சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்துக்கு சென்ற பின்னணி - அவை சொல்வது என்ன?

சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்துக்கு சென்ற பின்னணி - அதில் என்ன எழுதப்பட்டுள்ளன?

பட மூலாதாரம், X/NarendraModi

  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

11-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் கால செப்பேடுகள், நெதர்லாந்தில் இருந்து இந்தியாவுக்கு திரும்பக் கொண்டு வரப்பட உள்ளதாக மே 16-ஆம் தேதியன்று பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்தார்.

21 பெரிய செப்பேடுகளையும் 3 சிறிய செப்பேடுகளையும் கொண்டுள்ள இவை, சோழர்களின் பெருமையைப் பறைசாற்றுவதாக பிரதமர் மோதி தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

"செப்பேடுகளைக் கொண்டு வருவதற்கு பலரும் பல்வேறு முயற்சிகளை நீண்டகாலமாக மேற்கொண்டாலும் தற்போது மட்டுமே சாத்தியமாகியுள்ளது" என்கிறார், வரலாற்றாய்வாளரான குடவாயில் பாலசுப்ரமணியம்.

சோழர்கால செப்பேடுகளில் என்ன உள்ளன? இவை நெதர்லாந்துக்கு சென்ற பின்னணி என்ன?

Copperplates, Choza, india, Netherland, nagapattinam

பட மூலாதாரம், X/NarendraModi

படக்குறிப்பு, குலோத்துங்கச்சோழன் வழங்கிய இரண்டாவது செப்பேடு

நெதர்லாந்தில் உள்ள லெய்டன் பல்கலைக்கழகத்தின் அருங்காட்சியகத்தில் சோழர்கால செப்பேடுகள் வைக்கப்பட்டிருந்தன. 'ஆனைமங்கலச் செப்பேடுகள்' என அழைக்கப்படும் இவை, சோழர்களின் வரலாறு குறித்த முக்கிய ஆவணமாகப் பார்க்கப்படுகின்றன.

டச்சு கிழக்கிந்திய கம்பெனி மூலமாக இந்தியா வந்த நெதர்லாந்து நாட்டினர், பழவேற்காடு, சதுரங்கப்பட்டினம் உள்ளிட்ட சோழ மண்டலக் கடற்கரைகளில் உள்ள சில இடங்களில் சுமார் இரு நூற்றாண்டுகள் தங்களின் ஆதிக்கத்தை நிலைநிறுத்தினர்.

அப்போது இந்த செப்பேட்டுத் தொகுதிகள் இந்தியாவில் இருந்து நெதர்லாந்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.

இந்திய தொல்லியல் கழகம் திங்கள்கிழமையன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், டச்சு காலனித்துவ ஆட்சிக்காலத்தில் சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் இருந்து சோழர்கால செப்பேடுகள் எடுத்துச் செல்லப்பட்டதாகக் கூறியுள்ளது.

1862-ஆம் ஆண்டு முதல் நெதர்லாந்தில் உள்ள லெய்டன் பல்கலைக்கழகத்தில் இவை பாதுகாக்கப்பட்டு வருவதாகவும், இந்திய தொல்லியல் கழகம் தெரிவித்துள்ளது.

"லெய்டன் அருங்காட்சியகத்தில் செப்பேடுகள் வைக்கப்பட்டிருந்தாலும் இந்தியாவில் ஆங்கிலேயே ஆட்சியின்போதே இவை முழுதாக படிக்கப்பட்டுவிட்டன" எனக் கூறுகிறார், வரலாற்றாய்வாளரான குடவாயில் பாலசுப்ரமணியம்.

Narendramodi, India, netherland, Chozha

பட மூலாதாரம், X/NarendraModi

படக்குறிப்பு, பிரதமர் நரேந்திர மோதியிடம் நெதர்லாந்து ஒப்படைத்த செப்பேடுகள்.

செப்பேடுகளில் என்ன உள்ளன?

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

இந்தச் செப்பேடுகள் இரண்டு காலகட்டங்களில் எழுதப்பட்டுள்ளன. 21 செப்பேடுகளைக் கொண்ட முதல் தொகுதி ராஜேந்திர சோழனால் அளிக்கப்பட்டுள்ளது.

மூன்று செப்பேடுகளைக் கொண்ட இரண்டாவது தொகுதி, ராஜேந்திர சோழனின் பேரனான முதலாம் குலோத்துங்க சோழனால் வழங்கப்பட்டுள்ளது. ராஜேந்திர சோழன் வழங்கிய செப்பேடுகள் ஒரு மிகப் பெரிய வளையத்தால் இணைக்கப்பட்டுள்ளன.

வளையத்தின் முகப்பு ராஜேந்திர சோழனின் முத்திரையால் இணைக்கப்பட்டுள்ளன. இந்த 21 செப்பேடுகளில் ஐந்து சமஸ்கிருதத்திலும் 16 செப்பேடுகள் தமிழ் மொழியிலும் எழுதப்பட்டுள்ளன.

"தானமாக கொடுத்தவை தமிழ் மொழியிலும் மன்னரின் புகழ், வரலாறு பற்றிக் கூறுவது சமஸ்கிருதத்திலும் எழுதப்பட்டுள்ளது. சோழ நாடு தவிர்த்து மற்றவர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டிருக்கலாம்" என்கிறார், குடவாயில் பாலசுப்ரமணியம்.

செப்பேடுகளில் உள்ள விவரங்கள் 'தென்னிந்திய கல்வெட்டு சாசனங்கள்' என்ற புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன என அவர் குறிப்பிட்டார்.

சமஸ்கிருதத்தில் உள்ள செப்பேடுகள் சோழ மன்னர்களின் வம்சாவளியை குறிக்கிறது. தமிழ் மொழியில் எழுதப்பட்டுள்ள செப்பேடுகள் ராஜராஜ சோழன் ஆட்சியின் சாதனைகளைக் கூறுகிறது என்கிறார் அவர்.

நாகப்பட்டினத்தில் அமைந்திருந்த 'சூடாமணி விகாரம்' என்ற பௌத்த மடாலயத்துக்கு ஆனைமங்கலம் என்ற கிராமத்தை மானியமாக வழங்கியதை ஆவணப்படுத்தும் வகையில் (கி.பி. 985 முதல் 1012) செப்பேடுகள் வெளியிடப்பட்டுள்ளதாக, இந்திய தொல்லியல் கழகம் தெரிவித்துள்ளது.

சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்துக்கு சென்ற பின்னணி - அதில் என்ன எழுதப்பட்டுள்ளன?

பௌத்த மதத்துக்கு உதவிய சோழர்கள்

ராஜராஜ சோழன் 21வது ஆட்சிக் காலத்தில், ஸ்ரீவிஜயநாட்டு மன்னனான மாற விஜயதுங்க வர்மன் தன் தந்தை சூடாமணியின் பெயரால் நாகப்பட்டினத்தில் கட்டிய சூடாமணி விகாரத்துக்கு ஆனைமங்கலத்தைச் சுற்றியுள்ள கிராமங்களை தானமாக கொடுத்துள்ளார்.

இந்த தானத்தை செப்பேடுகள் மூலமாக ராஜேந்திர சோழன் தாமிரசாசனம் செய்துள்ளதாகக் கூறுகிறார் வரலாற்றாய்வாளர் குடவாயில் பாலசுப்ரமணியன்.

முதலாம் குலோத்துங்க சோழன் வழங்கிய செப்பேடுகளில் பௌத்த விகாரத்துக்கு அளிக்கப்பட்ட தானத்தை தனது ஆட்சிக் காலத்தில் உறுதி செய்து தானத்தை விரிவாக்கி அளித்ததாகக் கூறுகின்றன.

"பெரிய ஆனைமங்கலம் செப்பேடு, சிறிய ஆனைமங்கலம் செப்பேடு என இரண்டு தொகுதிகள் வருகின்றன. முதலாம் குலோத்துங்கன் காலத்து செப்பேடாக சிறிய ஆனைமங்கலம் செப்பேடு உள்ளது" என்கிறார், குடவாயில் பாலசுப்ரமணியன்.

"சைவ மதத்துக்கு மட்டுமல்லாமல் பௌத்த மதத்துக்கும் அவர்கள் உதவி செய்துள்ளனர் என்பது முக்கியமானது. பௌத்த விகாரத்துக்கு ஆனைமங்கலம் என்ற ஊரையே தானமாக கொடுத்துள்ளனர்" என்கிறார் அவர்.

பிபிசி தமிழிடம் தொடர்ந்து பேசிய அவர், "சோழர் காலத்தில் ஊர்கள் எப்படி இருந்தன, அதிகாரிகள் எவ்வாறு நிர்வாகம் செய்தனர் என்பதை இந்தச் செப்பேடுகள் மூலம் அறியலாம்" எனக் கூறுகிறார்.

நீலகண்ட சாஸ்திரியின் 'சோழர்கள்' நூல், சதாசிவ பண்டராத்தார் எழுதிய 'பிற்கால சோழர் சரித்திரம்' புத்தகத்திலும் செப்பேடுகள் தொடர்பாக எழுதப்பட்டுள்ளதாகவும் குடவாயில் பாலசுப்ரமணியன் தெரிவித்தார்.

CopperPlates, Chola, Anaimanglam

பட மூலாதாரம், Getty Images

இந்தியாவில் இருந்து சென்ற பின்னணி

நெதர்லாந்துக்கு ஃபிளாரன்சியஸ் கேம்பர் மூலமாகக் கொண்டு செல்லப்பட்ட செப்பேட்டுத் தொகுதிகள் குறித்த மேலதிக தகவல்களை பிபிசி தமிழிடம் விவரித்தார், 'இந்தியா பிரைட்' அமைப்பின் இணை நிறுவனர் விஜயகுமார்.

டச்சு ஆட்சிக்காலத்தில் கேம்பர் ஊழியம் செய்து வந்துள்ளதாகக் கூறும் விஜயகுமார், "அவர் மூலமாக செப்பேடுகள் நெதர்லாந்து சென்றன" என்கிறார்.

சோழர் கால செப்பேடுகளை கேம்பரின் வம்சாவளியினர் பாதுகாத்து வந்துள்ளனர். கேம்பரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஹமேக்கர் குடும்பத்தினரிடம் திருமண உறவு வைத்துக் கொள்ளவே, இந்தச் செப்பேடுகள் ஹமேக்கர் குடும்பத்தினர் வசம் வந்துள்ளது.

1862 ஆம் ஆண்டில் லெய்டன் அருங்காட்சியகத்துக்கு பேராசிரியர் எச்.ஏ.ஹமேக்கர் குடும்பத்தினர் சோழர்கால செப்பேடுகளை வழங்கியதாகக் கூறுகிறார் விஜயகுமார்.

இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் நெதர்லாந்தில் உள்ள சோழர்கால செப்பேடுகளை இந்தியாவுக்குக் கொண்டு வரும் முயற்சியில் பணியாற்றியவர்.

"நெதர்லாந்துக்கு செப்பேடுகளை கேம்பர் கொண்டு வந்ததாக மட்டும் தகவல் உள்ளது. இதனை பொதுமக்களின் பார்வைக்கு அருங்காட்சியக பொறுப்பாளர்கள் வைக்கவில்லை" என்கிறார் அவர்.

"2018 ஆம் ஆண்டில் செப்பேடுகளை பார்க்க விரும்புவதாக அருங்காட்சியகத்துக்குத் தகவல் அனுப்பினேன். சுமார் 30 கிலோ எடை கொண்ட செப்பேடுகள் என்பதால் ஒரு டிராலியில் வைத்து தள்ளிக் கொண்டு வந்து காட்டினார்கள்" என விஜயகுமார் கூறுகிறார்.

India, Netherland, Chola, Tamil

பட மூலாதாரம், Handout

படக்குறிப்பு, இந்தியா பிரைட்' அமைப்பின் இணை நிறுவனர் விஜயகுமார்.

நெதர்லாந்தின் காலனி ஆதிக்கத்துக்கு உட்பட்டிருந்த நாடுகளில் இருந்து சேகரிக்கப்பட்ட அரும்பொருட்கள் குறித்து முடிவெடுப்பதற்காக ஆலோசனைக் குழு ஒன்று அமைக்கப்பட்டது.

இக்குழு அளித்த பரிந்துரையின்படி, 'நெதர்லாந்தில் உள்ள அருங்காட்சியகங்களில் குடியேற்ற நாடுகளின் கலைப் பொருட்கள் இடம்பெற்றிருந்தால் அவை உரிமையாளரின் சம்மதம் இல்லாமலோ, சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்டிருந்தால் தொடர்புடைய நாடு அதைக் கோரினால் திரும்பத் தர வேண்டும்' எனக் கூறியிருந்தது.

"குடியேற்ற நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட தவறுகளை சரிசெய்வது என்ற முடிவில் அடிப்படையில் இப்படியொரு முடிவை நெதர்லாந்து அரசு எடுத்தது" என்கிறார், விஜயகுமார்.

"இந்தோனீசியாவில் இருந்து எடுத்து வரப்பட்ட சிலைகளை நெதர்லாந்து திருப்பிக் கொடுத்தது. அதன் அடிப்படையில் சோழர்கால செப்பேடுகளை திரும்பப் பெறும் முயற்சிகள் தொடங்கின" என்கிறார் அவர்.

செப்பேடுகளை இந்தியாவுக்குக் கொண்டு வருவதற்கு பல்வேறு முயற்சிகளை இந்திய தொல்லியல் கழகம் மேற்கொண்டு வந்ததாக பிபிசி தமிழிடம் அதன் கல்வெட்டியல் பிரிவு இயக்குநர் முனிரத்தினம் ரெட்டி தெரிவித்தார்.

கடந்த சனிக்கிழமையன்று பிரதமர் நரேந்திர மோதியிடம் சோழர் கால செப்பேடுகளை நெதர்லாந்து அரசு ஒப்படைத்தது.

செப்பேடுகள் எங்கு வைக்கப்படும்?

இந்தச் செப்பேடுகள் இந்திய தொல்லியல் கழக அலுவலகத்தில் பாதுகாக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகக் கூறுகிறார், இந்தியா பிரைட் அமைப்பின் விஜயகுமார்.

"ஆனால், கங்கை கொண்ட சோழபுரத்தில் இவை வைக்கப்பட்டால் அதிகம் பேர் சென்று பார்ப்பார்கள்'' என அவர் தெரிவித்தார்.

பிபிசி தமிழிடம் இதுதொடர்பாக விளக்கம் அளித்த இந்திய தொல்லியல் கழகத்தின் கல்வெட்டியல் பிரிவு இயக்குநர் முனிரத்தினம் ரெட்டி, "முதலில் செப்பேடுகள் வரவேண்டும். அதன்பிறகு, அதனை எங்கு வைக்கலாம் என்பதை மத்திய அரசு முடிவு செய்யும்" என்கிறார்.

"இதுவரை வெளிநாட்டில் இருந்து வந்த அரும்பொருட்களை அந்தந்த மாநிலங்களுக்கே கொடுத்துள்ளோம்" எனவும் அவர் தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு