"கண்ணான கண்ணே" - சித்ஸ்ரீராம் குரலில் பிரபலமடைந்த 10 பாடல்களின் பட்டியல்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், மீனாட்சிசுந்தரம்
- பதவி, பிபிசி தமிழுக்காக
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
சித்ஸ்ரீராம், தனது தனித்துவமான குரலால் தமிழ்சினிமாவில் தனி முத்திரை பதித்து ஏராளமான ரசிகர்களை பெற்று இருக்கிறார். சினிமா மட்டுமல்ல, கர்நாடக சங்கீதத்திலும் திறமைசாலி. பலஆண்டுகளாக மார்கழி சீசனில் பாடி வருகிறார். சுயாதீன ஆல்பங்களிலும் கலக்கி வருகிறார்.
தஞ்சையை பூர்வீகமாகக்கொண்ட சித்ஸ்ரீராம் சென்னையில் பிறந்தாலும் அமெரிக்காவில் வளர்ந்தவர். கலிஃபோர்னியாவில் கல்வி கற்றவர். இவருடைய அம்மா லதா ஸ்ரீராம் கர்நாடக இசைப் பாடகி. சகோதரி பல்லவி ஸ்ரீராம் பரதநாட்டியக் கலைஞர். தாயின் வழியில் கர்நாடக சங்கீதத்தில் நாட்டம் கொண்டார் சித் ஸ்ரீராம்.
அமெரிக்காவில் கர்நாடக சங்கீதம் பயின்று தேர்ச்சி பெற்றார். பாஸ்டனில் உள்ள பெர்க்லி இசைக் கல்லூரியில் பட்டம் பெற்றார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உட்பட பல்வேறு மொழிகளில் பாடியவருக்கு இன்று பிறந்தநாள்.
தேசியவிருது கிடைத்த பாடல்
சித்ஸ்ரீராம் பாடல்கள், அவரின் குரல் வளம், தனித்திறமை குறித்து, கண்ணாண கண்ணே என்ற வெற்றி பாடலை கொடுத்த இசையமைப்பாளர் இமானிடம் பிபிசி தமிழ் சார்பில் பேசினோம்.
'' கண்ணான கண்ணே பாடலுக்கு முன்பே டிக்டிக்டிக் படத்தில் இடம் பெற்ற குறும்பா பாடலை, அவர் எனக்காக பாடியிருக்கிறார். அது, அப்பா, மகன் பாசத்தை வெளிப்படுத்தும் பாடலாக அமைந்து, வெற்றி பெற்றது.
அடுத்து விஸ்வாசம் படத்துக்காக அப்பா, மகள் பாசத்தை கொண்ட இந்த பாடலை உருவாக்கியபோது, நான், இயக்குனர் சிவா உட்பட பலரும் சித்ஸ்ரீராமை பாட வைக்கலாம் என ஒரு மனதாக முடிவு செய்தோம். அந்த சமயத்தில் அவர் காதல் பாடல்களை நிறைய பாடிக்கொண்டு இருந்தார். அதை உடைத்து, புதிதாக பண்ணலாம் என்று நினைத்தபோது இந்த பாடலை பாட வைத்தேன். அது புதிதாக இருந்தது. பாடலில் சிச்சுவேஷன், வரிகள், ட்யூன், சித் குரல் ஒன்று சேர, அந்த பாடலை மக்கள் கொண்டாடினார்கள். எனக்கும் அந்த பாடலுக்காக தேசியவிருது கிடைத்தது." என்றார்.
பல அப்பாக்கள் அந்த பாடலை தங்கள் மகள்களுக்கு சமர்பணம் செய்தார்கள். நானும் அந்த தேசியவிருதை என் மகள்களுக்கு சமர்ப்பணம் செய்தேன். பல மகள்களின் அப்பா பாச உணர்வாக, பலரின் காலர்ட்யூனாக அந்த பாடல் அமைந்தது. கண்ணான கண்ணே பாடலை இரண்டு சரணமாக எடுத்தோம், அதில் ஒரு சரணத்தை வெளியிடாமல் அப்படியே வைத்து இருக்கிறோம்.'' என்கிறார்.
சித்ஸ்ரீராமின் தமிழ் ஆசிரியை யார் தெரியுமா?

பட மூலாதாரம், Getty Images
சித்ஸ்ரீராம் பாடிய பல வெற்றி பாடல்களை எழுதியவர் கவிஞர் தாமரை. பிபிசி தமிழ் சார்பில் அவரிடம் பேசியபோது, 'தமிழ்சினிமாவில் சில வெற்றி கூட்டணிகள் உண்டு. அந்தவகையில் நான், கவுதம்மேனன், சித்ஸ்ரீராம் வெற்றி கூட்டணி. அச்சம் என்பது மடமையடா படத்தில் இடம் பெற்ற தள்ளிப்போகாதே பாடல் அந்த கூட்டணியில் உருவானது.
ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவான அந்த பாடலை பாடியபோது அமெரிக்காவில் வளர்ந்த சித்ஸ்ரீராமுக்கு தமிழ் உச்சரிப்பில் சில வித்தியாசங்கள் இருந்தன. நான் பொறுமையாக இருந்து அவருக்கு தமிழ் சொல்லிக்கொடுப்பேன். அவரும் கவனமாக கேட்டு, மிக அழகாக பாடினார். அந்த பாடலின் வெற்றி பற்றி சொல்லி தெரிய வேண்டியதில்லை.
அடுத்து கவுதம்மேனன், இசையமைப்பாளர் தர்புகா சிவா கூட்டணியில் உருவான எனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் இடம் பெற்ற மறுவார்த்தை பேசாதே பாடலையும் நான் எழுத, சித் பாடினார். அதில் அவரின் குரல் வளம் பற்றி பாராட்டுகள் குவிந்தன. உச்சமாக, இமான் இசையில், நான் எழுத அவர் பாடிய கண்ணான கண்ணே மாபெரும் வெற்றி பெற்றது. அவருக்கு ஆரம்பத்தில் தமிழ் சொல்லிக்கொடுத்ததில் எனக்கு பங்கு உண்டு. அவரின் தமிழ் ஆசிரியை என்று கூட பெருமையாக சொல்லிக்கொள்வேன்" என்று சிரிக்கிறார்.
இன்றைக்கு பிறந்தநாளில் அந்த பாடல் ஒலிபரப்பாகிறது
டிக்டிக்டிக் படத்தில் இடம் பெற்ற குறும்பா பாடல் குறித்தும், சித்ஸ்ரீராம் வாய்ஸ் குறித்தும் அந்த படத்தின் இயக்குனர் சக்திசவுந்திரராஜன் பிபிசி தமிழிடம் பேசினார்.
''அப்பா, மகன் பாசத்தை விவரிக்கும் பாடலாக குறும்பா அமைந்தது. அந்த படத்தில் ஜெயம்ரவி மகனாக, அவர் நிஜ மகன் ஆரவ் நடித்தார். தவிர, அந்த சமயத்தில் எனக்கும் மகன் பிறந்தான். பாடலாசிரியர் மதன்கார்க்கிக்கும் மகன் பிறந்தான். இப்படி அப்பாக்கள் சேர்ந்து தனி பீலிங்குடன் அந்த பாடலை உருவாக்க, அதற்கு சித்ஸ்ரீராம் உயிர் கொடுத்தார்.
அம்மா, மகன், அம்மா,மகள் பாசத்தை பற்றி ஏகப்பட்ட பாடல்கள் இருக்கின்றன. அப்பா, மகன் பாசத்தை பற்றிய இந்த பாடலை எல்லாரும் கொண்டாடினார்கள். இன்றும் பல பிறந்தநாள் விழாக்களில் கேக் வெட்டும்போது இந்த பாடலை ஒலிபரப்புகிறார்கள். நானே அதை நேரில் பார்த்து சிலிர்த்து இருக்கிறேன். பல பர்த்டே ரிலீசில் இந்த பாடல் இன்னும் ஒலிக்கிறது. அதற்கு சித்ஸ்ரீராம் தனித்திறமை குரலும் முக்கியமான காரணம்." என்கிறார்.
நான் ரசிகை ஆகிவிட்டேன்

பட மூலாதாரம், SidSriram
கடல் படத்தில் இடம் பெற்ற சித்ஸ்ரீராமின் அடியே பாடலை யார்தான் மறக்க முடியும். அதுதான் அவரின் முதல் பாடல். அந்த பாடலுக்கு நடனம் அமைந்த தேசியவிருது பெற்ற பிருந்தா பேசுகையில் ''மணிரத்னம் இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவான அந்த பாடலுக்கு நடனம் அமைத்தது என் பாக்கியம். ராமேஸ்வரத்தில் அந்த பாடலை படமாக்கினோம். அதை முதலில் கேட்டவுடனே, இந்த வாய்ஸ் புதிதாக இருக்கிறதே என்று ஆச்சரியப்பட்டேன். அவர் அமெரிக்காவில் வளர்ந்தால் ஒருவித புது ஸ்டைலில் ஜாஸ் கலந்து பாடியிருப்பார். அதற்கு ஏற்ப மாறுபட்ட முறையில் நடனமும் அமைத்தோம். அன்றுமுதல் அவர் ரசிகை ஆகிவிட்டேன். சித்ஸ்ரீராமை நான் பார்த்தது இல்லை. எப்போதாவது பார்த்தால் உங்க முதல் பாடலுக்கு நான்தான் நடனம் அமைத்தேன் என பெருமையாக சொல்வேன் என்கிறார்
மறுவார்த்தை பேசாதே வெற்றிக்கு காரணம்
எனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் சித்ஸ்ரீராம் பாடிய மறுவார்த்தை பேசாதே பாடலை கொடுத்த இசையமைப்பாளர் தர்புகா சிவா பிபிசி தமிழிடம் பேசுகையில் ''அந்த பாடல் ஒருவகை தாலாட்டு ட்யூன். ஆனால், வழக்கமான தாலாட்டு, அதற்கான வரிகள், இசை இல்லாமல் புதுசாக பண்ணலாம் என யோசித்தபோது அந்த ட்யூன் வந்தது. யாரை பாட வைக்கலாம் என யோசித்தபோது சித்ஸ்ரீராம் வந்தார்.
கம்போசர்களுக்கு அவர் ஒரு வரம். அவரின்அனுபவம், கர்நாடக சங்கீத ஆர்வம், காரணமாக, கம்போசர்களின் வேலையை எளிதாக்கிவிடுவார். அவர் சாதாரண பாடகர் மட்டுமல்ல, நல்ல நடிகர், பர்பார்மர், இசை காதலன். அந்த படம் தவிர முதலும் நீ முடிவும் நீ, நான் இப்போது இயக்கும் படத்திலும் அவர் பாடியிருக்கிறார்''' என்கிறார்
சித்ஸ்ரீராம் பாடிய பாடல்களில் பிரபலமான 10 பாடல்கள்

பட மூலாதாரம், Getty Images
1) கண்ணான கண்ணே
அஜித் நடித்த விஸ்வாசம் படத்தில் ஹிட்டான இந்த பாடல் சித்ஸ்ரீராமை பட்டிதொட்டியெல்லாம் கொண்டுபோய் சேர்த்தது. இமான் இசையில் தாமரை வரிகளில் சித்ஸ்ரீராம் பாடிய இந்த பாடல் அப்பா, மகள் பாசத்தை அடிப்படையாகக்கொண்டது. பாடலை கேட்ட அப்பாக்களும், மகள்களும் பாசத்தில் கண் கலங்கினர். விஸ்வாசம் படத்தின் வணிகரீதியிலான வெற்றிக்கும் இந்த பாடல் ஒரு முக்கியமான காரணமாக அமைந்தது. தேசியவிருது பெற்றுக்கொடுத்தது.
2) மறு வார்த்தை பேசாதே
கவுதம்மேனன் இயக்க தனுஷ் நடித்த எனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் இடம் பெற்ற இந்த பாடலை எழுதியவரும் தாமரைதான். குறிப்பாக,
மறுவார்த்தை பேசாதே..மடி மீது நீ தூங்கிடு..
இமை போல நான் காக்க... கனவாய் நீ மாறிடு ..
மயில் தொகை போலே, விரல் உன்னை வருடும்..
மனப்பாடமாய் உரையாடல் நிகழும்..
விழி நீரும் வீணாக இமை தாண்ட கூடாதென ,
துளியாக நான் சேர்த்தேன்..
கடலாக கண்ணாதே..
மறந்தாலும் நான் உன்னை நினைக்காத நாள் இல்லையே..
பிரிந்தாலும் என் அன்பு ஒருபோதும் பொய் இல்லையே ...'என்ற கருத்தாழம் மிக்க வரிகளும், சித்ஸ்ரீராம் குரலும் காதலர்களை இன்னொரு உலகத்திற்கு அழைத்து சென்றது.
3) தள்ளிப்போகாதே
கவுதம்மேனன், தாமரை, சித்ஸ்ரீராம் கூட்டணியில், சிம்பு நடித்த அச்சம் என்பது மடமையடா படத்தில் இடம் பெற்ற பாடல் இது. ஒரு பைக் டிராவல் பின்னணியில் இந்த பாடல் ஒலிக்கும். நாமும் பயணம் செய்யும் உணர்வை, காதலிக்கும் உணர்வை தந்திருப்பார் சித்ஸ்ரீராம்
4) அடியே....
யாருப்பா இந்த பாடகர் என்ற கேள்வியை பலரை கேட்க வைத்த பாடல் இது. அந்தளவுக்கு தனது தனித்திறமையை, சின்ன, சின்ன இசை நுணுக்கத்தை இந்த பாடலில் காண்பித்து இருப்பார் சித்ஸ்ரீராம். மணிரத்னம் இயக்க, ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த கடல் படத்தில் இந்த பாடல் இடம் பெற்றது. 2013ல் வெளியான இந்த பாடல்தான் அவர் பாடிய முதல் தமிழ் பாடல்.
5) என்னோடு நீ இருந்தால்
ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் படத்தில் 'ஐ' படத்தில் இடம்பெற்ற இந்த பாடலை, நம் மனதுக்கு நெருக்கமாக அமையும் வகையில் பாடியிருப்பார் சித்ஸ்ரீராம். அவரின் திறமையை நன்கு உணர்ந்த ஏ.ஆர்.ரகுமான் இசைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காமல், குரலுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து பாடலை ரசித்து தந்து இருப்பார். கபிலன் எழுதியிருந்தார்.

பட மூலாதாரம், MRTMusic/Youtube
6) உன்னை நெனச்சு
இளையராஜா இசையில் பாட வேண்டும் என்பது பலரின் கனவாக இருக்கும். திறமைசாலிகளை அவரும் உரிய நேரத்தில் பயன்படுத்திக்கொள்வார். அப்படி உருவான பாடல் இது. மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி நடித்த சைக்கோ படத்தில் இந்த பாடல் வரும். சற்றே இடைவெளிக்குபின் இளையராஜா கொடுத்த ஹிட் பாடல் இது என்று கூட சொல்லலாம். உன்னை நினைச்சு நினைச்சு உருகி போனேன் மெழுகா என கபிலன் எழுதியிருப்பார். பாடலை கேட்கும் நாமும்தான்.
7) என்னை ஏன் பிரிந்தாய்
முன்னணி இசையமைப்பாளர் மட்டுமல்ல, வளர்ந்து வருபவர்கள் சித்ஸ்ரீராமை சரியாக பயன்படுத்தினார்கள். அந்தவகையில் ரதன் இசையில் விக்ரம் மகன் துருவ் அறிமுகமான ஆதித்யவர்மா படத்தில் இடம் பெற்ற பாடல் இது
8) யார் அழைப்பது
மாறா படத்தில் ஜிப்ரான் இசையில் பாடிய பாடல் இது. பயணம், காதல் என மனதோடு நெருக்கமாக இருக்கும் இந்த பாடலின் ஜீவனும், இசையும், குரலும்.
9) குறும்பா
இமான் இசையில் சித்ஸ்ரீராம் கொடுத்த இன்னொரு ஹிட். அப்பா, மகன் பாசத்தை இந்த பாடலின் மூலம் கொண்டாடியவர்கள் பலர். இந்த படம் வெளியான நேரத்தில் இந்த பாடலை கேட்டு அழுத அப்பாக்கள் பலர். அந்த அளவுக்கு உணர்ச்சியுடன் பாடியிருப்பார் சித்ஸ்ரீராம்.
10) என்னடி மாயாவி நீ
வடசென்னை படத்தில் சந்தோஷ்நாராயணன் இசையி்ல் வந்த பாடல். சித்ஸ்ரீராம் குரலில் கேட்கும்போது அது மனதிற்குள் பல மாயங்களை செய்வது நிச்சயம். விவேக் பாடலை எழுதியிருப்பார். அமீர், ஆண்ட்ரியா போர்ஷனுக்கு, அந்த காதலுக்கு வலு சேர்த்தது அந்த குரல்
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

























