பெட்ரோல், டீசல் விலை 10 நாளில் 4 முறை உயர்வு - இந்திய அரசு நெருக்கடியை கணிக்க தவறிவிட்டதா?

    • எழுதியவர், திலன்வாஜ் பாஷா
    • பதவி, பிபிசி செய்தியாளர்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

இந்தியாவின் பெட்ரோலிய நிறுவனங்கள் மே 15 முதல் நான்கு முறை எரிபொருள் விலையை உயர்த்தியுள்ளன.

சென்னையில் தற்போது ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 107 ரூபாய் 77 காசுகளாகவும், டீசல் விலை லிட்டர் ஒன்றுக்கு 99 ரூபாய் 55 காசுகளாகவும் உள்ளது.

கடந்த பிப்ரவரி மாத இறுதியில் இரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்குதல் நடத்தியதில் இருந்து, மத்திய கிழக்கில் தொடர்ந்து நிலவி வரும் நெருக்கடி ஹோர்முஸ் நீரிணை வழியாக கச்சா எண்ணெய் கொண்டு செல்லப்படுவதை பாதித்துள்ளது.

இந்த நிலைமை தொடர்ந்து நீடித்தால், கச்சா எண்ணெய் விலை மேலும் உயரக்கூடும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

ஆய்வாளர்களின் கூற்றுப்படி, கச்சா எண்ணெய் விலை உயர்வு இந்தியப் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். இது கடந்த ஆறு மாதங்களில் தெளிவாகத் தெரியத் தொடங்கியுள்ளது.

கடந்த ஆண்டு நவம்பரில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 60-65 டாலராக இருந்தபோது, இந்திய ரிசர்வ் வங்கி (RBI) 2025-26 நிதியாண்டிற்கான பொருளாதார வளர்ச்சி விகிதம் 7.6 சதவீதமாக இருக்கும் என்று கணித்திருந்தது.

இருப்பினும், அதன் பிறகு, உலகின் பல்வேறு பகுதிகளில் நிலவும் சூழ்நிலை காரணமாக, கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

நடப்பு நிதியாண்டில் வளர்ச்சி விகிதம் சுமார் 6.9 சதவீதமாக மட்டுமே இருக்கக்கூடும் என்று 2026 மே மாதத்தில் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

அதுமட்டுமல்லாமல், நவம்பர் 2025-ல் சில்லறைப் பணவீக்க விகிதம் 0.7 சதவீதமாக இருந்தது. அது தற்போது 3.48 சதவீதமாக அதிகரித்துள்ளது.

அதாவது, இந்தியாவில் உணவு, வாடகை, போக்குவரத்து மற்றும் இதர அன்றாடச் செலவுகள் மேலும் அதிகரித்துள்ளன என்பது தான் இதன் பொருள்.

மேலும், 3.48 சதவீதமாக உள்ள நுகர்வோர் பணவீக்க விகிதம் இன்னும் நெருக்கடி நிலையை எட்டவில்லை. இருப்பினும், பணவீக்கம் மிக வேகமாக அதிகரித்து வருவது தெளிவாகத் தெரிகிறது.

கடந்த நவம்பர் மாதத்தில், மொத்த விற்பனை பணவீக்க விகிதம் மிகவும் குறைவாக இருந்தது. அது தற்போது 8.3 சதவீதத்தை எட்டியுள்ளது. நிறுவனங்கள் மற்றும் தொழில்துறைகளின் உற்பத்திச் செலவுகள் அதிகரித்துள்ளன என்பது தான் அதன் பொருள்.

அதாவது, தொழில்துறைகளின் உற்பத்திச் செலவுகள் அதிகரித்து வருகின்றன என்பதை இது எளிமையாக உணர்த்துகிறது. இதில் மூலப்பொருட்கள், எரிபொருள், உலோகங்கள், போக்குவரத்து போன்றவற்றின் விலையேற்றமும் அடங்கும்.

