"சாப்பிட பிரெட், வெந்நீர் தான் உள்ளது" - வறுமையால் குழந்தைகளை விற்கும் ஆப்கன் மக்கள்

அப்துல் ரஷீத் அஸிமி குடும்பத்தினருக்கு உணவளிக்க, தன் ஒரு மகளை விற்கத் தயாராக இருப்பதாக கூறுகிறார்.

பட மூலாதாரம், Imogen Anderson/BBC

படக்குறிப்பு, அப்துல் ரஷீத் அஸிமி குடும்பத்தினருக்கு உணவளிக்க, தன் ஒரு மகளை விற்கத் தயாராக இருப்பதாக கூறுகிறார்.
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

எச்சரிக்கை: இக்கட்டுரையில் உள்ள தகவல்கள் சங்கடத்தை ஏற்படுத்தலாம்.

விடியல் பிறக்கும் நேரத்தில், ஆப்கானிஸ்தானின் கோர் மாகாண தலைநகரான சாக்சரானில் உள்ள தூசிமூட்டமான ஒரு திறந்த வெளியில் நூற்றுக்கணக்கான ஆண்கள் கூடுகின்றனர்.

யாராவது ஏதாவது வேலை வழங்குவார்கள் என்ற நம்பிக்கையில் அவர்கள் சாலையோரத்தில் வரிசையாக நிற்கின்றனர். அந்த நாளில் அவர்களின் குடும்பத்தினர் உணவு சாப்பிட முடியுமா என்பதை இதுவே தீர்மானிக்கிறது.

ஆனால், அந்த நம்பிக்கை வெல்வதற்கான வாய்ப்பு குறைவே.

45 வயதான ஜுமா கானுக்கு கடந்த ஆறு வாரங்களில் வெறும் மூன்று நாட்கள் மட்டுமே வேலை கிடைத்தது. இதன்மூலம், அவருக்கு நாளொன்றுக்கு 150 முதல் 200 ஆஃப்கானி வரைதான் (2.35-3.13 டாலர்கள்) ஊதியம் கிடைத்தது.

"மூன்று நாட்கள் தொடர்ந்து என் குழந்தைகள் பசியுடன் உறங்கச் செல்கின்றனர். என்னுடைய மனைவி அழுகிறாள், அதனால் என் குழந்தைகளும் அழுகின்றனர். மாவு வாங்குவதற்காக அண்டைவீட்டாரிடம் கெஞ்சி சிறிது பணம் வாங்கினேன்," என்கிறார் அவர்.

"என் குழந்தைகள் பசியால் இறந்துவிடுவார்களோ என்று நான் பயத்திலேயே வாழ்கிறேன்."

இவருடைய கதை எந்தவிதத்திலும் தனித்த ஒன்று அல்ல.

எங்கும் நிறைந்திருக்கும் வறுமை

ஐநா கூற்றின்படி தற்போது ஆப்கானிஸ்தானில் வியக்கத்தக்க வகையில் நான்கில் மூன்று பேரால் தங்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய முடியவில்லை. வேலைவாய்ப்பின்மை எங்கும் காணப்படுகிறது; சுகாதாரத் துறை திணறி வருகிறது மற்றும் ஒருகாலத்தில் லட்சக்கணக்கான மக்களுக்கு அடிப்படை தேவைகளை வழங்கிய உதவிகள் சிறுபகுதியாக குறைந்துவிட்டன.

நாடு தற்போது முன்னெப்போதும் இல்லாத அளவிலான பஞ்சத்தை சந்தித்து வருகிறது; ஆப்கானிஸ்தானின் மக்கள்தொகையில் பத்தில் ஒரு பங்குக்கும் அதிகமானோர், அதாவது 47 லட்சம் பேர் பஞ்சத்தின் விளிம்பில் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

மோசமாக பாதிக்கப்பட்ட மாகாணங்களுள் கோர் மாகாணமும் ஒன்று.

அங்கு ஆண்கள் விரக்தியடைந்துள்ளனர்.

"என் குழந்தைகள் இரண்டு நாட்களாக சாப்பிடவில்லை என எனக்கு அழைப்பு வந்தது," என தழுதழுத்த குரலில் கூறுகிறார் ரபானி.

"நான் என்னையே கொன்றுவிட வேண்டும் என்பதுபோன்று உணர்ந்தேன். ஆனால் அது எப்படி என் குடும்பத்துக்கு உதவும் என தோன்றியது. அதனால் நான் இங்கு வேலை தேடி வந்தேன்" என்கிறார்.

45 வயதான ஜுமா கான் (நடுவில் இருப்பவர்), கடந்த ஆறு வாரங்களில் வெறும் மூன்று நாட்கள் மட்டுமே வேலை பெற்றுள்ளார்.

பட மூலாதாரம், Imogen Anderson/BBC

படக்குறிப்பு, 45 வயதான ஜுமா கான் (நடுவில் இருப்பவர்), கடந்த ஆறு வாரங்களில் வெறும் மூன்று நாட்கள் மட்டுமே வேலை பெற்றுள்ளார்.
வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

குவாஜா அகமது சில வார்த்தைகளைச் சொல்வதற்குள்ளாகவே விம்மி அழத் தொடங்குகிறார்.

"நாங்கள் பசியுடன் இருக்கிறோம். என்னுடைய மூத்த குழந்தை இறந்துவிட்டது, என் குடும்பத்துக்கு உணவளிக்க நான் வேலை செய்ய வேண்டும். ஆனால் எனக்கு வயதாகிவிட்டது, யாரும் எனக்கு வேலையளிக்க விரும்பவில்லை" என்கிறார் அவர்.

சதுக்கத்துக்கு அருகிலுள்ள ஒரு உள்ளூர் பேக்கரி திறக்கும்போது, ​​அதன் உரிமையாளர் பழைய ரொட்டியை அங்கிருந்த மக்களுக்கு வழங்குகிறார். சில நொடிகளிலேயே, ரொட்டிகள் பிய்க்கப்பட்டு, அங்கிருந்த ஆண்கள் அந்த விலைமதிப்பற்ற ரொட்டித்துண்டுகளை இறுகப் பற்றிக்கொண்டிருந்தனர்.

திடீரென மற்றொரு தள்ளுமுள்ளு ஏற்படுகிறது. செங்கற்களை சுமந்து செல்ல ஒரு தொழிலாளியை அமர்த்திக்கொள்வதற்காக, மோட்டார் சைக்கிளில் ஒருவர் அங்கு வருகிறார். பத்துக்கும் மேற்பட்ட ஆண்கள் அவரை நோக்கி முண்டியடித்துக்கொண்டு பாய்கின்றனர்.

நாங்கள் அங்கு இருந்த இரண்டு மணிநேரங்களில், வெறும் மூன்று பேருக்கு மட்டுமே வேலை கிடைத்தது.

சியா கோ (Siah Koh) மலைத்தொடரின் பனி சிகரங்களுக்கு எதிராக, வறண்ட, பழுப்பு நிறக் குன்றுகளில் சிதறிக் கிடக்கும் வெறுமையான வீடுகளுடன் கூடிய அருகிலுள்ள குடியிருப்புப் பகுதிகளில், வேலையின்மையின் பேரழிவுத் தாக்கம் தெளிவாகத் தெரிகிறது.

மகளை விற்கும் தந்தை

அப்துல் ரஷீத் அஸிமி நம்மைத் தன் வீட்டுக்குள் அழைத்துச் சென்று, தன் குழந்தைகளில் இருவரை, ஏழு வயது இரட்டையர்களான ரோக்கியா மற்றும் ரோஹிலாவை வெளியே அழைத்து வருகிறார். தான் ஏன் இத்தகைய தாங்க முடியாத முடிவுகளை எடுக்க நேர்கிறது என்பதை விளக்கத் துடித்துக்கொண்டே, அவர் அக்குழந்தைகளைத் தன் நெஞ்சோடு அணைத்துக்கொள்கிறார்.

"நான் என் மகள்களை விற்க தயாராக இருக்கிறேன்," எனக்கூறி அழுகிறார். "நான் ஏழை, கடனில் இருக்கிறேன், உதவியின்றி இருக்கிறேன்.

"நான் என் வீட்டுக்கு வறண்டுபோன உதட்டுடனும், பசி, தாகம், வேதனை மற்றும் குழப்பத்துடனும் வருகிறேன். என் குழந்தைகள் என்னிடம், 'பாபா (அப்பா), எங்களுக்கு கொஞ்சம் ரொட்டி தாருங்கள்' என கூறுகின்றனர். ஆனால் நான் என்ன தர முடியும்? வேலை எங்கே இருக்கிறது?"

அவர் அழுதுகொண்டே தன் மகள் ரோஹிலாவை அரவணைத்து முத்தமிடுகிறார். "இது என் இதயத்தை நொறுக்குகிறது, ஆனால் என் குழந்தைகளுக்கு உணவளிக்க இது ஒன்றே வழி."

கிடைக்கக்கூடிய சொற்ப வேலையைக் கண்டறியும் முயற்சியில், தொழிலாளர்கள் அதிகாலையிலேயே கூடுகின்றனர்.

பட மூலாதாரம், Imogen Anderson/BBC

படக்குறிப்பு, கிடைக்கக்கூடிய சொற்ப வேலையைக் கண்டறியும் முயற்சியில், தொழிலாளர்கள் அதிகாலையிலேயே கூடுகின்றனர்.

"நாங்கள் உண்பதற்கு ரொட்டி மற்றும் வெந்நீர் மட்டுமே உள்ளது, தேநீர் கூட இல்லை," என அக்குழந்தைகளின் தாய் கய்ஹான் கூறுகிறார்.

நகரத்தின் மையத்தில் அவரின் இரண்டு பதின்பருவ மகன்கள் ஷூக்களுக்கு மெருகூட்டும் வேலை செய்கின்றனர். மற்றொரு மகன் குப்பைகளை சேகரிக்கிறார், கய்ஹான் அவற்றை சமையல் எரிபொருளாக பயன்படுத்துகிறார்.

சயீத் அகமது தன்னுடைய ஐந்து வயது மகள் ஷைகாவுக்கு குடல்வால் அழற்சி (appendicitis) மற்றும் கல்லீரலில் நீர்க்கட்டி ஏற்பட்டதையடுத்து அவரை விற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டதாக நம்மிடம் தெரிவித்தார்,

"மருத்துவ செலவுகளுக்கு என்னிடம் எந்த பணமும் இல்லை. எனவே, என் மகளை உறவினர் ஒருவருக்கு விற்றுவிட்டேன்," என அவர் கூறுகிறார்.

ஷைகாவின் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது. அதற்கான பணம், ஷைகாவை விற்றதன் மூலம் பெறப்பட்ட 2,00,000 ஆப்கானிகளிலிருந்து (3,200 டாலர்கள்) கிடைத்தது.

"அந்த நேரத்தில் நான் முழுத் தொகையையும் வாங்கியிருந்தால், அவர் என் மகளை அழைத்துச் சென்றிருப்பார். அதனால் நான் அவரிடம், இப்போதைக்கு மகளின் சிகிச்சைக்குப் போதுமான தொகையை மட்டும் கொடுக்குமாறும் மீதமுள்ளதை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் தந்த பின் குழந்தையை அழைத்துச் செல்லலாம் என்றும் கூறினேன்" என சயீத் கூறுகிறார்.

ஷைகா தன்னுடைய சிறு கைகளால் தன் தந்தையின் கழுத்தை அணைத்துக்கொள்கிறார். அவர்களுக்கிடையிலான நெருங்கிய பிணைப்பு தெளிவாகத் தெரிகிறது; ஆனால், ஐந்து ஆண்டுகளில் ஷைகா அங்கிருந்து கிளம்பி, உறவினர் ஒருவரின் வீட்டுக்குச் செல்ல வேண்டியிருக்கும்.

"என்னிடம் பணம் இருந்தால், நான் இந்த முடிவை எப்போதும் எடுத்திருக்க மாட்டேன்," என்கிறார் சயீத்.

"ஆனால், அறுவை சிகிச்சை செய்யாமல் அவள் இறந்துவிட்டால் என்ன செய்வது என நினைத்தேன். இப்படி செய்தால் அவள் உயிருடனாவது இருப்பாள்."

சயீத் அகமது, தனது ஐந்து வயது மகள் ஷைகாவை விற்றுவிட்டதாகக் கூறுகிறார்.

பட மூலாதாரம், Imogen Anderson/BBC

படக்குறிப்பு, சயீத் அகமது, தனது ஐந்து வயது மகள் ஷைகாவை விற்றுவிட்டதாகக் கூறுகிறார்.

குறைந்துபோன உதவிகள்

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சயீத்துக்கு சிறிது உதவி கிடைத்தது.

அப்போது, லட்சக்கணக்கான ஆப்கானியர்களை போலவே அவருக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் உணவுக்கான உதவி கிடைத்தது: மாவு, சமையல் எண்ணெய், பருப்பு மற்றும் குழந்தைகளுக்கான உணவுப்பொருட்கள் கிடைத்தன.

ஆனால், கடந்த சில ஆண்டுகளில் இத்தகைய உதவிகள் பெருமளவில் குறைந்ததால், பெரும்பான்மையானோருக்கு இந்த உயிர்காக்கும் உதவிகள் கிடைப்பது பறிக்கப்பட்டன.

ஒரு காலத்தில் ஆப்கானிஸ்தானுக்குப் பெரும் நிதியுதவி அளித்து வந்த அமெரிக்கா, கடந்த ஆண்டில் அந்நாட்டுக்கு வழங்கப்பட்டுவந்த தனது உதவி அனைத்தையும் ஏறக்குறைய முழுமையாகவே நிறுத்திவிட்டது. பிரிட்டன் உட்பட நிதியுதவி அளிக்கும் பிற முக்கிய நாடுகளும் தங்கள் பங்களிப்புகளைக் கணிசமாகக் குறைத்துள்ளன. ஐக்கிய நாடுகள் சபையின் தற்போதைய புள்ளிவிவரங்களின்படி, இந்த ஆண்டில் இதுவரை பெறப்பட்டுள்ள நிதியுதவியின் அளவு, 2025-ஆம் ஆண்டில் பெறப்பட்டதை விட 70 சதவிகிதம் குறைவாக உள்ளது.

நாட்டின் பாதிக்கும் மேற்பட்ட மாகாணங்களைப் பாதித்துள்ள கடும் வறட்சி, பிரச்னைகளை மேலும் தீவிரப்படுத்தி வருகிறது.

"எங்களுக்கு யாரிடமிருந்தும் உதவி கிடைக்கவில்லை - அரசிடமிருந்தோ அல்லது அரசு சாரா நிறுவனங்களிடமிருந்தோ உதவி கிடைக்கவில்லை," என கிராமவாசி அப்துல் மாலிக் கூறுகிறார்.

தாலிபன் நிர்வாகம் கூறுவது என்ன?

2021ம் ஆண்டில் ஆட்சியைக் கைப்பற்றிய தாலிபன் அரசு, வெளிநாட்டுப் படைகள் நாட்டிலிருந்து திரும்பப் பெறப்பட்டபோது கட்டாயமாக வெளியேற்றப்பட்ட ஆப்கானிஸ்தானின் முந்தைய நிர்வாகத்தின் மீதும் பழியைச் சுமத்துகிறது.

"20 ஆண்டுகால ஆக்கிரமிப்பின் போது, ​​அமெரிக்க டாலர்களின் வரத்து காரணமாக ஒரு செயற்கையான பொருளாதாரம் உருவாக்கப்பட்டது," என்று தாலிபன் அரசாங்கத்தின் துணை செய்தித் தொடர்பாளர் ஹம்துள்ளா ஃபித்ரத் பிபிசியிடம் தெரிவித்தார்.

"படையெடுப்பு முடிவடைந்த பிறகு, நாங்கள் வறுமை, இன்னல்கள், வேலையின்மை மற்றும் பிற பிரச்னைகளை முந்தைய நிர்வாகத்திடமிருந்து அப்படியே பெற்றோம்."

எனினும், தாலிபனின் சொந்தக் கொள்கைகள், குறிப்பாகப் பெண்களுக்கு எதிரான அதன் கட்டுப்பாடுகள், உதவி செய்பவர்கள் விலகிச் செல்வதற்கான ஒரு முக்கியக் காரணமாகவும் அமைந்துள்ளன.

இது குறித்துக் கேட்கப்பட்டபோது, ​​நன்கொடையாளர்கள் விலகிச் செல்வதற்குத் தாங்கள் எவ்விதத்திலும் பொறுப்பல்ல என்று தாலிபன் அரசாங்கம் மறுத்தது; மாறாக, "மனிதாபிமான உதவிகள் அரசியல்மயமாக்கப்படக் கூடாது" என்று அது குறிப்பிட்டது.

"முக்கிய பொருளாதாரத் திட்டங்களைச் செயல்படுத்துவதன் மூலம் வறுமையைக் குறைக்கவும் வேலைவாய்ப்புகளை உருவாக்கவும்" தாலிபன் நிர்வாகம் கொண்டுள்ள திட்டங்களையும் ஃபித்ரத் சுட்டிக்காட்டுகிறார்; இதற்காக அவர் சில உள்கட்டமைப்பு மற்றும் சுரங்கத் திட்டங்களையும் குறிப்பிடுகிறார்.

நீண்டகாலத் திட்டங்கள் என்றாவது ஒருநாள் உதவக்கூடும் என்றாலும், அவசர உதவி இன்றித் தாக்குப் பிடிக்கவே முடியாத நிலையில் கோடிக்கணக்கானோர் உள்ளனர் என்பது தெளிவாகிறது.

பசியால் இறக்கும் குழந்தைகள்

சில வாரங்களுக்கு முன்பு தனது 14 மாதக் குழந்தையை இழந்த முகமது ஹஷேமைப் போல.

"என் குழந்தை பசி மற்றும் மருந்து பற்றாக்குறையாலும் இறந்துவிட்டது… ஒரு குழந்தை உடல்நலமின்றியும் பசியுடனும் இருக்கும்போது அது நிச்சயம் இறந்துவிடும்," என்கிறார் அவர்.

உள்ளூரை சேர்ந்த முதியவர் ஒருவர் கடந்த இரண்டு ஆண்டுகளில் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் உயிரிழக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை "உண்மையில் அதிகரித்துள்ளதாக" தெரிவித்தார்.

எனினும், இந்த உயிரிழப்புகள் குறித்த அதிகாரபூர்வ பதிவுகள் இல்லை. அதிகரித்து வரும் குழந்தைகள் உயிரிழப்புகளுக்கு ஆதாரமாக கல்லறைகளே விளங்குகின்றன. எனவே, நாங்கள் கடந்த காலத்தில் செய்ததுபோலவே சிறிய மற்றும் பெரிய கல்லறைகளை தனித்தனியே எண்ணினோம். பெரிய கல்லறைகளை விட சிறிய கல்லறைகள் ஏறத்தாழ இரண்டு மடங்கு அதிகமாக இருந்தன, இது பெரியவர்களை விட குழந்தைகள் அதிகமாக இறந்திருப்பதை பரிந்துரைக்கிறது.

ஃபாத்திமா ஹுசெய்னி குழந்தைகள் இறப்பு வழக்கமாகிவிட்டதாகக் கூறுகிறார்.

பட மூலாதாரம், Imogen Anderson/BBC

படக்குறிப்பு, ஃபாத்திமா ஹுசெய்னி குழந்தைகள் இறப்பு வழக்கமாகிவிட்டதாகக் கூறுகிறார்.

சாக்சரானில் உள்ள முக்கிய மாகாண மருத்துவமனையில் இதற்கான மேலதிக ஆதாரங்கள் உள்ளன.

பச்சிளம் குழந்தைகளுக்கான பிரிவு மிகவும் பரபரப்பாக உள்ளது. ஒவ்வொரு படுக்கையும் நிரம்பியுள்ளது, சில படுக்கைகளில் இரண்டு குழந்தைகள் உள்ளனர். பெரும்பாலான குழந்தைகள் குறைவான உடல் எடையுடன் உள்ளனர், பலரும் தானாக மூச்சுவிட சிரமப்படும் நிலையில் உள்ளனர்.

செவிலியர் ஒருவர், புதிதாகப் பிறந்த இரட்டைப் பெண் குழந்தைகளைக் கொண்ட ஒரு சிறிய தொட்டியை நகர்த்திக்கொண்டு வருகிறார். அவை இரண்டு மாதங்கள் குறைப்பிரசவத்தில் பிறந்தவை. ஒரு குழந்தையின் எடை 2 கிலோ, மற்றொரு குழந்தையின் எடை வெறும் 1 கிலோ.

அக்குழந்தைகள் கவலைக்கிடமான நிலையில் இருந்தன, உடனடியாக அக்குழந்தைகளுக்கு ஆக்சிஜன் செலுத்தப்பட்டது.

அவர்களின் 22 வயது தாய் ஷகிலா மகப்பேறு பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

"அவள் கர்ப்பமாக இருந்தபோது ரொட்டி மற்றும் தேநீர் தவிர சாப்பிட வேறெதுவும் இல்லாததால், பலவீனமாக இருக்கிறாள்," என அந்த இரட்டைக் குழந்தைகளின்ப் பாட்டியான குல்பதான் விளக்குகிறார். "அதனால்தான் குழந்தைகள் இந்த நிலையில் உள்ளனர்."

அன்று நாங்கள் மருத்துவமனையிலிருந்து வெளியேறிய சில மணி நேரங்களிலேயே, இரட்டைக் குழந்தைகளில் அதிக எடையுள்ள குழந்தை, அதற்குப் பெயரிடுவதற்கு முன்பாகவே இறந்துவிட்டது.

"குழந்தையை காப்பாற்ற மருத்துவர்கள் முயற்சித்தனர், ஆனால் அக்குழந்தை இறந்துவிட்டது," என மறுநாள் குல்பதான் வேதனையுடன் தெரிவித்தார்.

"நான் குழந்தையின் சிறிய உடலைச் சுற்றி எடுத்துக்கொண்டு வீட்டுக்குச் சென்றேன். அவளது தாய் அதை அறிந்ததும், மயங்கி விழுந்தாள்."

உயிருடன் குழந்தை குறித்து குறிப்பிட்ட குல்பதான், "அந்த குழந்தையாவது உயிர்பிழைக்கும் என நம்புகிறேன்" என்றார்.

இரட்டைக் குழந்தைகள் குறைப்பிரசவத்தில் பிறந்தன; அவை மூச்சுவிடச் சிரமப்பட்டுக்கொண்டிருந்தன.

பட மூலாதாரம், Imogen Anderson/BBC

படக்குறிப்பு, இரட்டைக் குழந்தைகள் குறைப்பிரசவத்தில் பிறந்தன; அவை மூச்சுவிடச் சிரமப்பட்டுக்கொண்டிருந்தன.

செவிலியர் ஃபாத்திமா ஹுசெய்னி கூறுகையில், ஒருநாளில் மூன்று குழந்தைகள் வரை உயிரிழந்த நாட்களும் உண்டு என்றார்.

"ஆரம்பத்தில் குழந்தைகள் உயிரிழப்பதை பார்ப்பது எனக்கு மிகவும் கடினமாக இருந்தது. ஆனால் இப்போது அது கிட்டத்தட்ட வழக்கமாகிவிட்டது," என்கிறார் அவர்.

பச்சிளம் குழந்தைகள் பிரிவை நடத்திவரும் மருத்துவர் முகமது மோசா ஓல்டத் கூறுகையில், இறப்பு விகிதம் 10% வரை அதிகரித்துவிட்டதாகவும், அது "ஏற்றுக்கொள்ள முடியாதது" என்றும் தெரிவித்தார்.

"ஆனால் வறுமையின் காரணமாக, நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது," என்று அவர் கூறுகிறார். "மேலும், இங்கு பச்சிளம் குழந்தைகளுக்கு முறையாக சிகிச்சை அளிப்பதற்கான வளங்களும் எங்களிடம் இல்லை."

குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவில், ஆறு வாரக் குழந்தையான ஜமீர் மூளைக்காய்ச்சல் (meningitis) மற்றும் நிமோனியாவால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வருகிறது. இவ்விரண்டு நோய்களுமே குணப்படுத்தக்கூடியவையே; ஆனால், மருத்துவர்கள் எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக்க வேண்டியுள்ளது, அதற்கான உரிய உபகரணங்கள் அவர்களிடம் இல்லை.

ஆனால், மருத்துவப் பணியாளர்கள் எங்களிடம் தெரிவித்தவற்றில் மிகவும் அதிர்ச்சியளிக்கும் விஷயம் என்னவென்றால், பொது மருத்துவமனையில் பெரும்பாலான நோயாளிகளுக்குத் தேவையான மருந்துகள் இல்லை; இதனால் நோயாளிகளின் குடும்பத்தினர் வெளியிலுள்ள மருந்தகங்களில் மருந்துகளை வாங்க வேண்டியுள்ளது.

"சில சமயங்களில், வசதி படைத்த குடும்பத்தைச் சேர்ந்த ஒரு குழந்தையின் சிகிச்சைக்குப் பிறகு மருந்துகள் மீதமிருந்தால், அவற்றை மருந்துகள் வாங்க வசதியில்லாத குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு நாங்கள் பயன்படுத்துகிறோம்," என்று ஃபாத்திமா கூறுகிறார்.

பணப் பற்றாக்குறை பல குடும்பங்களைச் சிரமமான முடிவுகளை எடுக்கக் கட்டாயப்படுத்துகிறது.

குல்பதானின் உயிர்பிழைத்த பேத்தி சற்று உடல் எடை கூடியுள்ளது; அக்குழந்தையின் சுவாசம் சுவாசம் சீரடைந்துள்ளது. ஆனால் சில நாட்களுக்குப் பிறகு, குழந்தையுடன் அக்குடும்பத்தினர் வீட்டுக்கு திரும்பிவிட்டனர். அக்குழந்தையை மருத்துவமனையிலேயே தொடர்ந்து வைத்திருப்பதற்கான வசதி அவர்களுக்குச் சிறிதும் இல்லை.

குழந்தை ஜமீரும் அதே காரணத்துக்காக பெற்றோர்களால் வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டது.

அக்குழந்தைகளின் சிறிய உடல்கள், இப்போது உயிர்வாழ்வதற்கான போராட்டத்தைத் தனித்து நின்று எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

இமோஜென் ஆண்டர்சன், மஹ்ஃபௌஸ் ஸுபைடே மற்றும் சஞ்சய் கங்குலி வழங்கிய கூடுதல் தகவல்களுடன்

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு