You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
"முனகல் சத்தத்தை கேட்டோம்" - வெனிசுவேலா நிலநடுக்க இடிபாடுகளில் உயிருடன் சிக்கியிருப்பவர்களின் நிலை என்ன?
- எழுதியவர், நிக்கோல் கோல்ஸ்டர்
- பதவி, பிபிசி செய்தியாளர்
- இருந்து, La Guaira, Venezuela
- எழுதியவர், அலிசியா ஹெர்னாண்டஸ்
- இருந்து, London
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
வெறும் கைகள் மற்றும் மண்வெட்டிகளைக் கொண்டு இடிபாடுகள் அகற்றப்படுகின்றன; அதேவேளையில், மேலே ஒரு டிரோன் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளது. இங்கே ஒவ்வொரு நொடியும், ஒவ்வொரு செயலும் முக்கியமானது. உயிருடன் இருப்பவர்களை கண்டறிவதற்கான வலிமிகுந்த போராட்டம் இது.
தலைநகர் கராகஸை ஒட்டியுள்ள கடலோர பகுதியான லா குவைராவில் எங்குத் திரும்பினாலும் பேரழிவின் சுவடுகளைப் பார்க்கமுடிகிறது. கடந்த புதன்கிழமையன்று வெனிசுவேலாவை அடுத்தடுத்துத் தாக்கிய நிலநடுக்கங்களால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டப் பகுதிகளில் இந்த மாநிலமும் ஒன்று.
இங்குள்ள குடியிருப்பாளர்களும் குடும்பத்தினரும் தங்களின் அன்புக்குரியவர்களையும் உடமைகளையும் இடிபாடுகளுக்கு இடையே தீவிரமாகத் தேடி வருகின்றனர். கான்கிரீட் மற்றும் உலோகக் கம்பிகளின் சிதைவுகளுக்கு அடியில் யாரேனும் உயிருடன் சிக்கியிருந்தால் வெளிப்படும் சத்தத்தைக் கேட்க அவர்கள் கூர்ந்து கவனிக்கின்றனர்.
7.2 மற்றும் 7.5 ரிக்டர் அளவிலான இந்த நிலநடுக்கங்களால் இதுவரை குறைந்தது 1,430 பேர் உயிரிழந்துள்ளதை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இதில் இரண்டாவது நிலநடுக்கமானது, கடந்த நூற்றாண்டில் வெனிசுவேலாவில் பதிவான மிக வலுவான நிலநடுக்கங்களில் ஒன்றாகும்.
நூற்றுக்கணக்கான கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளன, அந்த இடிபாடுகளுக்கு அடியில் இன்னமும் ஆயிரக்கணக்கான மக்கள் சிக்கியுள்ளனர். உயிரிழந்தோர் மற்றும் காயமடைந்தோர் எண்ணிக்கை ஒவ்வொரு மணி நேரமும் அதிகரித்து வருகிறது. சுமார் 50,000 பேர் காணாமல் போயிருக்கலாம் என்று ஐக்கிய நாடுகள் சபை மதிப்பிட்டுள்ளது.
உள்நாட்டு மீட்புக் குழுக்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. இருப்பினும் மெக்சிகோ, ஸ்பெயின், அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளைச் சேர்ந்த சர்வதேச மீட்புக் குழுவினர் இந்த மீட்புப் பணியில் இணைவதற்காக வந்து சேர்ந்துள்ளனர். ஆனால், அதுவும் போதுமானதாக இல்லை.
மக்களையும் உயிருடன் மீட்பதற்கு முதல் 48 முதல் 72 மணிநேரம் மிக முக்கியமானது என்று மனிதாபிமான உதவி அமைப்புகள் கூறுகின்றன; ஆனால், சிக்கியவர்களுக்கு உணவு மற்றும் தண்ணீர் கிடைத்தால் இந்த கால அவகாசம் அதிகரிக்கப்படலாம்.
"மீட்கப்படும் ஒவ்வொரு நபரும் ஓர் அற்புதம்," என அந்நாட்டின் தேசிய நாடாளுமன்றத் தலைவர் ஜார்ஜ் ரோட்ரிக்ஸ் கூறுகிறார். மேலும், "இந்தத் துயரத்தின் அளவு குறித்த எந்தவொரு தகவலையும் நாங்கள் மறைக்க மாட்டோம்" என்றும் அவர் கூறினார்.
'இயந்திரங்களின் உதவியில்லாமல் சாத்தியமே இல்லை'
லா குவைரா மாநிலத்தின் கடலோர நகரங்களில் ஒன்றான காட்டியா லா மாரில், ஒட்டுமொத்தச் சூழலும் சோகமயமாகக் காட்சியளிக்கிறது. அங்கு மிகச் சில கட்டடங்கள் மட்டுமே இடிந்து விழாமல் தப்பித்து நிற்கின்றன.
அரசுப் படையினர் தப்பிப்பிழைத்தவர்களுக்கு உணவையும் தண்ணீரையும் விநியோகித்து வருகின்றனர். "மக்களை உயிருடன் மீட்க வேண்டிய இந்த முக்கியமான தருணங்களில்" அரசு விரிவான மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக இடைக்கால அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் தெரிவித்துள்ளார்.
தங்கள் உறவினர்கள் சிக்கியிருக்கலாம் என்று கருதும் இடங்களைச் சுற்றி மக்கள் மிகுந்த பதற்றத்துடன் காத்திருக்கின்றனர்.
அவர்களில் ஜீசஸ் சுவாரஸும் ஒருவர். அவர் தனது மகன் ஜான் சுவாரஸைத் தேடி 200 கிலோமீட்டர் தூரம் பயணித்து இங்கு வந்துள்ளார்.
"எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. அவரை அறிந்தவர்கள், அவர் வெளியே வருவதையோ அல்லது வேறு எதையுமோ பார்க்கவில்லை என்று கூறுகிறார்கள்."
இடிந்து விழுந்த ஒரு கட்டிடத்தின் இடிபாடுகளைக் கைகாட்டி, "அவர் இதற்குள் தான் இருக்கக்கூடும் என நம்புகிறேன்" என்கிறார் அவர். இங்குள்ள பலரும் எதிர்கொள்ளும் அதே இக்கட்டான சூழ்நிலையை சுவாரஸும் எதிர்கொள்கிறார்.
"அவரை மீட்பது என்பது அசாத்தியமானது... இங்கு நவீன உபகரணங்கள் எதுவும் இல்லை. மனிதர்களால் மட்டும் இதைச் செய்துவிட முடியாது; இது மிகவும் ஆபத்தானது."
இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள 31 வயதான கார்லோஸ் எட்வார்டோ எங்கே இருக்கிறார் என்பது அவரது உறவினர்களுக்குத் தெரியும். அவ்வப்போது அவர் பேசுவதையோ அல்லது முனகுவதையோ அவர்களால் கேட்க முடிகிறது.
"நாங்கள் அவரை 'கார்லோஸ், கார்லோஸ், மகனே...' என்று அழைத்தோம். அப்போது அவர் சத்தம் எழுப்பினார், சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு முன்பு அவரது முனகல் சத்தத்தைக் கேட்டோம்" என அவரது உறவினர் ஒருவர் பிபிசியிடம் கூறினார்.
"அதன்பிறகு அவரிடமிருந்து எந்தச் சத்தமும் கேட்கவில்லை; அவரிடமிருந்து சத்தம் ஏதும் வரவில்லை; அவர் உயிருடன் இருப்பதற்கான எந்த அறிகுறியையும் காட்டவில்லை. ஆனால் இதற்கு முன்பும் அவர் இப்படிச் செய்திருக்கிறார். நேற்று மதியமும் அவரது சத்தம் முனகலாக கேட்டது, அதன்பிறகு அமைதியானார். எனவே, அவரை உயிருடன் மீட்க முடியும் என்ற நம்பிக்கையுடன் இங்கே உதவியை எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்." என்கிறார் அவர்.
போக்குவரத்து நெரிசலும் கூட்டமும் சில சமயங்களில் தேடுதல் நடவடிக்கைகளுக்குத் தடையாக அமைகின்றன. இடிபாடுகளுக்கு அடியில் யாரேனும் உயிருடன் இருக்கிறார்களா என்பதை தெரிந்து கொள்வதற்கான அறிகுறிகள் கேட்கிறதா என்று கவனிப்பதற்காக, ராணுவ வீரர்களும் மெக்சிகோவைச் சேர்ந்த தன்னார்வலர்களும் அமைதி காக்குமாறு மக்களிடம் மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கொண்டே இருக்கிறார்கள்.
மக்கள் தங்களால் இயன்ற வழிகளில் எல்லாம் உதவி செய்து வருகின்றனர். டிரோன்கள் வைத்திருப்பவர்கள், மீட்புக் குழுவினர் எளிதில் செல்ல முடியாத கடினமான இடங்களில் உயிருடன் சிக்கியவர்கள் அல்லது உயிரிழந்தவர்களைத் தேடுவதற்காக அவற்றைப் பயன்படுத்துகின்றனர்.
குடும்பத்தினர் டிரோன் வீடியோ காட்சிகளைச் சுற்றித் திரண்டு, தங்களுக்குப் பரிச்சயமானவர்கள் தொடர்பான பொருட்களில் ஏதேனும் ஒன்று தென்படுகிறதா என்று தேடுகிறார்கள். ஒரு துண்டு ஆடை, ஒரு சில தலைமுடி இழை, அல்லது ஏதேனும் ஒரு உடைமை... தங்கள் அன்புக்குரியவர்களைப் பற்றிய செய்தியைக் கொண்டு வரக்கூடிய ஏதோ ஒரு சிறிய அடையாளத்தையாவது தேடி அவர்கள் கண்கள் அலைபாய்கின்றன.
நேரம் செல்லச் செல்ல, அதிகாரப்பூர்வமற்ற இறப்பு எண்ணிக்கை உயர்கிறது - அதோடுகூட அதன் மோசமான விளைவுகளும் அதிகரிக்கின்றன.
"ஒருவித துர்நாற்றம் வீசுகிறது. இறந்தவர்களின் உடல்கள் சிதைவதை உணர முடிகிறது. இது எங்களுக்கும் குழந்தைகளுக்கும் உடல்நலக் குறைவை ஏற்படுத்தக்கூடும்" என கவலைப்படுகிறார் க்ளெண்டிஸ் டெல்காடோ.
டெல்காடோ வசிக்கும் பகுதிக்கு அருகே இரண்டு கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளன. ஆனால், அங்கு இதுவரை அங்கு எவ்வித அதிகாரப்பூர்வ உதவியும் கிடைக்கவில்லை என்று அவர் கூறுகிறார்.
அரசு தரப்பிலிருந்து ஒருவர்கூட இங்குக் வரவில்லை, ஆனால் கராகஸ் நகர மக்கள் இங்கு வந்து எங்களுக்கு உணவு வழங்கி ஆதரவளிக்கின்றனர்; கடவுளுக்கு நன்றி செலுத்துகிறேன்" என்றார் அவர்.
"அங்கிருக்கும் எல்லாமே சிதைந்துவிட்டன..." என்று கலங்குகிறார் 27 வயதான டெய்யர் காப்ரில். "மகுட்டோ, கரிபே எனப் பாதிப்பு இல்லாத இடமே இல்லை; இடிபாடுகளுக்குள் இருந்து வீசும் துர்நாற்றத்தை எங்களால் தெளிவாக உணர முடிகிறது" என அவர் வேதனையோடு விவரிக்கிறார்.
மெக்சிகோ, அமெரிக்கா, எல் சால்வடார், சுவிட்சர்லாந்து, கொலம்பியா மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்த 861 தன்னார்வலர்கள் வெனிசுவேலாவில் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும், மேலும் பலர் வந்துக் கொண்டிருப்பதாகவும் வெள்ளிக்கிழமை அன்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ ஆகியோருடன் வெள்ளிக்கிழமையன்று பேசியதாகவும், மீட்புக் குழுக்கள் மற்றும் நிவாரணப் பொருட்களை அனுப்புவதற்கான தங்கள் உறுதிப்பாட்டை அவர்கள் மீண்டும் உறுதிப்படுத்தியதாகவும் இடைக்கால அதிபர் ரோட்ரிக்ஸ் தெரிவித்தார்.
மன உறுதியுடன் இருக்க முயற்சிக்கும் பெற்றோர்
இடிந்துபோன தனது வீட்டின் முன் நிற்கும் இந்தப் பெண்ணின் கால்கள் அதிர்ச்சியில் இன்னமும் நடுங்கிக் கொண்டிருக்கின்றன.
"நாங்கள் மனிதாபிமான உதவிகளுக்காகக் காத்திருக்கிறோம் - அவர்கள் வந்து எங்களுக்கு உதவ வேண்டும்" என்று அவர் உருக்கமாகக் கேட்டுக்கொள்கிறார்.
தன்னுடைய துணி துவைக்கும் இயந்திரத்தையாவது மீட்க முடியுமா என்று பார்ப்பதற்காக அவர் மீண்டும் தன்னுடைய வீட்டிற்கு வந்திருக்கிறார்.
"இது மிகவும் கடினமான ஒரு சூழ்நிலை, இதற்கு நாங்கள் தயாராக இருக்கவில்லை. பல விஷயங்களைச் சாதிக்க நாம் மேற்கொள்ளும் தியாகங்களும் முயற்சிகளும் கண் இமைக்கும் நேரத்தில் சரிந்துவிடுகின்றன. ஆனால், உயிர்தான் முக்கியம்" என்று அவர் கூறுகிறார்.
28 வயதான அலெக்ஸாண்ட்ரா காபினோவும் இதே போன்ற சூழ்நிலையைத் தான் எதிர்கொள்கிறார் - இவருக்கு ஏழு மற்றும் இரண்டு வயதில் இரு குழந்தைகள் உள்ளனர்.
நிலநடுக்கம் ஏற்பட்டபோது அவர் தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் காரில் இருந்தார்.
"குழந்தைகள் அலறத் தொடங்கினார்கள். என்ன நடக்கிறது என்றே எங்களுக்குப் புரியவில்லை, திடீரென்று பக்கத்தில் இருந்த கட்டடம் இடிந்து விழுந்தது, உடனே என் கணவர் காரைப் பின்னோக்கி எடுத்தார்" என அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.
அவர்கள் நால்வரும் இப்போது மைக்கெட்டியாவில் உள்ள சிமோன் பொலிவர் சர்வதேச விமான நிலையத்தின் வாகன நிறுத்துமிடத்தில், தங்கள் வாகனத்திலேயே உறங்கிக்கொண்டிருக்கிறார்கள். சேதம் காரணமாக விமான நிலையம் மூடப்பட்டிருந்தாலும், கட்டடங்களிலிருந்து விலகி நிற்கும் விமானநிலையம், மக்கள் தங்குவதற்கு ஏற்ற சமமான மற்றும் திறந்தவெளி இடமாக இருக்கிறது.
அவர் சேதமடைந்த தங்கள் கட்டடத்திற்கு வெளியே காத்திருக்கிறார். அவரது கணவர் பதினைந்தாவது மாடியில் உள்ள தங்கள் வீட்டிற்குச் செல்ல முயற்சிக்கிறார். கட்டடம் உறுதியற்ற நிலையில் இருந்தாலும், அவர் சில உடைமைகளையும் ஆவணங்களையும் மீட்க முயல்கிறார்.
"மிக முக்கியமானவற்றை மட்டுமே மீட்க முயற்சிக்கிறோம்" என அவர் கூறுகிறார்; ஏனெனில் நிலைமை ஆபத்தானது, அதிக பொருட்களை மீட்க முயற்சிப்பதில் உள்ள அபாயத்தை எதிர்கொள்ள முடியாது.
"எல்லாவற்றையும் இழந்துவிட்டு வெறும் கையோடு நிற்பது வேதனையானது. என் அம்மா தன் வீட்டை இழந்துவிட்டார், நாங்கள் எங்கள் வீட்டை இழந்துவிட்டோம், எங்களிடம் இப்போது எதுவும் இல்லை. குழந்தைகளுக்காக மனதை உறுதியாக வைத்துக்கொள்ள முயற்சிக்கிறோம்" என்று அவர் கூறுகிறார்.
மேலும், அங்கிருக்கும் பலரும் உணரும் ஒரு விஷயத்தை அவர் நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார்: "நாம் உயிருடன் இருக்கிறோம் என்பதுதான் முக்கியம் என்று அனைவரும் சொல்கிறார்கள், அது உண்மைதான். ஆனால் நீங்கள் கடந்து வரும் இந்தச் சூழ்நிலைகள் அனைத்தும் வலிக்கிறது: மக்கள் துடிப்பதைப் பார்ப்பது, மக்களின் அலறல் சத்தத்தைக் கேட்பது, குழந்தைகள் இடிபாடுகளில் சிக்கியிருப்பதைப் பார்ப்பது... மேலும் எங்களுடைய குழந்தைகளை பார்த்துக் கொள்ள வேண்டியிருப்பதால், மற்றவர்களுக்கு எதுவும் செய்ய முடியவில்லையே என்ற இயலாமை என அனைத்துமே மனவலியைக் கொடுக்கின்றன..."
"மனதை உறுதியாக வைத்துக்கொள்ள முயற்சிக்கிறோம், ஆனாலும் அது வலிக்கிறது."
-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு