் தலையிடுகிறது. ஆனாலும், அதன் கட்டாயத் தன்மையால் அதைத் தொடர்ந்து செய்வார்கள்," என்கிறார் அவர்.
எளிதாகக் கூறுவதெனில், பொருத்தமற்ற பகற்கனவு காணும் ஒருவர் தனது கற்பனை உலகில் மிகவும் ஆழமாக மூழ்கிவிடுவதால், அது அவரது அன்றாட வாழ்வைப் பாதிக்கத் தொடங்குகிறது.
பகற்கனவு சிக்கல்களை ஏற்படுத்தினாலும், அவற்றைத் தொடர வேண்டுமென ஒரு வலுவான உந்துதலை அந்த நபர் உணர்கிறார். இந்தக் கட்டாய நடத்தைதான், நிபுணர்கள் இதை ஒரு மனநலக் கோளாறாகக் கருதுவதற்கான முக்கியக் காரணங்களில் ஒன்று.
பொருத்தமற்ற பகற்கனவு காணும் நபர்கள் ஒரு நீண்ட பகற்கனவு அமர்வில் இருந்து இறுதியாக வெளியே வரும்போது, அவர்கள் தங்கள் நேரத்தை வீணடித்துவிட்டதாக அடிக்கடி உணர்கிறார்கள். அவர்கள் அந்தக் கற்பனையை அர்த்தமற்றதாகவோ அல்லது பயனற்றதாகவோ கருதலாம்.
இருப்பினும், அந்த அனுபவம் ஒரு போதைப்பொருளைப் போல் உணரப்படுவதால், அவர்கள் மீண்டும் மீண்டும் அதற்கே திரும்புகிறார்கள். இது அதை நிறுத்துவதற்கு மிகவும் கடினமான ஒரு சுழற்சியை உருவாக்குகிறது.
கைலா போர்செர்ட்ஸின் அனுபவம் இதற்கு ஓர் எடுத்துக்காட்டு. தனக்கு நான்கு வயதாக இருந்தபோது, தன் மனதில் கற்பனையான "பிற உலகங்களை" உருவாக்கியதை அவர் நினைவுகூர்கிறார்.
அவர் ஒரு புதிய பள்ளிக்கு மாறிய பிறகு, அவரது பகற்கனவு காணும் பழக்கம் மேலும் வலுப்பெற்றது. மற்ற குழந்தைகள் அவருடைய வட்டார உச்சரிப்பைக் கேலி செய்ததால், அவர் தனிமைப்படுத்தப்பட்டதாக உணர்ந்தார்.
அதன் விளைவாக, அவரது கற்பனைக் கதைகள் அவர் அடைந்துகொள்வதற்கான ஒரு "பாதுகாப்பான இடமாக" மாறின. அவரது விளக்கத்தின்படி, அங்கு "யாரும் என்னைக் கேலி செய்யவில்லை, மக்கள் என்னை விரும்பினார்கள்."
காலப்போக்கில், இந்தக் கற்பனைகள் ஒரு கட்டாயப் பழக்கமாக வளர்ந்தன. போர்செர்ட்ஸ், தன்னால் ஒரே மூச்சில் பல மணிநேரம் பகற்கனவு காண முடியும் என்று கூறுகிறார். அந்த அனுபவத்தை விவரித்த அவர், "அது மிகவும் சக்தி வாய்ந்த ஓர் உந்துதலாக இருந்தது. அதாவது, அளவுக்கு அதிகமாக சாக்லேட் சாப்பிட வேண்டும் என்றோ அல்லது சமூக ஊடகங்களில் பொழுதைக் கழிக்க வேண்டும் என்றோ மக்கள் சொல்வது போல இருந்தது," என்றார்.
இஸ்ரேலில் உள்ள ஹைஃபா பல்கலைக்கழகத்தின் மருத்துவ உளவியல் துறையின் ஓய்வுபெற்ற பேராசிரியரான எலி சோமரின் கூற்றுப்படி, இந்த நிலையில்தான் ஒரு சாதாரண மற்றும் ஆரோக்கியமான செயல்பாடு தீங்கு விளைவிப்பதாக மாறக்கூடும்.
எலி சோமர்தான் முதலில் 'பொருத்தமற்ற பகற்கனவு' (maladaptive daydreaming) என்ற பதத்தை உருவாக்கினார். மேலும், இந்த நிலை குறித்து 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆய்வு செய்து வருகிறார்.
"ஒருவர் தனது கற்பனையை இனி கட்டுப்படுத்தாமல், அந்தக் கற்பனை அவரைக் கட்டுப்படுத்தத் தொடங்கும்போதுதான் சிக்கல் எழுகிறது" என்று சோமர் இயல்புக்கும் தீவிரத்தன்மைக்கும் இடையிலான வேறுபாட்டை விளக்கினார்.
பலர் தங்கள் பகற்கனவுகளைத் தக்கவைத்துக் கொள்ள சில குறிப்பிட்ட செயல்பாடுகளைப் பயன்படுத்துவதையும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இசை கேட்பது இதற்கு ஒரு பொதுவான உதாரணம். முன்னும் பின்னுமாக நடப்பது போன்ற திரும்பத் திரும்பச் செய்யப்படும் உடல் செயல்பாடுகளும், பொருத்தமற்ற பகற்கனவுகளுடன் அடிக்கடி தொடர்பு படுத்தப்படுகின்றன.
ஆய்வுகளின்படி, பொருத்தமற்ற பகற்கனவு காணும் மக்களில் சுமார் 80% பேர் தங்கள் கற்பனை உலகங்களில் கவனம் சிதறாமல் இருக்க, அறியாமலேயே உடல் அசைவுகளையோ அல்லது சைகைகளையோ பயன்படுத்துகின்றனர்.
போர்செர்ட்ஸைப் பொறுத்தவரை, இது பெரும்பாலும் தனது வீட்டு வாசலில் உள்ள பாதையில் மேலும் கீழும் ரோலர் ஸ்கேட்டிங் செய்வதையோ அல்லது தனது மனதுக்குள் கதைகளைத் தொடர்ந்து கொண்டே ஒரு பந்தை சுவரில் மீண்டும் மீண்டும் எறிவதையோ குறித்தது. இந்தத் திரும்பத் திரும்ப செய்யப்படும் செயல்கள், நீண்ட காலத்திற்குத் தனது பகற்கனவுகளில் ஆழ்ந்து மூழ்கியிருக்க அவருக்கு உதவின.
'பொருத்தமற்ற பகற்கனவு காணும் குறைபாடு' உள்ளவர்கள் தங்கள் கற்பனை உலகங்களிலேயே அதிக நேரத்தைச் செலவிடுவதால், அவர்கள் பெரும்பாலும் சமூக நிகழ்வுகள், நட்புகள் மற்றும் உறவுகளைத் தவிர்க்கத் தொடங்குகின்றனர்.
காலப்போக்கில், அவர்கள் மற்றவர்களிடம் இருந்து மேன்மேலும் தனிமைப்படுத்தப்படலாம். இதுவொரு வேதனையான சுழற்சியை உருவாக்கக்கூடும். இதில் அவர்கள் தனிமை, அவமானம், வருத்தம் ஆகியவற்றை உணர்கிறார்கள். இது அவர்களை மீண்டும் பகற்கனவுகளில் இன்னும் ஆழமாக மூழ்கச் செய்யலாம்.
தனது பகற்கனவு காணும் பழக்கம் ஒரு தீவிரமான பிரச்னையாக மாறி வருவதைத் தனது தொழில் வாழ்வின் ஆரம்ப ஆண்டுகளில்தான் முதன்முதலில் தான் உணர்ந்ததாக கைலா போர்செர்ட்ஸ் கூறுகிறார்.
அவர், திரும்பிப் பார்க்கையில், தனது கற்பனைகள் நிஜ வாழ்வில் இலக்குகளை அடைவதற்கான தனது ஊக்கத்தைக் குறைத்துவிட்டதாகக் கூறுகிறார்.
"எனக்கு எந்த ஊக்கமும் இல்லை. வேலையில் பதவி உயர்வு பெற நான் ஏன் அதிக நேரத்தையும் ஆற்றலையும் செலவிட வேண்டும்? ஏனெனில், எந்த முயற்சியும் இல்லாமல் இப்போதே என் கற்பனையில் அதை என்னால் அனுபவிக்க முடிகிறது. அது நிஜத்தை போலவே 95% சிறப்பாகவும் இருக்கிறது," என்று அவர் கூறுகிறார்.
தனக்கு விருப்பமான போதெல்லாம் தனது கற்பனையில் வெற்றியை அனுபவிக்க முடிந்ததால், நிஜ வாழ்வில் அதைத் துரத்திச் செல்வது அவருக்குக் கடினமாக இருந்தது. இதன் விளைவாக, அவர் பல ஆண்டுகளாக ஆரம்ப நிலை பணிகளிலேயே நீடித்தார்.
"எனது 40களில் இருந்தபோதும் நான் ஆரம்ப நிலைப் பணிகளையே செய்து கொண்டிருந்தேன். ஏனெனில், பதவி உயர்வு பெற நான் ஒருபோதும் முயன்றதே இல்லை," என்று அவர் விளக்குகிறார்.
மருத்துவ உளவியலாளரும் 'பொருத்தமற்ற பகற்கனவு காணுதல்' குறித்த சர்வதேச சங்கத்தின் ஆராய்ச்சி இயக்குநருமான வாண்டா ஃபிஷெரா, இந்த எதிர்வினை புரிந்துகொள்ளக் கூடியதே என்கிறார்.
"உங்களுக்குப் பிடித்த தொலைக்காட்சித் தொடரை கற்பனை செய்து பாருங்கள். ஆனால் அதில் நீங்களே முதன்மைக் கதாபாத்திரத்தில் இருக்கிறீர்கள். உங்கள் தற்போதைய நிஜ வாழ்க்கை அந்த அளவுக்கு உற்சாகமாக இல்லையெனில், அந்த அனுபவத்தை உங்களால் எப்படிக் கைவிட முடியும்?" என்று அவர் விளக்குகிறார்.
நிஜ வாழ்வில் ஒருவரின் உணர்வுசார் தேவைகள் பூர்த்தி செய்யப்படாதபோது, பொருத்தமற்ற பகற்கனவு காணுதல் அவருக்கு மிகவும் கவர்ச்சிகரமானதாக மாறக்கூடும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். அந்த விடுபட்ட உணர்வுகளை அனுபவிப்பதற்கான ஒரு வாய்ப்பை அந்தக் கற்பனை உலகம் அவர்களுக்கு வழங்குகிறது.
உதாரணமாக, பொருத்தமற்ற பகற்கனவு காணும் குறைபாடு உள்ளவர்கள், தங்களை முக்கியமானவர்களாக, பிறரால் போற்றப்படுவோராக, வெற்றிகரமானவர்களாக, நேசிக்கப்படுபவர்களாக அல்லது வீரர்களாகப் பெரும்பாலும் கற்பனை செய்து கொள்கிறார்கள். தங்கள் பகற்கனவுகளுக்குள், அன்றாட நிஜ வாழ்வில் தாங்கள் அனுபவிக்காத வகையில், தாங்கள் மதிக்கப்படுவதாக அவர்கள் உணர்கிறார்கள்.
அத்தகைய நபர்களில் ஒருவர் தான் மரியா. தனது குடும்பப் பெயரை வெளியிட வேண்டாம் என்று அவர் கேட்டுக்கொண்டார். மற்றவர்கள் தன்னை உற்றுநோக்கிப் போற்றிக் கொண்டிருக்க, தான் ஒரு மேடையில் நின்று கொண்டிருப்பதாக அவர் அடிக்கடி கற்பனை செய்துகொள்வார். அந்தக் கற்பனைக் காட்சிகளில், அவர் வெற்றிகரமானவராகவும், அங்கீகரிக்கப்பட்டவராகவும், பாராட்டப்படுபவராகவும் திகழ்ந்தார்.
இத்தகைய கற்பனைகள், பாதுகாப்பற்ற உணர்வுகள் அல்லது தன்மீதே ஏற்படும் சந்தேக உணர்வுகளுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்று ஃபிஷெரா கருதுகிறார்.
பொருத்தமற்ற பகற்கனவு காணும் பலருக்கு, 'ஒருவேளை நான் இருக்கும் விதத்தில் போதுமானவளாக இல்லையா அல்லது நான் இருக்கும் விதத்தில் மக்கள் என்னை நேசிக்கவில்லையோ அல்லது என் உண்மையான சுயத்தை என்னால் வெளிப்படுத்த முடியவில்லையோ' என்பது போன்ற ஓர் அவமான உணர்வு இருப்பதாக அவர் கூறுகிறார்.
மேலும் அவர், "அந்தக் கற்பனைகள் எப்போதும் உறவுகளால் நிறைந்திருக்கும். எனவே, அது தனிமையைக் குறைப்பதற்கான அந்தத் தீவிரத் தேவையையே காட்டுகிறது," என்று கூறுகிறார்.
தனது குழந்தைப் பருவத்தில் அடிக்கடி தனிமையாக உணர்ந்ததாக மரியா கூறுகிறார். பகற்கனவு காண்பதற்குத் தனக்குத்தானே உதவிக் கொள்ள, அவர் இசையைக் கேட்டபடி பல மணிநேரம் முன்னும் பின்னுமாக ஆடிக் கொண்டிருப்பார்.
அந்த அனுபவத்தை விவரிக்கையில், "அது உங்கள் கவனத்தை இடைவிடாமல் ஈர்க்கிறது. அதுவொரு வகையான இணை உலகம்," என்று கூறினார்.
அவரைச் சுற்றியிருந்த பெரியவர்கள் அவர் அனுபவித்த விஷயங்களை புரிந்துகொள்ளவில்லை. அவரது பெற்றோரும் ஆசிரியர்களும் அந்த நடத்தையின் விளைவுகளைக் கண்டனர். ஆனால் அவர்கள் அதன் அடிப்படைக் காரணத்தை அடையாளம் காணவில்லை.
"அது மிகவும் இடையூறாக இருந்தது. அதனால் என்னால் படிக்க முடியவில்லை. மேலும் நான் படிக்க விரும்பவில்லை என்றோ அல்லது சோம்பேறி என்றோ மக்கள் தாமாகவே முடிவு செய்து கொள்வார்கள்" என்கிறார் மரியா.
பல ஆண்டுகளாக, அவர் பல்வேறு கதைகளையும் கதாபாத்திரங்களையும் உருவாக்கினார். அவற்றில் சில முற்றிலும் கற்பனையானவை. மற்றவை அவருக்குத் தெரிந்த அல்லது அவர் கேள்விப்பட்ட உண்மையான நபர்களை அடிப்படையாகக் கொண்டவை. அவர் ஒரு கதைக்களத்தில் ஓராண்டு முழுவதும் கவனம் செலுத்திய பின்னரே, அடுத்த கதைக்கு மாறுவார்.
இன்று, "10 திரைப்படங்களுக்குப் போதுமான (கதைகளை)" தான் உருவாக்கி இருப்பதாக மரியா கூறுகிறார்.
இருப்பினும், ஒரு பகற்கனவை முடித்த பிறகு, அந்த யோசனைகளை அவர் அரிதாகவே நடைமுறைப்படுத்தினார். அவர் அவற்றை எழுதவோ அல்லது கதைகளாக மாற்றவோ இல்லை. மாறாகத் தனது கற்பனையில் மூழ்கியிருந்தபோது எவ்வளவு நேரம் கடந்துவிட்டது என்பதை அவர் அதிகமாக உணர்ந்திருந்தார்.
பொருத்தமற்ற பகற்கனவு காணும் பழக்கமுள்ள பலரைப் போலவே, மரியாவும் வயது வந்த பிறகே இந்த நிலையைப் பற்றி அறிந்து கொண்டார்.
மற்றவர்களும் இதேபோன்ற அனுபவத்தைப் பெறுகிறார்கள் என்பதைக் கண்டறிந்தது அவருக்கு மிகப்பெரிய நிம்மதியைக் கொடுத்தது. அதுவரை, தன்னிடம் ஏதோ அசாதாரணமான ஒன்று இருப்பதாக அவர் அடிக்கடி நம்பியிருந்தார்.
"ஒருவேளை நான் வித்தியாசமானவளாக இருக்கலாம் என்ற எண்ணத்துடனேயே வளர்ந்தேன்," என்கிறார் அவர்.
பொருத்தமற்ற பகற்கனவு என்பது அங்கீகரிக்கப்பட்ட ஒரு குறைபாடு என்பதை அறிந்துகொண்டது, தான் தனியாக இல்லை என்பதையும், இதேபோன்ற அனுபவங்களை வேறு பலரும் அனுபவிக்கிறார்கள் என்பதையும் புரிந்துகொள்ள அவருக்கு உதவியது.
சிலர் மட்டும் பொருத்தமற்ற பகற்கனவு குறைபாட்டால் அவதிப்படுவது ஏன்?
ஒருவருக்கு பொருத்தமற்ற பகற்கனவு காணும் நிலை, அது ஏற்படுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கக்கூடிய பல காரணிகளுடன் தொடர்புடையது என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
எடுத்துக்காட்டாக, புறக்கணிப்பு, உணர்வுரீதியான துஷ்பிரயோகம் அல்லது பராமரிப்பாளர்களுடன் பாதுகாப்பான உணர்ச்சிப் பிணைப்புகளை உருவாக்குவதில் உள்ள சிக்கல்கள் போன்ற கடினமான குழந்தைப் பருவ அனுபவங்களை எதிர்கொண்ட நபர்களிடையே பொருத்தமற்ற பகற்கனவு காணுதல் மிகவும் பொதுவானது என்று சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஆய்வாளர்களின் கூற்றுப்படி, இந்த நபர்களில் சிலர், வேதனையான நிகழ்வுகள், உணர்ச்சிகள் மற்றும் மன அழுத்த அனுபவங்களில் இருந்து தப்புவதற்கான ஒரு வழியாக பகற்கனவு காண்பதைப் பயன்படுத்தலாம்.
நரம்பியல் பன்முகத்தன்மையுடன் தொடர்புடைய சவால்களைச் சமாளிக்கவும் பொருத்தமற்ற பகற்கனவு சிலருக்கு உதவக்கூடும். ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் குறைபாடு கண்டறியப்பட்ட 235 நபர்களை உள்ளடக்கிய ஓர் ஆய்வில், அவர்களில் 43% பேர் பொருத்தமற்ற பகற்கனவு காண்பதுடன் பொருந்தக்கூடிய அனுபவங்களைப் பதிவு செய்துள்ளனர்.
இந்த அனுபவங்கள் தனிமை உணர்வு, உணர்ச்சிகளைக் கையாள்வதில் உள்ள சிரமங்களுடன் நெருக்கமாகப் பிணைக்கப்பட்டுள்ளன என்பதையும் அந்த ஆய்வு கண்டறிந்தது.
பிற ஆய்வுகள், பொருத்தமற்ற பகற்கனவு காண்பதற்கும் பல உளவியல் மற்றும் நரம்பியல் வளர்ச்சி நிலைகளுக்கும் இடையே வலுவான தொடர்புகளைக் கண்டறிந்துள்ளன.
பொருத்தமற்ற பகற்கனவுகளுக்கும், கவனக்குறைவு அதியியக்கக் கோளாறு (ADHD), கட்டாயச் செயல்பாட்டுக் கோளாறு (OCD), மனச்சோர்வு, பதற்றம் மற்றும் சில குறைபாடுகளுக்கும் இடையே சிந்தனை முறைகளிலும் நடத்தையிலும் ஒற்றுமைகள் இருப்பதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
கைலா போர்செர்ட்ஸின் அனுபவம் இந்தத் தொடர்புகளில் சிலவற்றைப் பிரதிபலிக்கிறது. தனக்கு 18 வயதாக இருந்தபோது மனச்சோர்வு இருப்பது கண்டறியப்பட்டதாக அவர் கூறுகிறார்.
பின்னோக்கிப் பார்க்கையில், தனது அதீத பகற்கனவுகள் அந்த மனச்சோர்வைச் சமாளிப்பதற்கான ஒரு வழியாக இருந்ததாக அவர் நம்புகிறார். "மனச்சோர்வுதான் பிரச்னையாக இருந்தது. நிஜ வாழ்வில் இருந்து விலகி இருப்பதன் மூலம் நான் அதைச் சமாளித்தேன்" என்று அவர் கூறுகிறார்.
பிற்காலத்தில், தனது 40களில் இருந்தபோது, போர்செர்ட்ஸ் தனது மனச்சோர்வுக்காக ஒரு மனநலப் பிரிவில் ஒரு மாதம் சிகிச்சை பெற்றார். தனக்கு உண்மையிலேயே தேவைப்பட்ட உதவியைப் பெற்றதாக உணர்ந்தது அதுவே முதல் முறை என்று அவர் கூறுகிறார்.
அந்தச் சிகிச்சை, தனது பகற்கனவுகளின் மீது மீண்டும் கட்டுப்பாட்டைப் பெறவும் அவருக்கு உதவியது. கற்பனை உலகுக்குள் தப்பிச் செல்ல வேண்டிய கட்டாயத்தை உணர்வதற்குப் பதிலாக அவரது கற்பனை மீண்டும் ஆக்கபூர்வமானதாகவும் மகிழ்ச்சியானதாகவும் மாறியது. பகற்கனவு காண வேண்டுமென்ற கட்டுக்கடங்காத உந்துதல் இனி அவரது அன்றாட வாழ்வைக் கட்டுப்படுத்தவில்லை.
ஆனால் மரியாவுக்கு இத்தகைய மனநல பாதிப்புக்கான நோயறிதல் எதுவும் வழங்கப்படவில்லை. இருப்பினும், அவர் தனது அனுபவங்களை நிர்வகிக்க உதவும் ஒரு சிறப்பு சிகிச்சையாளருடன் இணைந்து செயல்படுகிறார்.
எலி சோமரின் கூற்றுப்படி, பொருத்தமற்ற பகற்கனவுக்கும் பிற பாதிப்புகளுக்கும் இடையிலான தொடர்பைப் புரிந்துகொள்வது முக்கியமானது.
"ஏ.டி.ஹெச்.டி-யை பொறுத்தவரை, இந்த ஒற்றுமை மிகவும் முக்கியமானது. ஏனெனில், அதீத கற்பனைத் திறன் வெளியில் இருந்து பார்க்கையில் கவனக் குறைவாகத் தோன்றக்கூடும். ஓ.சி.டி-யை பொறுத்தவரை, ஊடுருவல், கட்டாயச் செயல்பாடு மற்றும் அதிலிருந்து விடுபடுவதில் உள்ள சிரமம் போன்ற பொதுவான அம்சங்கள் உள்ளன," என்று அவர் விளக்கினார்.
இருப்பினும், இந்த ஒற்றுமைகள் அந்தக் குறைபாடுகள் ஒன்றுதான் என்று அர்த்தமல்ல என சோமர் வலியுறுத்துகிறார். "ஒற்றுமை என்பது இரண்டும் ஒன்றுதான் என்று அர்த்தமல்ல. பொருத்தமற்ற பகற்கனவுகளை ஏ.டி.ஹெச்.டி., ஓ.சி.டி. என முழுமையாக விளக்க முடியாது என்று தற்போதைய ஆராய்ச்சி தெரிவிக்கிறது," என்றார் அவர்.
"இது ஆழ்ந்த கதை சார்ந்த கற்பனை, தொடர்பற்ற ஈடுபாடு, ஓர் அக உலகில் உணர்ச்சிபூர்வமான ஈடுபாடு ஆகியவற்றை மையமாகக் கொண்ட ஒரு தனித்துவமான நிகழ்வியலைக் கொண்டுள்ளது."
எளிதாகக் கூறுவதெனில், பொருத்தமற்ற பகற்கனவு என்பது ஒரு தனித்துவமான பழக்கமாகும். ஏனெனில், அது விரிவான கற்பனைக் கதைகளில் ஆழ்ந்து மூழ்கி, அந்தக் கற்பனை உலகங்களுடன் உணர்வுபூர்வமாக இணைந்து, அவற்றில் அதிக ஈடுபாடு கொள்வதை உள்ளடக்கியது என்று சோமர் நம்புகிறார்.
இதுவொரு முக்கியமான கேள்வியை எழுப்புகிறது: பொருத்தமற்ற பகற்கனவு என்பது, வாழ்க்கையில் கடினமான சூழ்நிலைகளைச் சமாளிக்க மக்களுக்கு உதவும் ஒரு தற்காப்பு வழிமுறையா அல்லது அது உண்மையில் மக்களை எதார்த்தத்தில் இருந்தும் அவர்களின் உண்மையான சுய உணர்வில் இருந்தும் பிரிக்கும் ஒரு பிரிவினைவாதக் கோளாறா?
சோமரின் கூற்றுப்படி, இதற்கான பதில் பெரும்பாலும் இரண்டுமே என்பதாகும்.
"பலருக்கு பொருத்தமற்ற பகற்கனவு என்பது ஒரு தற்காப்பு உத்தியாகத் தொடங்குகிறது. குறிப்பாகத் தனிமை, மன அழுத்தம், அதிர்ச்சி தொடர்பான மன உளைச்சல் அல்லது பூர்த்தி செய்யப்படாத உணர்ச்சித் தேவைகளுக்காக, ஆனால் ஒரு குறிப்பிட்ட துணைக் குழுவில், நாள்பட்ட, கட்டாயமான, பிரிவினைவாத மனச் செயலாட்டு முறையாக உருவாகிறது," என்கிறார் அவர்.
"எனவே நான் இதை ஒரு பொருத்தமற்ற சமாளிப்பு உத்தி என்று விவரிப்பேன். இது அதன் மருத்துவ வடிவத்தில், தானாகவே ஒரு பிரிவினைவாதக் கோளாறாக மாறக்கூடும்" என்றார் சோமர்.
இதன் பொருள், பொருத்தமற்ற பகற்கனவு காண்பது உணர்ச்சி ரீதியான சிரமங்களில் இருந்து தப்பும் ஒரு வழியாகத் தொடங்கலாம், ஆனால் சில நேரங்களில் அதுவொரு தீவிரமான நிலையாக வளர்ந்து, ஒரு நபர் அன்றாட வாழ்வில் சிந்திக்கும், உணரும், செயல்படும் விதத்தைப் பாதிக்கக்கூடும்.
பொருத்தமற்ற பகற்கனவு காணுதலுக்கான சிகிச்சை
சில நிபுணர்கள் பொருத்தமற்ற பகற்கனவு காணுதலை ஓர் உண்மையான மருத்துவ நிலையாகக் கருதுகின்றனர். ஆனால், உளவியல் கோளாறுகளுக்கான நோயறிதல் மற்றும் புள்ளிவிவரக் கையேடு அல்லது நோய்களின் சர்வதேச வகைப்பாடு போன்ற முக்கிய உளவியல் கையேடுகளில் இது இன்னும் அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கப்படவில்லை.
பொருத்தமற்ற பகற்கனவு காணுதல் பாதிப்புள்ள அதிக எண்ணிக்கையிலான மக்களை உள்ளடக்கிய பெரிய அளவிலான ஆய்வுகளை ஆய்வாளர்கள் இன்னும் மேற்கொள்ளவில்லை. இருப்பினும், பல சிறிய ஆய்வுகள் ஏற்கெனவே நடத்தப்பட்டுள்ளன.
இது இன்னும் அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கப்படாத காரணத்தால், பெரிய அளவிலான அறிவியல் சான்றுகளால் நிரூபிக்கப்பட்ட ஒரு நிலையான சிகிச்சையும் இதற்கு இல்லை என்கிறார் எலி சோமர்.
இருப்பினும், ஆரம்பக்கட்ட முடிவுகள் ஊக்கமளிப்பதாக அவர் தெரிவித்தார். அவரைப் பொறுத்தவரை, "ஆரம்பக்கட்ட மருத்துவச் சான்றுகள் ஊக்கமளிக்கின்றன. குறிப்பாக, தூண்டுதல்கள், கட்டாய மூழ்கல், கவனக் கட்டுப்பாடு, உணர்ச்சி ஒழுங்குமுறை, தவிர்த்தல், அவமானம் ஆகியவற்றைக் கையாளும்போது, இலக்கு வைக்கப்பட்ட உளவியல் சிகிச்சை உதவக்கூடும் என்று தனிப்பட்ட நிகழ்வு அறிக்கைகளும் ஆரம்பக்கட்ட சிகிச்சை ஆய்வுகளும் தெரிவிக்கின்றன."
அதாவது,
- பகற்கனவுகளைத் தூண்டும் காரணிகளைப் புரிந்துகொள்ளுதல்
- பகற்கனவு காணும் கட்டாய உந்துதலைக் குறைத்தல்
- கவனத்தையும் ஒருமுகப்படுத்தலையும் மேம்படுத்துதல்
- உணர்ச்சிகளை ஆரோக்கியமான வழிகளில் கையாளக் கற்றுக் கொள்ளுதல்
- நிஜ வாழ்க்கைச் சிக்கல்களைத் தவிர்ப்பதைக் குறைத்தல்
- கூச்சம் அல்லது குற்றவுணர்ச்சி போன்ற உணர்வுகளைக் கையாளுதல்
ஆகிய சிகிச்சை முறையானது பொருத்தமற்ற பகற்கனவுகளைக் கையாள மக்களுக்கு உதவக்கூடும் என்று ஆரம்பக்கால ஆராய்ச்சி தெரிவிக்கிறது.
சிகிச்சையின் நோக்கம் கற்பனையை முற்றிலுமாக நிறுத்துவதல்ல என்று விளக்கும் சோமர், "மக்கள் தங்கள் கற்பனையின் மீது முழு கட்டுப்பாட்டைப் பெற உதவுவதே" என்கிறார்.
"மக்கள் எப்போது பகற்கனவு காண்பது, எப்போது நிஜ வாழ்வில் கவனம் செலுத்துவது என்பதைத் தேர்வு செய்யக் கூடியவர்களாக இருக்க வேண்டும். கற்பனை ஒரு நபரின் வாழ்க்கைக்கு ஆதரவாக இருக்க வேண்டுமே தவிர, வாழ்வுக்கு மாற்றாக இருக்கக்கூடாது."
பொருத்தமற்ற பகற்கனவுகளைப் புரிந்துகொள்ளும் ஒரு சிகிச்சையாளரைக் கண்டுபிடிப்பது கடினமாக இருக்கலாம். இதன் காரணமாக, சிகிச்சையை நாடுவதற்கு முன் சில நடைமுறை உத்திகளை முயற்சி செய்யுமாறு வாண்டா ஃபிஷேரா பரிந்துரைக்கிறார்.
"ஒரு பரிந்துரை என்னவெனில், உங்கள் பகற்கனவுகளைப் பதிவு செய்து வைப்பது. அது எப்போது நிகழ்கிறது, எவ்வளவு நேரம் நீடிக்கிறது என்பனவற்றை எழுதி வைக்க வேண்டும். எடுத்துக் காட்டாக, நீங்கள் ஒரு நாளைக்கு நான்கு மணிநேரம் பகற்கனவு கண்டால், அந்த நேரத்தில் வேறு என்னென்ன செயல்களைச் செய்யலாம் என்று சிந்தியுங்கள். நீங்கள் ஒரு புதிய பொழுதுபோக்கைத் தொடங்கலாம் அல்லது நிஜ வாழ்வில் நீங்கள் விரும்பும் செயல்களில் அதிக நேரம் செலவிடலாம்."
மற்றோர் ஆலோசனை, மனநிறைவைப் பயிற்சி செய்வதாகும். இது, நிகழ்காலத்தில் கவனம் செலுத்த மூளைக்குப் பயிற்சி அளிக்க உதவும். அடிக்கடி டோபமைன் சுரப்பைத் தூண்டும் குறுகிய காணொளிகளையும் விரைவான இணைய உள்ளடக்கங்களையும் தொடர்ந்து பார்ப்பதற்குப் பதிலாக, புத்தகங்கள் அல்லது நீண்ட கட்டுரைகளைப் படிக்குமாறு ஃபிஷெரா பரிந்துரைக்கிறார்.
தங்கள் தூண்டுதல்களைக் கண்டறியுமாறும் அவர் மக்களுக்கு அறிவுறுத்துகிறார். சிலருக்கு, இசை பகற்கனவை மேலும் வலுப்படுத்தும். அப்படியானால், இசையில் இருந்து பாட்காஸ்ட்களுக்கு மாறுவது உதவக்கூடும். தனியாகக் குறைந்த நேரம் செலவிடுவதும் பகற்கனவு காண்பதைக் குறைக்கலாம். ஃபிஷெரா ஓர் உதாரணம் தருகிறார்: "நான் சிகிச்சையளிக்கும் ஒருவர், தனது பூனை அறையில் இருக்கும்போது தன்னால் பகற்கனவு காண முடியாது என்று கூறுவார். அதனால் அந்தப் பூனை எப்போதும் அறையிலேயே இருக்கும்."
பொருத்தமற்ற பகற்னவு காண்பதில் இருந்து மீள்வதற்கு நேரமும் முயற்சியும் தேவைப்படலாம் என்றாலும் அது சாத்தியமே என்று ஃபிஷெரா நம்புகிறார்.
உதாரணத்திற்கு மரியாவை எடுத்துக்கொள்வோம். தனக்கு எழுதுவது பிடிக்கும் என்பதை அவர் கண்டறிந்தார். நீண்ட நேரம் கற்பனைகளில் மூழ்கி இருப்பதற்குப் பதிலாக அவர் இப்போது தனது கதைகளையும் யோசனைகளையும் எழுதுகிறார்.
கைலா போர்செர்ட்ஸும் பகற்கனவு காண்பதுடன் ஓர் ஆரோக்கியமான உறவை வளர்த்துக் கொண்டுள்ளார். இன்று, அவர் பொருத்தமற்ற பகற்கனவு பாதிப்பு இருப்பவர்களுக்கான ஒரு ரெட்டிட் சமூகத்தை நிர்வகிக்க உதவுகிறார். அந்தக் குழு ஒவ்வொரு வாரமும் சுமார் 18,000 பார்வையாளர்களைப் பெறுகிறது. மேலும் தங்களுக்கும் அந்த நிலை இருக்கலாம் என்று நினைப்பதால் அதிகமானோர் தொடர்ந்து அதில் இணைகின்றனர்.
பொருத்தமற்ற பகற்கனவு காணும் நிலையால் அவதியுறும் மக்களுக்கு போர்செர்ட்ஸ், "இது நிரந்தரமாக இருக்க வேண்டியதில்லை" என்ற ஊக்கமளிக்கும் செய்தியைத் தருகிறார். அவர் தன் மனதில் உருவாக்கிய கதைகளை இன்றும் மதிக்கிறார். ஏனெனில், அவருடைய கற்பனைக் கதாபாத்திரங்கள், "நானே என்னை நம்பாதபோது என்மீது நம்பிக்கை வைத்தன" என்றார்.
இருப்பினும், அவர் ஒரு முக்கியமான வேறுபாட்டை வலியுறுத்துகிறார். "உங்கள் மனதில் கதைகள் இருப்பது பிரச்னையல்ல. அந்தக் கதைகளுக்கு அடிமையாவதுதான் பிரச்னை. சமூக ஊடகங்களில் உள்ள ஏறக்குறைய அனைவரும் தவறவிடும் வேறுபாடு இதுதான்."
அதாவது, கற்பனை என்பதே தீங்கு விளைவிக்கும் விஷயமல்ல என்று போர்செர்ட்ஸ் நம்புகிறார். ஒருவர் தனது கற்பனை உலகத்தைச் சார்ந்து, அது அவரது நிஜ வாழ்வை ஆக்கிரமிக்கத் தொடங்கும்போதுதான் உண்மையான பிரச்னை தொடங்குகிறது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு