கேரளா: இரட்டையரை மணந்த இரட்டை சகோதரிகள் - பாதிரியாரும் இரட்டையராக அமைந்த சுவாரஸ்யம்

பட மூலாதாரம், UGC
இரட்டையர்கள், இரட்டையர்களை திருமணம் செய்துகொள்வது என்பது புதிதல்ல. ஆனால், கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்த அகில் தாமஸ்- நிகில் தாமஸ் என்ற இரட்டையர்கள், பத்தனம்திட்டாவைச் சேர்ந்த மேகி மேரி- மரியா மேரி என்ற இரட்டைச் சகோதரிகளை திருமணம் செய்துகொண்டது சமூக ஊடகங்களில் வைரலானது.
காரணம், கிறித்தவ முறைப்படி நடந்த அந்தத் திருமணத்தை நடத்தி வைத்த பாதிரியார்களும் இரட்டையர்கள் தான். பாதிரியார்களுக்கு உதவியாக இருந்த 'ஆல்டர் பாய்ஸ்' (Altar boys) என்ற சிறுவர்களும் இரட்டையர்கள் தான்.
ஒரு திருமண நிகழ்வில் நான்கு ஜோடி இரட்டையர்கள் என்பது தற்செயலாக நடந்த ஒன்று அல்ல, இதற்காக நாங்கள் முன்பே திட்டமிட்டோம் என்கிறார் அகில் தாமஸ்.
கடந்த ஜூலை 30ஆம் தேதி கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள சங்கனாச்சேரி மெட்ரோபாலிட்டன் தேவாலயத்தில் வைத்து இந்தத் திருமணம் நடைபெற்றது.
அகில் தாமஸ்- மேகி மேரி மற்றும் நிகில் தாமஸ்- மரியா மேரி தம்பதிகள், இரட்டை பாதிரியார்கள் அன்டோ பெழும்கட்டில்- அஜோ பெழும்கட்டில், இரட்டை 'ஆல்டர் பாய்ஸ்' ஜெரோன் ஜேம்ஸ்- ஜோஹோன் ஜேம்ஸ் ஆகியோருடன் இணைந்து நிற்கும் புகைப்படம் உடனடியாக சமூக ஊடகங்களில் வைரலானது.
'காதல் திருமணம் அல்ல'

பட மூலாதாரம், UGC
"எங்களுடையது காதல் திருமணம் அல்ல, பெற்றோர்களால் முடிவு செய்யப்பட்டது தான்," என்கிறார் இரட்டையர்களில் ஒருவரான நிகில் தாமஸ்.
சங்கனாச்சேரி பகுதியைச் சேர்ந்த 32 வயதான அகில்- நிகில் ஆகிய இருவரும் வணிக கப்பல்துறையில் பணியாற்றி வருகின்றனர்.
"நிச்சயமாக இரட்டையர்களை தான் திருமணம் செய்ய வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருந்தோம். கிட்டத்தட்ட மூன்று வருடங்களாக எங்கள் வீட்டில் எங்களுக்காக மணப்பெண்களை தேடி வந்தார்கள்," என்கிறார் நிகில் தாமஸ்.
கோட்டயத்தில் இரட்டையர்களுக்கு என ஒரு மேட்ரிமோனியல் சேவை இருந்தது, அதில் தங்கள் பெற்றோர் பதிவு செய்திருந்தனர் என நிகில் குறிப்பிடுகிறார்.
"எங்களுக்கு வயது 30-ஐ தாண்டிவிட்டதால், உறவினர்கள் அனைவரும் 'ஏன் இரட்டையர்களுக்காக காத்திருக்க வேண்டும்?. வேறு பெண்களை திருமணம் செய்துகொள்ளுங்கள். அப்புறம் உங்களுக்கு திருமணமே நடக்காது' என கேலி செய்வார்கள்" என்கிறார் அகில் தாமஸ்.
மேட்ரிமோனியல் சேவையில் பதிவு செய்த பிறகு, கடந்த சில வருடங்களில் சுமார் 40 இரட்டைச் சகோதரிகளிடம் தங்கள் பெற்றோரும் தாங்களும் பேசியதாகவும், இருப்பினும் தங்களுக்கு பொருத்தமானவர்களைக் கண்டறிய முடியவில்லை என்கிறார் அகில்.
"நாங்கள் பார்த்த இரட்டைப் பெண்கள் பலரும் கூட்டுக்குடும்பம் குறித்து மாறுபட்ட கருத்துகளைக் கொண்டிருந்தனர். வேறு சில கருத்து வேறுபாடுகளும் இருந்தன. எனவே எங்களுக்கு ஏற்ற வரன்கள் அமையாமல் இருந்தன".

பட மூலாதாரம், UGC
அதன் பின்னர் அதே மேட்ரிமோனியல் சேவை மூலம் பத்தனம்திட்டாவைச் சேர்ந்த டாமிச்சன், மேரிக்குட்டி ஆகியோரின் இரட்டைப் பெண்களான மேகி- மரியாவின் அறிமுகம் அகில்- நிகிலுக்கு கிடைத்துள்ளது.
"எங்கள் திருமணம் எப்படி நடக்க வேண்டும் என்பது குறித்து சிறுவயதில் இருந்தே எங்களுக்கு பல கனவுகள் இருந்தன," என்கிறார் 31 வயதான மேகி மேரி.
"நாங்கள் இருவரும் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரிகிறோம். திருமணம் செய்தால் இரட்டையர்களை தான் என்பதில் நாங்களும் சிறுவயதில் இருந்தே உறுதியாக இருந்தோம்." என்கிறார் அவர்.
"பொதுவாக பெண்களுக்கு 30 வயது கடந்துவிட்டால், திருமணம் என்பது ஒரு பெரும் சமூக அழுத்தமாக மாறிவிடும். இரட்டையர்களை தான் திருமணம் செய்ய வேண்டும் என்ற எங்களது கொள்கையால், எங்களுக்கு திருமணமே நடக்காது என பெற்றோர் பயந்துவிட்டனர்" என மெல்லிய சிரிப்புடன் கூறுகிறார் மரியா மேரி.
"ஏதோவொரு அழுத்தத்தில் எங்களுக்கான துணைகளைத் தேட முடியாது, அதுவும் இரட்டையர்கள் எனும்போது அந்தத் தேடல் இன்னும் நீண்டது. இரட்டையர்களுக்கான மேட்ரிமோனியல் சேவை மூலம் அகில்-நிகிலை சந்தித்துப் பேசினோம். எங்கள் இருவருக்குமே அவர்களைப் பிடித்திருந்தது. இவர்கள் தான் எங்கள் வாழ்க்கைத் துணை என முடிவு செய்துவிட்டோம்" என்கிறார் மரியா மேரி.
ஆனால், அதன் பிறகு தான் நாங்கள் ஒரு பெரும் அதிர்ச்சியை எங்கள் பெற்றோருக்கும், வருங்கால மாமனார், மாமியாருக்கும் கொடுத்தோம் என்றும் கூறும் மேகி, "இரட்டை பாதிரியார்கள் தான் எங்கள் திருமணத்தை நடத்த வேண்டும், அதிலும் இரட்டை 'ஆல்டர் பாய்ஸ்' தான் அவர்களுக்கு திருமணச் சடங்கில் உதவி செய்ய வேண்டும் என்ற நிபந்தனை தான் அது" என்கிறார்.
இரட்டை பாதிரியார்கள் கூட கிடைத்துவிடுவார்கள் ஆனால், இரட்டை 'ஆல்டர் பாய்ஸ்' தான் கடினமான விஷயமாக கருதப்பட்டது என்கிறார் மேகி.
'இரட்டை ஆல்டர் பாய்ஸ்'

பட மூலாதாரம், Ss. Gervasis & Prothasis Forane Church Kothanalloor
கோட்டயம் மாவட்டத்தின் கோதநல்லூரில் அமைந்துள்ள புனிதர்கள் கெர்வாசிஸ் மற்றும் புரோத்தாசிஸ் ஃபோரேன் தேவாலயம் மிகவும் புகழ்பெற்ற மற்றும் பழமையான தேவாலயங்களில் ஒன்றாகும்.
ஒவ்வோர் ஆண்டும், புனிதர்கள் மற்றும் இரட்டையர்களான கெர்வாசிஸ் மற்றும் புரோத்தாசிஸ் ஆகியோரை நினைவுகூரும் வகையில் இந்தத் தேவாலயத்தில் இரட்டையர்கள் சந்திப்பு நடத்தப்படுகிறது. குறிப்பாக 2024ஆம் ஆண்டு ஜூன் மாதம் சுமார் 400 இரட்டையர்கள் இங்கு சந்தித்துக்கொண்டது ஊடகங்களில் கவனம் பெற்றது.
அப்படி கடந்த வருடம் நடந்த கோதநல்லூர் இரட்டையர்கள் சந்திப்பின்போது தான் இரட்டை 'ஆல்டர் பாய்ஸ்' ஜெரோன் ஜேம்ஸ்-ஜோஹோன் ஜேம்ஸ் ஆகியோரை மேகி- மரியா கண்டுள்ளனர்.
"திருமணம் நிச்சயமானவுடன் எங்களுக்கு அவர்களது நினைவு வந்தது. தேவாலயம் மூலமாக அவர்களைத் தொடர்பு கொண்டோம். கோட்டயத்தின் பாலா நகரம் தான் அவர்களது சொந்த ஊர், எனவே அவர்களை திருமணத்திற்கு வரவழைப்பது எளிதாக இருந்தது" என்கிறார் மேகி.
அதேபோல கோட்டயத்திலிருந்து சுமார் 40 கி.மீ தொலைவில் உள்ள காஞ்சிரப்பள்ளியைச் சேர்ந்த "இரட்டைப் பாதிரியார்கள் அந்தோ பெரும்கட்டில்- அஜோ பெரும்கட்டில் ஆகியோரை எங்கள் அம்மா சில மாதங்களுக்கு முன் ஒரு தேவாலய பிரார்த்தனை கூட்டத்தில் சந்தித்திருந்தார்" என்கிறார் அகில் தாமஸ்.
"பாதிரியார்களைத் தொடர்புகொண்டு, விவரங்களைக் கூறியபோது அவர்கள் உற்சாகமாகிவிட்டார்கள்" என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
இந்தத் திருமணத்தை நடத்திவைத்த இரட்டை பாதிரியார்களில் ஒருவரான அஜோ பெழும்கட்டில், "எனது அண்ணன் அன்டோ பெழும்கட்டில் முண்டக்காயம் மெடிக்கல் டிரஸ்ட் மருத்துவமனையில் உதவி இயக்குநராக உள்ளார். எங்களுக்கு இருந்த பிற பணிகளை இதற்காக ஒதுக்கி வைத்தோம். எங்களுக்கும் அந்தத் திருமணம் வாழ்நாளில் மறக்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. வெளியில் எங்கு சென்றாலும் எங்களை எளிதாக அடையாளம் கண்டுகொள்கின்றனர்" என்றார்.
"இப்போது வேறு இரு குடும்பங்கள் எங்களை தொடர்புகொண்டு, அவர்களது இரட்டைப் பிள்ளைகளின் திருமணங்களை நடத்தி வைக்கவேண்டுமென கேட்டுள்ளனர்," என்கிறார் அஜோ.
'லைக்ஸ் பெற வேண்டுமென செய்யவில்லை'

பட மூலாதாரம், Dilraj Varikkassery/Facebook
"திருமணத்திற்கு வந்திருந்த எங்களது உறவினர்கள், நண்பர்கள் முகத்தில் பெரும் ஆச்சரியம்" என்று குறிப்பிடும் மரியா, "இந்தத் திருமணம் சமூக ஊடகங்களில் இவ்வளவு வைரல் ஆகும் என நினைக்கவில்லை" என்கிறார்.
"இதை நாங்கள் புகழுக்காக அல்லது 'லைக்ஸ்' பெற வேண்டுமென செய்யவில்லை. எங்களுக்கு இருந்த திருமணம் குறித்த கனவுகளில் இதுவும் ஒன்று, அது தற்செயலாக வைரலாகிவிட்டது" என்று அவர் கூறுகிறார்.
கடந்த 2015ஆம் ஆண்டு இதேபோன்ற இரட்டையர்கள் திருமணம் ஒன்று ஊடகங்களில் வைரலானது.
கேரளாவின் திருச்சூரைச் சேர்ந்த இரட்டையர்களான தின்கர் மற்றும் தில்ராஜ் வரிக்காசேரி, இரட்டைச் சகோதரிகளான ரீனா மற்றும் ரீமாவைத் திருமணம் செய்துகொண்டனர். அப்போது அந்தத் திருமணத்தை நடத்தியது ரெஸி மற்றும் ராய் மனபரம்பில் என்ற இரட்டை பாதிரியார்கள்.
அதுமட்டுமல்லாது, மணமகன்கள் மற்றும் மணமகள்களுக்கு துணையாக இருந்ததும் இரட்டையர்கள் தான். ஆறு ஜோடி இரட்டையர்கள் ஒன்றாக இணைந்த அந்தத் திருமண நிகழ்வு அப்போது கவனத்தை ஈர்த்தது.
தங்களுக்கு வரன்கள் அமைய ஐந்து வருட காலமானது என தின்கர்- தில்ராஜ் ஊடகங்களிடம் அப்போது குறிப்பிட்டிருந்தனர்.
"இரட்டையர்களுக்கான மேட்ரிமோனி சேவை என்பது வழக்கமான மேட்ரிமோனி சேவை போல கிடையாது. சில சமயம் இரட்டையர்களில் ஒருவருக்கு மணப்பெண்/மணமகனை பிடித்திருக்கும், மற்றவருக்கு மாறுபட்ட கருத்து இருக்கும். சில இரட்டையர்களுக்கு திருமண வரன் அமைய மூன்று முதல் ஐந்து வருடங்கள் கூட ஆகலாம்" என்கிறார் இரட்டையர்களுக்கான ஒரு மேட்ரிமோனியல் சேவையில் பணிபுரிந்த அனுபவம் கொண்ட, கேரளாவின் கொச்சியைச் சேர்ந்த ஸ்ரீதேவி.
"சிலர் விரக்தி அடைந்து தனித்தனியாக வரன்கள் பார்த்து திருமணம் செய்துகொள்வார்கள். அதனால் தான் இத்தகைய திருமணங்கள் அவர்களுக்கு பெரும் கனவாக உள்ளது" என்கிறார் அவர்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































