அமெரிக்கா-இரான் மோதலில் பெரும் தோல்வியடைந்தது யார்? இரானின் செல்வாக்கு அதிகரிக்கும் என அரபுநாடுகள் அஞ்சுவது ஏன்?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், மனால் கலீல்
- பதவி, பிபிசி செய்தியாளர்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 7 நிமிடங்கள்
அமெரிக்காவுக்கும் இரானுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானதன் மூலம் மத்திய கிழக்கில் நிலவிவந்த ராணுவப் பதற்றம் தற்காலிகமாகத் தணிந்துள்ளது.
அமெரிக்காவுக்கும் இரானுக்கும் இடையேயான பேச்சுவார்த்தைகள் இன்னும் ஆரம்பக் கட்டத்தில்தான் உள்ளன, அதன் இறுதி முடிவு குறித்து ஊகிக்க முற்படுவது அவசரமானதாக இருக்கும்.
இருப்பினும், நம் முன்னே எழும் முக்கியமான கேள்வி என்னவென்றால், இந்த ஒட்டுமொத்த மோதலில் அதிக நட்டப்படுவது யார்?
இந்த கேள்விக்கு ஒருமித்த பதில் இல்லை, பல்வேறு பதில்களும், வெவ்வேறு கருத்துக்களும் நிலவுகின்றன.
அமெரிக்கா மற்றும் இரானுக்கு இடையே நடைபெற்று வரும் பேச்சுவார்த்தையின் மூலம் இரானுக்கு "மிக அதிகமான சலுகைகள்" கிடைக்கக்கூடும் என்றும், இதனால் இந்த பிராந்தியத்தில் இரானின் செல்வாக்கு மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும் பாரசீக வளைகுடா அரபு நாடுகள் அஞ்சுகின்றன.
இரான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், இரானின் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைத் திட்டம் மீதான எந்தவொரு தெளிவான தடையோ அல்லது கட்டுப்பாடோ குறிப்பிடப்படவில்லை.
சமீபத்திய மோதல்களின் போது இதே ஏவுகணைகள்தான் வளைகுடா நாடுகள் மீது ஏவப்பட்டதால், இது அந்த நாடுகளிடையே மேலும் கவலைகளை எழுப்பியுள்ளது.
இந்தத் தாக்குதல்கள் குறிப்பிடத்தக்க உயிர் மற்றும் சொத்து இழப்புகளை ஏற்படுத்தின.
இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், போரின் போது டொனால்ட் ட்ரம்பின் அரசாங்கம் இரானின் ஏவுகணைத் திறனை ஒழிப்பதே தங்களின் முக்கிய இலக்குகளில் ஒன்று என்று தொடர்ந்து கூறி வந்தது.
இருப்பினும், தனது பாரிஸ் பயணத்தின் போது டிரம்ப் தனது நிலைப்பாட்டில் சற்றே மென்மையான போக்கைக் காட்டும் வகையில், 'மற்ற நாடுகளிடம் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் இருக்கும்போது, இரானை மட்டும் அவற்றில் சிலவற்றிலிருந்து தள்ளி வைப்பது தவறானது' என்று கூறினார்.
லண்டன் கிங்ஸ் கல்லூரியின் பாதுகாப்பு ஆய்வுகள் துறை இணைப் பேராசிரியர் ஆண்ட்ரியாஸ் கிரெக்கின் கூற்றுப்படி, இரானின் ஏவுகணைத் திட்டம் இன்னும் அரபு நாடுகளுக்கு ஒரு கடுமையான பாதுகாப்பு சவாலாகவே இருந்து வருகிறது.
இருந்தபோதிலும், இரானின் ஏவுகணை இருப்பை முற்றிலும் அழிக்க வேண்டும் என்ற கோரிக்கை, ஒரு வெற்றிகரமான ஒப்பந்தத்திற்குத் தடையாக அமையலாம் என்பதை இந்த நாடுகளின் தலைமை நன்கு உணர்ந்துள்ளது என்றும் அவர் நம்புகிறார்.
வளைகுடா நாடுகள் இப்போது என்ன செய்ய வேண்டும் என்பதையும் ஆண்ட்ரியாஸ் கிரெக் கோடிட்டுக் காட்டியுள்ளார்.
அவர்கள் தங்கள் உள்கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும், ஏவுகணைப் பாதுகாப்பு அமைப்புகளை விரிவுபடுத்த வேண்டும், மற்றும் இடைமறிப்பு ஏவுகணைகளை உருவாக்க வேண்டும் என்று அவர் பரிந்துரைக்கிறார்.
மேலும், எதிர்காலத்தில் நேரடி மோதலைத் தவிர்ப்பதற்கு வளைகுடா நாடுகள் தெஹ்ரானுடன் தொடர்பைப் பேணுவது அவசியம் என்று கிரெக் குறிப்பிடுகிறார்.
'போர் நீடித்தால்...'

பட மூலாதாரம், Anadolu via Getty Images
இந்த மோதலின்போது அரபு வளைகுடா நாடுகள் குறிப்பிடத்தக்க இழப்புகளைச் சந்தித்திருந்தாலும் மற்றும் அவற்றின் உள்கட்டமைப்பில் உள்ள பலவீனங்கள் வெளிப்பட்டிருந்தாலும், அவையே பிரதான தோல்வியாளர்கள் என ஆண்ட்ரியாஸ் கிரீக் கருதவில்லை.
அவரது கூற்றுப்படி, 'மூலோபாய ரீதியாகப் பார்க்கும்போது, இஸ்ரேல் தான் இதில் மிக அதிகமாகப் பாதிப்படைந்த அல்லது தோற்றுப்போன நாடாகத் தோன்றுகிறது. அது அமெரிக்காவுடன் சேர்ந்து, தனது அரசியல், ராஜதந்திரம் மற்றும் ராணுவ பலத்தின் பெரும் பகுதியை வீணடித்துள்ளது. அதுமட்டுமல்ல, இஸ்ரேல் மேற்கத்திய நாடுகளின் பொதுமக்களின் மத்தியில் தனது நம்பகத்தன்மையையும் இழந்துள்ளது. மேலும், தனது பாதுகாப்பு உத்தியின் கீழ் அமெரிக்காவை இப்பிராந்தியத்தில் அதிக செலவு வைக்கக்கூடிய ஒரு பதற்றத்தை நோக்கித் தள்ளுகிறது இஸ்ரேல் என்ற எதிர்மறையான எண்ணத்தையும் இந்தப் போர் வலுப்படுத்தியுள்ளது.'
ஆண்ட்ரியாஸ் கிரெக்கின் கருத்துப்படி, இதற்கு நேர்மாறாக, வளைகுடா நாடுகள் படிப்படியாக அமெரிக்காவின் 'அமெரிக்காவுக்கே முன்னுரிமை'என்ற கொள்கையின் கோரிக்கைகளை படிப்படியாக ஏற்று வருகின்றன. இதில் சுமைகளைப் பகிர்ந்துகொள்ளுதல், அமெரிக்கப் பொருளாதாரத்தில் முதலீடு செய்தல், பதற்றத்தைத் தணித்தல் மற்றும் பிராந்திய நிலைத்தன்மையை ஊக்குவித்தல் ஆகியவை அடங்கும்.
ஆற்றல் வள விநியோகத்தை உறுதி செய்வது முதல் பிராந்திய நெருக்கடிகளில் மத்தியஸ்தம் செய்யும் பாத்திரத்தை வகிப்பது வரை, இந்த நாடுகள் பல வழிகளில் அமெரிக்காவிற்கு உதவியாக இருப்பதை நிரூபித்து வருகின்றன; இது அவர்களுக்கு ஒரு முக்கியமான ராஜதந்திர மற்றும் மூலோபாய நன்மையாகும் என்றும் அவர் கூறுகிறார்.
மறுபுறம், வாஷிங்டனில் உள்ளமத்திய கிழக்கு நிறுவனத்தின் (Middle East Institute) அமைப்பின் ஆராய்ச்சியாளரும் விரிவுரையாளருமான ஹசன் ம்னைம்னே இந்தச் சூழலை ஒரு மாறுபட்ட கோணத்தில் பார்க்கிறார்.
அவரைப் பொறுத்தவரை, வளைகுடா நாடுகள் இந்த நெருக்கடியிலிருந்து பயனடைந்தவர்களாக இருக்கலாம், ஆனால் அது அவர்கள் ஒரு மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுவிட்டார்கள் என்பதால் அல்ல; மாறாக, ஒரு நீண்ட காலப் போர் நீடித்திருந்தால் அவர்கள் மிக அதிக விலையைச் செலுத்த வேண்டியிருந்திருக்கும் என்பதால்தான்.
பிபிசி அரபிக் ஊடகத்திற்கு அவர் அளித்த பேட்டியில், போரின் போது வளைகுடா நாடுகளுக்குப் பெரும் இழப்புகள் ஏற்பட்ட போதிலும், ஒருவேளை இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்தாகாமல் போர் நீடித்திருந்தால், இந்த பிராந்தியம் மீட்க முடியாத அளவிற்கான பேரழிவைச் சந்திக்க நேரிட்டிருக்கும் என்றார்.
அவரது கூற்றுப்படி, இரானின் கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணைகள், அதன் சார்புப் படைகள், அணுசக்தித் திட்டம் மற்றும் ஹோர்மூஸ் நீரிணை போன்ற விவகாரங்கள் வளைகுடா நாடுகளுக்குப் பெரும் சவால்களாகத் தொடர்கின்றன; இருப்பினும், நீண்டகாலப் போர் இந்நாடுகளைக் கடும் அழுத்தத்திற்கு உள்ளாக்குவது மட்டுமல்லாமல், அவற்றின் இருத்தலுக்கே அச்சுறுத்தலாக அமையும் என்றும் அவர் எச்சரிக்கிறார்.
சமீபத்திய ஆண்டுகளில், வளைகுடா நாடுகள் தங்களின் பொருளாதாரத்தைப் பன்முகப்படுத்துவதற்காக பெரிய திட்டங்களைத் தொடங்கியுள்ளன, இதன் கீழ் சுற்றுலா மற்றும் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் பெருமளவிலான முதலீடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இத்தகைய சூழ்நிலையில், நீண்ட காலம் நீடிக்கும் அல்லது தீவிரமடையும் ஒரு போரின் தாக்கம், இந்த முயற்சிகள் அனைத்தையும் கடுமையாகப் பாதிக்கக்கூடும்.
போருக்குப் பிறகு அமைதிக்கான விலை

பட மூலாதாரம், Getty Images
அமெரிக்கா மற்றும் இரானுக்கு இடையே ஏற்பட்டுள்ள ஒப்பந்தத்தில், இரானின் மறுசீரமைப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சிக்காக 300 பில்லியன் டாலர் மதிப்பிலான பெரிய நிதியத்தை உருவாக்குவதற்கான முன்மொழிவும் சேர்க்கப்பட்டுள்ளது. வளைகுடா நாடுகள் இந்த நிதிக்கான முக்கிய நிதி ஆதாரங்களை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மறுபுறம், தனக்கு எதிரான தாக்குதல்களில் பங்கேற்ற அல்லது ராணுவ தளங்களாக உதவி செய்த இப்பிராந்தியத்தின் நாடுகளிடம் இருந்து இழப்பீடு வழங்க வேண்டும் என்று இரான் ஏற்கனவே கோரிக்கை விடுத்துள்ளது.
இதேபோல், கத்தார் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற வளைகுடா நாடுகளும், இரானின் டிரோன் மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைத் தாக்குதல்களால் தங்களுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கு இரான் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரியுள்ளன.
இது ஒரு சிக்கலான சூழலை உருவாக்குகிறது; இதில் வளைகுடா நாடுகள் போருக்கான விலையை மட்டுமல்லாமல், அமைதிக்கான விலையையும் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படலாம்.
இதுவரை, வளைகுடா நாடுகளுக்கு ஏற்பட்ட ஒட்டுமொத்த இழப்புகள் குறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வ தரவும் வெளியிடப்படவில்லை.
விரைவாகச் செயல்படுவது என்பது ஒரு வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்வதையோ அல்லது ஒரு இழப்பைத் தவிர்ப்பதையோ குறிக்கும் என்று ஹசன் ம்னைம்னே குறிப்பிடுகிறார்.
அவரது பார்வையில், வளைகுடா நாடுகள் தற்போது லாபம் ஈட்டுவதை விடவும், தங்களுக்கு ஏற்படக்கூடிய சாத்தியமான இழப்புகளைக் குறைப்பதிலேயே அதிக கவனம் செலுத்தி வருகின்றன; முன்மொழியப்பட்டுள்ள இந்த 300 பில்லியன் டாலர் நிதியத்தையும் இந்தப் பின்னணியில்தான் பார்க்க வேண்டும்.
வளைகுடா நாடுகள் இந்த நிதியில் பங்களிப்பை வழங்கினால், அது இரானுக்கான உதவியாக இருக்காது, மாறாக அதுவொரு முதலீடாக அமையும் என்று அவர் விளக்குகிறார். அவரைப் பொறுத்தவரை, இத்தகைய கூட்டு முயற்சி, பகிரப்பட்ட பொருளாதார நலன்களை வளர்ப்பதன் மூலம் இரானின் விரிவாக்கக் கொள்கை சார்ந்த லட்சியங்களைக் கட்டுப்படுத்த உதவும்.
மறுபுறம், ஆண்ட்ரியாஸ் கிரெக்கின் கூற்றுப்படி, மறுசீரமைப்பிற்காக முன்மொழியப்பட்டுள்ள இந்த நிதி ஒரு அரசியல் விவாதத்தைத் தூண்டக்கூடும்; ஏனெனில், தாக்குதல்களுக்கு முதலில் இலக்கான வளைகுடா நாடுகளே இப்போது மறுசீரமைப்புக்கான செலவை ஏற்க வேண்டும் என்று கேட்கப்படுவது போன்ற தோற்றத்தை இது உருவாக்கலாம். இருப்பினும், யதார்த்தம் இதைவிட மிகவும் சிக்கலானது என அவர் கருதுகிறார்.
அவரைப் பொறுத்தவரை, வளைகுடா நாடுகள் இரானுக்கு எப்போதும் "முழுமையான சலுகைகளை" வழங்கிவிடாது. எந்தவொரு மறுசீரமைப்புத் திட்டமும் மறைமுகமாகவும், சில நிபந்தனைகளுக்கு உட்பட்டும், வணிக அடிப்படையிலும் மட்டுமே செயல்படுத்தப்படும். அதே நேரத்தில், இந்த பரஸ்பர பொருளாதாரச் சார்பு நிலை என்பது, இரானின் நடத்தையில் செல்வாக்கு செலுத்துவதற்கான ஒரு புதிய வழியையும் இந்நாடுகளுக்கு வழங்கக்கூடும்.
சாத்தியமான பிற ஆபத்துகள்

பட மூலாதாரம், Elke Scholiers/Getty Images
சில ஆய்வாளர்களின் கூற்றுப்படி, இரானின் பிராந்திய செல்வாக்கை அதிகரிக்கும் காரணிகளில் ஹோர்மூஸ் நீரிணைக்கு முக்கியப் பங்கு இருக்கிறது.
பேச்சுவார்த்தைகளின் போது எதிர் தரப்புக்கு அழுத்தம் கொடுக்கும் ஒரு கருவியாக இந்த முக்கியமான நீர்வழியை இரான் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறது. வளைகுடா நாடுகளின் முக்கிய எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றுமதி இந்த வழியையே சார்ந்துள்ளதால், இந்தச் சூழல் அவர்களுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தும் விஷயமாக உள்ளது.
ஹோர்மூஸ் நீரிணை மூடப்படும் அல்லது அதில் இடையூறு ஏற்படும் அபாயத்திலிருந்து, குழாய் வழித்தடங்கள் மற்றும் செங்கடல் அணுகல் வசதி ஆகியவற்றின் மூலம் செளதி அரேபியாவால் ஓரளவுக்குத் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள முடியும்.
ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் ஃபுஜைரா வழியாகச் சில மாற்று வழிகள் உள்ளன; ஆனால் கத்தார் மற்றும் குவைத் நாடுகள் மிகக் குறைந்த அளவிலான மாற்று ஏற்றுமதி வழிகளைக் கொண்டிருப்பதால், ஒப்பீட்டளவில் பாதிப்புக்குள்ளாகக்கூடிய நிலையில் உள்ளன.
ஆண்ட்ரியாஸ் கிரெக்கின் கூற்றுப்படி, சாத்தியப்படக்கூடிய எந்தவொரு ஒப்பந்தத்திலும் ஹோர்மூஸ் நீரிணை விவகாரமே மிகவும் உணர்வுபூர்வமான மற்றும் சிக்கலான புள்ளியாக இருக்கும். கடல்சார் போக்குவரத்து அமைப்பு அல்லது பாதுகாப்பில் இரானுக்கு ஏதேனும் ஒரு பங்கை வழங்குவது ஆபத்தானது என்றும், குறிப்பாக அது முறைசாரா கட்டணங்கள் வசூலிப்பது அல்லது இறையாண்மை கோருவது போன்ற வடிவங்களை எடுத்தால் பெரும் சிக்கலாகிவிடும் என்று அவர் கூறினார்.
இருந்தபோதிலும், இந்த நீர்வழி திறந்திருப்பதும் பாதுகாப்பாக இருப்பதும் வளைகுடா நாடுகளுக்கு அத்தியாவசியமான ஒன்றாகும். எனவே, இரான் விதிக்கும் எந்தவொரு கட்டணத்தையும் அவர்கள் பொதுவெளியில் எதிர்க்க வாய்ப்புள்ளது; ஆனால் நடைமுறையில், அதுவொரு சட்டக் கட்டமைப்பு, சர்வதேச ஆதரவு மற்றும் கடல் கண்ணிவெடிகளை அகற்றுதல், கடல்சார் பாதுகாப்பு அல்லது கப்பல் போக்குவரத்து அமைப்புகள் போன்ற குறிப்பிட்ட சேவைகளுக்கு உட்பட்டதாக இருந்தால், ஒரு குறிப்பிட்ட மற்றும் தெளிவான கட்டணத்தை அவர்கள் ஏற்றுக்கொள்வார்கள்.
"வளைகுடா நாடுகள் புவியியல் அமைப்பைத் தாங்கள் விரும்பும் விதத்தில் அல்லாமல், அது உண்மையில் உள்ளபடியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற உண்மையை இந்தச் சூழல் பிரதிபலிக்கிறது" என்றும் அவர் மேலும் குறிப்பிடுகிறார்.
மறுபுறம், ஹோர்மூஸ் நீரிணையின் மீது இரானுக்கு முழுமையான கட்டுப்பாடு இல்லை என்று குறிப்பிடும் ஹசன் ம்னைம்னே, இந்த விவகாரத்தில் ஓமனுடன் அதற்கு ஒரு முறைசாரா கூட்டாண்மை உள்ளது என்றும், ஓமன் நடைமுறையில் இதில் முக்கிய பங்கு வகிக்கிறது என்றும் கூறுகிறார்.
இந்த விஷயத்தில் வளைகுடா நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை அவர் மிகவும் முக்கியமானதாகக் கருதுகிறார்.

பட மூலாதாரம், Hamed Malekpour / AFP via Getty Images
கடந்த வாரம், இரானும் ஓமனும் வெளியிட்ட கூட்டு அறிக்கையில், ஹோர்மூஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்தின் எதிர்கால மேலாண்மை மற்றும் சாத்தியமான சுங்கக் கட்டணம் குறித்து ஒப்பந்தம் ஒன்றை எட்ட முயற்சிப்பதாகக் குறிப்பிட்டிருந்தன.
இதனைத் தொடர்ந்து, கப்பல்கள் ஹோர்மூஸ் நீரிணை வழியாகப் பாதுகாப்பாகக் கடந்து செல்வதற்காக, சர்வதேச கடல்சார் அமைப்பின் ஒருங்கிணைப்புடன் ஒரு தற்காலிக வழித்தடம் உருவாக்கப்பட்டுள்ளதாக ஓமன் அறிவித்தது. இந்த நடவடிக்கையின் நோக்கம், சர்வதேச சட்டம் மற்றும் கடல்சார் சட்டத்தின் கீழ் எந்தவொரு கட்டணமும் இன்றி தடையற்ற கப்பல் போக்குவரத்து சுதந்திரத்தை உறுதி செய்வதாகும்.
இருப்பினும், சமீபநாட்களாக இந்த விவகாரம் மீண்டும் ஒரு பதற்றமான சூழலை ஏற்படுத்தியுள்ளது. ஓமனுக்கு அருகே ஒரு வணிகக் கப்பல் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஹோர்மூஸ் நீரிணையின் மேலாண்மையில் தனது முக்கியப் பங்கை இரான் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. அதோடு, இந்த மோதலில் அமெரிக்காவிற்கு ஆதரவளிக்க வேண்டாம் என்று வளைகுடா நாடுகளுக்கு எச்சரிக்கையும் விடுத்துள்ளது.
இரானின் பங்கைப் புறக்கணித்துவிட்டு ஹோர்மூஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்தை மேற்கொள்வது சாத்தியமில்லை என்று இரானிய அதிகாரிகள் கூறுகின்றனர். அமெரிக்காவும் வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் நாடுகளும் கப்பல் போக்குவரத்தின் சுதந்திரத்திற்கான உரிமையை வலியுறுத்தி, எந்தவொரு கட்டண விதிப்பிற்கும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வரும் வேளையில் இரானின் இந்த நிலைப்பாடு வெளிவந்துள்ளது.
இதற்கிடையில், ஒரு கப்பல் மீதான தாக்குதலுக்குப் பதிலடியாக இரான் நாட்டிற்குள் இருக்கும் இலக்குகளை அமெரிக்காவும் குறிவைத்துத் தாக்கியுள்ளது. இது இப்பிராந்தியத்தில் நிலவி வரும் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.
பிராந்திய உறவுகளின் சிக்கலான தன்மை
அமெரிக்கா மற்றும் இரானுக்கு இடையே இந்த உடன்பாடு நீடித்தால், அது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மறுசீரமைப்பதற்கும், ஓரளவிற்கு அதனை இயல்பு நிலைக்குக் கொண்டு வருவதற்குமான வழியை உருவாக்கக்கூடும்.
இருப்பினும், இது பல முக்கியமான கேள்விகளை எழுப்புகிறது. வளைகுடா நாடுகளின் பாதுகாப்புத் தேவைகள் இன்னும் அமெரிக்காவின் முதன்மை மையமாக இருக்குமா? மேலும், இந்த நாடுகள் இரானுடன் பரஸ்பர நம்பிக்கையின் அடிப்படையிலான நீண்டகால உறவை எதிர்பார்க்க முடியுமா?
ஹசன் ம்னிம்னேவின் கூற்றுப்படி, இந்த இலக்கை அடைவதற்கு தீவிர முயற்சி, முறையான திட்டமிடல் மற்றும் பயனுள்ள மத்தியஸ்தம் தேவைப்படும். அவரது கருத்துப்படி, வளைகுடா நாடுகள் தங்களிடம் உள்ள வளங்களைப் பயன்படுத்தி, சமீபத்திய இழப்புகளில் இருந்து பெற்ற அனுபவங்களின் அடிப்படையில், இரானையும் உள்ளடக்கிய ஒரு பிராந்திய அமைப்பை உருவாக்க முடியும்; இது இரானின் ஆதிக்கத்தை சமநிலைப்படுத்தவும் உதவும்.
ஆயினும், இத்தகையதொரு அமைப்பை உடனடியாக உருவாக்கிவிட முடியாது என்று அவர் வலியுறுத்துகிறார். அவரது பார்வையில், வளைகுடா நாடுகள், துருக்கி, பாகிஸ்தான் மற்றும் எகிப்து ஆகிய நாடுகளுக்கு இடையிலான ஒரு கூட்டு பாதுகாப்பு கட்டமைப்பு இதற்கான முதல் படியாகக் கருதப்பட வேண்டும்.
ஆனால், இஸ்ரேல் இத்தகைய திட்டங்களைத் தடுக்க முயற்சிக்கும் என்று அவர் அஞ்சுகிறார்; அதே நேரத்தில், சாத்தியமான இந்த மாற்றங்களில் ஒரு முக்கியப் பங்குதாரராகக் கருதப்படும் அமெரிக்கா, தனது இறுதி முடிவு அல்லது அதிகாரம் இல்லாத எந்தவொரு கட்டமைப்பையும் எதிர்க்கக்கூடும் என்றும் அவர் கருதுகிறார்.
மறுபுறம், வளைகுடா நாடுகள் தங்களின் பாதுகாப்பு முன்னுரிமைகளுக்கு அமெரிக்காவால் உரிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்று நீண்ட காலமாக உணர்ந்து வருவதாக ஆண்ட்ரியாஸ் கிரீக் குறிப்பிடுகிறார்; ஆயினும், இந்த நிலைமை அமெரிக்காவிற்குள் மீண்டும் செல்வாக்கைப் பெறுவதற்கான ஒரு வாய்ப்பையும் அவர்களுக்கு வழங்கக்கூடும் என்று அவர் நம்புகிறார்.
செளதி அரேபியா, கத்தார் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகள் இணைந்து செயல்பட்டால், எதிர்காலத்தில் மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்கா பிராந்தியத்தில் அமெரிக்காவின் கொள்கைகளில் இஸ்ரேலை விடவும் இவர்களின் செல்வாக்கு அதிகமாக இருக்கக்கூடும் என்று அவர் கருதுகிறார்.
ஆண்ட்ரியாஸ் கிரெக்கின் கூற்றுப்படி, இந்த நாடுகளிடம் தற்போது ராணுவ தளங்கள், பெரும் நிதி ஆதாரங்கள், நவீன தளவாட உள்கட்டமைப்பு, உலகளாவிய எரிசக்தி சந்தையில் செல்வாக்கு மற்றும் பயனுள்ள ராஜதந்திர உறவுகள் ஆகியவை உள்ளன; ஆனால், இவற்றுக்கு இடையே தற்போது குறைபாடாகத் தெரிவது பரஸ்பர ஒருங்கிணைப்பு தான்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ், செளதி அரேபியா, கத்தார், குவைத் மற்றும் பஹ்ரைன் ஆகிய அனைத்து நாடுகளிலும் அமெரிக்காவின் ராணுவ தளங்கள் உள்ளன; மேலும், இந்தத் தளங்கள் மத்திய கிழக்கில் அமெரிக்காவின் பாதுகாப்பு கட்டமைப்பின் அடித்தளமாகக் கருதப்படுகின்றன.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு























