அபிநந்தன் தனியார் விமான நிறுவனத்தில் விமானியானார்: 2019-ல் பாகிஸ்தானில் பிடிபட்டபோது என்ன நடந்தது?

அபிநந்தன் எப்படி விடுவிக்கப்பட்டார்?

பட மூலாதாரம், ANI

பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

பிபிசிக்கு கிடைத்த தகவலின்படி, இந்திய விமானப்படையின் ஓய்வுபெற்ற குரூப் கேப்டன் அபிநந்தன் வர்தமான், தனியார் விமான நிறுவனத்தில் விமானியாக தனது புதிய பயணத்தைத் தொடங்கியுள்ளார்.

2019-ஆம் ஆண்டு புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து, இந்திய விமானப்படை பாலகோட்டில் வான்வழித் தாக்குதல் நடத்தியது. அந்தச் சமயத்தில்தான் அபிநந்தன் வர்தமான் உலகளவில் கவனம் பெற்றார்.

இந்திய விமானப்படையின் கூற்றுப்படி, பாகிஸ்தான் விமானப்படையின் எஃப்-16 போர் விமானத்தைச் சுட்டு வீழ்த்திய பின்னர், அபிநந்தன் வர்தமான் சென்ற மிக்-21 போர் விமானம் விபத்துக்குள்ளானது. இதையடுத்து, அவர் மூன்று நாட்கள் பாகிஸ்தான் ராணுவத்தின் பிடியில் இருந்தார்.

2021-ஆம் ஆண்டு, வீர் சக்ரா விருது அபிநந்தனுக்கு வழங்கப்பட்டது.

இந்த விருதுக்கான அதிகாரப்பூர்வ பாராட்டுச் சான்றில், வான்வழிப் போரின்போது அவர் "கடமையில் அசாதாரண அர்ப்பணிப்பு உணர்வை" வெளிப்படுத்தியதற்காக கௌரவிக்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அபிநந்தன் ஆகஸ்ட் மாதத்திலேயே தனியார் விமான நிறுவனத்தில் விமானியாகப் பணியில் சேர்ந்துள்ளதாக பிடிஐ செய்தி நிறுவனத்திடம் சில வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அபிநந்தன் இந்த ஆண்டு இந்திய விமானப்படையில் இருந்து ஓய்வுபெற்றார். அதன் பிறகு, தனியார் விமான நிறுவனத்தில் விமானியாகப் பணியில் சேர்ந்துள்ளார்.

2019-ஆம் ஆண்டு என்ன நடந்தது?

அபிநந்தன் எப்படி விடுவிக்கப்பட்டார்?

பட மூலாதாரம், ANI

2019-ஆம் ஆண்டு பிப்ரவரி 14-ஆம் தேதி, ஜம்மு - காஷ்மீரின் புல்வாமாவில் மத்திய ரிசர்வ் காவல் படையின் (சிஆர்பிஎஃப்) வீரர்கள் சென்ற வாகனத் தொடரின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டனர்.

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் ஜெய்ஷ்-இ-முகமது என்ற அமைப்பு இந்தத் தாக்குதலில் ஈடுபட்டதாக இந்தியா குற்றம்சாட்டியது.

புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து, பிப்ரவரி 26, 2019 அன்று பாலகோட்டில் வான்வழித் தாக்குதல் நடத்தியதாக இந்தியா தெரிவித்தது. இதற்குப் பதிலடியாக, பிப்ரவரி 27-ஆம் தேதி பாகிஸ்தானும் இந்தியாவுக்கு எதிராக வான்வழித் தாக்குதல்களை நடத்தியது.

அவற்றை இடைமறிக்க இந்திய விமானப்படையின் போர் விமானங்கள் முயன்றன. அந்தச் சமயத்தில் விங் கமாண்டர் அபிநந்தன் மிக்-21 போர் விமானத்தை ஓட்டிச் சென்றார். பாகிஸ்தான் விமானப்படையுடன் நடந்த வான்வழி சண்டையின்போது அவரது விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது.

அபிநந்தன் விமானத்தில் இருந்து வெளியேறி, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழ் உள்ள காஷ்மீரில் தரையிறங்கினார். பின்னர், அவர் பாகிஸ்தான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்டார்.

அப்போது விங் கமாண்டராக இருந்த அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்டதும், அவரது புகைப்படங்கள் வெளியானதும் இந்தியாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின.

அபிநந்தனின் காணொளி ஒன்றையும் பாகிஸ்தான் ராணுவம் சமூக ஊடகங்களில் வெளியிட்டது. அதில், முகத்தில் காயங்களுடனும் ரத்தக்கறையுடனும் அபிநந்தன் காணப்பட்டார்.

பின்னர், அபிநந்தனை விடுவிக்கப் போவதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.

இதையடுத்து, 2019-ஆம் ஆண்டு மார்ச் 1-ஆம் தேதி அபிநந்தன் வர்தமான் இந்தியா திரும்பினார்.

அபிநந்தன் எப்படி விடுவிக்கப்பட்டார்?

அபிநந்தன் எப்படி விடுவிக்கப்பட்டார்?

பட மூலாதாரம், ANI

அபிநந்தன் சிறைபிடிக்கப்பட்ட பிறகு, இந்தியா - பாகிஸ்தான் இடையிலான பதற்றம் புதிய உச்சத்தை எட்டியதாகக் கூறப்படுகிறது.

அந்தக் காலகட்டத்தில் பாகிஸ்தானுக்கான இந்தியத் தூதராகப் பணியாற்றிய அஜய் பிசாரியா, 2024-ஆம் ஆண்டு வெளியிட்ட ஆங்கர் மேனேஜ்மென்ட் என்ற தனது நூலில், இரு நாடுகளிலும் அப்போது நடந்த சம்பவங்கள் குறித்து பதிவு செய்துள்ளார்.

எனினும், அஜய் பிசாரியாவின் நூலில் இடம்பெற்றுள்ள கூற்றுகளை பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் நிராகரித்திருந்தது.

இந்திய விமானி அபிநந்தன் சிறைபிடிக்கப்பட்ட பிறகு, இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றத்தைக் குறைப்பதற்காக அப்போதைய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியுடன் பேச விரும்பியதாக அஜய் பிசாரியா தனது நூலில் தெரிவித்துள்ளார். ஆனால், இந்தியா அதில் "ஆர்வம் காட்டவில்லை" என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும், மோதல் மேலும் தீவிரமடைவது குறித்து பாகிஸ்தான் உண்மையில் "அச்சமடைந்திருந்ததாகவும்" அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், அப்போது பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளராக இருந்த மும்தாஜ் பலோச், அபிநந்தனை விடுவித்ததன் மூலம் பதற்றத்தைக் குறைப்பதில் பாகிஸ்தான் பொறுப்பான அணுகுமுறையை வெளிப்படுத்தியதாக செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். அதேவேளையில், இந்த நூல் "2019 பிப்ரவரி தொடர்பாக இந்தியா உருவாக்கிய கற்பனையான கதையை முன்னிறுத்த முயல்கிறது" என்றும் அவர் கூறினார்.

இதற்கிடையே, அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ, தனது நெவர் கிவ் அன் இன்ச் என்ற நூலில், இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் எந்த அளவுக்கு அதிகரித்திருந்தது என்றால், அணு ஆயுதப் போர் ஏற்படும் என்ற அச்சம் நிலவியதாகக் குறிப்பிட்டுள்ளார்.

யார் இந்த அபிநந்தன்?

யார் இந்த அபிநந்தன்?

திருவண்ணமலை மாவட்டம் செய்யாறு அருகே உள்ள திருப்பனமூர்தான், அபிநந்தன் குடும்பத்தின் பூர்வீக கிராமம்.

அபிநந்தன் கோவையிலுள்ள சைனிக் பள்ளியில் தனது பள்ளிப் படிப்பை முடித்தார். இந்திய விமானப்படையில் 2004-ஆம் ஆண்டு பணியில் சேர்ந்தார்.

அபிநந்தனின் மனைவி தான்வி மர்வாவும் இந்திய விமானப்படையில் பணியாற்றிவர்தான். 2005-ஆம் ஆண்டு விமானப்படையில் பணியில் சேர்ந்தார். ஸ்குவாட்ரன் லீடராக இருந்து விமானப்படையிலிருந்து ஓய்வு பெற்றார்.

அபிநந்தனனின் தந்தை சிம்மகுட்டி வர்தமான் இந்திய விமானப்படையில் மிக மூத்த அதிகாரியாக இருந்தவர். 1974ல் இந்தியா விமானப்படையில் பணியில் சேர்ந்த அவர், 2012-ஆம் ஆண்டு நவம்பர் 30-ஆம் தேதி பணியிலிருந்து ஓய்வு பெற்றார். தன்னுடைய பணிக் காலத்தில் மொத்தம் ஏழு பதவி உயர்வுகளைப் பெற்று ஏர் மார்ஷலாக ஓய்வு பெற்றார். 2017ல் வெளியான இயக்குநர் மணி ரத்னத்தின் காற்று வெளியிடை படத்திற்கு ஆலோசராக செயல்பட்டுள்ளார். அபிநந்தனின் தாய் ஷோபனா வர்தமான் சென்னையில் மருத்துவம் பயின்றவர். அபிநந்தனின் தாத்தா இந்திய விமானப்படை விமானிகளுக்கு பயிற்சி அளிக்கும் ஆசிரியராக இருந்ததகாவும் கூறப்படுகிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு