அமெரிக்காவில் அதானி மீதான குற்றச்சாட்டுகளை திரும்பப் பெற செய்யப்பட்ட சமரசம் என்ன?

பட மூலாதாரம், AFP via Getty Images
இந்திய தொழிலதிபர் கௌதம் அதானி மற்றும் அவரது மருமகன் சாகர் அதானி மீதான அனைத்து கிரிமினல் குற்றச்சாட்டுகளையும் அமெரிக்க நீதித்துறை திரும்பப் பெற்றுள்ளது.
இதன் மூலம், நியூயார்க்கில் நடைபெற்று வந்த பத்திரங்கள் மற்றும் பணப் பரிமாற்ற மோசடி வழக்கு முழுமையாக முடிவுக்கு வந்துள்ளது.
ப்ளூம்பெர்க் செய்தியின்படி, அமெரிக்க கருவூலத் துறை சமரசத் திட்டத்தை அறிவித்த உடனேயே, கிரிமினல் குற்றச்சாட்டுகளைத் திரும்பப் பெற நீதித்துறை கோரியது.
அமெரிக்காவில் நடைபெற்று வரும் வழக்கை முடிவுக்குக் கொண்டு வர கௌதம் அதானியும் சாகர் அதானியும் இணைந்து 18 மில்லியன் டாலர் அபராதம் செலுத்த ஒப்புக்கொண்டதாக கடந்த வாரம் செய்தி வெளியானது.
2024ஆம் ஆண்டு தொடரப்பட்ட ஒரு வழக்கில், அதானி குடும்பத்தினர் முதலீட்டாளர்களைத் தவறாக வழிநடத்தியதாக பங்குச் சந்தை ஒழுங்குமுறை ஆணையம் குற்றம் சாட்டியிருந்தது. அதன் குற்றச்சாட்டுகளின்படி, அதானி குடும்பத்தினர் இந்த முறையில் 750 மில்லியன் டாலரை திரட்டியுள்ளனர், இதில் அமெரிக்க முதலீட்டாளர்களிடமிருந்து பெறப்பட்ட சுமார் 175 மில்லியன் டாலரும் அடங்கும்.
அதானி குழுமம் இந்தக் குற்றச்சாட்டுகளை 'ஆதாரமற்றவை' எனக் கூறியது.
அமெரிக்க கருவூலத் துறை என்ன கூறியது?

பட மூலாதாரம், Getty Images
அமெரிக்க கருவூலத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், அதன் வெளிநாட்டு சொத்துக் கட்டுப்பாட்டு அலுவலகம் (OFAC), அதானி எண்டர்பிரைசஸ் லிமிடெட் (AEL) நிறுவனத்துடன் 275 மில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தம் ஒன்றை அறிவித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
இந்த ஒப்பந்தம் 2026 மே 14-ஆம் தேதி கையெழுத்தானது.
இரான் மீதான ஓஎப்ஃஏசி (OFAC) தடைகளை சிவில் முறையில் மீறியிருக்கக் கூடிய 32 சாத்தியமான விதிமீறல்களுக்கான தனது பொறுப்பை ஏற்றுக்கொள்ள அதானி எண்டர்பிரைசஸ் லிமிடெட் (AEL) ஒப்புக்கொண்டது.
அந்த அறிக்கையின்படி, நவம்பர் 2023 மற்றும் ஜூன் 2025-க்கு இடையில், அதானி எண்டர்பிரைசஸ் லிமிடெட் துபையைச் சேர்ந்த ஒரு தொழிலதிபரிடமிருந்து எல்பிஜி சரக்குகளை வாங்கியது, அந்த தொழிலதிபர் ஓமனுக்கும் இராக்கிற்கும் எரிவாயு விநியோகம் செய்வதாகக் குறிப்பிட்டிருந்தார்.
இருப்பினும், அந்த எல்பிஜி (LPG) உண்மையில் இரானில் இருந்துதான் வருகிறது என்பதை அதானி எண்டர்பிரைசஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு எச்சரிக்கும் வகையில் பல அறிகுறிகள் இருந்தன. இந்த காலகட்டத்தில், அதானி எண்டர்பிரைசஸ் லிமிடெட் நிறுவனம் அமெரிக்க நிதி நிறுவனங்கள் மூலம் அமெரிக்க டாலர் அடிப்படையிலான 32 பணப் பரிவர்த்தனைகளை மேற்கொண்டது. இதன் மொத்த மதிப்பு தோராயமாக 192.1 மில்லியன் டாலராகும்.
'அதானி எண்டர்பிரைசஸ் லிமிடெட் நிறுவனத்தின் சாத்தியமான விதிமீறல்கள் கடுமையான தன்மையைக் கொண்டிருந்தன என்றும், அவை தானாக முன்வந்து வெளியிடப்படவில்லை என்றும் ஓஎப்ஃஏசி (OFAC) முடிவு செய்துள்ளதையே இந்த சமரசத் தொகை பிரதிபலிக்கிறது' என நீதித்துறை கூறியது.
வழக்கு நிரந்தரமாக முடித்து வைப்பு
பிடிஐ செய்தி நிறுவனத்தின்படி , நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணத்தில், அதானி குடும்பத்திற்கு எதிரான குற்றப்பத்திரிகையை நிரந்தரமாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என அமெரிக்க நீதித்துறை கோரியுள்ளது.
"நீதித்துறை இந்த விவகாரத்தை மறுபரிசீலனை செய்தது. வழக்கைத் தொடரும் தன் விருப்புரிமையைப் பயன்படுத்தி, இந்த குற்றவியல் குற்றச்சாட்டுகளை முன்னெடுத்துச் செல்ல மேலும் செலவிட வேண்டாம் என்று முடிவு செய்துள்ளது" என அந்தத் துறை தெரிவித்துள்ளது.
இதையடுத்து, அதானி மற்றும் பிறருக்கு எதிரான குற்றப்பத்திரிகையை 'வித் பிரெஜுடிஸ்' ('முற்றிலும் தள்ளுபடி') அதாவது இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க முடியாது என்ற நிபந்தனையுடன் தள்ளுபடி செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதானி குழுமத்தின் உலகளாவிய விரிவாக்கத் திட்டங்களைப் பாதிக்கும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியிருந்த இந்த வழக்கில், இத்தீர்ப்பு ஒரு முக்கிய திருப்புமுனையாகக் கருதப்படுகிறது.
ப்ளூம்பெர்க்கின் கூற்றுப்படி , அமெரிக்க குற்றவியல் வழக்குகளில் ஒரு வழக்கை மீண்டும் விசாரிக்க முடியாதவாறு தள்ளுபடி செய்வது மிகவும் அரிதானதாகக் கருதப்படுகிறது.
இது வழக்கமாக, ஒரு விரிவான மறுபரிசீலனைக்குப் பிறகு, இந்த வழக்கைத் தொடர்ந்து நடத்துவது பொருத்தமானது அல்ல என்று அரசுத் தரப்பு முகமைகள் தீர்மானித்துள்ளதை உணர்த்துகிறது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு





