மொத்த விற்பனை பணவீக்கத்தின் உயர்வு என்பது, எதிர்காலத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வதற்கான ஒரு அறிகுறியாகும். சமீபத்தில், இந்தியாவில் பால் விலையும் லிட்டருக்கு 2 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மத்திய கிழக்கில் ஏற்பட்ட நெருக்கடிக்கு பிறகு மாறும் சூழ்நிலை

பணவீக்கம் மற்றும் வளர்ச்சி விகிதங்களைக் குறிக்கும் இந்த குறியீட்டின் உயர்வு, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்ததன் நேரடி விளைவாகும்.

நவம்பர் மாதத்தில், ப்ரெண்ட் கச்சா எண்ணெயின் விலை ஒரு பேரலுக்கு 60-65 டாலராக இருந்தது. அது இப்போது ஒரு பேரலுக்கு 100-110 டாலரை எட்டியுள்ளது. அதாவது கச்சா எண்ணெயின் விலை கிட்டத்தட்ட இரட்டிப்பாகியுள்ளது.

கச்சா எண்ணெய் விலை உயர்ந்தபோதிலும், இந்திய அரசு மார்ச் மாதம் முதல் மே மாத முதல் பாதி வரையிலும் எரிபொருள் விலையை உயர்த்தவில்லை. பல மாநிலங்களில் தேர்தல் நடைபெற்ற காரணத்தால் அரசு விலையேற்ற நடவடிக்கையைத் தவிர்த்ததாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

மேற்கு வங்கம், அசாம், கேரளா, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்த இரண்டு வாரங்களுக்குள், பெட்ரோலிய நிறுவனங்கள் எரிபொருள் விலையை உயர்த்தியுள்ளன.

இது குறித்து பொருளாதார நிபுணரும், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக பேராசிரியருமான அருண் குமார் கூறுகையில், "தேர்தல் காரணமாக அரசு எரிபொருள் விலையை உயர்த்தும் முடிவை தவிர்த்து வந்தது. கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வரும் விதத்தைப் பார்த்தால், இந்தியாவில் எரிபொருள் விலை தொடர்ந்து உயரும்" என்றார்.

கச்சா எண்ணெய் விலை உயர்வால் பொதுமக்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதை உறுதி செய்வதற்காக, இந்திய அரசு மார்ச் மாதத்தில் கலால் வரியை 10 ரூபாயாகக் குறைத்திருந்தது.

"கச்சா எண்ணெய் விவகாரத்தில் 90 சதவீதம் அரசியல் இருப்பதாகக் கூறப்படுகிறது. அரசாங்கம் இதை பொருளாதாரக் கண்ணோட்டத்தில் மட்டும் பார்க்க முடியாது, சாதாரண நுகர்வோரைப் பாதுகாக்க அரசாங்கம் தலையிட வேண்டியிருக்கும்" என்று எரிசக்தி ஆய்வாளர் நரேந்திர தனேஜா தெரிவித்தார்.

"ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாமல், கச்சா எண்ணெய் அங்கேயே முடங்கிக் கிடந்தால், எதிர்காலத்திலும் இந்தியாவில் எரிபொருள் விலை உயர்வது உறுதி. இது தொடர்பாக இந்திய அரசாங்கத்திற்கு மிகக் குறைவான தெரிவுகளே உள்ளன" என்று நரேந்திர தனேஜா விளக்கினார்.

இந்திய அரசு நெருக்கடியை கணிக்க தவறிவிட்டதா?

கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் இறக்குமதி குறைப்பு ஆகியவை இந்தியாவின் மூலோபாய கச்சா எண்ணெய் இருப்புகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன.

"இந்தியாவிடம் 50 நாட்களுக்கு மட்டுமே போதுமான மூலோபாய இருப்பு உள்ளது. நமக்கு நாளொன்றுக்கு 5.7 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் தேவைப்படுகிறது. இதே நிலை நீடித்தால், இந்த மூலோபாய இருப்புகளின் மீதான அழுத்தம் அதிகரிக்கக்கூடும்" என்று நரேந்திர தனேஜா கூறினார்.

அரசாங்கம் இந்த எரிசக்தி நெருக்கடியைக் கணிக்கத் தவறிவிட்டது என்றும், நடவடிக்கை எடுப்பதில் மெதுவாகச் செயல்பட்டதாகவும் பேராசிரியர் அருண் குமார் கருதுகிறார்.

பேராசிரியர் அருண் குமார் கூறுகையில், "இதுபோன்ற நடவடிக்கைகளை எடுப்பதில் அரசாங்கம் சுமார் 75 நாட்கள் தாமதம் செய்துள்ளது என்று நான் நினைக்கிறேன். அரசாங்கம் இந்த எரிசக்தி நெருக்கடியைச் சரியாகக் கணித்து, சுத்திகரிக்கப்பட்ட பொருட்களின் ஏற்றுமதியை நிறுத்தியிருந்தால், நாம் கச்சா எண்ணெயைச் சேமித்திருக்க முடியும்" என்றார்.

"ஏப்ரல் மாதத்தில், கச்சா எண்ணெயிலிருந்து நாம் தயாரித்த சுத்திகரிக்கப்பட்ட பொருட்களில் 35 சதவீதம் வரை ஏற்றுமதி செய்தோம். இந்தப் பொருட்கள் உள்நாட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்யப் பயன்பட்டிருக்கலாம்."

கச்சா எண்ணெய் விலை மேலும் உயரும் என்று ஆய்வாளர்கள் அஞ்சுகின்றனர்.

"மத்திய கிழக்கில் நிலவும் நெருக்கடி இன்னும் 6 மாதங்களுக்கு நீடித்தால், கச்சா எண்ணெயின் விலை ஒரு பேரலுக்கு 150 டாலர் வரை உயர்ந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இந்தச் சூழ்நிலை இந்தியாவுக்கு இன்னும் சிக்கலானதாக மாறக்கூடும்" என்று நரேந்திர தனேஜா கூறினார்.

பேராசிரியர் அருண் குமாரும் இதே கருத்தைப் பகிர்ந்து கொள்கிறார்.

"ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படும் வரை, எரிசக்தி சந்தையில் இந்த நெருக்கடி தொடரும். இந்த நெருக்கடி நீண்ட காலத்திற்கு நீடித்தால், அது இந்தியப் பொருளாதாரத்தை மந்தமடையச் செய்யலாம்" என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்திய பொருளாதாரத்தில் பாதிப்பு

கச்சா எண்ணெய் விலை உயர்வு இந்தியப் பொருளாதாரத்திற்கு ஒரு அதிர்ச்சியாக அமைந்துள்ளது. இது இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பையும் பாதித்து வருகிறது.

கடந்த 6 மாதங்களில், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 10 சதவீதத்திற்கும் மேல் வீழ்ச்சியடைந்துள்ளது.

கடந்த ஆண்டு நவம்பரில் ஒரு டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 83-84 ரூபாயாக இருந்தது. அது தற்போது 96 ரூபாய்க்குக் கீழ் சரிந்துள்ளது.

இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் 90 சதவீதத்திற்கு இறக்குமதியையே நம்பியிருக்கிறது.

இந்தியா தனது கச்சா எண்ணெயில் பெரும்பகுதியை டாலரில் தான் வாங்க வேண்டியுள்ளது. ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்தது, இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதிச் செலவை மேலும் அதிகரித்துள்ளது.

இது இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பிலும் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

நவம்பர் மாதத்தில் இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு வலுவாக இருந்தது. அது தற்போது சுமார் 700 பில்லியன் டாலராக (சுமார் ரூ. 67,56,400 கோடி) குறைந்துள்ளது. தற்போதைய 700 பில்லியன் டாலர் அந்நியச் செலாவணி கையிருப்பும் பெரிதுதான்.

இருப்பினும், கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகமாகவே நீடித்தால், இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு மீதான அழுத்தம் மேலும் அதிகரிக்கக்கூடும்.

"சர்வதேச சந்தையில் இருந்து சுமார் 15 சதவீத கச்சா எண்ணெய் மறைந்துவிட்டது. வரும் நாட்களில் கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல், எல்பிஜி மற்றும் சிஎன்ஜி ஆகியவற்றின் விலை உயர்வது உறுதி. இந்தியா விலையுயர்ந்த கச்சா எண்ணெயை டாலரில் வாங்க வேண்டியிருக்கும். இது அந்நியச் செலாவணி கையிருப்பில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தும்" என்று நரேந்திர தனேஜா கூறினார்.

கடந்த வாரம் தான், ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா ஒரு அறிக்கையில், "மேற்கு ஆசியாவில் நிலவும் நெருக்கடி நீண்ட காலத்திற்கு நீடித்தால், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலைமேலும் உயரக்கூடும்" என்று கூறியிருந்தார்.

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு வலுவாக இருப்பதாகவும், வங்கி அமைப்பு சீராக இருப்பதாகவும், மற்றும் நிதி நிலைமை கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சாமானியருக்கு என்ன பாதிப்பு?

இருப்பினும், கச்சா எண்ணெய் விலை உயர்வு இந்தியப் பொருளாதாரத்திற்கு ஒரு பெரிய பின்னடைவு என்று பொருளாதார ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

பேராசிரியர் அருண் குமார் இதனை ஒரு விநியோக அதிர்ச்சியாகப் பார்க்கிறார். இதை இந்தியப் பொருளாதாரத்திற்கு ஏற்பட்ட ஒரு பெரிய பின்னடைவாகக் கருதுகிறார்.

பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள இந்த வெளிப்புற அதிர்ச்சி, சாமானிய மக்களின் நிதிநிலையை நேரடியாகப் பாதிக்கும் என்று பேராசிரியர் அருண் குமார் கூறுகிறார்.

இது சாமானிய மனிதனின், குறிப்பாக பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினரின் பொருளாதாரத்தை முற்றிலும் சீர்குலைக்கும்.

பேராசிரியர் குமார் கூறுகையில், "எரிசக்தி பற்றாக்குறை என்றால் உற்பத்தித் துறை பாதிக்கப்படும் என்று பொருள். ஏனெனில் எரிசக்தி இல்லாமல் எந்த உற்பத்தியும் நடக்க முடியாது. இது ஒரு விநியோக அதிர்ச்சி ஆகும். இது உற்பத்தி குறைவதற்கும் விலை உயர்வதற்கும் வழிவகுக்கும். உயர்த்தப்பட்ட விலைகள் சாமானிய மக்களின் நிதிநிலையை நேரடியாகப் பாதிக்கும்" என்றார்.

அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் கணிசமாக அதிகரித்துள்ளதால், பொருளாதார ரீதியாக நலிந்த பிரிவினருக்கான உண்மையான பணவீக்கமானது, பொருளாதாரக் குறியீடுகளில் காட்டப்படும் பணவீக்கத்தை விட மிகவும் அதிகமாக உள்ளது என்று பேராசிரியர் குமார் கூறுகிறார்.

பொதுவாக 10 ரூபாய் விலையுள்ள ஒரு கப் டீ, இப்போது சுமார் 15 ரூபாய்க்குக் கிடைக்கிறது. பால் விலை உயர்ந்துவிட்டது. பெருமளவிலான மக்கள் வீட்டு உபயோகத்திற்காக எரிவாயுவை அதிக விலைக்கு வாங்க வேண்டியுள்ளது.

"சாமானிய மக்களுக்கும் ஏழைகளுக்கும் பணவீக்க விகிதம் 3.5 சதவீதமாக இருக்கவில்லை, மாறாக 20-30-40 சதவீதமாக உள்ளது. ஏனெனில் எரிவாயு மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் (பால், ரொட்டி) விலைகள் மிகவும் அதிகரித்துள்ளன" என்று பேராசிரியர் குமார் கூறுகிறார்.

அரசாங்கம் என்ன சொல்கிறது?

ஒருபுறம் உற்பத்தி சீராகியுள்ளது, மறுபுறம் பொருட்களின் விலைகள் அதிகரித்து வருகின்றன என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

"நாம் தேக்கவீக்கம் (stagflation) என்ற நிலையை எட்டியுள்ளோம். ஒருபுறம் உற்பத்தியில் தேக்கநிலை உள்ளது, மறுபுறம் பணவீக்கம் அதிகரித்து வருகிறது. இது நீடித்தால், பொருளாதார மந்தநிலை ஏற்படும்" என்று பேராசிரியர் அருண் குமார் கூறினார்.

இந்தியாவின் அமைப்புசாரா துறை குறித்து ஆய்வாளர்கள் கவலை கொண்டுள்ளனர்.

உற்பத்தி குறைவதால் வேலை இழப்புகள் ஏற்படுமோ என்ற அச்சம் நிலவுகிறது. இது அமைப்புசாரா துறையில் உள்ள தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்கள் மீது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.

"சமீப நாட்களில், பணவீக்கம் மற்றும் குறைந்த ஊதியத்தால் பாதிக்கப்பட்டுள்ள தொழிலாளர்கள் நொய்டா மற்றும் நாட்டின் பல நகரங்களில் போராட்டம் நடத்தியுள்ளனர். அமைப்பு சாரா துறை ஏற்கனவே அழுத்தத்தில் உள்ளது. தற்போதைய நிலைமை மேலும் மோசமடைந்தால், இந்தியாவின் பெரும்பான்மையான மக்களுக்குச் சூழல் கடினமாகிவிடும்" என்று பேராசிரியர் குமார் கூறினார்.

கச்சா எண்ணெய் விலை உயர்வால் ஏற்பட்டுள்ள நெருக்கடியைச் சமாளிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக, இந்திய அரசும், பொருளாதார அதிகாரிகளும் சமீப நாட்களில் பல அதிகாரப்பூர்வ அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர்.

உலகளாவிய எண்ணெய் நெருக்கடியிலிருந்து பொதுமக்களைப் பாதுகாக்கும் பொருட்டு, ஒரு லிட்டருக்கான கலால் வரியை ரூ.10 குறைத்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

உள்நாட்டு விநியோகத்தை உறுதி செய்வதற்காக டீசல் ஏற்றுமதி மீது அரசு வரி விதிப்பதாக மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார். இந்தியாவில் தற்போது எரிபொருளுக்கு உடனடி தட்டுப்பாடு எதுவும் இல்லை என்று அரசு பலமுறை கூறியுள்ளது.

ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா, ரிசர்வ் வங்கி பணவீக்க அழுத்தங்களைக் கண்காணித்து வருவதாகக் கூறியுள்ளார்.

அரசாங்கம் மேலும் பல நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பேராசிரியர் அருண் குமார் கருதுகிறார்.

"இந்த மிகப்பெரிய நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு ஒரு வழியைக் கண்டறிய, அரசாங்கம் எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையைப் பெற வேண்டும். விரயத்தைக் கட்டுப்படுத்த ஒரு தேசிய அளவிலான ஒருமித்த கருத்தையும் அது உருவாக்க வேண்டும்" என்று பேராசிரியர் குமார் கூறினார்.

"அன்றாடத் தேவைகளுக்கான செலவுகளைக் குறைப்பதும், வீணாவதைக் குறைப்பதும் இந்த நெருக்கடியின் தீவிரத்தைத் தணிப்பதற்கான ஒரு வழியாக இருக்கலாம். ஆனால் தற்போதைக்கு, பல விஷயங்கள் சர்வதேச சூழ்நிலையைப் பொறுத்தே அமையும்" என்கிறார் நரேந்திர தனேஜா.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு