கே.பாக்யராஜ்: தமிழ் மட்டுமின்றி இந்திய சினிமா முழுவதும் தனித்துவத்தை நிரூபித்தது எப்படி?

  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

நடிகர், இயக்குநர், திரைக்கதை ஆசிரியர், தயாரிப்பாளர் எனப் பன்முகம் கொண்டு தமிழ் சினிமாவின் மிகவும் தனித்துவமான படைப்பாற்றல் மிக்க குரல்களில் ஒன்றாகத் திகழ்ந்த கே. பாக்யராஜ் நேற்று (ஜூன் 27) சென்னையில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.

"பாக்யராஜ் படம்" என்றாலே, புத்திசாலித்தனமாக அமைக்கப்பட்ட திரைக்கதை, இயல்பான தோற்றம் கொண்ட கதாநாயகன், குடும்பச் சிக்கல்கள், தர்மசங்கடமான சூழல்களில் இருந்து பிறக்கும் நகைச்சுவை, உணர்வுபூர்வமான திருப்பங்கள், ஆரம்பத்தில் முக்கியமற்றதாகத் தோன்றிய விவரங்கள் இறுதியில் முக்கியத்துவம் பெறும் வகையிலான கதை முடிவு ஆகியவை இடம்பெற்றிருக்கும் என்று சினிமா விமர்சகர்கள் பலரும் குறிப்பிடுகின்றனர்.

சுமார் ஐம்பது ஆண்டுகள் நீண்ட அவரது திரைப் பயணத்தில், நடிகர், எழுத்தாளர், இயக்குநர், தயாரிப்பாளர், வசனகர்த்தா, இசையமைப்பாளர் எனப் பல பரிமாணங்களில் பணியாற்றினார்.

திரைக்கதையைக் கையாள்வதில் அவருக்கு இருந்த அசாத்தியத் திறனே அவரை ஒரு முக்கிய திரையுலக ஆளுமையாக நிலைநிறுத்தியது.

1980களில், பாக்யராஜ் ஒரு சிறந்த படைப்பாளராக உருவெடுத்திருந்தார். அவர் தனது படங்களில் தானே அடிக்கடி கதை எழுதி, இயக்கி, நடிக்கவும் செய்தார். சில நேரங்களில், தயாரிப்பு, படத்தொகுப்பு, இசைக்கான பொறுப்பையும் அவரே ஏற்றார். 1984இல் இந்தியா டுடே இதழில் வெளியான ஒரு கட்டுரை, அவரை "ஒற்றைத் திரையுலகத் தலைவர்" என்று அழைத்ததுடன், கோடம்பாக்கத்தின் முடிசூடா நாயகன் என்றும் வர்ணித்தது.

அவரது எழுச்சி, ஒரு தமிழ்த் திரைப்பட நாயகனாக யார் ஆக முடியும் என்பது குறித்த அனுமானங்களை மாற்றியமைத்தது.

திரையில் அவரது கதாபாத்திரம் பலவீனமான, எளிதில் பாதிக்கப்படக் கூடிய ஒருவராக பல படங்களில் வடிவமைக்கப்பட்டிருந்தது. தர்ம சங்கடமானவராக, பொறாமை கொண்டவராக, பயந்தவராக, சமூக ரீதியாக அவமானப்பட்டவராக அவரது கதாபாத்திரம் இருந்திருக்கிறது.

பாக்யராஜின் தனித்துவமான திரைக்கதை பாணி

இந்தியா டுடே கட்டுரையில் குறிப்பிடப்பட்டது போல, 'திரைக்கதை மன்னன்' என்ற பெயர் அவருக்குக் கிடைக்க, அவரது திரைக்கதை உருவாக்கும் உத்தியே முக்கியக் காரணம்.

அவரது கதைகள், ஒரு பிரமாண்டமான கருவை மையமாகக் கொள்வதைக் காட்டிலும், பெரும்பாலும் இயல்பான சூழலுடன் தொடங்கின. தனது காதலை வெளிப்படுத்த முடியாத ஆண், முந்தைய உறவின் நினைவுகளைச் சுமக்கும் கணவன், ஒரே பெண்ணுக்காகப் போட்டியிடும் பல இளைஞர்கள், மறுமணத்தை நிராகரிக்கும் மனைவியை இழந்த கணவன் அல்லது ஆசை, கர்வம் போன்றவற்றின் தாக்கத்தில் இயங்கும் நபர் போன்ற எதிர்பார்க்காத சூழல்களை எதிர்கொள்ளும் ஆணாக அவரது திரைநாயகன் இருந்தார்.

அவரது படைப்புகளில், தகவல்கள் மிகக் கவனமாகப் பகிரப்பட்டன. இது பார்வையாளர்கள் ஒரு கதாபாத்திரத்தைப் பற்றி அதிகமாகவும், மற்றொன்றைப் பற்றி குறைவாகவும் தெரிந்துகொள்ள அனுமதித்தது.

உதாரணமாக, 'இன்று பொய் நாளை வா' திரைப்படம், ஒரே பெண்ணைத் துரத்தும் மூன்று இளைஞர்களின் போட்டி, நுணுக்கமாகக் கட்டமைக்கப்பட்ட ஒரு நகைச்சுவைக் கதையாக மாற்றியது.

'அந்த 7 நாட்கள்' திரைப்படம், திருமணத்தின் தார்மீக மற்றும் உணர்ச்சிபூர்வமான அழுத்தங்களுக்குள் காதல் ஏக்கத்தை வைத்தது.

'மௌன கீதங்கள்', சமரசத்திற்கான சாத்தியக்கூறுகளை ஆராய, அந்நியமாதலையும் நினைவுகளையும் பயன்படுத்தியது.

'தூறல் நின்னு போச்சு' திரைப்படம், ஒரு கிராமப்புற காதல் மற்றும் மோதலை, காதல், குடும்ப கௌரவம், பிடிவாதமான ஆண் ஆகியவற்றை உள்ளடக்கிய, தீவிரமடையும் ஒரு போராட்டமாக காட்டியது.

திரைக்கதைகளில் போடும் முடிச்சும் அதனை பிற்பகுதியில் சுவாரஸ்யமாக அவிழ்க்கும் விதமுமே பாக்யராஜை தனித்துவமான திரைக்கதை ஆசிரியராக மாற்றியது.

கதாநாயகன் வரையறையை உடைத்தெறிந்த அணுகுமுறை

பாக்யராஜ் திரைப்படங்களின் கதாநாயக பாத்திரங்கள், வழக்கமான வீரதீர பராக்கிரமசாலியாக அல்லாமல், பெரும்பாலும் சமயோசித புத்தி கொண்டவர்களாகவே வடிவமைக்கப்பட்டன.

அவரது கதாநாயகர்கள் பெரும்பாலும், உடல் வலிமையைக் காட்டிலும், உற்றுநோக்குதல், தந்திரம், விடாமுயற்சி, சொல் வன்மை ஆகியவற்றின் மூலம் பிரச்னைகளை அணுகினர். அவர்களின் புத்திசாலித்தனம் போற்றத்தக்கதாக இருந்தது, ஆனால் அது சுயநலமாகவும் இருக்கக்கூடும்.

இது பார்வையாளர்களுடன் அவருக்கு ஒரு வலுவான உறவை உருவாக்கியது. அவரது படங்கள் அண்டை வீட்டுக்காரர், சக ஊழியர், கணவர், ஆசிரியர் அல்லது தோல்வியுற்ற காதலர் போன்ற மிகச் சாதாரண மனிதர்களை திரையில் கொண்டு வந்தன.

தனது கதையின் நாயகர்களை சராசரி மனிதராக காட்டியது, அவரது படைப்பாற்றலின் அடையாளமாக, குறியீடாக மாறி, அவரை மற்றவர்களிடம் இருந்து தனித்துக் காட்டியது.

இதன் விளைவாக, பாக்யராஜின் கதாநாயகர்கள் பிற்காலத் தமிழ் நடிகர்-இயக்குநர்களுக்கான வெளியை விரிவுபடுத்தினர்.

அவரிடம் உதவி இயக்குநர்களாக பணியாற்றி பின்னாளில் இயக்குநர் மற்றும் நடிகர்களான பாண்டியராஜ், பார்த்திபன் போன்றவர்கள், சராசரி தோற்றம், சொல் வன்மை, சமூக உற்றுநோக்கல், படைப்பாளியை மையமாகக் கொண்ட சினிமா ஆகியவற்றைச் சுற்றியே தங்கள் தொழில் வாழ்க்கையைக் கட்டமைத்துக் கொண்டனர்.

தனித்துவம் வாய்ந்த பெண் கதாபாத்திரங்கள்

அதேபோல, அவரது படைப்புகளில் வலுவான தாக்கத்தை ஏற்படுத்திய அம்சங்களில் மற்றொன்று அவர் உருவாக்கிய பெண் கதாபாத்திரங்கள்.

"முந்தானை முடிச்சு' திரைப்படத்தில், ஊர்வசி ஏற்று நடித்த 'பரிமளம்' கதாபாத்திரம் கதையை முன்னெடுத்துச் செல்லும் முக்கிய சக்தியாகத் திகழ்ந்தது. மனைவியை இழந்த ஆசிரியர் கதாபாத்திரத்தில் நாயகனாக நடித்த பாக்யராஜ், பெரும்பாலும் பரிமளம் உருவாக்கும் குழப்பங்களுக்கு எதிர்வினையாற்றுபவராகவே இருந்தார். குறிப்பாக அன்றைய காலகட்டத்தில் கைக்குழந்தையுடன், சமையல் உள்பட அனைத்து வீட்டு வேலைகளையும் செய்யக்கூடிய ஒரு ஆணாக, மனைவிக்குத் தேவையானவற்றைச் செய்து கொடுக்கும் ஆணாக பாக்யராஜ் நடித்திருந்தார். இது பெண்களை மிகவும் ரசிக்க வைத்தது," என்று கூறுகிறார் எழுத்தாளர் ஜா. தீபா.

"பரிமளம் கதாபாத்திரத்தின் துடிப்பு, பிடிவாதம், சமூகத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட பெண்மைக்குரிய நடத்தைகளை மீறும் மனப்பான்மை ஆகியவை அந்த நடிப்பை மறக்க முடியாததாக மாற்றின. அதேபோல, 'சின்ன வீடு' திரைப்படத்தில் ஆணாதிக்க மனோபாவம் கொண்ட ஒரு நாயகனாக நடித்திருப்பார். இப்படியாக, பெண்கள் தாங்கள் இயல்பில் வழக்கமாகப் பார்க்கக்கூடிய வகையிலான ஆண் கதாபாத்திரங்களை பாக்யராஜ் வடிவமைத்தார்." இது அவரது திரைக்கதை பாணியை தமிழ் சினிமாவில் தவிர்க்க இயலாத அத்தியாயமாகத் தடம் பதிக்க வைத்தது என்று கூறுகிறார் ஜா. தீபா.

ஜனவரி 2026இல் நடந்த பாக்யராஜின் திரையுலகப் பொன்விழா கொண்டாட்டத்தின்போது, அவரது எழுத்தாற்றலின் இந்த அம்சத்தை ரஜினிகாந்த் குறிப்பாகச் சுட்டிக்காட்டினார்.

"கடந்த 1970களில் இளையராஜா, பாரதிராஜா, பாக்யராஜ் ஆகிய மூன்று 'மன்னர்கள்' தமிழ்த் திரையுலகில் நுழைந்தனர்" என்று கூறிய அவர், முறையே இசை, இயக்கம், திரைக்கதை ஆகிய துறைகளில் அவர்கள் கொண்டு வந்த மாற்றங்களைச் சுட்டிக்காட்டினார்.

"கதாநாயகிகள் பெரும்பாலும் ஆண் நட்சத்திரங்களுக்குக் கீழ்ப்பட்டவர்களாகவே காட்டப்பட்ட காலத்தில், பாக்யராஜ் பெண் கதாபாத்திரங்களுக்கு உயிரோட்டத்தையும் முக்கியத்துவத்தையும் அளித்தார். பாக்யராஜ் முதன்மையாக இந்தி திரையுலகில் பணியாற்றி இருந்தால், அவர் 'சலீம்-ஜாவேத்' இணையினருக்கு இணையானவராகக் கருதப்பட்டிருப்பார்" என்றும் ரஜினிகாந்த் கருத்து தெரிவித்தார்.

அவருடைய திரைப்படங்கள் ஒவ்வொன்றும் அவரது திறமையின் வெவ்வேறு பரிமாணங்களைக் காட்டியதாகக் குறிப்பிட்ட ஜா. தீபா, "'டார்லிங் டார்லிங் டார்லிங்' படத்தில் பூர்ணிமாவின் கதாபாத்திரம், மௌன கீதங்கள் படத்தில் வரும் சரிதாவின் கதாபாத்திரம் என, தங்களுடைய சுயமரியாதையை, தனித்தன்மையை உயர்வாகக் கருதும், நெறிகளைக் கடைபிடிக்கும் பெண்களை" பாக்யராஜ் வடிவமைத்ததாகக் கூறினார் ஜா. தீபா.

மேலும், "அதற்கு முந்தைய காலகட்டத்தில், இத்தகைய பாத்திரங்கள் வில்லிகளாக வடிவமைக்கப்பட்டன, சமூக வரையறைகளுக்கு உட்படும் பாத்திரங்களே நேர்மறையாக வடிவமைக்கப்பட்டன. அதை உடைத்தவர் பாக்யராஜ். அவரது படைப்புகள் அனைத்தும் ஒரே மாதிரியானவை அல்ல, ஆனால் அன்றாட மனித பலவீனங்களில் ஒரு பொதுவான ஈடுபாட்டைக் கொண்டிருந்தன" என்று அவர் விவரித்தார்.

இந்தி உள்பட மொழிகளில் ரீமேக்கான பாக்யராஜ் படங்கள்

தமிழில் பாரதிராஜா இயக்கத்தில் கமல் இரட்டை வேடங்களில் நடித்து வெற்றி பெற்ற 'ஒரு கைதியின் டைரி' படத்திற்கு பாக்யராஜ் கதை, திரைக்கதை எழுதியிருந்தார்.

இந்த படத்தின் இந்தி ரீமேக்கான 'ஆக்ரீ ராஸ்தா'வை பாக்யராஜே இயக்கினார். அமிதாப் பச்சன் இரட்டை வேடத்தில் நடிக்க, ஸ்ரீதேவி, ஜெயப்ரதா உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

2016ஆம் ஆண்டில், பாக்யராஜின் ஆளுமையை அவரது பங்களிப்பைக் கொண்டாட நடத்தப்பட்ட ஒரு நிகழ்ச்சியில் வீடியோ வாயிலாகப் பங்கெடுத்துப் பேசிய அமிதாப் பச்சன், "இயக்குநர் கே. பாக்யராஜை, தமிழ்நாட்டின் மிகச் சிறந்த படைப்பாளி" என்று தெரிவித்தார்.

"அவருடன் இணைந்து பாலிவுட்டில் நான் ஒரு படத்தில் நடித்துள்ளேன். ஆக்ரி ராஸ்தா எனக்கு மறக்க முடியாத படமாக அமைந்தது. அவருடைய பணி, எழுத்து, இயக்கம் அனைத்திலுமே ஒரு தனித்துவமான அணுகுமுறை இருந்தது. அத்தகைய ஓர் ஆளுமையுடன் பணியாற்றும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததை ஒரு மதிப்புமிக்க வாய்ப்பாகப் பார்க்கிறேன்."

"அதற்கு முன்பும்கூட பாக்யராஜ் இயக்கிய, நடித்த படங்களை நான் பார்த்துள்ளேன். அவருடைய தனித்துவம் வாய்ந்த பாணி, பல்வேறு எளிய நிகழ்வுகளைப் பிண்ணி, சீரான கதையோட்டத்தைக் கொடுக்கும் அவருடைய திறமை ஆகியவற்றைக் கண்டு நான் வியந்துள்ளேன்" என்று பாக்யராஜின் திறமை குறித்து அமிதாப் பச்சன் அதில் புகழ்ந்து பேசியிருந்தார்.

முந்தானை முடிச்சு ஹிந்தியில் மாஸ்டர்ஜி என்ற பெயரில், பாக்யராஜ் எழுதி, கே. ராகவேந்திர ராவ் இயக்கத்தில் ரீமேக் செய்யப்பட்டது.

பாக்யராஜின் திரைப்படங்கள் பாலினப் பகுப்பாய்வுக்கும் வித்திடுகின்றன. உதாரணமாக, 'தமிழ் சினிமா: இந்தியாவின் பிற திரைப்படத் துறையின் பண்பாட்டு அரசியல்' என்ற ரவுட்லெட்ஜ் நூல், "அவரது திரைப்படங்கள் சில நேரங்களில் ஆண்கள் குழந்தைகளைப் பராமரிப்பதையோ அல்லது தங்களுக்குத் தாங்களே சமைத்துக் கொள்வதையோ காட்டுவதன் மூலம், வழக்கமான குடும்பச் சித்தரிப்பில் இருந்து விலகிச் செல்வதாக" குறிப்பிடுகிறது.

அதே நேரத்தில், "திருமணத்தின் மீதான பெண்களின் விருப்பத்தை, பெண் தன்னாட்சிக்கு அவர் அளிக்கும் கட்டுப்பாட்டை, பாலியல் பதற்றத்தை மக்கள் நகைச்சுவையாக மாற்றும் விதங்களை அவரது கதையாடல்கள் ஆராய்வதாக" அந்த நூல் கூறுகிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு