10 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கான உயர் கல்வி வாய்ப்புகள் என்ன?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், மோகன்
- பதவி, பிபிசி தமிழ்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்
தமிழ்நாட்டில் 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று (மே 20) வெளியிடப்பட்டுள்ளன. கடந்த மார்ச் 11-ஆம் தேதி தொடங்கிய தேர்வுகள் ஏப்ரல் 6-ஆம் தேதி வரை நடைபெற்றன.
தமிழ்நாடு முழுவதும் 9 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் தேர்வு எழுத பதிவு செய்திருந்த நிலையில் 4,000-க்கும் மேற்பட்ட தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளுக்குப் பிறகு 12-ஆம் வகுப்பில் எந்தப் பாடப்பிரிவைத் தேர்ந்தெடுப்பது என்பது மாணவர்களின் தேடலாக இருக்கும்.
அதே வேளையில் ஒரு தரப்பினர் பட்டயப்படிப்பு போன்ற தொழில் சார்ந்த படிப்புகளில் சேர்வதிலும் ஆர்வம் காட்டுவர்.
10-ஆம் வகுப்பு தேர்ச்சியை மட்டும் தகுதியாக வைத்து எந்தெந்த படிப்புகளில், எந்தெந்த அரசு தேர்வுகளை எழுதலாம் என்பதை இந்தக் கட்டுரை விவரிக்கிறது.

இது தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய கல்வியாளர் ராஜராஜன், 10-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் முடிந்தவரையில் கட்டாயம் 12-ஆம் வகுப்பு முடித்து பட்டப்படிப்பை நோக்கிச் செல்ல வேண்டும் என தான் கருதுவதாக தெரிவிக்கிறார்.
கடினமான சூழல்களில் அல்லது மேல்நிலைப்பள்ளியில் இடைநிற்றலால் பாதிக்கப்படும் மாணவர்களுக்காகவே தொழில்சார்ந்த படிப்புகள் கொண்டு வரப்பட்டதாக அவர் தெரிவிக்கிறார்.
இது தொடர்பாக மேலும் கூறிய ராஜராஜன், "பத்தாம் வகுப்பில் குறைவான மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைந்தவர்கள் அல்லது பொதுத் தேர்வில் பெறாமல் மறு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்கள், மேல்நிலைக் கல்வியை தொடர முடியாதவர்கள் பட்டயப்படிப்பு போன்ற தொழிற்கல்வியை நோக்கி நகர்கின்றனர். 10-ஆம் வகுப்புடன் பள்ளிப்படிப்பை நிறுத்தியவர்கள் தேசிய திறந்தவெளி பள்ளி நிறுவனத்தில் தங்களுக்கு விருப்பமான பாடங்களைத் தேர்வு செய்து படிக்கலாம்." எனத் தெரிவித்தார்.

பட மூலாதாரம், Getty Images
அரசு தொழிற்கல்வி நிலையங்கள் (ஐ.டி.ஐ)
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் அரசு தொழிற்கல்வி நிலையங்கள் இருப்பதாகக் கூறும் ராஜராஜன் அவை மூலம் பல தரப்பட்ட தொழில்நுட்ப மற்றும் தொழில்சார் பட்டயப் படிப்புகள் வழங்கப்படுவதாக தெரிவிக்கிறார்.
இது தொடர்பாக மேலும் விவரித்த அவர், "இங்கு 6 மாதம் முதல் 2 ஆண்டுகள் வரையிலான பாடத் திட்டங்கள் வழங்கப்படுகின்றன. 10-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றால் இங்கு சேரலாம். 10-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெறுவது அடிப்படைத் தகுதி, பாடத்தைப் பொருத்து தேர்ச்சி விகிதம் மாறலாம். வெவ்வேறு துறைகளில் இளநிலை பணிகளுக்கான பயிற்சி இங்கு கிடைக்கும். கணினி தொடங்கி ஹார்டுவேர், மெக்கானிக்கல், ஆட்டோமொபைல் துறை வரை படிப்பு வழங்கப்படுகிறது. கல்வி கட்டணமும் குறைவாக இருக்கும். அதோடு அரசு நிதியுதவி மானியமும் கிடைக்கும்." என்றார்.
எந்தெந்த பணிகளில் சேரலாம்?
- தச்சு வேலை
- கணினி இயக்குபவர்
- புரோக்ராம் உதவியாளர்
- சிவில் வரைவாளர் உதவியாளர்
- மின்னணு இயந்திர வல்லுநர்
- மின்சாரப் பணியாளர்
- பொருத்துநர் (ஃபிட்டர்)
- பிளம்பர்
வேறு எந்தெந்த நிறுவனங்கள் உள்ளன?

பட மூலாதாரம், Getty Images
ஐடிஐ , பாலிடெக்னிக் படிப்புகள் போக சென்னை கிண்டியில் உள்ள மத்திய அரசின் மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பயிற்சி நிறுவனத்தில் வெவ்வேறு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் இணைய வழியிலும் நேரடியாகவும் விமானத் துறை தொடங்கி சுற்றுலாத் துறை வரை நிறைய பயிற்சிகளை வழங்குகின்றன.
இங்கு திரைத்துறை, அனிமேஷன் தொடங்கி சுகாதாரம், உற்பத்தி துறை வரை பல்வேறு பயிற்சி மற்றும் சான்றிதழ் படிப்புகள் திறன் மேம்பாட்டு கழகத்தால் வழங்கப்படுகின்றன. இந்தப் பயிற்சிகள் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களிலும் நடத்தப்படுகின்றன.
இவை போக டிரோன் இயக்குவது மற்றும் பராமரிப்பது தொடர்பான பயிற்சிகளும் மத்திய அரசு மற்றும் மாநில அரசு நிறுவனங்களால் வழங்கப்படுகின்றன.
இவை போக மத்திய அரசின் தேசிய தொழில்சார் கல்வி மற்றும் பயிற்சி கவுன்சிலும் (National Council of Vocational Education and Training) பல்வேறு பயிற்சிகளையும் சான்றிதழ் படிப்புகளையும் வழங்குகிறது.
எந்தெந்த அரசுத் தேர்வுகள் எழுதலாம்?
மத்திய மற்றும் மாநில அரசின் பல்வேறு இளநிலை பணிகளுக்கும் 10-ஆம் வகுப்பு மட்டுமே அடிப்படை தகுதியாக உள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 4 பணிகளுக்கு 10-ஆம் வகுப்பு தேர்ச்சி போதுமானது.
மாநில காவல்துறையில் கான்ஸ்டபிள் நுழைவுத் தேர்வு எழுவதற்கும் பத்தாம் வகுப்பு முடித்திருந்தால் போதுமானது.
மத்திய தேர்வாளர் ஆணையத்தில் (எஸ்எஸ்சி) மல்டி டாஸ்கிங் போன்ற இளநிலை பணிகளுக்கு 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெறுவதே தகுதி. எழுத்தர் மற்றும் தொழில்நுட்பம் அல்லாத பணிகள் இதில் அடங்கும்.
சி.ஆர்.பி.எஃப், சி.ஐ.எஸ்.எஃப், பி.எஸ்.எஃப் போன்ற எஸ்எஸ்சி நடத்தும் கான்ஸ்டபிள் நிலை தேர்வுகளுக்கும் 10-ஆம் வகுப்பு தான் அடிப்படை தகுதியாக உள்ளது.
ரயில்வே பணியாளர் தேர்வு வாரியத்தில் (ஆர்ஆர்பி) க்ரூப் டி பணிகளுக்கு 10-ஆம் வகுப்பு தேர்ச்சியே போதுமானது. வெல்டர், ஃபிட்டர், கேபின் மேன், போர்ட்டர், டர்னர் போன்ற இதில் அடங்கும்.
இந்திய ராணுவத்தின் அக்னி வீர் திட்டத்தில் டிரேட்ஸ் மேன், ஜெனரல் டூட்டி என்கிற இரண்டு பிரிவுகளுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி இருந்தாலே விண்ணப்பிக்க முடியும். 17.5 வயது முதல் 21 வயது வரை இருக்க வேண்டும்.

பட மூலாதாரம், Getty Images
இந்திய கடற்படை, கடலோரக் காவல் படை மற்றும் தபால் துறையில் பல தொடக்க நிலை பணிகளிக்கும் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி இருந்தாலே போதுமானது.
கடற்படை போலவே தனியார் கப்பல்துறையிலும் பல இளநிலைப் பணிகளுக்கும் 10-ஆம் வகுப்பு தான் அடிப்படை தகுதியாக உள்ளது.
தனியார் மற்றும் வணிக கப்பல் பணிகளில் சேர்வதற்கு ஜிபி ரேட்டிங் என்கிற டெக் மற்றும் என்ஜின் துறைகளில் சேர்வதற்கான 6 மாத படிப்பு உள்ளது.
ஜிபி ரேட்டிங் (உதவிக் குழு): இதில் அதிகாரி நிலையில் எந்தப் பணியும் கிடையாது. ஆனால் கப்பல் மற்றும் குழுவினரை பராமரிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கலாம். இதற்கு 10-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது. வயது 17 முதல் 25-ற்குள் இருக்க வேண்டும். 10வது அல்லது 12வது வகுப்பு முடித்த பிறகு ஆறு மாத ஜிபி ரேட்டிங் படிப்பு ஒன்றை முடித்தால் போதும்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு




























