'அவர்களிடம் எந்த குற்ற உணர்ச்சியும் இல்லை' : தாம்பரம் இரட்டைக் கொலையில் கைதான 7 பேர்

தாம்பரம் இரட்டைக் கொலையில் கைதான 7 பேர்
    • எழுதியவர், விஜயானந்த்
    • பதவி, பிபிசி தமிழ்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

(எச்சரிக்கை: கட்டுரையில் இடம்பெற்றுள்ள உள்ளடக்கம் சங்கடம் தரலாம்)

"அவர்களிடம் கொலைக் குற்றத்தில் ஈடுபட்டதற்கான எந்த குற்றவுணர்வும் இல்லை."

தாம்பரம் அருகே நடந்த இரட்டைக் கொலை வழக்கின் கைதான நபர்கள் குறித்து படப்பை காவல்நிலைய ஆய்வாளர் பிபிசி தமிழிடம் மேற்கண்ட தகவலைக் கூறினார்.

'கானா' பாடகர் உள்பட இருவர் கொல்லப்பட்ட விவகாரத்தில் ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் 2 பேர் சிறார்கள் எனவும், மே 19 ஆம் தேதியன்று தாம்பரம் மாநகர காவல்துறை செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

தாம்பரம் அருகே உள்ள வரதராஜபுரம் பகுதியைச் சேர்ந்த பரத்குமார், மெக்கானிக்கல் பிரிவில் பட்டயப் படிப்பை முடித்துள்ளார். கடந்த ஆறு வருடங்களாக துக்க நிகழ்வுகளில் 'கானா' பாடுவது அவரது விருப்பமான தொழிலாக இருந்துள்ளது.

"தபேலா வாசிப்பதில் பரத் மிகவும் விருப்பமாக இருந்தார். அதன்மூலமாக கானா பாடல்கள் மீது அவருக்கு ஈர்ப்பு ஏற்பட்டது. சுற்றுவட்டாரத்தில் எங்கு துக்க நிகழ்வு நடந்தாலும் அவரை அழைப்பார்கள்" என்கிறார், பெயர் குறிப்பிட விரும்பாத அவரின் உறவினர் ஒருவர்.

கடந்த வெள்ளிக்கிழமையன்று பூந்தமல்லியில் துக்க வீடு ஒன்றில் பாடல் பாடுவதற்காக பரத் குமார் சென்றுள்ளார். அவருடன் அவரது நண்பர் சீனிவாசனும் சென்றுள்ளார். அன்று இரவு படப்பை அருகில் உள்ள அம்மணம்பாக்கம் பகுதிக்கு இருவரும் வந்துள்ளனர்.

தாம்பரம் இரட்டைக் கொலையில் கைதான 7 பேர்

தாக்குதல் நடத்திய 7 பேர் கும்பல்

அங்கு தனது நண்பர் லோகேஷ் என்பவரின் வீட்டில் இருவரும் தங்கியுள்ளனர். மறுநாள் (மே 16) காலை சுமார் 10.30 மணியளவில் ஏழு பேர் கொண்ட கும்பலால் பரத் குமார், சீனிவாசன் ஆகியோர் கொல்லப்பட்டனர்.

போலீஸாரின் கூற்றுப்படி, சம்பவம் நடந்த நேரத்தில் மூன்று இருசக்கர வாகனங்களில் வந்த கும்பல் பரத் குமார், சீனிவாசன் ஆகியோர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த லோகேஷின் தந்தை மோகன், தாக்குதலில் ஈடுபட்ட நபர்களைத் தடுத்துள்ளார்.

அதில் அவருக்குக் காயம் ஏற்பட்டதால் லோகேஷின் தாய் மற்றும் சகோதரிகள் அச்சத்தில் வேறு அறைக்குள் சென்று கதவைப் பூட்டிக் கொண்டுள்ளனர். இந்தச் சம்பவத்தில் பரத் குமார், சீனிவாசன் ஆகியோர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளனர்.

அவர்களின் உடல்களை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த படப்பை போலீசார், இரட்டைப் படுகொலையின் பின்னணி குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.

தாம்பரம் மாநகர காவல் ஆணையர் சஞ்சய் குமார் உத்தரவின்பேரில் குற்றத்தில் ஈடுபட்ட நபர்களைக் கண்டறிவதற்கு நான்கு சிறப்பு தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

தாம்பரம் இரட்டைக் கொலையில் கைதான 7 பேர்

பட மூலாதாரம், police

படக்குறிப்பு, கைது செய்யப்பட்ட மணி, சந்தோஷ், குமரவேல், வேலன், கலைச்செல்வன் (மேலிருந்து கீழாக, இடமிருந்து வலமாக)

அரசியல் கட்சிகள் விமர்சனம்

அதேநேரம், மணிமங்கலத்தில் நடந்த இரட்டைப் படுகொலை அரசியல்ரீதியாக விவாதப்பொருளாக மாறியது. அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், 'ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறவில்லை என்ற சந்தேகம் மக்கள் மனதில் எழுந்துள்ளது' என விமர்சித்துள்ளார்.

'இரண்டு இளைஞர்களைக் கொலை செய்த ஆசாமிகளைக் கண்டுபிடித்து சட்டம் ஒழுங்கைக் காக்க வேண்டும்' எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இரட்டைக் கொலை தொடர்பாக, அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் த.வெ.க அரசை அவர் சாடியுள்ளார்.

'பொதுமக்களின் உயிர் மற்றும் உடைமைகளை பாதுகாத்து சட்டம் ஒழுங்கை பேணிக்காப்பது தான் அரசு நிர்வாகத்தின் முதன் கடமை என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்' எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இரட்டைக் கொலையில் கைதான 7 பேர்

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

சிறப்பு தனிப்படையின் தீவிர விசாரணையில் சென்னை பல்லாவரத்தைச் சேர்ந்த மணி, படப்பையைச் சேர்ந்த சந்தோஷ், முடிச்சூர் பகுதியில் வசிக்கும் குமரவேல், பெருங்களத்தூரை சேர்ந்த வேலன், பீர்க்கன்கரணைச் சேர்ந்த கலைச்செல்வன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

கைதான ஏழு பேரில் இரண்டு பேர் சிறார் என்பதால் அவர்கள் அரசு கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட உள்ளதாக, பிபிசி தமிழிடம் பேசிய மணிமங்கலம் காவல்நிலைய ஆய்வாளர் வர்கீஸ் ராஜா தெரிவித்தார் (இவர் படப்பை காவல்நிலையத்தை கூடுதல் பொறுப்பாக கவனித்து வருகிறார்).

கொலைக்கான பின்னணி குறித்த மேலதிக தகவல்களை அவரிடம் கேட்டபோது, "இறந்துபோன பரத் குமார் மற்றும் கைதான பொட்டி என்ற குமரவேலுவும் முடிச்சூர், வரதராஜபுரம் பகுதியில் அருகருகே வசித்து வந்தனர். இருவரும் சிறு வயதில் இருந்தே ஒன்றாக வளர்ந்து வந்துள்ளனர்" எனக் கூறுகிறார்.

இரு தரப்புக்கும் இடையே சில காலமாக மோதல் இருந்துள்ளதாகக் கூறும் அவர், "சில அடிதடி வழக்குகளில் குமரவேல் கைதானார். இதையே காரணமாக வைத்து உள்ளூரில் செயல்பட்டு வந்துள்ளார். இதற்கிடையில், பீர்க்கன்கரணையில் ஒரு வழக்கில் கைதாகி குமரவேல் சிறை சென்றார்" என்கிறார்.

தாம்பரம் இரட்டைக் கொலையில் கைதான 7 பேர்

தொடர்ந்து பேசிய காவல் ஆய்வாளர், "சிறையில் இருந்து வெளியே வந்த குமரவேல், காவல்துறைக்குப் பயந்து கேரளாவுக்கு சென்றுவிட்டார். ஆனால், அவ்வப்போது ஊருக்குள் அவர் வரும் தகவல் பரத் தரப்பினருக்குக் கிடைத்துள்ளது" எனத் தெரிவித்தார்.

'குமரவேலுவை எதாவது செய்தாக வேண்டும்?' என்ற நோக்கத்தில் சிறார் ஒருவரிடம் பரத் உதவி கேட்டுள்ளார். 'தன்னைக் கொலை செய்ய திட்டம் போடுகிறார்கள்' என்பதை அறிந்து குமரவேல் முந்திக் கொண்டுவிட்டதாக தங்களிடம் கூறினார் என காவல் ஆய்வாளர் கூறுகிறார்.

"இந்த விவகாரத்தில் பரத்தின் நண்பர் சீனிவாசனைக் கொல்வது கொலைக் கும்பலின் திட்டமாக இல்லை" எனக் கூறும் காவல் ஆய்வாளர், "பரத்தை கொலை செய்யும்போது சீனிவாசன் தடுக்க வந்ததால் அவரும் கொல்லப்பட்டார்" என்கிறார்.

'எந்தவித குற்ற உணர்ச்சியும் இல்லை'

"இறந்துபோன இரண்டு பேர் மீதும் குற்ற வழக்குகள் எதுவும் இல்லை" எனக் கூறிய அவர், "கைதான கலைச்செல்வன் மீது குற்ற வழக்குகள் எதுவும் இல்லை. உள்ளூரில் ஏற்பட்ட மோதல் தான் இரட்டைப் படுகொலையின் பின்னணியாக இருந்துள்ளது" எனத் தெரிவித்தார்.

குற்றத்தில் ஈடுபட்ட நபர்களுக்கு போதைப் பழக்கவழக்கங்கள் உள்ளதாகவும் அனைவரும் நடுத்தர குடும்பத்துக்கும் கீழ்நிலையில் வசிப்பதாகவும் காவல் ஆய்வாளர் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், "அவர்களிடம் எந்தவித குற்ற உணர்ச்சியும் இல்லை. 'நாம் தப்பித்துவிட்டோம்' என்ற மகிழ்ச்சி தான் உள்ளது. காவல்துறையைப் பார்த்து மட்டுமே பயப்படுகின்றனர்." என்கிறார்.

குடும்பத்தினர் கூறுவது என்ன?

இறந்துபோன பரத்தின் தாயார் ஜெயந்தியிடம் பேசுவதற்கு பிபிசி தமிழ் முயன்றது. "அவர் தற்போது பேசும் மனநிலையில் இல்லை" எனக் கூறிய அவரது உறவினர் பெயர் குறிப்பிட விரும்பாமல் சில தகவல்களைத் தெரிவித்தார்.

"முதல்நாள் துக்க வீட்டில் கானா பாடுவதற்காக பரத் சென்றார். மறுநாள் அவர் கொல்லப்பட்டுவிட்டதாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது" எனக் கூறினார்.

"கானா பாடல் என்பது அவனது வாழ்க்கையின் ஓர் அங்கமாக இருந்தது. இது எதிர்பார்க்காத ஒரு சம்பவம். இப்படி நடக்கும் எனக் கனவிலும் நாங்கள் எதிர்பார்க்கவில்லை" என்கிறார் அவர்.

"இதுவரை பரத் மீது எந்தக் குற்ற வழக்குகளும் இல்லை" எனக் கூறிய அவர், "கொலையில் ஈடுபட்ட நபர்களுடன் எதனால் முன்விரோதம் ஏற்பட்டது என்பது தொடர்பான உறுதியான தகவல்கள் எதுவும் தெரியவில்லை" எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசும்போது, "குடும்ப உறவுகளுக்கு மிகவும் உதவியாக பரத் இருந்தார். அடுத்து பி.இ படிப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டார். அவர் இல்லை என்பதை ஏற்க முடியவில்லை" என வேதனைப்பட்டார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு